புது நாவல் : அச்சுதம் கேசவம் அத்தியாயம் 50 – இரா.முருகன்

சின்னக் குளிரோடு விடியும் இன்னொரு பொழுது. திலீப் நேரம் பார்த்தான். ராத்திரியும் இல்லாத, அதிகாலையும் வந்து சேராத மூன்று மணி. பம்பாயை நோக்கி குட்ஸ் வண்டிகளில் லோனாவாலாவில் இருந்து எருமைகளும் பசுக்களும் பயணம் செய்யத் தொடங்கும் நேரம் இது. தாதர் யார்டு பக்கம் நிற்கும் பெட்டிகளுக்குள் கட்டி வைத்தபடி அவற்றைக் கறந்து பால்காரர்கள் சைக்கிளில் தாதர் தெருக்களில் வலம் வருவதும், எலக்ட்ரிக் ரயிலில் கூட்டம் ஆரம்பிப்பதும் கிட்டத்தட்ட ஒரே நேரமாக இருக்கும்.

இந்த ஊர் இன்னும் உறங்கிக் கொண்டிருக்கிறது. அம்பலம் அம்பலம் என்று முழுக்கக் கோவிலையே சார்ந்து இருக்கும் ஊர். கோவிலில் ஒலிக்கிற சங்கும் தொடர்கிற தாள வாத்தியச் சத்தமும் தான் ஊரை விடிகாலையில் எழுப்புகிறது. அப்போது தாதர் பால் வியாபாரிகள் காலி பால் பாத்திரங்களோடும், கறந்த மாடுகளோடும் லோனாவாலா திரும்பத் தொடங்கியிருப்பார்கள்.

திலீப் கடைத் தெருவில் இந்நேரம் திறந்திருக்கக் கூடிய வேலு நாயர் சாயா பீடிகைக்கு நடந்து கொண்டிருந்தான். விடிகாலை தரக் கேடில்லாத சாயாவும், நல்ல பசி எடுத்து வேறு எதுவும் சாப்பிடக் கிடைக்காத பொழுதில் வேக வைத்த முட்டையும் வேலு நாயர் தயவால் கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆபீசிலேயே தங்கி அங்கேயே ரெண்டு மேஜைகளை இழுத்து நீட்டிப் போட்டு உறங்கிப் பழகிப் போயிருக்கிறது.

ஆபீஸிலேயே குளிக்கவும் செய்யலாம் தான். ஆனால் அந்தத் தண்ணீர் தலைமுடியை ஒரே நாளில் சிக்குப் பிடிக்கச் செய்து விடுகிறது. சோப்பும் திட்டுத் திட்டாக உடம்பிலேயே தங்கி ஊரல் எடுக்கும். இந்தக் கஷ்டத்துக்காகத் தான் அம்பலக் குளத்தில் விடிகாலை பொழுதில் குளிக்கப் போவது. அதில் இன்னொரு சந்தோஷமும் உண்டு. கிழங்கு கிழங்கான இளம் பெண்கள் குளிக்க வரும் நேரம் அது. அது என்னமோ இந்தப் பிரதேசத்துப் பெண்களுக்கு ஸ்தனபாரமாகவும் மற்றபடிக்கும் கூடுதலாகச் சதை வைத்து அனுப்பி விடுகிறான் பிரம்மன். திலீபுக்கு அம்பலக் குளத்துக் கரையில் அதெல்லாம் தடையில்லாமல் பார்க்கக் கிடைக்கிறது இப்படியான காலை நேரங்களில் தான். எத்தனை முகங்கள். எத்தனை ஸ்தனங்கள். முகத்தைப் பார்த்து அடையாளம் காண்பதை விட மற்றதை வைத்துக் காண்பது திலீபுக்கு சுலபமாகப் போயிருக்கிறது.

இங்கே அவன் விதவிதமான முலைகளை ஆராய்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் அகல்யா குளித்து பருத்திப் புடவை உடுத்தி சின்ன டப்பாவில் அவல் உப்புமா அடைத்து எடுத்துக் கொண்டு வேலை பார்க்கும் இடத்துக்கு ரயில் பிடிக்க ஓடிக் கொண்டிருப்பாள். அவளை ஒரு நாளாவது இங்கே கூட்டி வ்ந்து எல்லாம் காட்டித் தர வேண்டும்.

எதுக்கு? நீ வெக்கமே இல்லாம எச்சில் வடிச்சபடி பாச்சி பார்க்கறதை எல்லாம் நானும் ஏன் நோக்கணும்? அகல்யா கேட்பாள்.

இந்த ஊரில் வேறே என்ன உண்டு கோவிலையும் பால் பாயசத்தையும் இதையும் தவிர? வேலு நாயர் சாயக்கடை, பாப்பச்சன் தையல் கடை. அங்கே சாயந்திரம் ரேடியோவில் மனம் உருகி உருகி சம்ஸ்கிருதம் கலந்து பாடிய சினிமா கானம் ஏகச் சத்தமாக ஒலிபரப்பாவதும் உண்டே.

கடலில் மீன் பிடிக்கும் முக்குவனும் சமஸ்கிருதத்தில் பாடுகிற அபூர்வ பூமியா இது? அகல்யா கேட்பாள். திலீபுக்குப் பதில் தெரியாத கேள்வி அதெல்லாம். பாட்டைக் கேட்டால் போதாதா? ஆராய்ச்சி எதுக்கு?

வேலு நாயர் கடை வாசலில் கூச்சலும் குழப்பமுமாக இருந்தது. காந்தியைச் சுட்டு விட்டார்கள் என்பது முக்கிய செய்தியான தினம் போல் கூட்டமாக, பரபரப்பு தொற்றிக் கொள்ள எல்லோரும் எல்லாத் திசையிலும் ஓடி நடந்து கொண்டிருந்தார்கள். வேலு நாயர் என்ன இழவுக்காகவோ எலுமிச்சம் பழமிட்டாய் அடைத்த பாட்டிலைத் தலை நிற்காத கைக்குழந்தை மாதிரி அணைத்துப் பிடித்துக் கொண்டு கடைக்கு உள்ளே ஒரு காலும் வெளியே மற்றதுமாக இருந்தான். வேலு நாயர் கடையே உலகின் சகல இயக்கங்களுக்கும் மையம் என்கிற மாதிரி சைக்கிள்களில் வந்து இறங்கி ஓடி வருகிறவர்களும், சைக்கிளைத் தள்ளிக்கொண்டு ஓடி, போகிற வாக்கில் ஏறி ஓட்டிப் போகிறவர்களுமாக திலீப் வயது இளைஞர்கள் அவர்களாக ஏற்படுத்திக் கொண்ட வேலை கிரமத்தில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தார்கள்.

ப்ராதல் கழிக்கான் பாடில்ல.

திலீபைப் பார்த்து ஏழெட்டுப் பேர் தன்மையாகவும், கண்டிப்பு மிகுந்தும், விளக்கம் கொடுக்கும் கருணையோடும் சொன்னார்கள். வேலு நாயர் அந்தக் கூட்டத்தில் இல்லை.

என்ன ஆச்சு? ஏதாவது ஜகடாவா?

காலை எட்டரை மணி லோனாவாலா கல்யாண் லோக்கல் பேட்டைத் தகராறு காரணம் நின்றுபோய் ஊரே முடங்கிப் போன சோகம் திலீபுக்கு அனுபவப்பட்டது. இங்கேயுமா அது போல கஷ்டம்? வீடு கூட இல்லாத இடத்தில் வெறும் வயிற்றோடு எப்படி வேலை செய்ய?

பணிமுடக்கு.

சந்தோஷமாக எல்லோரும் சொன்னார்கள். வேலாயுதன் நாயர் அதில் கலந்து கொள்ளவில்லை என்றாலும் அவன் முகத்திலும் அந்தக் கூட்டத்தின் பெருமிதமான களை ஏறிக் கொண்டிருப்பதைப் பார்த்தான் திலீப். இன்றைக்கு வேறே வேலை செய்ய வேண்டியதில்லை என்ற நிம்மதியாக இருக்கும் அது. ஊரை முட்க்கி வீட்டில் முடங்க வைக்க மாதம் ஒரு நிகழ்ச்சியாவது வ்ந்து விடுகிறது என்று வேலு நாயர் உடைந்த இந்தியில் திலீபிடம் சொன்னான். அதில் குறையேதும் அவனுக்கு இருப்பதாக திலீப் உணர்ந்து கொள்ளவில்லை.

என்ன காரணத்துக்காக ஸ்டிரைக், யாரெல்லாம் பணி முடக்குகிறார்கள், எப்போதிலிருந்து எப்போது வரை, இன்றைக்கு மட்டுமா நாளைக்கும் அதற்கு அப்பாலும் நீளுமா? போகிற போக்கில் மிக வேகமான மலையாளத்தில் ஏதோ சொல்லிப் போகிறார்கள் எல்லோரும்.

குட்டநாடு பஞ்சாயத்து எலக்‌ஷன் தகராறு காரணமாக ஸ்டிரைக், கேரள காங்கிரஸ் ஒரு பிரிவுக் காரர்கள் செய்கிறார்கள் என்று ஒரு வழியாக துண்டு துணுக்காகத் தெரிய வந்தபோது வேலு நாயர் சாயா பீடிகையை அடைத்துப் பூட்டி விட்டு ஒரு பீடி வலித்தபடி சைக்கிளில் வீட்டுக்குக் கிளம்பி விட்டான்.

முட்டை ரெண்டு கொடு நாயரே

சைக்கிளை நிறுத்திக் கேட்டான் திலீப்.

ஏய் அது பாடில்ல. கொடுத்தா என்னை நொங்கிடுவாங்க என்று உச்ச பட்ச மகிழ்ச்சியோடு சொல்லியபடி போனான் நாயர். ஒரு நாள் வியாபாரம் கெட்டது பற்றி ஒரு புகாரும் அவனுக்கு இல்லை போல.

கோவிலில் இருந்து செணடை மேளம் சத்ததோடு மாரார் குரல் எடுத்துப் பாடுவதும் கேட்டது. அவரை திலீப் அறிவான். அர்ஜுன நிருத்தம் தெரிந்தவர்கள் தேவை என்று விளம்பரம் கொடுத்த அடுத்த தினத்தில் செண்டையோடு படி ஏறி வாசித்துப் பாடிக் காட்டி அது காரியத்துக்கு ஆகுமென்றால் சேர்த்துக் கொள்ளச் சொன்னார் சின்னச் சிரிப்போடு அவர். பிஸ்கட் சாஸ்திரி நிராகரித்தது மட்டுமில்லை, அவர் போன பிற்பாடு எடுத்தேன் கவிழ்த்தேன் என்று விமர்சனம் வேறே வைத்தார் –

இதுக்கு பேரு சோபான சங்கீதமாம். சோம்பேறி சங்கீதம்னு வச்சிருக்கலாம். நல்ல வேளை இது கேரளத்துக்கு வெளியே வந்து புழங்கி, இதான் மதராஸி சங்கீதம்னு மானத்தை வாங்காமப் போச்சு

பிஸ்கட் மண்டையில் மேலே சுழன்று கொண்டிருந்த ஃபேன் விழுந்து மூஞ்சி நசுங்கிப் போவதைக் கற்பனை செய்தபடி அப்போது அடுத்து நிருத்தமாட வந்தவரைக் கவனித்தது திலீபுக்கு நினைவு வந்தது. மாராருக்கு இன்றைக்கு பணி முடக்கு இல்லை போல. என்றைக்கும்?

அம்பலமும் செண்டையும் மாராரும் கோவிலில் இருந்து கூப்பிடுகிறார்கள். அங்கேயே போகலாம். பணிமுடக்கு பகவானுக்கு இருக்காது. பசியாற ஏதாவது கிடைக்கலாம்.

திலீப் நம்பிக்கையோடு சட்டையை அவிழ்த்து ஒரு தோளில் தாழத் தொங்க விட்டுக் கொண்டு கோவிலை நோக்கி நடந்தான்.

தரிசனம் முடிந்து எதிர்பார்த்தபடியே பிரகாரத்தில் உன்னியப்பம் நாலைந்து ஒரு இலை நறுக்கில் வைத்து கோவில் தந்த்ரி திலீப் கையில் போட்டார். வந்த ஒரு மாதத்தில் கோவில் ஊழியர்கள் யார் என்ன பதவி என்று தெரிந்து கொள்ள உதவி செய்தவர் உப புரோகிதரான தாந்த்ரி தான். திலீப் பழகிய கொஞ்ச நஞ்சம் மலையாளமும் இவரும் மாராரும் சொல்லிக் கொடுத்தது தான்.

இன்னிக்கு பணி முடக்காமே மாமா? நான் பட்டினி முடக்க முடியுமோ?

திலீப் சோகமாகக் கேட்க, தாந்த்ரி தாராளமாக் இன்னும் நாலு உன்னியப்பமும் மிளகு புரட்டிய சாதமுமாக மீண்டும் அவன் கையில் தொப்பென்று இட்டார். வேலு நாயர் கடை முட்டை ஆப்பாயிலை விட அமோகமாக இன்றைக்குக் காலைச் சாப்பாடு திலீபுக்கு. சாயா கிடைக்காவிட்டால் என்ன? ஊரில் இருக்கப்பட்ட நெய், சர்க்கரை எல்லாம் கொட்டிக் கலந்து கிளறி கொதிக்கக் கொதிக்க அம்பலத்துப் பால் பாயசம் ஒரு கிண்ணம் நிறையக் கிடைத்தது. இன்னும் நாலு நாள் பணிமுடக்கினாலும் பிரச்சனை இல்லை. சாய்ந்திரமும் இங்கே வந்துவிட வேண்டியதுதான் என்று முடிவு செய்தான் அவன்.

குளித்து அம்பலம் தொழ வந்த ஒரு கூட்டம் பெண்கள் வர பிடிவாதமாகக் கண்ணைக் கவிந்து கொண்டு பிரகாரம் சுற்றினான் திலீப். கூடவே வந்து, சூழ்ந்து, விலகிப் போன, அம்மே நாராயணா என்று நாமம் சொல்லிக் கொண்டு வந்த அந்தக் கும்பலில் இருந்து . சந்திரிகா சோப்பு வாடை தூக்கலாக ஒட்டு மொத்தமாக உயர்ந்து கொண்டிருந்ததை அனுபவித்தபடி வெடித் தரைப் பக்கம் நடந்தான்.

ஓரமாகச் சுருண்டு படுத்திருந்தான் வெடிவழிபாட்டுக்காரன்.

முத்தச்சா முத்தச்சா

திலீப் எழுப்பி முழுசாக ரெண்டு நிமிஷம் கழித்து எழுந்து உட்கார்ந்தவனின் கைகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

நீங்க போங்க தம்பி. என் கிட்டே வர வேணாம் இப்போ

திரும்பத் திரும்பச் சொன்னான் அவன். ஒன்றும் புரியாமல் நின்றான் திலீப். ஏதாவது தொற்றுநோய் பாதித்திருக்கலாம் என்று நினைப்பு.

இன்னிக்கு வேலைக்கு வரலே என்றான் வெடி வழிபாட்டுக்காரன்.

காலையில் ஒரு கூட்டம் வௌவால்கள் தாழப் பறந்து வந்து அவன் மேல் உட்கார்ந்து றெக்கை நாற்ற்த்தோடு அவனை எழுப்பினவாம். அப்போது அவன் கண்டு கொண்டிருந்த கனவில் திலீபும் ஒரு மதாம்மாவும், என்றால் சின்ன வயது வெள்ளைக்காரியும் வௌவால் தொங்கும் மண்டபத்துக்குள் போய்க் கொண்டு இருந்தார்களாம். அந்தப் பெண் திலீப்பின் இடுப்பில் தாழ்வாகக் கை வைத்து அணைத்திருந்த இடம் சரியில்லையாம். ஏதோ கட்டாயத்தின் பேரில் வெடிக்காரன் அவர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தானாம்.

மண்டபத்துக்கு உள்ளே, பேப்பர் மில் மாதிரி என்னென்னமோ மெஷின் . ஆனா எதுவும் வேலை செய்யலே. எல்லா மெஷின் மேலேயும் அண்டங்காக்கா உட்கார்ந்திருக்கு. வாசல்லே கம்பி வலைக்கு அந்தப் பக்கம் ஆயிரம் பத்தாயிரம் பேர் கொடியோட நிக்குது. வேலாயுதன் நாயரும் தந்த்ரியும் அர்ஜுன நிருத்தத்துக்கு வந்த பதினேழு பேரும், செண்டையோடு மாராரும் அந்தக் கூட்ட்த்தில் அடக்கம். எல்லாரும் நின்று ஜிந்தாபாத் சொல்லி எதற்கோ போராடுகிற கனவாம் அது.

திலீப்பின் பின்னால் இருந்து கத்தியை ஓங்கிக் கொண்டு ஒருத்தன் நீலச் சட்டையும் கிழிந்த கால் சராயுமாக ஓடி வந்ததில் கன்வு முடிந்ததாம். அவன் அலறிக் கொண்டே எழுந்திருக்கவும், வௌவால்கள் க்ருத்த அழுகி நாற்றம்டிக்கும் சிறகு சிலிர்த்துப் பறந்து போனதாம்.

நீங்க போய் இன்னிக்கு ஆப்பீஸை அடைச்சுப் பூட்டுங்க. பணிமுடக்கு. யாரும் அர்ஜுன நிருத்தம் ஆடிக் காட்டவோ அரையிலே கடிக்கவோ வரப் போறது இல்லே. மதாம்மா யாரும் வந்தா பக்கத்திலே சேர்க்க வேணாம். பொம்பளை வேணும்னா நாளை ராத்திரிக்கு ஏற்பாடு செஞ்சு தருவானாம் அவன். சுத்தமா குளத்தில் குளிச்சு வர பெண்ணு அது. வெடிக்காரனை கண்ணூர் ஓட்டல் செக்கன் கடிச்ச மாதிரி ஆகாதாம்

வெடிக்காரன் பழைய கதையில் ஆழ்ந்து சுருண்டு படுத்துக் கொண்டபோது பணிமுடக்கு ஏற்படுத்தும் சந்தோஷத்துக்கு ஈடான இன்னொரு சந்தோஷத்தை அடைந்திருக்கிறதாக திலீபுக்குத் தோன்றியது. ஒரு ஆயுசுக் காலம் முழுவதும் அதுவே நினைப்பாகிப் போனது அந்தப் பாவம் மனுஷனுக்கு.

ஆபீசில் யாரும் வந்திருக்கவிலலை. வாசல் கதவில் ஏதோ செருகி இருந்தது கண்ணில் பட்டது. இண்லண்ட் லெட்டர்.

இந்த களேபரத்துக்கு நடுவிலேயும் போஸ்ட்மேன் வந்திருக்கிறார் போலிருக்கு. இல்லை, வேறே யாராவது நேற்றே வாங்கி இப்போது கொடுக்க வந்து ஆள் இல்லையென்று கதவில் செருகிப் போயிருக்கலாம்.

அவனுக்கு வந்தது தான். அகல்யா எழுதிய இண்லாண்ட் லெட்டர். நுணுக்கி நுணுக்கி மராட்டியில் எழுதியிருந்த் கடிதம் அது.

பாண்டுரங்க விட்டலன், விடோபா, காண்டோபா சாமிகள் துணை. உங்க அட்ரஸ் சந்தேகமாக இருந்ததாலும் கேரளத்தில் அதுவும் நீங்க இருக்கும் கிராமத்தில் மலையாளம் இல்லாத அந்நிய பாஷை தெரிஞ்சவங்க இருக்கறதை எதிர்பார்க்க முடியாது என்பதாலும் நம் ரெண்டு பேருக்கு மட்டும் தெரிஞ்ச மராத்தியில் எழுதியிருக்கேன்.

அம்மாவுக்கு ஈசனோபிலியாவுக்காக ஆஸ்பத்திரி போனது, திலீப்பை இறுகத் தழுவி கீழ் உதட்டைக் கவ்வி முத்தம் கொடுக்க ஆசை, தம்பி ஸ்கூல் பைனல் பரீட்சைகளில் வாங்கிய மார்க் விவரம், கூட்டம் இல்லாத ராத்திரி எலக்ட்ரிக் ரயிலில் திலீப் அவளிடம் செய்த விஷமங்களின் அட்டவணையும் அவற்றைப் பற்றிய நினைப்பும், தங்கை டைப் ரைட்ட்ங் படிக்க ஆசைப்படுவது, ஹால்டா டைப்ரைட்டர் சிலாக்கியமா ரெமிங்டன்னா, கல்யாணம் ஆனதும் ரெண்டு பேரும் தனிக்குடித்தனம் போக வேண்டிய அவசியம், பார்த்த புது தேவ் ஆனந்த் சினிமா, கேரளா சாப்பாடு தேங்காய் போட்டது ஆச்சே, ஒத்துக் கொள்கிறதா, அங்கே மதர்த்து திரிகிற பெண்கள் மயக்கிக் கூட்டிப் போய் ஆயுசு பூரா அடிமை ஆக்கி குளிக்கும்போது முதுகு தேய்த்து விடச் சொல்வார்கள் என்று மாடுங்கா சத்சங்கம் போனபோது பேச்சு அடிபட்டதால் கவனம் தேவை என்று வளர்ந்து போன கடிதத்தை நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான் திலீப். அக்ல்யாவை உடனே பார்க்கணும் என்று ஆசை மனதில் மூண்டெழுந்து வந்தது.

இதைத் தொடர்ந்து வந்த பகுதி சுமாரான தமிழில். ரெண்டு பேரும் ஸ்கூலில் படித்த இன்னொரு மொழி அது.

கார்ப்பரேஷன் எலக்‌ஷனுக்கு கட்சி வேட்பாளர்களை முடிவு செய்கிறதாம். அடுத்த வாரத்துக்குள் திலீப் வந்தால் அவன் இருக்கும் வார்டுக்கு நிற்க வைக்க வாய்ப்பு இருக்குமாம். அவன் அரைகுறை மராத்திக்காரன் என்பதும் பூசி மெழுகப்பட்டு புது அடையாளம் கிடைக்கக் கூடுமாம். முடிந்தால் உடனே வந்து போகணும் என் ராஜா.

ராஜா ராணியைப் பார்க்கப் புறப்பட்டாச்சு.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன