New Novel : வாழ்ந்து போதீரே அத்தியாயம் 16 இரா.முருகன்

அரசூர் தெரியுமா? அகல்யா கேட்டாள்.

சிறிய சமோசாவைக் கடித்துக் கொண்டு தலையை இல்லை என்று ஆட்டினான் திலீப். இரானி ஹோட்டலில் மழைக்காக ஒதுங்க வருகிறவர்களின் கூட்டம் மெல்ல அதிகரித்துக் கொண்டிருந்தது.

மழை தொடங்கப் போகிறது என்று பூஜை செய்த பிள்ளையாரைச் சதுர்த்தி முடிந்து விசர்ஜன் நேரத்தில் கடலில் இடும்போதே எல்லோருக்கும் தெரியும். கணபதியைக் கரைத்ததும் மேகம் திரண்டு தென்மேற்குப் பருவ மழை ஆரம்பித்து விடும் என்ற நம்பிக்கையில் கையில் குடையோடு கணபதி பப்பா மோரியா பாடிக் கொண்டு வரும் சில வயதான மராட்டிய ஆண்களை, ஏன் பெண்களையும் கூடத் திலீப் பார்த்திருக்கிறான். அவர்களுக்காகவே ஏற்படுத்தியது போல சில சமயம் மழையும் பொழிந்து நின்றிருக்கிறது.

அரசூரா?

திலீப் அசிரத்தையாகக் கேட்டான்.

மெட்ராஸில் இருந்து ராமேஸ்வரம் போகிற ரயில் இருக்காம். போட் மெயில்னு அழகான பெயர் அதுக்கு. அந்த ரயில் போற பாதையில் இருக்கப் பட்ட ஊர் அப்படீன்னு கேட்டேன். அங்கே ஒரு விசேஷம், தெரியுமா?

அகல்யா தரையில் விழுந்த கைக்குட்டையை எடுத்து உதறி இடுப்பில் செருகியபடி சொன்னாள்.

மழைக்காக ஒதுங்கிய எல்லோரும் சின்ன சமோசாவும், டீயும் சாப்பிட்டுப் போக உடனடியாக உத்தேசித்தவர்களாகவே இருந்தார்கள். டீ தவிர ஓவல்டின், கோக்கோ மால்ட் போன்ற பானங்களும், இறுக்கமாக மூடிய உயரமான கண்ணாடி ஜாடிகளில் மைதா மாவு பிஸ்கட்டுகளும் விற்பனைக்கு இருந்தாலும், ஒற்றை விருப்பமாக டீயும் சமோசாவும் தான் விற்றாகிறது.

இவர்களில் ஆண்கள் எல்லோரும், வியர்வைக் கசகசப்பும் மழைத் தூறலும் நனைத்த முழுக்கைச் சட்டையைத் தோள்பட்டைக்கு ஏற்றி மடித்து விட்டபடி, சபர்பன் ரயிலில் தொங்கிக் கொண்டு, அவரவர் குடித்தனத்துக்குப் போனதும் மர ஸ்டூலைத் தேடுவார்கள். பரணில் போட்டு வைத்த மழைக் கோட்டும், குடைகளும், கம் பூட்ஸ்களும் தொப் தொப்பென்று தூசியோடு தரையில் விழ துடைத்துப் போட்டு மழைக் காலத்தை எதிர்கொள்ளத் தயாராவார்கள்.

மழையை முன் வைத்தே இனி மூன்று மாதம் எங்கே போனாலும் வந்தாலும் பேச்சு இருக்கும் என்பது திலீப்புக்கு நிம்மதியான விஷயமாகப் பட்டது. நிறைய யோசித்துத் தினமும் எத்தனையோ தடவை பேசப் புதிதாக எதையும் கண்டெடுக்க வேண்டிய கவலை தாற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது.

நான் ஒரு விசேஷம் பத்தி பேச ஆரம்பிச்சு அஞ்சு நிமிஷமாச்சு. ஊம் கொட்டவாவது செய்யலாமில்லே. மனசெல்லாம் எங்கே? பெரிசு பெரிசா மலையாளப் பாச்சிக்கு நடுவிலே போய் உக்கார்ந்துடுத்தா?

அகல்யா அவன் தோளில் அடித்தாள்.

உஸ் அந்த ஆளுக்குத் தமிழ் அர்த்தமாகும்.

ஜாக்கிரதையாகக் கோப்பையை ஏந்தி அதை விட சர்வ கவனத்தோடும் டீ குடித்துக் கொண்டிருந்த ஒரு ஆறடி சர்தார்ஜியைக் கண்ணால் காட்டிச் சொன்னான் திலீப்.

அவனுக்குத் தமிழ் தெரிந்திருந்தால் தான் என்ன போச்சு?

அகல்யா மென்மையாகச் சிரித்தபோது அவளுடைய புது மூக்குத்திப் பொட்டு ஒளிர்ந்ததைப் பார்த்த திலீப் மெல்ல நாசி முனையில் வருடினான்.

வேணாம் கை எடுக்கலாம். இல்லாட்ட தாறுமாறா கீழே இறங்கிடும்

அவள் குற்றப்படுத்தினாலும் அதில் எதிர்பார்ப்பும் தெரிந்ததைச் சிரிப்போடு கவனித்தான் திலீப்.

என்ன கேட்டே? கேள்வியை மறந்த மாதிரி கேட்டான். அவள் வாயால் மலையாள சௌந்தர்யம் திரும்ப நினைவு கூரப்பட அவனுக்கு இஷ்டம்தான்.

அரசூர் தெரியுமான்னு கேட்டேன்.

அகல்யா ஆதி கேள்விக்குப் போயிருந்தாள். அவளுக்கு கேரள வனப்பு தேவையில்லாத விஷயம். திலீப்புக்கும் அதே படி. ஆனால் அகல்யா இல்லாத நேரத்தில் அது தவிர யோசிக்க உருப்படியாக ஏதும் இல்லைதான்.

அரசூர்லே என்ன?

எனக்குப் பார்த்திருக்கற மாப்பிள்ளை அங்கே தான் கதா பிரசங்கம் பண்ணிண்டு இருக்கார்.

திலீப் நிமிர்ந்து உட்கார்ந்தான். இது என்ன புதுசாக கூக்ளி போடுகிறாள்?

ஆமா, நீங்க சும்மா உக்காத்தி வச்சு பேசிட்டு, ஈரானியிலே இப்படி எண்ணெய் முக்குளிச்ச சமோசா தின்னுட்டு, போரிவ்லி லோக்கல் பிடிக்கக் கூட வந்து அனுப்பி வச்சுட்டு, மலையாள மாரைப் பாக்க ஓடினா, பாத்து அலுத்துப் போய் திரும்ப வரும்போது வரட்டும்னு பொறுமையா உக்காந்திருக்க முடியுமா?

சிரித்தபடி நீளமாகக் கேட்டாள் அகல்யா. சுருக்கெழுத்து டிக்டேஷன் எடுக்கும் ஸ்டெனோகிராபர் இந்தப் பெண். வாக்கியத்தை எங்கே தொடங்கி எப்படிக் கொண்டு போய், எங்கே முடிப்பது என்பதில் அவளுக்கு இருக்கும் தெளிவு திலீப்பை மலைக்க வைக்கிறது. பேச்சும் சிரிப்பும் மனசை அள்ளுகின்றன. கண், இது முக்கியமான விஷயம் என்கிறது.

அரசூர்ங்கறது மேப்லே பார்த்தா தெரியும். பெரிய ஊராக எல்லாம் இருக்காது. இருந்தா அதைப் பத்தி நாலு பேர் பேசறதோட, தெற்குலே போற ரயில்லே நாலு சீட்டாவது அந்த ஊருக்குப் போக ரிசர்வேஷன் கோட்டா இருக்குமே.

லா பாயிண்ட் கண்டு பிடித்த வக்கீல் குமாஸ்தா போல தெம்பாகக் கேட்டான் திலீப். அவள் கையில் இருந்த எச்சில் சமோசாவைப் பிடுங்கிக் கொண்டு அவளுடைய உதடுகளையே பார்த்தபடி மென்றான்.

அகல்யா கண்ணைக் கவிந்து கொண்டாள். இன்னும் அரை மணி நேரம் இப்படிக் கூட்டத்துக்கு நடுவே சேர்ந்து இருந்தாலும் திலீப்போடு, நாகமும் சாரையுமாகப் பின்னிப் பிணைந்து கிடக்கச் சொல்லி உடம்பு சுகம் கேட்க ஆரம்பித்து விடும். வேறு எதுவும் இல்லாவிட்டாலும் பாறைக்குப் பின் கட்டி அணைத்து அவன் தரும் முத்தத்தை இன்னும் பத்து வினாடி நீடிக்க முடிந்தாலும் போதும்.

ரயில்வே ரிசர்வேஷன் பத்தி எல்லாம் தெரியாது. ஆனா, இந்த மனுஷர் அந்த ஊர்லே ராமாயணக் கதாபிரசங்கம் பண்ணி ஜீவிக்கிறாராம். அதுவும் மாசம் மூணு, இல்லேன்னா நாலு நாள் மட்டும்.

திலீப்புக்குச் சத்தியமாகப் புரியவில்லை. இத்தணூண்டு ஊரில் கதாபிரசங்கம். அதுவும் ஒரே கதை. அது கூட மாசத்துக்கு மூணு நாள். என்ன வருமானம் வந்து விடும்? காற்றைக் குடித்துக் கிடக்க அகல்யாவை வேறே கல்யாணம் செய்து கொள்ள வந்து விட்டானா அந்த மனுஷன்?

வெளியே மழை விட்டிருந்தது. தூறல் வலுக்காமல் அப்படியே பூச்சொரிந்து நாளைக்கு வரேன் மேள தாளத்தோடு என்று விடை பெற்றுப் போயிருந்ததை மேலுடுப்பில் நனைந்த தடம் இன்றி உள்ளே வந்து சூடான சமோசா கேட்கிற கும்பலை வைத்து அவதானித்திருந்தான் திலீப்.

அரசூர் ரொம்ப விநோதமாக இருக்கு. அப்பா தான் கதை கதையாச் சொன்னார்

சொல்லியபடி கைப்பையைத் தோளில் மாட்டியபடி எழுந்து நின்றாள் அகல்யா. இடுப்போடு வளைத்து அணைத்துக் கொள்ளத் திலீப்பின் கைகள் பரபரக்க, உள்ளே வரும் பங்குச் சந்தைத் தரகர்களின் உரத்த குரல்களில் கவனம் சிதறியது.

சிமெண்ட் இன்னும் ஒரு மாசம் இப்படித்தான். இன்னும் இறங்கும். கட்டுமானத் தொழில் சீனா யுத்தத்திலே சரிஞ்சது இதுக்குக் காரணம் இல்லே. பண வீக்கம் தான். யூனிவர்சிட்டி புரபசர் எல்லாம் சொல்றாங்க.

ஈரமான, குளிர் காற்று மெல்ல வீசும் ஒரு ரம்மியமான சாயந்திர நேரத்தில் சிமிண்ட் கம்பெனி பங்கு விற்கும் விலை பற்றியும் பண வீக்கத்தைப் பற்றியும் பேசுகிற மனுஷர்களின் அந்தரங்க வாழ்க்கை எப்படி இருக்கும்?

திலீப் அகல்யாவைக் கேட்டான். அவன் கையைப் பற்றி நடந்தபடி அவள் சொன்னாள் –

இவங்க இருக்கற இடத்தில் மற்ற எந்தப் பேச்சு வார்த்தையும், பிரியத்தைப் பரிமாறிக்கறதும் சரிப்பட்டு வராது. ராத்திரி பெண்டாட்டியோடு கிடக்கற நேரத்தில் கூட ஏசிசி சிமெண்ட் க்ளோசிங்க் கொடேஷன் இவ்வளவு இருந்தா விடிஞ்சு என்ன விலைக்கு ஷேர் விற்கலாம், வாங்க முடியும்னு நினைச்சுண்டு படுத்திருப்பாங்க, அப்படித்தானே?

என்னத்துக்கு சிரிக்கறே என்று திலீப்பைப் பக்கவாட்டில் பார்த்துக் கேட்டாள்.

ஞாபகம் வந்துது அதான்.

எதான்?

இவங்க எல்லாம் படுக்கையிலே பயங்கர சூரர்களா இருப்பாங்க.

எப்படிச் சொல்ல முடியும்?

போகம் முந்த விடாமல் சிமெண்டை, சமையல் சாமான் விக்கற கம்பெனி ஷேர்னா குத்திக் குத்திப் புளியை வச்சு அடச்சு.

சீ டர்ட்டி. உங்க வாயிலே தான் மிச்சப் புளியை அடைக்கணும்.

அகல்யா குறும்பாகப் பார்த்தபடி சொன்னாள். கோர்த்திருந்த கரங்கள் உயர்ந்து தாழ்ந்து உயர்ந்தன.

எல்லாம் வேண்டி இருக்கு உனக்கு ஆனாலும் ஒரு பிகு.

திலீப் சீண்டினான்.

புளி வேணாம். சிமிண்டும் சரிப்படாது. மத்தது இருந்துட்டுப் போகட்டும். இதெல்லாம் இருந்தாத்தான் அகல்யா இல்லேன்னா போரிவில்லி லோக்கல்லே போற வர, சோனியான வெறும் மதராஸ் சோக்ரி

மெல்லிய குரலில் அகல்யா பேசியபடி வந்தாள்.

வெறும் சோக்ரியோ வெல்லம் போட்ட சோக்ரியோ எனக்கு எல்லாம் இஷ்டம் தான்

அவள் கையை இறுகப் பற்றி நடந்தபடி சொன்னான் திலீப். இந்த கணத்தின் நிச்சயத்தன்மை இன்னும் தொடர்ந்து ஆயுசு முழுக்க வரட்டும் என்றது மனம்.

அரசூர் காளீஸ்வர சாஸ்திரிகளுக்கும் அதேபடி தான் இஷ்டமாம் என்றாள் அகல்யா.

அலைகள் சீராக உயர்ந்து தாழ்ந்து திரும்ப அமைதியாகப் பரவும் கடல் கூப்பிடு தூரத்தில். தொலைவில் கடலுக்கு நடுவே கம்பீரமாக நிற்கும் தர்க்காவைப் பார்த்தபடி ஒரு நிமிடம் நின்றார்கள்

காளீஸ்வர, யாரு அந்த கதாகாலட்சேபக் காரரா?

ஆமா, அவரே தான்.

அப்புறம். ஏன் சிரிக்கறே? திலீப் புரியாமல் பார்த்தான்.

ஒரு பெரிய கதை. கேட்க நேரம் இருக்குமா? அகல்யாவுக்கு சந்தேகம்.

இப்போ இல்லேன்னா, நீ எங்க வீட்டுக்கு வா. கதவை அடைச்சு வச்சுட்டு நாள் முழுக்கக் கேக்கறேன் அகல் செல்லம்மா.

அவள் கையில் அவன் பிடி இறுகியது. காது மடல் ஓரம் அவன் இதழ் ஊர்ந்து அகல்யா ராஜாத்தி என்றபோது பித்தாகிப் போயிருந்தாள் அவள்.

உங்க வீட்டுலே? கதவைச் சாத்திட்டு உள்ளே தனியா? வேறே கதை தான் நடக்கும்.

சொல்லும்போதே குப்பென்று வெட்கத்தில் சிவந்த முகம் அவளுக்கு.

மாதம் ஐநூறு ரூபாய் சம்பளம் வாங்கும், வட்ட டிபன் பாக்ஸில் அவல் உப்புமா எடுத்துப் போய் மத்தியான சாப்பாடு முடிக்கும் டைப்பிஸ்டுப் பெண்கள் மழைக் காலத்துக்குச் சற்றே முந்திய தூறல் சாயங்காலங்களில் அப்சரஸ் ஆவார்கள் என்று திலீப் நினைத்தான். அவன் கரம் பிடித்து வருகிற இவள் அவர்களில் கிரேட் ஒன் நிலை அப்சரஸ். நிமிஷத்துக்கு இருபது வார்த்தை சுருக்கெழுத்தும், பத்து வார்த்தை தட்டச்சும் செய்யும் இந்தத் தேவதை திலீப்புக்கு வசப்பட்டவள். காலில் ரப்பர் செருப்பு தவிர மற்றப்படி யட்சி போல வசீகரிக்கும் அணங்கே தான் அகல்யா.

வழியை விட்டு விலகிச் சற்றே நடந்து ஈரம் பூரித்துக் கிடந்த மணலில் அமர்ந்தார்கள்.

அரசூர்லே முப்பது வருஷமா ராமாயணம் சொன்ன ஒருத்தர் பரலோகம் போனாலும் கதை சொல்றதை விடலியாம். செம்புத் தண்ணியிலே அவரை ஆவாஹனம் செஞ்சு வச்சதும், விட்ட இடத்திலே இருந்து கதையை ஆரம்பிச்சு தொடர்ந்து போயிட்டிருக்காம்.

சந்தமாமா கதை சொல்லும் சுவாரசியத்தோடு தொடங்கினாள் அகல்யா.

எங்கே விட்டுப் போனாராம்? திலீப் கேட்டான்.

காட்டுக்குப் போற ராமன் எல்லோர் கிட்டேயும் சொல்லிட்டுப் போற இடம். இந்த மூணு மாசத்திலே ராமன் உள் தெருவெல்லாம் சொல்லி, கோட்டை மதிலுக்குப் பக்கத்துத் தெருவுக்கு வந்தாச்சாம்.

ரொம்ப வேகமாகத் தான் கதை நகர்றது.

திலீப் சிரிக்க, வேணாம் கிண்டல் எல்லாம் செய்யக் கூடாது என்று கண்டித்தாள் அகல்யா.

கதை சொல்ற போது பாத்திரத் தண்ணிக்குள்ளே வந்த அந்த ஆகாச வாணிக்குப் பக்கமா யாரெல்லாம் உண்டாம்?

திலீப் சுவாரசியம் தட்டுப்படாமல் மீண்டும் கேட்டான். ஆனாலும் இது சுவாரசியமானதுதான்.

பாகவதரோட சிஷ்யகோடிகள் தான். தினசரி அவருக்கு மாலை மரியாதைன்னு செம்புக்கு சூட்டறதாம். தட்சணையை முன்னாடி பட்டுத் துணியிலே எல்லோரும் போட்டு அப்புறமா குவிச்சு எடுத்துக்கறதாம்.

அகல்யா அதிசயம் கேட்ட குரலில், குரல் கீச்சிட, கைக்குட்டையால் வாயை அவ்வப்போது பொத்தியபடி கதை சொன்னாள்.

செம்பாவது, குரல் வரதாவது. எல்லாம் ப்ராட். பக்கத்துலே இருக்கப்பட்ட சிஷ்யகோடி ஏதாவது வெண்ட்ரிலோகிஸ்டா இருப்பான். வாயைத் திறக்காம பேசற கலை அது.

திலீப் சொல்ல நிறுத்தச் சொல்லிச் சைகை காட்டித் தொடர்ந்தாள் அகல்யா.

அப்படியான சித்து உண்டான சிஷ்யை ஒருத்தியும் உண்டாம். பெரியவர் குரல் வழக்கம் போல வரல்லேன்னா, இந்தப் பொண்ணு ஓரமா உக்கார்ந்து வாயை மூடியபடி கதை சொல்லுமாம் . அதுவும் ஒரு ரசம்னு கேட்பாங்களாம். பல நாள் குரல் வராதாம். இல்லே வந்து ஒரு நிமிஷம் பேசிட்டு நின்னுடுமாம். இந்தப் பொண்ணு தான் மீதி. என்ன கேட்கறீங்களா?

அகல்யா செல்லமாக அதட்டினாள்.

அதெல்லாம் சரி, இந்த மூணு நாள் ஆசாமி இதுலே எங்கே

கேட்க ஆரம்பித்து உடனடியாக பலமாகச் சிரித்தான் திலீப்.

அகல்யா அவசரமாக அவன் வாயைப் பொத்தினாள்.

ஆமா, அதிலே என்ன சிரிப்பு? எதுக்கு சிரிக்கறதுன்னு இல்லியா? தூரமீனா கதை சொன்னா யாரு கேப்பா? தூரம் குளிக்கற வரை சப்ஸ்டிட்யூட் வேணும் இல்லியா? அதான் மாசம் மூணு நாளாவது இவர். மனசிலாச்சோ?

பெரிய புதிரை விடுவித்த மாதிரி நிமிர்ந்து உட்கார்ந்து திலீப்பை ஆர்வமாகப் பார்த்தாள் அகல்யா.

இதுக்கு என்னதுக்காக கஷ்டப்படணும்? அந்த ராமா சாஸ்திரி கதை சொல்ற பொண்ணையே கல்யாணம் பண்ணிக்கலாம். காட்டுக்குப் போறதை இன்னும் பத்து வருஷம் தடையில்லாம சொல்லி பேர் வாங்கலாம். என் அகல்யா கண்ணம்மாவுக்கு நான் தினசரி புதுக்கதை சொல்லுவேன்.

நீங்க காட்டுக்குப் போயிடுவீங்களே? அப்சரஸ்கள் மலையாளத்தில் பேசித் திரியும் வனம். விடிகாலையிலே குளக்கரையில், ஊரே அழகாத் திரண்டு, வடிவான முலையைக் காட்டி வரிசையா நிக்கற காடு.

காற்று திரண்டு வந்து கடலோடு ஆர்பரிக்க, மழை பெய்யத் தொடங்கியது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன