New Bio-fiction தியூப்ளே வீதி அத்தியாயம் 23 இரா.முருகன்


மேகத்தைத் துடைத்த வானம் நீலப் பரப்பு விரித்து விதானம் அமைத்த பெருவெளியில் நான் ஓடிக் கொண்டிருந்தேன். மிக அருகே கடல் அலைகள் குதித்து உயர்ந்து வந்து வந்து கரை தொட்டுத் திரும்பியபடி இருந்தன. சிறு நண்டுகள் மண்ணில் குழித்து உள்புகுந்து திரும்ப அலையில் கலக்கும் நேரம் அவற்றை நசுக்காமல் காலடி வைப்பது இயல்பாகப் படிந்திருந்தது. இந்தக் கடலும், கொஞ்சமே என்றாலும் மணல் தடம் விரித்த வழியும் இல்லாவிட்டால் என் காலை நேரம் முழுக்க அர்த்தமின்றிக் கழிந்திருக்கும். கூடவே ஓடி வரும் முதிய சிநேகிதர் விக்தொ இல்லாமல் போயிருந்தாலும்.

விக்தொ மூச்சு இரைக்க வேகத்தை மட்டுப் படுத்தினார்.

நிழற்சாலையை அடுத்து இருந்த மாதாக் கோவில் மணிகள் ஒருசேர ஒலிக்கலாயின. காலை ஆறு மணிக்குக் கடற்கரைச் சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறவர்களும் வேக நடையில் நகர்ந்து கொண்டிருப்பவர்களும் அபூர்வமாகத்தான் தட்டுப் பட்டார்கள். எல்லா வனப்பையும் தன்னிடத்தில் வைத்துக் கொண்டு ராத்திரி முட்ட முட்டச் சாராயம் குடித்துக் கவிழ்ந்து படுத்து, வெயில் சுரீர் என்று மேலேறுகிறவரை உறங்கி விழிக்கும் ஊர் இது.

’ஒரு அஞ்சு நிமிஷம் மேலே போய் கைப்பிடிச் சுவர்லே உட்காரலாம்’.

விக்தொ அலையோடு சேர்ந்து கூவினார்.

எனக்கும் ஷூ லேஸ் அவிழ்ந்து கொண்டிருந்த்தால் திரும்பக் கட்டிக் கொள்ள வேண்டிய கட்டாயம். சரிவில் சரசரவென்று மேலே ஏறி நின்று கீழே பார்த்தேன். விக்தொ சிரித்தபடி மெல்லச் சரிவைக் கடந்து கொண்டிருந்தார்.

’வொலா’.

நான் கூவியபடி கையை நீட்ட, விக்தொ கீச்சுக் குரலில் அதையே சத்தமாக சொல்லி விட்டு என் கையைப் பற்றிக் கொண்டார். நான் அவரையே பார்த்தேன். ஆறடி உயரமும் ஐம்பது வயதிலும் வசீகரமுமாக முகத்தில் வெகுளித்தனமும் பிரியமும் பொங்கி வழிகிற மனிதர். இந்தக் குரல் மட்டும் காத்திரமாக உயரத்துக்குப் பொருத்தமாக இருந்தால் உலகத்தையே வளைத்துப் போட்டு ஏறி நின்று வென்றிருப்பார்.

ஆனால் என்ன, இந்தக் குரலோடு தான் காதலித்திருக்கிறார், கட்டுப்பாடு மீறியிருக்கிறார், கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். அவருடைய அந்தக்கால பெர்சனல் ஃபைல் அதற்கெல்லாம் சாட்சி சொல்லிக் கொண்டு தூசியிலும் புழுதியிலும் மொட்டைமாடி பின்னறையில் கிடக்கிறது. ஒரு காலத்தில் சாதனை வீரர் இவர்.. மரியாதையோடு விக்தொவைப் பார்த்தேன்.

’உன்னை மாதிரி இளந்தாரிப் பிள்ளையா? ஐம்பத்து நாலவுது. இன்னும் நாலே வருஷத்துலே ரிடையர்மெண்ட்’.

உங்களை பார்த்தா அப்படி ஒண்ணும் தெரியலே சார் என்றேன்.

’தெரிஞ்சிருந்தா இப்படிக் கஷ்டப்பட மாட்டேன்’ என்றார் நெஞ்சு எழுந்து தாழ.

’உங்களுக்கு என்ன சார்? நல்ல ஆரோக்கியம், நல்ல உத்தியோகம், அருமையான மோட்டார் பைக், பிரஞ்ச் ஷூ, பிரஞ்சு கருப்புக் கண்ணாடி’.

’அதெல்லாம் இருந்தா போதுமா? சொன்னேனே. வயசு துலக்கமா வெளியே தெரியணும். அபபத்தான் மரியாதை கிடைக்கும்.. நான் முடிவு செஞ்சுட்டேன்.. தலைக்கு இனிமே டை போட மாட்டேன். அப்புறம் வேலைக்கு வரும்போது அக்கவுண்டண்ட் சார் மாதிரி லூஸா வழியற கருப்பு கோட், டைட்டா இல்லாம தொளக்கான் தொளக்கான் பேண்ட், ஓடும் போது… கிழவன் எதுக்கு ஓடணும் .. நடக்கும் போது கையிலே மடக்கி விரிக்கற வாக்கிங் ஸ்டிக்’ ..

ஓடியதை விட அதிகமாக மூச்சு வாங்கியது அவருக்கு.

’கற்பனை செய்யவே சகிக்கலே.. சூ மந்திரக்காளி.. இப்படியே இருங்க எப்பவும்’. நான் காற்றில் கை அசைத்து மந்திரக்கோலைச் சுழற்றினேன்.

’அப்படியே என் பிரச்சனை எல்லாம் உடனே காணாமப் போகணும்னும் மந்திரம் போட்டுடேன் சில் வொ ப்ளே’..

’உங்களுக்கு என்ன சார் பிரச்சனை’?

’அடுத்தவங்க நல்லதுக்குச் சொன்னா அவங்க என் வயசுக்கு மதிப்பு கொடுத்து நடந்துக்க மாட்டேங்கறாங்க. கூட வர்ற உற்ற தோழன் கூட என்னைப் புரிஞ்சுக்காம, தேவையில்லாம குழப்பத்தை உண்டாக்கிட்டு இருக்கான்’..

’யார் சார் அது’?

’நீதான்’..

அவர் தூரத்தில் அலை அடிக்கும் கடலைப் பார்த்தபடி சொன்னார்.

எனக்குச் சுரீர் என்று பிடரிக்கு மத்தியில் சிலிர்த்துக் கொண்டு புறப்பட்டது.

’ஆமா சார், நான் வெளி ஆள். நான் இங்கே வர்றதுக்கு முன்பு ஊரே நேராப் போச்சு. வேதியர்கள் நாள் முழுக்க மறை ஓதினாங்க. பாதிரியார்கள் நேரம் முடங்காம பூசை வச்சாங்க.. மழை தவறாமப் பெய்தது. ஆணுக்கும் பெண்ணுக்கும் சுதந்திரம் இருந்தது. அடுத்தவங்க வாழ்க்கையிலே மூக்கை நுழைக்கலாகாதுன்னு கண்ணியம் இருந்தது. பெரியவங்க சிறியவங்க மேலே அதிகாரம் செலுத்தி அது அன்பாலேன்னு ஒரேயடியா கட்டுப்படுத்தலே. யாரும் யாரையும் கட்டாயப்படுத்திக் கல்யாணம் செஞ்சுக்கச் சொல்லலே. அப்படி கல்யாணம் நடத்தறதுக்காக வீட்டுக்குள்ளே சிறை வைக்கலே. தப்பி வந்தவங்களைப் பின் தொடர்ந்து துரத்தித் துரத்தி இடைஞ்சல் செய்யலே. அடுத்தவங்களுக்கும் மனசுன்னு ஒண்ணு இருக்கும்னு தெரிஞ்சிருந்தது. வேறே மதத்துலே வந்தவன்னா சூனியம் வைப்பான்னு முட்டாள்தனமா யாரும் நினைக்கலே. நான் வந்து இதெல்லாம் மாற்றி வச்சுட்டேன். நானே ஒரே ஒருத்தனா இருந்து எல்லாரையும் கூறு மாத்திட்டேன்.. நல்லது கெட்டது தெரியாம புத்தியை மழுங்கடிச்சுட்டேன். அப்படித்தானே சார்?’

விக்தொ நம்ப முடியாத ஆச்சரியத்தோடு என்னைப் பார்த்தார். என் உருவத்துக்கும் இருப்புக்கும் இப்படி எல்லாம் நான் பேசுவேன் என்று அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்று அவருடைய முகம் சொன்னது. அக்கார்டியன் வாசிக்கக் கற்றுக் கொடுங்க அங்கிள் என்று சைக்கிளில் வீட்டுக்கு வந்து வந்து நச்சரித்த சின்னப் பையன். சரிக்கு சரியாக உட்கார்ந்து பேசுகிறான் என்று அவர் நினைத்திருக்கலாம். விக்தோ முகத்தில் சிநேகிதமான சிரிப்பு. அவரால் என்னைக் கோபித்துக் கொள்ளவே முடியாது.

’தம்பி ஊர் கெட்டுப் போனதுக்கும் உலகம் கெட்டுப் போனதுக்கும் உங்க மேலே ஒரேயடியாப் பழி போட மாட்டேன். நீங்க நீ என் பிள்ளை மாதிரி. எனக்குக் குழந்தைங்க இருந்தா உன் வயசுலே பையனோ பொண்ணோ இருப்பாங்க. என்னோடு கூட இப்படி காலையிலே பீச்சுலே ஓட வருவாங்க. சொன்னது பிடிக்கலேன்னா இதே போல உரிமையோடு சண்டை போடுவாங்க. நான் பார்த்து வளர்ற பிள்ளை பெரிசாயிட்டிருக்குங்கற சந்தோஷத்தோட அதை எல்லாம் பார்த்து இப்படி சகிச்சுக்கிட்டிருப்பேன்.. ரசிச்சுக்கிட்டிருப்பேன்’.. விக்தொ குரல் தழதழத்தது.

’ஆனா, என் உசிருக்கு உசிரான தோழி ஜோசபின் மேலே நான் பிரியம் வைச்சா அதை மட்டும், அங்கிள், நீங்க சகிச்சுக்க மாட்டீங்க’.

நான், என் இந்த வார்த்தைகளில் நான் கொடுத்த அழுத்தம் தானாகவே வந்து விழுந்தது. ஜோசபினை நினைக்கும்போது தன்னால் வ்ருகிற உரிமை அது.

விக்தொ சிரிப்பு மாறாமல் பார்த்தார்.

’உன் ஜோசபினாகவே இருக்கட்டும் அந்தப் பொண்ணு.. அதுனாலேயே அவளுக்கு நல்ல எதிர்காலம் வரும்போது வேணாம்னு விலக்கிட்டு ஓடணுமா? முதல் கல்யாணம் தான் அவளா செஞ்சுக்கிட்டு சீரழிஞ்சு போனா, பாவம். பெரியவங்க நாங்க சொல்ற படி இப்போ லைஃப்லே ஒரு துணை சேர்த்துக்கிட்டு வாழ்நாள் பூரா சந்தோஷமா இருக்கலாமே’.

உன் கருத்தை எடுத்துச் சொல்ல இனி அடுத்த நிமிஷம் உனக்கு ஒதுக்கப் பட்டுள்ளது என்றது அவர் பார்வை.

’ஜோசபின் சந்தோஷத்தை ஜோசபின் தானே முடிவு செய்யணும் அங்கிள்.?’

’நீ அவளை கல்யாணம் செஞ்சுப்பியா’? என்னை நேரே பார்த்துக் கேட்டார். ‘உனக்கு என்ன பதினாறு வயசு இருக்குமா’?

’பத்தொன்பது அங்கிள்’

’ஜோசபினுக்கு இருபத்து நாலு. உனக்கு அஞ்சு வயசு பெரியவ’.

’இல்லே நாலு வருஷம் ஆறு மாசம் ஏழு நாள் தான்’.

அவருக்குச் சிரிப்பு வந்து விட்டது. அடக்க முடியாமல் சிரித்தார். ஓடியும் நடந்தும் பொம்னாட்டில் போய்க் கொண்டிருந்தவர்கள் ஒரு வினாடி நின்று நோக்கி அப்பால் போகச் சிரித்தார். சுவருக்கு நேர்கீழே கடல் அலைகள் ஒரு அடி உயர்ந்து குதித்து அவரோடு சேர்ந்து என்னைக் களியாக்கிச் சிரித்து நுரைப்பூ தூவின. கடல் வாடை இதமாக எங்கும் சூழ மனம் சாந்தமாகிக் கொண்டிருந்த்து. பேசப் பேச இன்னும் சாந்தமும் சமாதானமும் கிட்டட்டும்.

’சரி அப்படியே இருக்கட்டும்.. இன்னும் ஒரு வருஷம் டிகிரி முடிக்க. அப்புறம் போஸ்ட் க்ராஜுவேஷன் செய்யணும்.. வேலை தேடணும். நல்ல வேலையா வந்து செட்டில் ஆகி… அஞ்சு வருஷம் மொத்தமா வச்சுக்கலாம்.. சரியா.. அப்பா சம்மதிச்ச பெண்ணா பார்க்கணும்.. மதம், ஜாதி எல்லாம் இருக்கட்டும்.. அஞ்சு வருஷம் கழிச்சு ஜோசபின் முப்பது வயசா ஆகியிருப்பா’

’இருபத்தொன்பது’

’சரி நீ தான் எல்லாக் கணக்கிலேயும் புலி.. முப்பது வயசு கிறிஸ்துவப் பொண்ணை நீங்க அய்யிருங்க உங்க சம்பிரதாயத்திலே சேத்து கோயில் ஐயருங்க மாதிரி கச்சமெல்லாம் வச்சு புடவை கட்டிக் கல்யாணம் செய்யணும்.. அப்பா சம்மதிக்க வீட்டுலே கூட்டி வரணும்.. ஜோசபின் சமையல் செஞ்சு.. அப்பாவுக்கு மீன் ஒத்துக்குமா? உனக்கு? ஜோசபினுக்கு மீனும் முட்டையும் இல்லேன்னா சோறு இறங்காதே. என்ன பண்ணுவீங்க’.

’சார் நான் சோத்தாலே அடிச்ச பிண்டம் இல்லே. சோறு மட்டும் இல்லே இதெல்லாம். ரொம்ப சிம்பிளா இந்த ஆர்க்யூமெண்ட் வச்சு அடிக்கறதுலே ஒரு நேர்மையும் இல்லே’..

’சரி உன் நேர்மையே அசலானதா இருக்கட்டும். நீ முப்பது வய்சு ஜோசபினைக் கட்டிக்கிட்டு வாழ்க்கை நடத்துவியா’?

’நடத்துவேன் அதுக்கான சந்தர்ப்பம் வந்தா. ஜோசபின் கேட்டாள்ன்னா…. நான் மதம் மாற மாட்டேன். ஜோசபினையும் மாறச் சொல்ல மாட்டேன். ஜோசபின் சொல்லட்டும்… அவளைக் கல்யாணம் செஞ்சுப்பேன்.. இப்பவே கூட ரெடி தான். ஆனா அவள் எது செய்யணும்னு முடிவு செய்ய அவளை விட மாட்டேங்கறீங்களே நீங்க?. ஜோசபினை வீட்டுலே அடைச்சு வச்சு யாரையோ கூட்டி வந்து கல்யாணம் செஞ்சுக்கச் சொல்றது என்ன நியாயம்’?

’கல்யாணம்னா அப்படித்தான். ஆயிரம் காரியம் சின்னதாப் பெரிசா செஞ்சு முடிச்சு தான் அது நடக்கணும்னு இருந்தா அப்படியே ஆகட்டும். ஆமென்’.

’நீங்க ஆமென் சொல்லிட்டா ஆச்சா அங்கிள்? எனக்குத் தெரிஞ்சு இருபத்தைஞ்சு வருஷம் முந்தி இங்கே ஒரு நல்ல மனுஷருக்கு இப்படி ஒரு சிக்கல் வந்தது. காதலிச்சுக் கல்யாணம் செஞ்சுக்கிட்ட வேறே மதத்துப் பொண்ணா, உத்தியோகமான்னு பிரச்சனை.. அவரோட அப்பா அம்மா அவருக்கு எதிராக நின்னாங்க. அவர் அசரலே.. காதலோட மகிமை, விரும்பியவள் மேல் நேசம் செலுத்தத் தனக்கு உள்ள தனிமனித உரிமை, பெற்றோருக்கும், ஊழியம் செய்யும் இடத்துக்கும் தான் செய்ய வேண்டிய கடமை குறித்து தனக்குள்ள கான்ஷியஸ்னஸ் எல்லாத்தையும் பத்தி அவர் பத்து பக்கம் கடிதாசு எழுதினார் சார். இன்கிரிமெண்ட் தர முடியாது, வேலையை விட்டு நீக்குவோம்னு பேங்க் சொல்லுது. விக்தொ சீனியர் சரி ஏதோ பெயர்.. அதுவா முக்கியம்.. அந்த நல்ல மனுஷரோட அப்பா சம்பளத்துலே மாசம் ஐம்பது ரூபா பிடிச்சு அனுப்பச் சொல்லி பேங்குக்கு மனு போடறார். அப்ப என் ஹீரோ சொல்றார் ஐம்பது என்ன முழுச் சம்பளத்தையும் எங்க அப்பா கிட்டேயே கொடுங்க.. நானும் பேகமும் அவர் கிட்டே சந்தோஷமா வாங்கிக்க்றோம். அதுக்கான் உரிமை, நானும் என் காதலியும் சேர்ந்து அப்படித் தீர்மானிக்க, செய்யறதுக்கான உரிமை எனக்கு உண்டு. என்னோடு சேர்ந்து என் காதலிக்கும் அது உண்டுன்னு உரிமைப் போராட்டம் நடத்தினார்..ஹேட்ஸ் ஆஃப் டு ஹிம்… ஹீரோ சார் அவர்..’..

நான் உட்கார்ந்தபடியே சல்யூட் செய்ய கண் கலங்கி விக்தொ எழுந்து நின்றார். விரைப்பாக நின்று, ஷூவை ஓங்கி நிலத்தில் தேய்த்து எனக்கு பளிச்சென்று ஒரு மிலிட்டரி சல்யூட் வைத்தார். அவர் கன்னக் கதுப்புகள் துடித்துக் கொண்டிருந்தன.

’உனக்குத் தெரியுமா? எப்படி? அப்பா சொன்னாரா? அவருக்கே தெரிஞ்சிருக்காதே? யார் சொன்னாங்க? வின்செண்ட் நடராஜனா’?

’காத்து பறஞஞ கத .. கடல் பறஞ்ஞ கத .. கடலாசு பறஞ்ஞ கத’ மலையாளப் படம் டைட்டில் முடிந்து பேசுகிற குரலில் சொன்னேன்.

’எனக்கு தெலுங்கு எல்லாம் தெரியாதுப்பா. சிலோன்லே பேசுவாங்க அதானே’.

’சார்.. இது நம்ம பேங்க் கட்டடம் சொன்ன விஷயம்’..

அவருக்கு மொட்டைமாடி பின்னறை பழைய ஃபைல்கள் பற்றிச் சொன்னேன்.

‘ஓ மோன் த்யூ.. இன்னூயி. பான் வ்யூ ட்ரக்.. து ஷொ லா’?.

வாழ்க்கையிலேயே இதைவிட அதிக ஆச்சரியம் அடைந்திருக்க முடியாது என்று பிரஞ்சில் கொட்டி, முகத்தில் காட்டினார். வாக்கிங் போன நாலைந்து பேர் ஓடி வந்து நின்று அவருக்கு ஒன்றுமில்லையே என்று விசாரித்து உறுதி செய்து கொண்டு கடற்கரைப் பாதையில் திரும்ப ஓடினார்கள்.

’சார், கொள்கைக்கும் நம்பிக்கைக்கும் தனி மனுஷ சுதந்திரத்துக்கும் குரல் கொடுத்த அந்த மிஸ்யே விக்தொ இருந்தா கூப்பிடுங்க .. அவர் கூடத்தான் இன்னிக்கு மிச்சம் ரவுண்டு ஓடப் போறேன்.. இன்னும் நாலு ரவுண்ட் பாக்கி..’.

நான் குனிந்து காலில் ஷூ லேஸை முடிந்து கொண்டு இருக்கும் போது தோளில் உறுதியாக ஒரு பிடி.

’ஓடலாம் வா.. விக்தொ வந்தாச்சு. நீ சொன்ன அதே விக்தொ.’

நான் குளித்துப் பசியாறி விட்டுக் கிளம்பும்போது அப்பா சொன்னார் –

’இன்னிக்கு சரஸ்வதி பூஜை. கொலு ஒண்ணும் வைக்க மாட்டோம். தான். என்னிட்டும், நாலு புத்தகத்தை எடுத்து வச்சு மேலே ரவிவர்மா சரஸ்வதி படம் சார்த்தணும். ஓர்மை இருக்கோல்லியோ மறந்துடாதே.. சரியா?’.

’நிச்சயம் அப்பா. எல்லாம் முடிச்சு வச்சு நானே பூஜை பண்றேன்…’ என்றேன். அப்பா சொல்லி இதைக்கூட நான் செய்ய மாட்டேனா?

’வேலைக்கார அம்மா ஊர்லே யாரோ உடம்பு சரியில்லேன்னு நேத்து மரக்காணம் போயிருக்காங்க. அவங்க ஞாயித்துக்கிழமை திரும்பற வரை இருக்கற சுத்தம் மதி. நேத்து சாயரட்சை தரை அடிச்சு தூர்த்து வச்சுட்டேன் ..நீ முடிஞ்சா இன்னிக்கு செய்.. புஸ்தகம் அடுக்கு.. பாப் இஸ் யுவர் அங்கிள்..’

எளிதான காரியம் என்று பிரிட்டீஷ் சொலவடையில் சந்தோஷமாக சொல்லியபடி அப்பா வெளியே போகும்போது டெலிபோன் சிணுங்கியது.

ஆச்சரியமாகக் காலை நேரத்தில் ஜோசபின்.

’என்னமோ மாயம் போட்ட மாதிரி இருக்குடா. உன் கிட்டே சொல்லணும்னு தோணிச்சு. அதான். சாரி தொந்தரவு செஞ்சுட்டேண்டா ராஜா’.

அப்பா படி இறங்கிக் கீழே போவதைப் பார்த்துக் கொண்டே சொன்னேன் –

’நீ பேசறதா இருந்தா ஃபோன் பக்கத்திலேயே குடி இருப்பேன் கண்ணம்மா .. ரிசீவரை உதடு பக்கமா வச்சுக்க.. உதட்டைக் கடிச்சு ஒண்ணு தரேன்..’

’டேய் இதானே சந்தர்ப்பம் கிடச்சா சந்துலே புகுந்து சைக்கிள் ஓட்டுவே நீ..’

’உன்னையும் கேரியர்லே வச்சு உன் மேலே நல்லா சாஞ்சுக்கிட்டுத்தான் அது’

’சார் ரொமாண்டிக் மூட்லே இருக்கறாப்பலே இருக்கு.. எனக்கு ட்யூட்டி மூட்.. என்ன சொல்ல வ்ந்தேன்னு கேளேன்’.

கேட்டேன். விக்தொ அவளுக்கு தொலைபேசி தன்னால், அத்தையால் நேர்ந்த எல்லா தொந்தரவுக்கும் மன்னிப்பு கேட்டாராம். ஹென்றி அவளை இனியும் பின் தொடராமல் இருக்க அவனோடு பேசுவதாகவும் சொல்லியிருக்கிறார்.

’உன் மனசுப்படி உன் எதிர்காலம்… உதவி செய்ய வேணும்னு நீ கேட்டுக்கிட்டா உடனே வருவேன் தவிர உபத்திரவப் படுத்த மாட்டேன்னார்’.

எக்ஸலெண்ட் என்றேன்

’எனக்கே ஒரு மாதிரியாப் போச்சுடா.. என்ன இருந்தாலும் பெரிய மனுஷர்.’.

’வேறே என்ன சொன்னார்’?

’அதுவா, நீ இன்னும் நாலு வயசு பெரியவனா இருந்தா உங்கப்பா கிட்டே பேசி உனக்கும் எனக்கும்..’

’உனக்கும் எனக்கும்’?

’அதாண்டா.. காரைக்கால் போனேனே அப்படி எல்லாம் முடிச்சு’

’அது கல்யாணம்.. முடிச்சா ஜாம்ஜாம்னு பாலும் பழமுமா..ஹைய்யா ..அதுக்கு அப்பா கிட்டே என்ன கேக்கணும்.. நமக்குத் தான் … நாமே தான்..’

’டேய்ய்ய்…’ டெலிபோனை வைத்து விட்டாள் ஜோசபின்.

சைக்கிள் மிதித்துக் கொண்டு இலக்கு இல்லாமல் சுற்ற இந்த ஊரை விட்டால் வேறே இடம் கிடையாது. ரோமன் ரோலண்ட் நூலகம் பக்கம் போகும்போது பின்னால் யாரோ விடாமல் ஹாரன் ஒலிக்கிற சத்தம்.

வண்டியை ஓரம் கட்டி விட்டுத் திரும்பி பார்த்தேன்.

ஒரு விண்டேஜ் கார். ரெண்டாம் உலக் யுத்த காலத்தில் டெட்ராய்டில் செய்து இறக்கியதோ என்னவோ… ஸ்டீரிங் பிடித்து ஓட்டி வந்தவன் வைத்தே. அவனுக்குப் பினனால் கலவரமாக லெச்சு, ப்ரான்ஸுவா, அந்துவான்.

வழக்கம் போல் அந்துவான் தான் சுப சமாசாரம் சொல்ல ஆரம்பித்தது –

’மச்சான் லீவு விட்டா விட்டா விட்டா ’

எப்போ விடுவான் என்று தெரியாமல் லெச்சுவைப் பார்க்க, அவன் ’சொல்லுடா’ என்று ஃப்ரான்ஸ்வாவுக்கு அன்புக் கட்டளை இட்டான். மகிழ்ச்சி பொங்க, குழுவினர் என்னைப் பற்றி இளக்காரமாக நினைப்பதை வார்த்தை விடாமல் நல்ல, அல்லாத சொற்களில் அப்படியே புட்டு வைத்தான் ஃப்ரான்ஸ்வா. அதை நாலு தடவை வடிகட்டிச் சுத்தம் செய்தால் தேறுவது –

லீவு விட்டது முதல் நான் ஜோசபின், கயல், காஞ்சனா, சைராபானு, அமேலி, விசாலி என்று பொம்பளை வாடை பிடித்துக் கொண்டு வேறே வேலையே இல்லாமல் விதவிதமான அழகிகள் பின்னாலேயே சதா திரிந்து கொண்டிருக்கிறேனாம். பெண்பித்து பிடித்து கார்த்திகை மாத நாலுகால் ஜீவனாக ஓடியவர்கள் யாரும் உருப்பட்டது இல்லையாம். உலகில் அது தவிர அனுபவிக்கவும் நேரம் கழிக்கவும் மற்றதும் நிறைய உண்டாம்.

எல்லாம் சரிதான். நான் மோப்பம் பிடித்துப் பின்னால் அலைகிற பட்டியலில் இங்கே இல்லாத காஞ்சனாவும் சைராபானுவும் எப்படி வந்தார்கள்?

’நாங்க இருக்கோமா செத்தோமான்னு கூடக் கேட்கலே பார்த்தியா’?

லெச்சு செண்டிமெண்ட் காட்ட நான் உடனே சரணடைந்தேன். நாளைக்கு வரேன் என்று வாக்குறுதி தந்தேன். எங்கே, எதற்கு கேள்வி அனாவசியம்.

’அமேலியை என்னடா பண்ணினே’?

ஒண்ணுமில்லே என்ற பதிலில் கூட்டம் திருப்தி அடையாததால் நான் நழுவத் தொடங்க, லெச்சு சைக்கிள் கேரியரைப் பிடித்து நிறுத்திச் சொன்னது –

’அடுத்த் மாசம் எட்டாம் தேதி மாரியம்மன் பண்டிகைக்கு கோட்டகுப்பத்திலே நம்ம டிராமா போடறோம். நீ இன்னும் ஒரு வாரத்துலே எழுதித் தரே..’.

ஒப்புக் கொண்டு பிரியாவிடை பெற்று ல தெ லூரிஸ்டா தெருவில் திரும்பினேன்.

இனிமையான பாட்டு சத்தம். தப்லாவும் டோலக்கும் பக்வாஜுமாக தாளம் தட்டிக் கொண்டு குழல் ஊதியபடி தணிந்த குரலில் பாடிக்கொண்டு குஜராத்திப் பெண்கள். பவானி தயானி என்று மிஸ்ர பைரவி ராகப் பாட்டு. உச்சக் குரலில் முழங்கிக் கொண்டிருக்க நடுவில் சிறு ரதத்தில் ச்ரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதி. அடுத்த ரத்த்தில் நகரும் கொலு. ஒன்பது படிகளில் இருந்த பொம்மைகளில் எல்லோர் கவனத்தையும் க்வர்ந்தது நானும் கயலும்.

நொளினிகாந்த் மோஷாய் வடித்த சுதைச் சிற்பங்கள் குஜராத்தி கொலுப் பந்தலுக்கு வந்ததில் ஆச்சரியமில்லை. எல்லோரும் எல்லோருக்கும் பரிச்சயமான ஊர். சின்னப் பிணக்குகள் கரைந்து போகும் விழாக்காலம் இது.

ஆனாலும் நானும் கயலும் குஜராத்திப் பந்தலில் என்ன செய்து கொண்டிருக்கிறோம்? நான் கொலுப்படியில் பொம்மைக் கயலைப் பார்த்தேன்.

குட்டி, ரொம்ப அழகா இருக்கேடீ செல்லம்… வா, ஓடிடலாம்.

சைக்கிளை ஓட்டிப் போக முடியாததால் கூடவே தள்ளிக் கொண்டு தெருவை அடைத்துப் போட்ட பந்தலைக் கடக்க, பாந்தமாகப் புடவை அணிந்த நடுவயதுப் பெண்கள், ’தம்பி டோக்லா சாப்பிடுங்க’, ’பையாஜி கசோடி டேஸ்ட் பாருங்க’ ’பாய்சாப் பூந்திலட்டு எடுத்துக்குங்க’ என்று இலைத் தொன்னையில் வைத்து பிரியத்தோடும் குளிர்ந்த சிரிப்போடும் நீட்டினார்கள்.

பந்தலின் நடுவே மூன்று தேவியர் திருவுருவங்களுக்கும் வணக்கம் சொல்லி, பக்கத்தில் இருந்த முரசை நான் குஷியாக அறைய, இதற்காகவே காத்திருந்த மாதிரி அடுத்த பாட்டுக்கு உடனே கோலாட்டம் போட ஆரம்பித்தார்கள்.

கசோரி தின்றபடி அதை ரசித்துக் கொண்டிருந்தேன். தோளில் யாரோ தொட்ட உணர்வு. பின்னால் பார்க்க, நெருக்கமான தொலைவில் விசாலி. அவள் கையை அப்படியே தோளில் இருத்திக் கொண்டேன். நடனத்துக்கும் பாட்டுக்கும் விசாலியின் நெருக்கத்துக்கும் நன்றி சொல்லி அந்த நிமிடங்கள் எல்லாம் இனிய கனவாக ஆடியபடி இசைத்தபடி மிகமிக மெதுவாக நகர்ந்தது.

’நீ இங்கே என்ன பண்றே’? விசாலியைக் கேட்டேன். தானாக ஒருமை விளி உரிமையோடு விழுந்திருந்தது. விசாலியும் அசராமல் பதில் சொன்னாள் – நீ என்ன பண்றேயோ அதே தான் நானும் பண்றேன்’.

டோக்லாவை புளிமிளகாயில் தொட்டு விழுங்கிவிட்டு விசாலியை நோக்க, அவளுடைய இலைக்கிணணத்தில் பாதி கடித்த கசோரியைக் களையத் தயாராக ஒதுக்கி வைத்திருந்தாள் அவள்.

எவ்வளவு டேஸ்டா இருக்கு என்று பொதுவாகச் சொல்லி அதையும் கையில் எடுத்துக் கொண்டேன். லெச்சுவும் கோஷ்டியும் எச்சில் வாசா, பொமபளை தாசா என்று பின்னால் டப்பா கார் ஹாரன் அடித்துப் பாடுகிற பிரமை.

போங்கடா, பெண்ணுங்க தான் என் உலகம். அவங்க சிநேகிதத்துக்கு எதுவும் கொடுப்பேன். என் பலமும் அதுதான், பலவீனமும் அதுதான்.

’கொலு பொம்மை வாங்க வந்தேன்.. கொலு வச்சிருக்கோம் இல்லே..’ என்றாள் விசாலி கண்ணால் சிரித்து. .

’ஆஸ்பத்திரியில் இதெல்லாம் வேறே செய்யறீங்களா? சரிதான். கொலு பாக்க வந்தா அவுன்ஸ் கிளாஸ்லே கார்பனேட் மிக்சர் கொடுப்பீங்களா’?

முத்துப்பல் பளிச்சிட வாய்விட்டுச் சிரித்தாள் எங்க ஊர்ப் புன்னகை அரசி.

’ஆஸ்பத்திரியிலே எதுக்கு கொலு வைக்க, எங்க வீட்டுலே தான்’ என்றாள்.

என்னது உங்க வீட்டுலே கொலுவா?

’ஏன் நாங்க வைக்கக் கூடாதா? நான், ஜோசபின், ரோஸாலி, எமிலி எல்லோரும் சேர்ந்து அமர்க்களப் படுத்தியிருக்கோம்… வந்து பார்’.

சம்மதித்தேன். அது மட்டும் போதாது, பொம்மை வாங்கக் கூட வா என்றாள்.

எனக்கு நளினிகாந்த் மொஷாய் ஞாபகத்துக்கு வந்தார். அவரிடம் இருந்து அழகான பொம்மைகளை வாங்கி விசாலிக்குத் தரலாம் என்று தோன்றியது. கயலும் மொஷாயிடம் மிஞ்சி இருந்தால் ஒன்றிரண்டு பூங்கா பொம்மைகள் எடுத்துப் போக வருவதாகச் சொல்லியிருக்கிறாள்.

விசாலியின் ஒயிலான லேடீஸ் சைக்கிள் இடித்துக் கொண்டு வர, என் ராலே புது உற்சாகத்தோடு லலி தொலந்தர் தெருவில் திரும்பியது.

ஒரு பயம். கயல் இந்த சிநேகிதத்தைத் தப்பாக நினைப்பாளோ?

அவளும் இந்த ஆறு மாசத்தில் அனுபவ முதிர்ச்சி அடைந்திருக்கிறாள். அப்படி எதுவும் நிகழ வாய்ப்பில்லை என்று நம்பினேன். வேறே வழி?

கயல் அங்கே வந்திருக்கவில்லை. விசாலிக்கு எடுத்துத் தரக் கடைசி சில பொம்மைகளே மொஷாயிடம் இருந்தன. அவரும் கூடவே வசிக்கும் சிநேகிதியும் வங்காளி நவராத்திரிப் பந்தலுக்குப் போகிற அவசரத்தில் இருந்ததால், பத்தே நிமிஷத்தில் வநத வேலை முடிந்தது. வாசலுக்கு போன போது தொலைபேசி மணி. எடுத்துப் பேசிவிட்டு மொஷாய் கூப்பிட்டார் –’ரொபீந்தர், உனக்குத்தான்… உன் சிநேகிதி’. அவருக்கு நான் ரொபீந்தர் தான்..

கயல் அழைக்கிறாள். கபே ஹவுஸில் இருக்கிறாளாம். என்னைப் பார்க்க முக்கியமான யாரோ அவளோடு காத்திருக்கிறார்களாம். உடனே வரணுமாம்.

’நீ கிளம்பு. ஜோசபின் தனியா இருக்கா’ என்றேன் விசாலியிடம்.

’ஐயே, பாசம் பொங்கி வழியுது. நீ வந்து அங்கே இருக்க வேண்டியதுதானே?’

’எனக்கென்ன கஷ்டம். நீயும் ஜோசபினும் சரின்னு சொன்னா பாய் தலகாணியோட வந்துடுவேன்’..

ஆமா, அதுக்குத்தானே வீடு பிடிச்சு வச்சிருக்கோம் என்று நொடித்தாள்

நீதானே வரச் சொன்னே? அவள் கையை மெல்ல வருடினேன். இன்னொரு அழகான தோழமை உருவாகிக் கொண்டிருக்கிற மகிழ்ச்சி எனக்கு.

’ஜோஸ்ஸி தனியா இருக்க விட்டுட்டு வர நான் என்ன மடச்சியா? எமிலியும் ரோசாலியும் இன்னிக்கு லீவுன்னு கூடவே இருக்காங்க’ என்றபடி விசாலி கையை விடுவித்துக் கொண்டு பூஞ்சிட்டாகப் பறந்து போனாள்.

ஐந்தே நிமிடத்தில் நான் காபி ஹவுஸ் வாசலில் இருந்தேன்.

காபி ஹவுஸில் நுழையும்போது நான் ஆச்சரியப்பட்டுப் பார்க்க, கயல், லெச்சு, ஃப்ரான்ஸுவா, வைத்தே, அந்துவான். அப்புறம் ஆறடி உயரமாக வாட்ட சாட்டமாக, கருத்த பெண் ஒருத்தி. இந்தியச் சாயல் தான் அவளுக்கு.

அந்தப் பெண் என்னைக் கண்டதும் முகத்தில் மகிழ்ச்சி காட்டினாள். எனக்கு அவளைத் தெரியும். எல்லையம்மன் கோவில் தெருவில் ஏதோ பெயர் சொல்லி ஜோசபினைத் தேடி வந்தவள். ஜோசபினை கட்டாயக் கல்யாணம் செய்து வெளிநாடு அனுப்பப் புறப்பட்ட கும்பலில் இவள் உண்டு.

’டெய்ஸி மனோ சந்திரா’ அந்தப் பெண் கைகுலுக்கக் கை நீட்டினாள். நான் ஜாக்கிரதையாக வணக்கம் சொன்னேன்.

‘புதுப் பழக்கமா இருக்கு மச்சான் வணக்கம் எல்லாம் சொல்றே இன்க்ரயபில்.. தடங்கலே இல்லாமல் முழுசாகச் சொன்னான் அந்த்வான்.

சிரித்தேன். இத்தனை நண்பர்கள் சேர்ந்து கூடிய இடத்தில் இருக்கும் பாதுகாப்பும் குழுவால் ஏற்படும் வலிமையும் அசாத்தியமானது. தாமதம் ஆக்காமல் எல்லாவற்றையும் போட்டு உடைக்க வேண்டியதுதான். கலகமோ என்னமோ, ஏற்பட்டால் தான் நியாயம் பின்னாடியே ஓடி வரும்.

’இவங்க யார்னு தெரியணும்னா நான் ஜோசபின் பற்றி சொல்லணும்..’

நான் சாங்கோபாங்கமாக ஆரம்பிக்க லெச்சு கைகாட்டி அமர்த்தினான்.

’அவங்க ஏற்கனவே சொல்லிட்டாங்க. கயல் கிட்டே சொல்லித்தான் அவ கூட வந்திருக்காங்க’.

எல்லோரும் கயல் உட்பட எதிர்க்கட்சி ஆனது போல ஒரு வினாடி உணர்வு. இருக்காது. இவர்கள் என் சிநேகிதர்கள், கயல் என் பிரியமான காதலி.

’மேடம் நீங்க யார்னு எனக்குத் தெரியாது. ஆனா ஜோசபினைக் கட்டாயப்படுத்தி, மிரட்டி பிரான்ஸ்லே மார்செயில்ஸ்லே இருந்து வந்த ஒருத்தரோடு கல்யாணம் கட்டி அனுப்ப கும்பலாக வேலை செய்யறாங்கன்னு தெரியும். அவங்களுக்கு நீங்க வேண்டியவங்கன்னா நான் உங்க கிட்டே சொல்ல ஒண்ணே ஒண்ணுதான் இருக்கு. ஜோசபின் வாழ்க்கையிலே குறுக்கிட்டா நண்பர்களான நாங்க எல்லோரும், அவ வேலை பார்க்கிற ஹாஸ்பிடல் டாக்டர், நர்ஸ்களும் ஒண்ணாச் சேர்ந்து எதிர்க்க வருவோம்’.

அந்த்வான் சந்தோஷமாக, விவா லா என்று கோஷம் போட ஆரம்பிக்க நான் அடக்கினேன்.

அந்தப் பெண் அளவாகச் சிரித்தபடி நிமிர்ந்து உட்கார்ந்திருந்தாள். கயலோ, லெச்சுவோ எல்லோருக்கும், அவளுக்கும் சேர்த்து, காபி ஆர்டர் செய்திருந்ததை சவரிராயன் கொண்டு வந்து வைத்தார். நான் தொடர்ந்தேன்.

’வங்காளி நவராத்திரி பந்தல்லே நான் இருக்கேன்னு தெரிஞ்சு கூடவே வந்தீங்க இல்லே? எதுக்கு? என்னை மிரட்டினா நான் பயந்து ஜோசபினையும் பயப்படுத்துவேன்னு தானே? அந்த மாதிரி ஆசையெல்லாம் வேணாம். யார்க்கும் பயப்பட மாட்டா ஜோசபின். பயப்பட மாட்டோம் நாங்க எல்லாம்.’

அவள் இத்தனைக்கும் அசராமல், சிரிப்பு மாறாமல் இருந்தாள்.

’தம்பி நீங்க முடிச்சுட்டீங்களா? நான் பேசலாமா’?

அவள் கேட்டபடி காப்பி கோப்பையை உயர்த்த என்னையும் கயலையும் தவிர மற்றவர்கள் கோப்பை உயர்த்தினார்கள். சியர்ஸ் எல்லாம் கயல் அறியாள்.

’இன்னும் முடிக்கலே மேடம். நீங்க அந்த … மார்செய்ல்ஸ்லே இருந்து காரைக்கால் கல்யாணத்துக்கு வந்த மாப்பிள்ளைத் தோழன்.. பெஸ்ட் மேன்…. பெயர் என்ன… ஜோசப்… கிறிஸ்டி.. ஜார்ஜ் .. எதோ ஒண்ணு…’

ஹென்றி என்றாள் அவள் அமைதியாக.

’நீங்க ஹென்றிக்கு என்ன வேணும்’?

நான் குரலை உயர்த்த வேண்டாம் என்று கவனமாக இருந்தாலும் அது உயர்ந்தே வந்தது. ஒரு பெண்ணிடம் கடுமை காட்டுவது தப்பு என்றது மனம். செய்து கொண்டிருப்பதற்கு நியாயம் கற்பித்து இன்னொரு மனம் பேசியது. .

அவள் ஒரு வாய் காப்பி குடித்தாள். அதன் சூடான சுவையை அனுபவிக்கிறது போல் கண்கள் செருக ஒரு நிமிடம் இமை மூடி இருந்தாள். தன்னோடும் உலகத்தோடும் சமாதானமாக இருப்பதைச் சொல்லும் புன்னகை விரிந்தது..

’நான் தான் ஹென்றி’..

நான் நம்ப முடியாமல் பார்த்தேன். நாடகம் பார்க்கிறவர்களாக மனம் விலகி இருந்து காப்பி அருந்திக் கொண்டிருந்தார்கள் லெச்சுவும் அந்த்வானும். கயல் என் அருகில் நெருங்கி உட்கார்ந்து ஆதரவாக என் கையை அழுத்தினாள்.

அடுத்த சில நிமிடங்கள் விசேஷமானவை. ஒரு துன்பியல் நாடகம் திசை மாறிய நேரம் அது. டெய்ஸி மனோ ச்ந்திரா என்ற ஹென்றி சொன்னது இது-

கீர்த்திராயன் முத்தப்பா ஹென்றி ரெண்டாம் தலைமுறை பிரஞ்ச் இந்தியன். இந்திய உடம்பில் பிரஞ்சு முற்போக்கு ரத்தம் கொண்டவனாக வளர்ந்தவன்.

‘பகலூயிய ஸ்கூல் பைனல் படிக்கற போதே நான் பையன் இல்லே, மனசாலே பொண்ணுன்னு தெளிவாப் புரிஞ்சுக்கிட்டேன்.. ஆபரேஷன் செஞ்சு பெண்ணாக மாறணும்னு வெறி.. ஆனா வீட்டுலே இதைப் புரிஞ்சுக்கலே.. இந்தியாவிலே எங்கேயாவது ஒரு பொண்ணு கிடச்சா, அவளை எனக்குக் கட்டி வைச்சுடலாம்.. அப்புறம் பிரச்சனையே இல்லாம போயிடும்னு அப்பாவித்தனமா நினைச்சாங்க’.

ப்ரஞ்சு கயானாக்காரனான கருப்பின சிநேகிதனைத் தன் வாழ்க்கைத் துணையாகப் போகிறவன் என்று போன மாதம் வீட்டில் அறிமுகப்படுத்த பிரச்சனை பூதாகாரமாக உருவெடுத்து விட்டது.

‘எங்க அப்பா மார்செயில்ஸ்லே நாலு முடிதிருத்தகம் வச்சிருக்கார். நல்லா போயிட்டு இருக்கற பிசினஸ் அது. அப்பாவுக்கு ஒரே மகன் நான்.. அவர் சொன்னபடி இந்தியாவிலே பொண்ணு கட்டிக்காம இப்படி ஒரு தடியனைக் கட்டிப்பேன்னு போனால், வீடு, பிசினஸை அதில் வர்ற, வந்த வருமானம்.. எல்லாம் சர்ச்சுக்கு எழுதி வ்ச்சுடுவேன்னு அப்பா பயமுறுத்தினார்’..

மார்செயில்ஸில் இருந்து தன் உறவுக்காரப் பையன் கல்யாணத்துக்காக ஜோசபினுடைய அத்தை ரேஷல் ஜார்ஜ் கனகராயன் காரைக்கால் வரும்போது இன்னொரு உறவினனான ஹென்றியும் எந்த திட்டமும் இல்லாமல் கல்யாண மகிழ்ச்சியில் பங்கெடுக்க மாப்பிள்ளைத் தோழனாக இங்கே வந்திருக்கிறான்.

’ஆனா, இங்கே பாவம், அந்த அப்பாவிப் பொண்ணு ஜோசபினை கட்டாயப்படுத்தி எனக்கு கல்யாணம் கட்டி வைக்க ஏற்பாடு செஞ்சதைப் பார்த்து ஷாக் ஆயிட்டேன்.. அந்தப் பொண்ணை வீட்டுக்குள்ளே பூட்டி அடைச்சு வச்சு கட்டாயப்படுத்தறாங்கன்னு தெரிஞ்சு மெய்யாலுமே மிரண்டு தான் போனேன்.. ஜோசபின் கிட்டே என்னைப் பத்தி எல்லா உண்மையும் சொல்லணும், நான் அவள் லைஃப்லே குறுக்கிட மாட்டேன்னு புரிய வைக்கணும்னு தான் ஜோசபினை தொடர்ந்து வந்தேனே தவிர அவளை மிரட்டிக் கல்யாணம் செய்ய இல்லே…’.

மன அழுத்தம் காரணமாக பெண்ணாக உடனே மாற உடம்பும் மனமும் விருப்பப் படுவது அதிகரிக்க, அதை சமாளிக்கவே சுபாவமாக பெண்ணாக வலம் வருகிறான். அது சிரிப்புக்கு உரியதாக இங்கே யாரும் நினைத்தாலும் அவனுக்கு – அவளுக்குக் கவலை ஏதும் இல்லை.

’அடுத்த வாரம் நான் பிரான்ஸ் திரும்பறேன்.. அடுத்த மாசம் செக்ஸ் மாற்ற ஆப்பரேஷன்.. இப்போ தான் அங்கேயே வந்துட்டு இருக்கு. செலவு தான்.. ரிஸ்க் தான்.. பார்த்தா முடியுமா.. ஆப்பரேஷன் முடிஞ்சு ஆறு மாசத்திலே என் பாய் பிரண்டை கல்யாணம் செஞ்சுப்பேன்.. அப்புறம் ஆயுசு பூரா அவன் மனைவி நான்.. கர்த்தர சேர்த்ததை மனுஷர் பிரிக்காமல் இருக்கட்டும்’.

இதையெல்லாம் ஜோசபினுக்கு அவள்-அவன் சார்பில் சொல்ல வேண்டும். என்னிடம் ஹென்றி எதிர்பார்க்கும் உதவி இதுதான்.

மழை பெய்து ஓய்ந்தது போல் ஹென்றி சொல்லி நிறுத்தினான். லெச்சு எல்லோருக்கும் இன்னொரு காப்பியும் பிஸ்கெயும் ஆர்டர் செய்தான். கூட்டத்தின் முழு ஆதரவும் ஹென்றிக்கு இருந்ததாக உணர்ந்து கொண்டேன்,

’கவலையே படாதீங்க டெய்ஸி மனோ ஹென்றி .. ஜோசபின் கிட்டே இவன் எடுத்துச் சொல்வான். அந்த்வானே செய்வான் ஆனா அவனுக்கு இவ்வளவு பெரிய டயலாக் கொடுத்தா அடுத்த வருஷம் தான் பேசி முடிப்பான்’.

லெச்சு சொல்ல எல்லோரும் சிரித்தார்கள். ஹென்றி என்ற டெய்ஸி மனோ சந்திரா அவர்கள் சிரிப்பால் தன் மனசு லேசானதாகச் சொன்னாள். இந்த ஆஜானுபாகுவான உடம்பில் மெல்லிய மனசைச் சுமந்து கொண்டு சீக்கிரம் காதலனைக் கைப்பிடிக்க எல்லோரும் வாழ்த்து சொன்னோம்.

தேவைப்பட்டால் பிரான்சுக்கு வந்து ஹென்றியின் வீட்டில் பேசி அந்த நாலு முடிதிருத்தும் கடைகளும் வீடும் ஹென்றிக்கே கிடைக்க உதவி செய்வதாகச் வாக்குறுதி கொடுத்தான் அந்துவான். ரொம்ப உணர்ச்சிவசப் பட்டான் அவன்.

மெர்சி பெகு என்று, காபி கொண்டு வந்த சவரிராயன் உட்பட, சகலருக்கும், நன்றி சொல்லி எழுந்து போனாள் டெய்சி மனோ சந்திரா. போகலாம் என்று கயலிடம் சொல்லி நான் அடுத்து எழ, வைத்தே நமட்டுச் சிரிப்புச் சிரித்தான்.

’கயல், இந்தப் பயலை கண்ணைக் கட்டிக் கூட்டிட்டுப் போ.. விட்டா உங்க அடுத்த வீட்டுப் பொண்ணுக்கு ஸ்கொயர் ரூட் போட்டுடுவான்’..

காண்டாக்ட் சர்ட்டிபிகேட் கிடைத்த சந்தோஷத்தில் நான் மிதக்க, காலை மிதித்து அடங்குடா என்றாள் எனக்கு மட்டும் கேட்கும் குரலில் என் எஜமானி.

’முதல்லே ட்யூப்ளெக்ஸ் வீதிக்கு போடா’, சைக்கிள்களை எடுத்தபோது. சக்க்ரவர்த்தினி உத்தரவிட்டாள்.

அய்யே அது தியூப்ளே வீதி என்றேன்.

’பிரஞ்சு படிச்சா அப்படி சொல்ல மாட்டே. ட்யூப்ளெக்ஸ் வீதி தான் சரி’.

அவள் தீர்மானமாகச் சொல்ல, நான் அதே தீர்மானத்தோடு சைக்கிளில் அமர்ந்தேன்.

’தப்போ ரைட்டோ, பல பேரும் சொல்றதாலே, இங்கே வந்தது முதலே கேட்டு மனசுலே பதிஞ்சதாலே இது எப்பவும் தியூப்ளே வீதிதான் எனக்கு … அது கிடக்கு.. தியூப்ளே வீதியிலே எங்கே போகணும் உனக்கு’?

அவள் சொன்ன விலாசம் எனக்கு ரொம்பப் பழக்கமானது. நான் வசிப்பது.

’சரஸ்வதி பூசை வருது. நானும் அவனும் தான் வீட்டை எடுத்து சரியாக வைச்சு சாமி கும்பிடணும். அவங்க அம்மா இல்லாத வெறுமை அசாத்தியமாக இருக்கு’

அப்பா முந்தாநாள் பார்வேந்தனாரிடம் பகிர்ந்து கொண்டபோது கயலும் கூட இருந்திருக்கிறாள்.

’நீங்க.. நீ தனியா இல்லே. நான் இருக்கேன் உன் கூட’.

கயல் சைக்கிளை நிறுத்தி விட்டு துப்பட்டாவை இழுத்து முடிச்சுப் போட்டுக் கொண்டு வீட்டுக்குள் நுழையக் களைகட்டி விட்டது.

ஒவ்வொரு அறையாக அலமாரிகளை சுத்தம் செய்து புது பேப்பர் விரிக்க, புத்தகம் பழையபடி அடுக்க, கிரமமாக தூசி தட்டித் துடைக்க, கதவை, ஜன்னலை எல்லாம் ஈரத்துணி கொண்டு துடைக்க, தரையெல்லாம் பினாயில் கல்ந்து அலம்ப என்று என்னோடு பம்பரமாகச் சுழன்றாள் கயல்.

மஞ்சள் பைஜாமாவும் அடர்ந்த நீல நிற துப்பட்டாவுமாகப் பறந்து பறந்து வேலை செய்த அந்தப் பட்டாம்பூச்சியை இடைக்கிடையே எத்தனையோ தடவை ஆசை தீரச் சின்னச் சின்னதாக அவசர முத்தமிட்டேன்.

முடித்தோம். களைத்தோம். முகத்தில் கூந்தல் நெகிழ, வியர்த்து வந்தவளை மொட்டை மாடிப் பின்னறைத் தனிமையில் இடையில் கை சேர்த்து இறுக அணைத்துக் கொண்டேன். அவள் வியர்வை என் கன்னத்தில் இதமாகப் படிந்து கடல் காற்றில் உலர, நிமிடங்கள் நீண்ட இதமான அணைப்பு அது.

கீழே வந்தபோது தரையும் சுவரும் கதவும் அலமாரிகளும் தூய்மை பூசி நின்றன. ஹாலில் மேஜை மேல் வெண்பட்டு விரித்து கலைமகள் படம் வைத்து அடுத்து நாலைந்து புத்தகங்கள் தமிழிலும் மலையாளத்திலும் இங்கிலீஷிலுமாக எடுத்து வைத்தாள் கயல். அமேலி பரிசாகக் கொடுத்த பிரஞ்சு கற்பிக்கும் புத்தகத்தைப் புரட்டிப் பார்த்து விட்டு எடுத்து வைக்க ரெண்டு பேருக்கும் அமேலி நினைவில் வந்தாள். எப்போ வருவாளோ இனி.

அப்பா மாடிப்படி ஏறி உள்ளே நுழைந்தபோது நாங்கள் முகம் கழுவி திருநீறு அணிந்து ஹாலில் நின்று திருப்தியோடு பார்த்துக் கொண்டிருந்தோம்.

’இத்தனை வேலையும் நீ செஞ்சியாம்மா.. என்னமா வீடு மாறி இருக்கு’?

அன்போடு கயலை விசாரித்து அவள் தலையில் கை வைத்து ஆசி சொல்லி வாழ்த்தினார் அப்பா.

’குழந்தைக்கு ஸ்வீட் வாங்கிக் கொடுடா. அதோடு என் கட்டுரைகள் புத்தகமா வந்திருக்கே அதுவும் ஒரு பிரதி எடுத்துக் கொடு.’.

அப்பா யார் மேலாவது ரொம்பப் பிரியமாக உணர்ந்தால் மட்டுமே அவருடைய கட்டுரைத் தொகுதி அளிக்கப்படும். கயல் விசேஷமானவள்.

’அப்பா இந்தக் கொழந்தை ஷொகொலா தான் சாப்பிடும். வாங்கித் தரட்டா’?

’பிடிச்சதை சாப்பிடட்டுமே உனக்கு என்ன போச்சு’?

அப்பா கணீரென்று பீம்பிளாஸ் ராகத்தில் ’வெள்ளைத் தாமரைப் பூவில் இருப்பாள்’ என்று பாரதி பாடலைப் பாட ஆரம்பிக்க நான் கூடவே சேர்ந்து கொண்டேன். பாட்டு முடியும் வரை கயல் கை கூப்பி என்னையே பார்த்தபடி நின்றாள்.

அப்பா கை சுட்ட, கயல் தீபாரதனை விளக்கைச் சுழற்றி தீபம் காட்டினாள். நான் ’வீதி தோறும் இரண்டொரு பள்ளி’ வரிகளை உரக்கச் சொன்னேன்.

பூஜை முடித்து அப்பா கீழே போய் விட்டார். சரஸ்வதி பூஜைக்கு ஆபீஸ் லீவு என்றாலும் இன்ஸ்பெக்‌ஷன் நடக்கிறபடியால் அவர் கிட்டத்தட்ட முழு நேரமும் ஆபீஸில் தான் பாவம்.

’தம்பீஸ்லே சாப்பிட்டுப் போயிடலாமா’?. கயலைக் கேட்டேன்.

’வேணாம்டா. கசகசன்னு இருக்கு. குளிச்சுட்டுத்தான்’.

’இங்கேயே குளியேன். பாத்ரூம்லே கதவு இருக்கு. பயம் இல்லே’.

’என்ன பயம் இல்லே. உன் பார்வை கதவை எல்லாம் துளைச்சுட்டு வருமே. வேண்டாம். ஏய்..இதைத்தான் சொன்னேன். எக்ஸ்ரே கண்ணா’.

அவள் துப்பட்டாவை அவசரமாக இழுத்துப் போர்த்திக் கொண்டு என் கையை உதறிக் கீழே ஓடினாள். தொடர்ந்தேன்.

‘இரேன்.. கொஞ்சம் லேட்டா போனா ஒண்ணும் ஆகாது’.

’அம்மா ஏசும். நல்ல நாள் பெரிய நாள் வீட்டுலே இல்லாம போயிட்டேன்னு’

என்னோடு இருக்கேன்னு சொன்னா ஏசாது என்றேன். பாட்டு சொல்லிக் கொடுத்து வாங்கிய நல்ல பெயர் இன்னும் பல நாள் கைவசம் உண்டு.

’வீட்டுலே பெண்களுக்கு நவராத்திரி விருந்து. அம்மா ஆள் போட்டு சமைக்குது. பூஜைக்காவது போயிடணும். வா நேரமாச்சு’.

நான் அங்கே வந்து என்ன பண்ணப் போறேன்?

’ராஜா மாதிரி கால் மேலே கால் போட்டு உக்காந்து போட்டதைத் தின்னுட்டு’.

’என் ராணிக்கு பீரோ பின்னாடி கிஸ் கொடுத்துட்டு’

’ஏன் இங்கே கொடுத்ததெல்லாம் போதாதா’?

ஜோசபினிடம் ஹென்றி பற்றிச் சொல்லவில்லையே. இது நினைவு வந்தபோது பாதி தூரம் சைக்கிளில் கயல் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தோம். சரி, அங்கே போய்த்தான் டெலிபோன் செய்யணும்.

கயல் வீட்டில் சின்னக் கூட்டம், ஹாலில் ஜோசபின், விசாலி, ரோஸாலி, எமிலி.

’ஆஸ்பத்திரியே ஆஜராயிடுச்சே. அம்மா சமையல் நல்லா இருக்கும் தானே’?

நான் உள்ளே நுழைந்ததும் சத்தமாகக் கேட்க, விசாலி முதுகில் அடித்தாள். நான் அவள் பக்கம் நெருங்க ஜோசபின் ஒரு சின்னச் சிரிப்போடு கயலைப் பார்த்தாள். கயல் இன்னொரு சிரிப்பால் பதில் சொன்னாள். ரெண்டு சிரிப்புக்கும் எனக்கு அர்த்தம் தெரியும். புதுசா ஒருத்தியா? வழியறான் பாரு.

ஹென்றி வந்ததையும் நடந்த்தையும் எங்கள் வீட்டில் இருந்தே ஜோசபினுக்கு கயல் சொல்லி விட்டாள். அது மட்டும் இல்லை, அவள் அம்மாவிடம் பேசி சரஸ்வதி பூஜை மதிய விருந்துக்கு நர்ஸ் அணங்குகளை அழைத்ததும் அவளே. முழுக்க முழுக்கப் பெண்கள் அணி அரசோச்ச, நான் நேற்றைய பேப்பர் படித்துக் கொண்டு, கயல் குளித்து விட்டு வரக் காத்திருந்தேன்.

வெள்ளைப் பட்டுப் பாவாடையும் கருப்பு தாவணியும் தாழ வாரி நுனி முடிச்சுப் போட்ட தலைமுடியுமாக சரஸ்வதி சாயலில் வந்த பெண்ணை அணைத்துக் கொள்வதா ஆராதனை செய்வதா தெரியவில்லை.

இலை போட்டாச்சு வாங்க தம்பி. மதிமுகத்தம்மாள் கனிவாக அழைத்தாள்..

கொஞ்சம் போல் ஓரம் வேகாத மொறுமொறுப்பான பருப்பு வடை, உப்பு சற்றே அதிகமான குழம்பு, கொழுக்கட்டை பிடிக்க முயன்று தோல்வியடைந்து மொத்தமாக வைத்த தேங்காய்ப் பூரணம், எண்ணெய் குடித்த பப்படம், குற்றம் சொல்ல முடியாத எலுமிச்சை ரசம், புழுங்கரிசி வடிக்கும் பதத்தில் பச்சரிசிச் சாதம். எல்லாக் குறையும் போயொழிய கலம் கலமாக அன்பு. கயல் அம்மா தனிதான். சாப்பிட்டு முடித்த பெண்களுக்கு பழமும், பூவும், திலகமும், பணமும், ரவிக்கைத் துணியுமாக ஸ்டெயின்லெஸ் தட்டில் வைத்து அவள் அளித்தாள். தட்டும் கொடுத்ததில் சேர்த்தியாம். எடுத்துப் போக துணிப்பையும்.

’சாயந்திரம் எங்க வீட்டுலே கயல் அம்மா கொலுக் கச்சேரி’.

விசாலி .சொல்ல நான் எல்லோரோடும் சேர்ந்து கை தட்டினேன். எம் எஸ் அம்மாவே வந்து பாடினாலும் கச்சேரி கேட்கும் மூட் இல்லை இன்றைக்கு.

’ஒரு கெஸ்ட் மட்டும் வரலே’, கயல் வாசலைப் பார்க்க வெளியே சத்தம்..

’சாரி மிஸ் கயல்… ஊருக்கு போக ஏற்பாடு செய்ய கொஞ்சம் நேரமாச்சு’.

டெய்ஸி மனோ சந்திரா கையில் ஒரு கூடை நிறைய ஆரஞ்சும் ஆப்பிளும் முகத்தில் கள்ளமில்லாத சிரிப்புமாக உள்ளே நுழைய ஜோசபின் அவளைத் தழுவிக் கொண்டாள். அவள் முகத்தில் அலாதியான ஒரு நிம்மதி தெரிந்தது.

’சாப்பிடலாம் டெய்ஸி.. முடிச்சு மறக்காம மஞ்சள் குங்குமம் வாங்கிட்டுப் போங்க’., கயல் அம்மா பரிமாற, நூல் நிலையத்தில் இருந்து கயல் குரல்.

’குற்றாலக் குறவஞ்சியா, நளவெணபாவா எது வேணும்.. பார்த்து சொல்லு’

’ரெண்டும் வேணுமாம்’.

ஜோசபின் சின்னச் சிரிப்போடு என்னை உள்ளே போகச் சொன்னாள்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன