New bio-fiction தியூப்ளே வீதி – அத்தியாயம் 22 இரா.முருகன்


செயிண்ட் லாரன் தெருவில் நுழைந்தபோது யாரோ மணி கேட்டார்கள்.

‘ஒன்பது மணி முப்பது நிமிடம்’.

இலங்கை வானொலிக் குரலில், இதைச் சொல்வதை விட இஷ்டமான காரியம் வேறெதுவும் இல்லை என்ற சிரத்தையோடு சைக்கிளை நிறுத்திச் சொன்னேன். அவர் ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டு அப்பால் போனார். ஒன்பது மணி முப்பது நிமிடம் ஆகும் போது சிகரெட் பற்ற வைக்க வேண்டுமென்று ஏற்கனவே முடிவு செய்திருக்கலாம்.

நொளினிகாந்த் மொஷாய் வீட்டு வாசல் தூரத்தில் இருந்தே அழகாகத் தெரிந்தது. அன்னப் பறவை போல வடிவமைத்த, வெளிர் நீலம் பூசிய சிறிய சுவர்கள் அணையாக, நாலு படிகள் நெருக்கமாக ஏறிப் போகும் படிக்கட்டு. தரையில் போடும் கோலத்தை அதே வெண்மையில் எண்ணெய்ச் சாயம் கொண்டு வரைந்த கதவுகள். அடைத்திருந்த அந்தக் கதவுகளுக்கு முன், மேல் படியில் வீட்டையே துலங்க வைக்கும் அழகோடு ஒரு மயில். கயல்.

தூரத்தில் நின்று பார்க்கும் போதே மனதை அள்ளியது அவள் இருந்த சிங்காரமான இருப்பு. அருகில் போனால் அந்தக் காட்சியின் ஒழுங்கும், ஒருமித்து உயரும் அழகும் குலைந்து போகலாம். நின்ற இடத்தில் அசங்காமல் நின்று படிக்கட்டில் இருந்த மயிலைக் கண்குளிரப் பார்த்தேன்.

கருப்பு தாவணியும் வெள்ளைப் பட்டுப் பாவாடையுமாக அடர்ந்த கருங்கூந்தல் முகத்தை மறைக்க அமர்ந்திருக்கிறாள் சிட்டுப்பெண். மை எழுதிய பெரிய கண்கள் தரையில் படிந்து அங்கே எதையோ விழுங்கி விடத் துடித்து இமைக்காது பார்க்கின்றன. இடது முழங்கையை இடது தொடையில் அமர்த்தி, வலது கையால் இடது பாதத்தைத் தொட்டபடி இருக்கிறாள். துடுப்புப் போட்டுப் படகு ஓட்டிப் போகிற தேவ கன்யகையின் வண்ண ஓவியத்துக்கு உயிர் கொடுத்த மாதிரி இருந்தவளைப் பெயர் சொல்லிக் கூப்பிடக் கூட தயக்கமாக இருந்தது. அந்த உலகம் கலைந்து போகலாம்.

‘வந்தா வந்தாச்சுன்னு சொல்ல மாட்டியா? வேஸ்ட்டா நீ’.

அவள் சிரித்தபோது கண் கலங்கியிருந்ததைக் கவனித்தேன்.

சைக்கிளை அவசரமாக சுவருக்கு அருகே நிறுத்தினேன். சுவரில் வரைந்திருந்த யாளி சீக்கிரம் திரும்ப எடுக்காவிட்டால் சைக்கிளை ட்யர், ரிம், பெடல் கட்டை விடாமல் முழுசாக முழுங்கி சுக்குக் கஷாயம் சாப்பிட்டு விடுவேன் என்று பயமுறுத்தியது. பக்கத்தில் நின்ற யானை தும்பிக்கை உயர்த்தி நீ பாட்டுக்குப் போ நானாச்சு சைக்கிள் பத்திரமாக இருக்க என்றது.

‘என்ன ஆச்சுடா, என் செல்லம்?

மேல்படியில் கயல் பக்கத்தில் உட்கார்ந்து அவள் பார்வை போன திக்கில் பார்த்தேன். இடது கால் சுண்டுவிரல் குங்குமக் குழம்பாகச் சிவந்திருந்தது. ரத்தம்.

‘கண்ணம்மா, என்னடா ஆச்சு’?

குனிந்து அவள் பாதம் பற்றினேன். மெல்ல அந்தத் தாமரையை என் இரண்டு உள்ளங்கைகளின் நடுவே தாங்கினேன்.

‘காலை விடுடா .. எல்லாரும் பார்க்கறாங்க’

கயல் அவசரமாகக் காலை விடுவித்துக் கொள்ளச் செய்த முயற்சி தோல்வியில் முடிந்தது.

‘என்ன ஆச்சு சொல்லு’.

பெருமாள் எழுந்தருளும் உற்சவத்தில் பல்லக்கு சுமக்கும் ஸ்ரீபாதம் தாங்கியாக, ஸ்த்ரிபாதம் தாங்கியாகக் கேட்டேன் மறுபடியும்.

‘ஒண்ணுமில்லேடா .. வரும்போது தெருக் கோடியிலே ஒரு பாரவண்டி கொஞ்சம் இடிச்சுப் போனதா.. இந்தக் கால் கைப்பிடிச் சுவர்லே பட்டுது. அதான். ஆஸ்பிடல் போக வேணாம் இல்லே’?

இல்லை என்ற பதிலில் தான் எதிர்காலம் முழுவதும் தொங்கி இருக்கிறது என்பது போல் ஆர்வமாக என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் கயல். காலில் மெலிசாக இருந்த ரத்தக் கசிவு இன்னும் சில நிமிடத்தில் காய்ந்து விடும் என்று தெரிந்தது. ஆனாலும் இது எனக்கு விளையாடும் நேரம்.

‘எதுக்கும் ஆஸ்பத்திரி போகறது நல்லது. கொஞ்சம் போல டிங்சர் எடுத்து வைச்சா பரபரன்னு எரியும். பொறுத்துக்கிட்டா ஒரு வாரம் விரல் வீங்கி இருக்கும். தினமும் டிங்க்சர் போட்டும் வீக்கம் வத்தலேன்னா விரலை சீவி’.

‘ஓ’ என்று கயல் போட்ட கூச்சலில் வீட்டு வாசல் கதவு திறந்து உள்ளே இருந்து வேலைக்கார அம்மா ஓடி வந்தாள்.

உலகம் அது பாட்டுக்கு சீராகப் போய்க் கொண்டிருக்கிறது. இந்தப் பெண் அவசரப்பட்டு ஊரைக் கூட்டி விட்டாள் என்று புரிய வைத்தபடி எழுந்தேன். கயல் என் தோளைப் பிடித்துக் கொண்டு மிரண்டு போய்ப் பின்னால் நின்றாள்.

‘பாபு மொஷாய் நீங்க ரெண்டும் ஜதையா வருவீங்கன்னாரு. உள்ளாற வாங்க’.

வித்தியாசமான தமிழும் முகம் முழுக்கச் சிரிப்புமாக, கதவு திறந்த அந்தம்மா உள்ளே கூப்பிட்டாள்.

என் ஜதையைப் பெருமையோடு பார்த்தேன். தாவணியைத் தேவையே இல்லாமல் கால் செண்டிமீட்டர் இழுத்து நேராக்கி, உதட்டைச் சுழித்துப் பழித்துவிட்டு உள்ளே போனவளைச் சத்தமே போடாமல் தொடர்ந்தேன்.

‘பாபு மொஷாய் மண்பானை சொல்லி வச்சிருந்தாரு. வாங்கிட்டு வர காலையிலேயே போயாச்சு. வர நேரம் தான். தெ குடிக்கறீங்களா’?

‘சரி‘ என்றேன். ‘வேண்டாம் உங்களுக்கு ஏன் சிரமம்?’ என்றாள் கயல்.

‘ஒரு சிரமமும் இல்லைம்மாடி பால் காய்ச்ச அஞ்சு நிமிஷமாகும்.. பொறுங்க.. சுடச்சுட எடுத்து வரேன்’

கயலைப் பார்த்துக் கனிவாகச் சொல்லியபடி சமையலறைக்குள் போனவள் முதுகு மறைந்ததும் சட்டென்று கயலுக்கு அருகே தரையில் உட்கார்ந்தேன். கால் சராய் பாக்கெட்டில் இருந்து கைக்குட்டையை எடுத்தேன். மெத்தென்றிருந்த அவள் பாதத்தை மெல்ல என் தொடையில் எடுத்து வைத்தேன். எதற்காக என்றே ஒரு வினாடி மறந்து போனது.

‘என்னடா பண்ண போறே’?

கைக்குட்டையால் ரத்தத் துளிகளைப் பதமாக ஒற்றி எடுத்தேன்.

‘மருந்து?’ அவள் கேட்டாள். அந்தக் காலைச் சற்றே உயர்த்தியபடி குனிந்தேன்

‘இப்போதைக்கு இது போதும்’.

என் எச்சில் நனைத்த சுண்டுவிரலை அவள் பார்த்தபடி இருக்க என் உதடுகளில் படிந்த உப்புச் சுவையை நாவால் ரசித்தபடி எழுந்து அமர்ந்தேன். கயல் கண் இன்னும் கலங்கி இருந்தது. அவள் விழிகளை ஊடுருவினேன்.

‘இவ்வளவு என் மேலே அன்பு வச்சிருக்கியா’?

கிசுகிசுவென்ற அவள் குரல் போதையேற்றியது. நான் துடிக்கும் அவள் இதழ்களையே பார்த்திருந்தேன்.

‘பின்னே, இல்லையா?’

‘அப்புறம் ஏண்டா அப்படி..’

எப்படி என்று கேட்கவில்லை. எனக்கு அவள் சொல்ல வந்ததும் நான் பதில் சொல்ல முடியாது இருப்பதை அவள் புரிந்து கொண்டதும் ஒரே நேரத்தில் நிகழ்ந்தது. இந்த நொடியில் பிரான்சில் பொழுது விடிந்து கொண்டிருக்கும். அமேலி தும்மியபடியே படுக்கையில் புரண்டு கொண்டிருப்பாள்.

‘அங்கே பாரு’.

கயலைப் பார்த்த விழி அவளிலேயே நிலைத்தது. இந்தக் கொல்லிப் பாவையை விட்டு விட்டு வேறே எங்கே பார்க்க? அவளே சொன்னாலும்.

‘பாரேன்’.

அவள் தலை சாய்த்து நோக்கி செல்லமாகச் சொன்னாள். இதோ என் அன்பே.

கயல் காட்டிய திசையில் மர பீரோ மேல் காய்ந்து கொண்டிருந்த களிமண் பொம்மைகளாக இரண்டு காதலர்கள். கயலும் நானும்.

அவள் கையைப் பற்றி இழுத்தபடி பீரோ பக்கம் நகர்ந்தேன்.

‘கண்ணைப் பாரு. திராட்சைப் பழம் மாதிரி. உதடு? ஆரஞ்சு சுளையை உருட்டி வச்ச மாதிரி என்ன சிவப்பு.. உன்னை விட்டுட்டு அவளுக்கு முத்தம் கொடுக்கப் போறேன் இனிமேல்’.

‘கொடுப்பே கொடுப்பே. நானும் அவனை’.

அவள் மண்சுதையாக நின்ற என்னைக் கைகாட்டிச் சிரித்தாள்.

‘அவனை’? அவள் தோளில் தலை சாய்த்துக் கேட்டேன்.

போடா என்று தலை குனிந்தாள் சிரித்தபடி.

நெருங்கி நின்று ஒருவரில் ஒருவர் ஆழ்ந்து போய்,ஒப்புக்கு ஏதோ பேசிக் கொண்டிருக்கும் ஜோடி அது. நொளினி மொஷாய் என்னையும் கயலையும் சித்திரமாக வரைந்தது மண்ணாக உயிர்த்திருக்கிறது. நான் அந்தச் சுதைச் சிற்பத்தில் கயலுக்குக் கணவன். அந்த உரிமை பார்வையில் தெரிகிறது. சிற்பத்தில் என்னை அடுத்து என் கயல் புதிதாகக் கல்யாணமான பெண் போல் சோபையோடு நாணம் கொண்டு மலர்ந்து நிற்கிறாள். இவர்கள் குடும்ப வாழ்க்கையை ருசி பார்த்தவர்கள். சேர்ந்து அனுபவிக்கத் தொடங்கியவர்கள்.

திரும்பிப் பார்த்து கயலிடம் அதே சொன்னேன். அவள் மறுபடி என் கையைப் பற்றினாள். எதற்கோ அந்தக் கரம் நடுங்கியபடி இருந்தது. மனதில் உணர்ச்சிகள் பொங்கிப் பிரவகிக்க சின்னப் பெண் திகைத்து வியர்க்கிறாள்.

பையன் தலையில் சிவப்பு முண்டாசும் பெண் வடக்கத்திய சாயலில் முக்காடு கொண்டு தலையைப் பாதி மூடியும் இல்லாவிட்டால் இந்த ரெண்டு பொம்மைகளையும் பார்க்கிற யாரும் இது நானும் கயலும் என்று உடனே சொல்லிவிட முடியும். வித்தியாசம் கொஞ்சம் போலவாவது காட்டிய மோஷய்க்கு நன்றி சொன்னேன் மனதில்.

‘ஆஷோன்’

வரவேற்றபடி நொளினிகாந்த் மொஷாய் நுழையவும், உள்ளே இருந்து வேலைக்கு நிற்கிற அந்த அம்மா சாயாவோடு வரவும் சரியாக இருந்தது.

‘இருங்க, உங்களுக்கும் சாய் எடுக்கறேன்’.

நல்ல ஆங்கிலத்தில் சொன்னாள் அவள். திடுக்கிட்டுப் போய் நானும் கயலும் அவளைப் பார்த்தோம். தப்பாக நினைத்து விட்டோம். மனைவியா?

எங்கள் திகைப்பைப் புரிந்துகொண்டவராக மொஷாய் சொன்னார் – இவங்க மாதுரி தேவி என் தோழி. என்னோட இருக்காங்க. ஐ மீன் நாங்க சேர்ந்து இருக்கோம். லிவிங் டுகெதர்.

முதல் தடவையாக இப்படிக் கல்யாணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்கிற ஒரு ஜோடியைப் பார்க்கிறேன். நான் படித்ததும், பழகியதும், எனக்குக் கற்பிக்கப் பட்டதும் எல்லாம் இது பாவம் மகா பாவம் என்கிற மனநிலையைத் தருவது. அமேலியோடு நான் முடிந்திருக்க வேண்டிய சூழ்நிலையில் இவர் மனசறிந்து ஈடுபடுகிறார். ஆதிப் பாவம்டா என்று ஜோசபின் சொன்னது நினைவில் மோதுகிறது. பாவம் தானே? இல்லையா?

முதுமை மெல்ல முகத்தில் கவிந்து கொண்டிருக்கும் அந்த ஜோடி கள்ளமில்லாமல் எங்களைப் பார்த்துச் சிரிக்க, எல்லாம் இயல்பாகப் போனது.

‘அங்கிள் உங்க அனுமதி இல்லாம நாங்க இந்த சிலையை பார்த்துட்டோம்’.

கயல் மெல்லச் சொன்னாள். அவள் காதைப் பிடித்துத் திருகுவது போல் நொளினிகாந்த் மொஷாய் அபிநயிக்க அவர் தோழி பலமாகச் சிரித்தாள்.

‘பொருத்தமான ஜோடி ரெண்டு பேரும்’.

அவள் சிலாகிக்க, கயல் வெட்கமும் சங்கடமுமாக மொஷாயின் தோழி வாயைப் பொத்தினாள்.

‘வாயைப் பொத்தினா சொல்ல முடியாதா என்ன’?

அவள் சிரிப்பும் எங்கள் ரெண்டு பேர் மேலும் மாறி மாறி விழுந்த பார்வையுமாக அந்தச் சிற்பங்களைச் சுட்டிக் காட்டினாள்.

‘அது போல் இருங்க எப்பவும்’ என்றாள்.

எனக்குக் கயலோடு கல்யாணமே முடிந்து விட்ட பிரமை. அவளைப் பார்த்தேன். கண் கிறங்கியிருந்தது. ரொம்பச் சின்னப் பெண். சேர்ந்து எழும் கற்பனையின் செழுமையை, உக்ரத்தைத் தாங்க முடியாது தவிக்கிறாள். எல்லாம் வேணுமென்று மனம் கற்பனை செய்கிறது. இதெல்லாம் நடக்குமா என்று உடனே மருகுகிறது. இப்படி நினைக்கலாமா? எனக்கும் தெரியாது.

‘இதெல்லாம் உங்களுக்குத் தான்’.

ஒரு வரிசை நிறைய இருந்த சுதைச் சிற்பங்களைக் காட்டி விட்டு, அறைக் கோடியில் போட்டிருந்த திரைக்குப் பின் மறைந்தார் மொஷாய்.

எங்களுக்கு உதவி செய்ய வந்த அந்த முதியதோழி, கயலை அணைத்தபடி பாடம் எடுக்கிறது போல் நிறுத்தி நிதானமாகச் சொன்னாள் –

‘இது ரொம்ப சின்ன வயசு. மனசில் அன்பும் காதலும் மட்டும் பொங்கி வந்து ரெண்டு பேரும் ஒருத்தரோடு ஒருத்தர் போட்டி போட்டு அன்பைக் காட்டுங்க. செக்ஸ் இப்போ குறுக்கே வரக் கூடாது. கல்யாணம் செஞ்சுப்பீங்க. எங்க மாதிரி இருக்க மாட்டீங்க. எப்படி இருந்தாலும் பொறுப்பான ஜோடியா இருக்கறது தான் வாழ்க்கை. ஒருத்தருக்கு ஒருத்தர் உண்மையாக் இருக்கணும். விட்டுக் கொடுக்கணும். அதை இப்பவே பழகி வச்சுக்கலாமே’.

நானும் கயலும் நொளினிகாந்த் மொஷாய் காட்டிய பொம்மைகளை பத்திரமாக எடுத்துக் கொண்டோம்.

திரைக்குப் பின்னால் இருந்து மொஷாய் ‘எடுத்தாச்சா?’ என்றார்.

‘நீங்க என்ன பண்றீங்க அங்கிள்?’ என்று கயல் கேட்க, ‘போய்த் தான் பாருங்களேன்’ என்றார் அவருடைய தோழி.

திரைக்குப் பின்னால் இன்னொரு உலகம் விரிந்து கொண்டிருந்தது.

பிரம்மாண்டமாக ஒரு காளி சிலை. ரௌத்ரமும் காருண்யமும் ஒருங்கே கலந்த காளி அவள். கருப்பு நிறம் தூக்கலாக, முகத்தில் சிவப்பு பூசி கை உயர்த்தி கால் பதித்து உறுதியோடு, சுட்ட களிமண்ணில் எழுந்த காளி.

காளியின் முகம் இந்திரா காந்தியுடையதாக இருந்தது.

நாடு முழுக்க இந்திரா பெயரை பிரமிப்போடும் அன்போடும் உச்சரித்த எழுபதுகளின் முதல் ஆண்டின் நவராத்திரி நேரம் அது.

‘ஏன் இந்திரா காந்தி போல காளி’? மொஷாயைக் கேட்டேன்.

‘பங்களாதேஷ்ங்கிற புத்தம்புது நாடு இந்திரா மேல் ஜனங்கள் வச்ச நம்பிக்கையோடு கூட புதுசாப் பிறந்திருக்கே தெரியும் தானே? அந்த தேசம் பிறந்த எட்டு மாசத்தில் உலகத்திலே பல நாடுகள் அதை அங்கீகரிச்சிருக்காங்க. அங்கே விடுதலை எல்லா விதத்திலும் மலர்ச்சி காணுது … உலகமே பார்த்திருக்க பங்களாதேஷை முதன்முதலாக அங்கீகரிச்ச பெருமையும் அவங்க போராட்டத்துக்குப் பின்துணை கொடுத்து முன்னெடுத்துப் போகிற வீரமும் விவேகமும் இந்திரா காட்டறது. நல்லதைக் கொண்டு வந்து கெடுதலை அழிக்கப் புறப்பட்ட சக்தி. நான் பெருமையோடு வணங்கறேன் இந்திராவை. இந்த வருஷம் காளியோட அம்சம் இந்திராதான்’.

மொஷாய் சுருட்டை மேஜையில் வைத்து விட்டு நெஞ்சு நிமிர்த்திச் சொன்னார். இந்திராவைக் காளியாக ஏற்றுக் கொள்வதில் எனக்கு எந்த விரோதமும் இருக்கவில்லை.

இந்திராவைத் தொடர்ந்து வங்கத் தந்தை பங்க பந்து முஜீபுர் ரஹ்மானும், ஜனாதிபதி நஸ்ருல் இஸ்லாமும் சுட்ட மண் சிற்பங்களாக முன்னேறிக் கொண்டிருந்தார்கள். புதிதாக அறிவித்திருந்த வங்காளதேசக் கொடி தத்ரூபமாகச் செய்து, அவர்கள் கையில் இருந்தது. காற்றில் மடங்கும் கொடி.

‘இந்த வருஷம் முடியறதுக்குள்ளே பாகிஸ்தான் ராணுவம் தோற்றுப் போகும். பங்களாதேஷோடு இந்தியா பெயரும் இந்திரா பெயரும் உலக அரங்கில் முழங்கும்.. பார்த்துக்கிட்டே இருங்க’.

ஆருடம் சொன்னார் மொஷாய். கேட்டுத் தலையாட்டியபடி நானும் கயலும் பொம்மைகளோடு வெளியே வந்தோம்.

‘நம்ம பொம்மை எங்கே’?

கயல் கேட்டாள். அவள் சொன்னது இனித்தது. என்றாலும் சந்தேகம் கேட்டேன்.

‘நம்ம பொம்மைன்னா’?

‘லூசு, நீயும் நானும் நிக்கறது.. மொஷாய் சொன்னாரே.. புருஷன் பொண்டாட்டி. சீ அதெல்லாம் கெட்ட வார்த்தை.. நான் சொல்ல மாட்டேம்பா’.

‘ஹஸ்பண்ட் ஒய்ஃப் கெட்ட காரியம் செய்வாங்க இல்லே.. நின்னு ஜூஸ் குடிக்கறது, உக்காந்து பேசறது, படுத்து …. ’, நான் இழுத்தேன்.

‘ஏய் வேணாம்.. நீ எங்கே வரேன்னு தெரியும்’. கயல் விரட்ட நான் திரும்ப ஓடி நொளினிகாந்த் மொஷாயைச் சரணடைந்தேன்.

‘அதையும் கொடுங்க மொஷாய்.. எனக்கு வேணும்’

மொஷாயிடம் மண்சுதைச் சிற்பத்தைக் காட்டி வெட்கமின்றிக் கேட்டேன்.

‘அது உங்க ரெண்டு பேருக்கும் இல்லே. எங்க வங்காளி கொலுவுக்கு. பந்தல்லே காளியோடு கூட வைக்கணும். காலனிக்கு வந்தா பார்க்கலாம்’.

அப்புறம் சாவகாசமாக கயலைக் கூட்டிக் கொண்டு அந்த வங்காளி கொலு பார்க்கப் போகலாம் என்று நிச்சயித்து பவழமல்லி மரத்தடியில் ரெண்டு பேரும் ஒரு நிமிஷம் நின்றோம்.

இன்றைக்கு பவழமல்லி வாசனையாகப் பூத்திருக்கவில்லை. முத்தங்களும்.

சைக்கிள்கள் இணைந்து உருள, நாங்கள் மௌனமாக பயணமானோம்.

ஜோசபின் என்ன செய்து கொண்டிருப்பாள்?

போகும் போதே மனதில் அவள் நினைவு பலமாகக் கவிந்தது. அவள் வேலையில் இருப்பதால் மனசு லேசாகி பயமோ துக்கமோ எல்லாம் மறந்து வார்டுகளுக்கு ஊடே நடந்தும் ஓடியும் கொண்டிருப்பாள். கயல் வீட்டில் இருந்து ஒரு அவசர தொலைபேசி அழைப்பு கொடுத்து சாப்பிட்டாளா என்று கேட்க வேண்டும். அவள் பட்டினி கிடக்க நான் ஒருபோதும் சாப்பிட மாட்டேன். கயலுக்கு அந்த அன்பை இன்னும் தெளிவாக எடுத்துச் சொல்ல வேண்டும். எனக்கே முழுக்கப் புரிபடாத ஒன்று அது. கயலோடு கல்யாணம் ஆனதும் ஜோசபினைப் பார்க்கப் போகக் கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பாளோ? அது இருக்கு இன்னும் ஏழெட்டு வருஷம்.. படித்து, மேல்படிப்பும் முடித்து, வேலை தேடிக் கிடைத்து.. சம்பாதித்து, சேமித்து..

‘அம்மா வடை சுட்டுட்டிருக்காங்க’.

கயல் சொல்ல வேண்டிய அவசியமே இல்லாமல் அவள் வீடு முழுக்க சுட்டெண்ணெய் வாடை நிரம்பி இருந்தது. மதிமுகத்தம்மாள் அமாவாசைக்கு அமாவாசை தான் வீட்டில் வறுக்க, பொறிக்க எண்ணெய் புதியதாக மாற்றுவாள் என்று தோன்றியது.

‘அது என்ன கவிதையிலே வர்ற மாதிரி மதிமுகத்தாள்? அப்பா எப்போவும் லவ்விக்கிட்டே இருப்பாரா’?

‘கையை எடுடா. அம்மா வந்துடும்’.

கயல் அபாய எச்சரிக்கை விட்டபடி என் கையை முழுவதுமாக விலக்காமல், ‘அவங்க பேரு சந்திரவதனா’ என்றாள்.

‘அது பார்வேந்தனார் வச்ச பெயர்.. உனக்கு வீட்டுலே வம்ச விளக்கா ஒரு ஒரிஜினல் பெயர் வச்சிருப்பாங்களே, அது என்ன’?

‘மீனாட்சி’.

வெட்கத்தோடு சொன்னாள். எங்க அம்மா பெயர் என்றேன் மெய் மறந்து.

மேகலா, கயல், ஜோசபின். எல்லாத் தோழிகளிடமும் கொஞ்சமாவது அம்மா இருக்கிறாள். அந்த அடிப்படை கனிவும், கருணையும், செல்லமும், பிரியமுடனான கண்டிப்பும் சுபாவமாகவே அமைந்த பெண்களே என் தோழிகள். அவர்கள் மேல் காதலும், நேசமும் எல்லாம் அப்புறம் வந்தவை.

‘உக்காந்து பேப்பர் படிச்சுட்டு இரு, அம்மா வருவாங்க.. இங்க்லீஷ் பத்திரிகை எல்லாம் படிப்பியா?’.

நாற்காலி மேல் இசகுபிசகாக மடித்துப் போட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் பேப்பரைக் காட்டியபடி சத்தமாகச் சொன்னாள். ஷேக் முஜிபுர் ரெஹ்மான் படமும் பாகிஸ்தானிய மக்கள் கட்சித் தலவர் புட்டோ படமும் பெரியதாக அடித்த பத்திரிகை..

‘காலையிலேயே படிச்சாச்சு’ என்று ஜம்பமாக அறிவித்தேன்.

நாடகத்தில் நடிப்பது போல் குரலை உயர்த்திக் கயல் சொன்னாள் –

‘என்ன காலையிலேயே படிச்சாச்சா? ஆமா லீவு நாள்ளே வெட்டியாத் தானே இருக்கே.. நீ என்ன படிப்பேன்னு தெரியாதா? ஸ்போர்ட்ஸ், சினிமா’

நான் கையை ஓங்க, அவள் சத்தமாகத் தொடர்ந்தாள் –

‘சரி புத்தகமாவது படி.. நளவெண்பா கேட்டியே,. உள்ளே தேடறேன்’

என்னைக் கண்காட்டி கூட வரச்சொல்லி புத்தக அலமாரிகளின் உலகத்துக்கு இட்டுப் போனாள்..

‘பெரிய இசைச் சக்கரவர்த்தி. உன்னைப் போய் எங்கப்பா கூப்பிட்டு .. ஆமா, உனக்கு என்னடா தெரியும்’? படிப்பே…. சைக்கிள் ஓட்டுவே.. சைட் அடிப்பே’

நெருங்கி வந்து தழுவி அணைத்து, விழுங்கி விடுவது போல் பார்த்தாள்.

‘நான் தனியா மாட்டிக்கிட்டா இப்படி இறுக்கக் கட்டிப்பே. அப்புறம்’

அவள் ஆசையைக் கெடுப்பானேன்?

உதட்டைத் துடைத்துக் கொண்டு வெளியே ஓடிய அந்த ஐந்தடி வெண்பா திரும்ப வந்து எடுத்துக் கொடுத்த புத்தகம் பத்திரகிரியார் ஞானப் புலம்பல்.

‘தம்பி, மெட்டு போடணும்னு கூப்பிட்டு காக்க வச்சுட்டேன்.. மன்னிக்கணும்.. வடை சுட்டுட்டிருந்தேன்.. நவராத்திரி ஆச்சே’

குரு தட்சிணையாக ஒரு தட்டு நிறையச் சுட்ட வடைகளோடு வந்தாள் மதிமுகத்தம்மாள். எப்போதும் சிரித்த முகமாக இருக்கிறவள். கயலுக்குக் கூட கண்டிப்பு அவ்வப்போது முகத்தில் ஏறி விடும்.

கயல் ஒரு சுருதிப் பெட்டியை என் பக்கத்தில் வைத்தாள். உக்காருங்க வித்வான் சார் என்றாள் என்னை கிண்டலாகப் பார்த்து.

‘சும்மா இருடி. உனக்குக் கத்துக் கொடுக்கவா வந்திருக்கார்? எனக்கில்லே’?

கயலுக்கு நான் கற்றுக் கொடுக்க நினைத்ததை எல்லாம் பட்டியல் போட்டால் இங்கே படி ஏற்றி சாப்பிட வடை கொடுத்து உபசரிக்க மாட்டார்கள் என்று புத்தியில் பட சங்கடத்தோடு கயலைப் பார்த்தேன்.

இத்தனை வடை சாப்பிட்டால் அஜீரணம் கடுமையாகி ஆஸ்பதிரியில் புக வேண்டி இருக்கும். ஜோசபின் அங்கே இருக்கிறாள் என்ற நிம்மதி. ஒரு வடையைக் கிள்ளித் தின்றபடி என் சிஷ்யையைப் பார்த்தேன்.

‘பிரமாதம்.. எங்க வீட்டுலே செய்யற மாதிரி இருக்கு’

கயல் நொடித்துக் கொண்டு போக, மதிமுகத்தம்மாள் திரும்ப முகம் மலர்ந்து, ‘இன்னிக்கு நம்ம வீட்டுலே சாப்பிடுங்க தம்பி’ என்றாள். நன்றி கூறினேன்.

‘இன்னொரு நாள் நிச்சயமா .. கயலைக் கல்யாணம் செஞ்சுக்கிட்டு மறுவீடு வரும்போது சாப்பிடறேன்’. இதில் முன் பாதியை மட்டும் சொன்னேன்.

‘பாட்டு எழுதின பேப்பர் கொடுங்க’ வந்த வேலைக்குத் தயாரானேன்.

மதிமுகத்தம்மாள் கயலைக் கூப்பிட அவள் ஒரு நோட்புக்கை கொண்டு வந்து பெண்கள் விளையாடும் ரிங் டென்னிகாய்ட் ரப்பர் வளையம் போல் வீசினாள்.

‘உனக்கேண்டி அசூய நான் பாடறதிலே .. நீ உடுத்திக்கிட்டு சைக்கிள்லே போனா நான் ஏன்னு கேக்கறேனா?’ அம்மாள் சிரித்தாள்.

‘வேணும்னா நீயும் ஸ்கர்ட் போட்டுக்கிட்டு சைக்கிள் விடேன்’

கயல் சொன்னதைக் கற்பனை செய்து மிரண்டேன். பேயறைந்தது போலானது முகம்.

பின்னால் கையைக் கட்டிக் கொண்டு ஒயிலாக நின்று, அம்மா இவன் மாங்கா மடையன் என்று சர்ட்டிபிகேட் கொடுத்து உள்ளே போனாள் ராட்சசி. திரும்பி வருவாள். நான் இங்கே இருக்கும்போது அவள் அங்கே இருக்க முடியாது.

வந்தாள். சுவரில் சாய்ந்து தரையில் கால் நீட்டி உட்கார்ந்தாள். மதிமுகத்தம்மாள் இருப்பதையும் பாராமல் ஓடிப் போய் கயலைத் தழுவ மனம் துடித்தது. இந்த லட்சணத்தில் நான் என்ன பாட்டுக்கு மெட்டுப்போட?

‘தம்பி இந்தப் பாட்டு கணபதியே வருவாய் மெட்டுலே பாடலாமா’?

மதிமுகத்தம்மாள் கேட்ட பாட்டுக்கு உடனே நாட்டை ராகம் குறித்தேன். பார்வேந்தருக்கு இல்லாத கற்பூர புத்தி அம்மாளுக்கு. சங்கீதத்தை ரசிப்பதில் கயலை விடக்கூட ஒரு படி அதிகம் தான். பாடிக் காட்டினேன்.

இடதுகால் சுண்டுவிரலை நீவிக் கொண்டு கயல் சிரித்தாள். நான் ஒத்தடம் கொடுத்த தலம். மதிமுகம் இல்லாமலிருந்தால் மருந்து போட்டிருப்பேன்.

‘சிவகங்கைச் சீமையிலே வருமே கனவு கண்டேன் நான் கனவு கண்டேன் ..அது சரியா இருக்குமோ தம்பி.. ஏதோ தோணிச்சு.. தப்புன்னா வேணாம்’..

எனக்கே தோன்றாத சரியான ராகம் அடுத்த பாட்டுக்கு. முகாரி. சுருதி சுத்தமாக உடனே ராகம் சொல்லி சுமாராக – அப்படித்தான் நினைக்கிறேன் – மறுபடி பாடிக் காட்டினேன். கயல் இஷ்டத்துக்கு அழகு காட்டினாள்.

மதிமுகத்தம்மாள் சாமி மேலே வந்த பக்தையின் பரவசத்தில் இருந்தாள். ‘மூன்று வரம் தருகிறேன், என்ன வேணும் சொல்லு’ என்று எந்த நிமிடமும் கேட்பாள் என்று தோன்றியது கேட்டால். கயல் கயல் கயல்’ என்பேன்.

மூன்று தேவியரையும் பற்றிய பாட்டுக்கு சாவேரி, மோகனம், ஆனந்த பைரவி, கல்யாணி, மலயமாருதம் என்று இசைக் குறிப்பு சொல்லி, அமர்க்களமாக சிந்து பைரவியில் முடிக்க, அம்மாள் மதிமுகத்தாளாக மகிழ்ச்சியோடு உள்ளே போனாள். கயல் எழுந்து ஓடி வந்து என் கையைப் பற்றிக் குலுக்கி உள்ளே பார்த்தபடி உதடு ஒற்றி விட்டுக் காலித் தட்டோடு திரும்பவும் ஓடினாள். இன்றைக்கு இது போதும். வடையைச் சொன்னேன்.

‘நான் புறப்படட்டா’ என்று வாசலுக்கும் உள்ளுக்குமாக நின்று கேட்டேன். மனதில் திரும்ப ஜோசபின் வந்திருந்தாள்.

சாப்பிட்டுப் போகச் சொல்லி ஏகப்பட்ட வற்புறுத்தல். ஊரில் இல்லாத அவசரமாக ஏன் உடனே கிளம்பணும் என்று விசாரித்தாள் கயலின் அம்மா.

‘இவங்க பச்சரிசிச் சோறு, மோர்க் குழம்பு, கத்தரிக்காய்ப் பொரியல். நாம புழுங்கலரிசி, மீன் குழம்பு, முட்டைப் பொரியல்’, என்றாள் கயல்.

‘பண்டிகை நேரத்திலே கவிச்சி ஏது, நம்மளும் சைவம் தான்’ என்றாள் அம்மா.

எதை இலையில் போட்டாலும் கயலுக்காகச் சாப்பிட்டு விடத் தயாராக இருந்தாலும், இன்றைக்கு உணவில் மனம் செல்லவில்லை என்பது உண்மை.

‘பாயாசமாவது குடிச்சுட்டுப் போங்க தம்பி, எங்க திருநாரையூர் கோவில்லே தினசரி படைக்கறதுக்காகச் செய்யற பக்குவம் இது. ரொம்ப ரசமா இருக்கும்’.

தென்னை மரத்தில் இருந்து தேங்காய் பறித்துப் போட யாரோ வர, எந்த மரம் எல்லாம் என்று சொல்லணும் நான் இதோ வரேன் என்று அவள் வெளியே போனாள்.

கயல் ஒரு பெரிய கிண்ணம் வழிய வழிய எடுத்து வந்து நீட்டிய பாயசத்தை அவள் கையில் இருந்தபடிக்கே கொஞ்சம் குடித்தேன். திருநாரையூர் பெருமாளுக்கு ஏகப்பட்ட பொறுமை இருக்க வேண்டும்.

‘என்னடா சக்கரை பத்தலியா’?

இந்தப் பெண் எதைக் கேட்டாலும் கிசுகிசுப்பாகக் குரல் எழுப்பி மனசைப் பிடித்துப் போடுகிறாள்.

‘நீ எச்சில் வச்சு குடிச்சுக் கொடு’ என்றேன். அப்படியே செய்தாள். பிறகு ஏகத்துக்கு இனித்த அந்தப் பாயசத்தை ரசித்துக் குடிக்கத் தடை ஏதுமில்லை.

‘மிச்சம் இருக்கறதைக் கொடுடா’ என்று பிடுங்கிக் குடித்தாள் கயல்.

‘நான் குடிச்ச மீதியை நீ குடிச்சா அழகான பெண் குழந்தை பிறக்கும் நமக்கு’

காலிக் கிண்ணத்தை அவள் சட்டென்று கீழே போட்டு நிஜமாகவே அதிர்ந்து என்னைப் பார்த்தாள். அப்பாடா, ஜன்ம சாபல்யம். என்ன தான் அறிவியலும் உயிரியலும் படித்தாலும், எவ்வளவு எளிதாக இப்படிப் பயப்படுத்த முடிகிறது.

‘கை தவறி விழுந்துடுச்சும்மா’.

சத்தம் கேட்டுத் திரும்ப வந்த மதிமுகத்தம்மாளிடம் சொன்னேன்.

‘இந்தக் குரங்கையும் மரம் ஏறச் சொல்லலாம். வடையும் பாயசமும் நல்லா கொட்டிட்டிருக்கே’.

கயல் நொடித்தாள். நிஜமான கோபம் என்று நினைக்கிறேன். அவளுக்கு சாவகாசமாக உயிரியல் பாடம் எடுக்க வேண்டும். குட்டி போட்டுப் பால் தரும் உயிரினங்கள், முட்டையிட்டுக் குஞ்சு பொறிப்பவை பற்றி எல்லாம்.. எதுவும் பாயசம் குடித்து வம்ச விருத்தி செய்வதில்லை என்பதையும்..

நான் வெளியே போகும் போது கயல் காதில் சொன்னேன் –

‘நிச்சயமா நமக்கு ரெட்டை தான் ஒரு ஆண் ஒரு பொண்ணு. தெரியுது பாரு’.

நான் அவள் வயிற்றை சிரத்தையோடு பார்க்க, அவசரமாக தாவணியால் மறைத்து ‘ஒழிஞ்சு போ பிசாசே’ என்று விரட்டினாள்.

எவ்வளவு விரைவாகப் போக முடியுமோ அவ்வளவு வேகமாக சைக்கிள் மிதித்துக் கொண்டிருந்தேன். முதலியார்பேட்டை கடக்கும் போது தாரை தப்பட்டை முழங்குகிற சத்தம். ஊர்வலமாகப் போய்க் கொண்டிருந்த கூட்டத்தில் மூலக்கச்ச வேட்டி அணிந்த ஆண்களும், மூக்கில் நத்து போட்ட பெரிய கண்களோடு கூடிய அழகான பெண்களும் அதிகம். எந்த விக்ரகத்தையோ பல்லக்கில் சுமந்து ஆடிக் கொண்டே வருகிறார்கள்.

‘நீயும் வா, ஆடலாம்’.

நொளினிகாந்த் மொஷய் என் கையைப் பிடித்து இழுத்து சைக்கிளில் இருந்து இறங்க வைத்தார்.

காலையில் அவர் வீட்டில் பார்த்த இந்திராகாந்தி முகத்தோடு இருந்த காளியை பூஜா பந்தலில் பிரதிஷ்டை செய்ய எடுத்துப் போகிறார்களாம்.

சைக்கிளை ஓரமாக ஸ்டாண்ட் போட்டு நிறுத்தி விட்டு அவர்களோடு கூத்தாட, என் கையைப் பற்றியபடி சுழன்றாடிய பெண்ணை நான் அறிவேன். ஜோசபின் வீட்டு வாசல் வரை வந்து போனவள்.

அவள் என்னை என்னவோ கேட்டது மேளச் சத்தத்தில் காதில் விழவில்லை. ஆனாலும் அந்த ஆறடிப் பெண் உதடு அசைத்து உச்சரித்த பெயரை அறிவேன்.

ஜோசபின்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன