புது நாவல் : அச்சுதம் கேசவம் அத்தியாயம் 52 இரா.முருகன்


என்ன, கிருஷ்ண ஜெயந்தி வந்த மாதிரி கால் காலா மாக்கோலம்? உன் ஏற்பாடா?

பிடார் ஜெயம்மா காரில் வந்து இறங்கியதும் உரக்க விசாரித்தாள். ரொம்ப சிரத்தை எடுத்து கதர்ப் புடவையைக் கணுக்காலுக்கு உயர்த்திக் கொண்டு, கோலத்தை மிதிக்காமல் தத்தித் தத்தி சங்கரனின் அபார்ட்மெண்டில் நுழைந்தாள்.

சங்கரா, எங்கே போனே?

பாத்ரூமில் தண்ணீர் அடைத்துக் கொண்டு விட்டது என்று ஒட்டடைக் குச்சியால் குத்திக் கிண்டியபடிக்கு மடித்துக் கட்டிய வேட்டியோடு சின்னச் சங்கரன் பிரசன்னமானான்.

கல்சுரல் மினிஸ்டரி அண்டர் செக்ரட்டரி மாதிரியா இருக்கே நீ? ஜெயம்மா சிரித்தாள்.

‘ஆபீஸ்லே பாத்ரூம் அடைச்சாலும் முதல் குச்சி நான் தான்’ என்றான் சங்கரன்.

அப்படி ஒரு சந்தர்ப்பம் வந்தால் அவன் லீவு போட்டு விடுவான். இல்லாவிட்டால் வேலையை இழுத்துப் போட்டுக் கொண்டு டூர் கிளம்பி விடுவான்.

கித்தான் பையில் இருந்து சின்ன சைஸ் ஹோம குண்டத்தை எடுத்த சாஸ்திரிகள் மற்ற சாமக்கிரியைகள் வேணுமே என்று மகா பொதுவாகச் சொல்ல, ஜெயம்மா கேட்டாள் –

சாஸ்திரியவரே, அரணி கடைஞ்சு அக்னி கொண்டு வரப் போறேளா?

வயதான சாஸ்திரிகள். காப்பியை எதிர்நோக்கி இருமி விட்டு ஜெயம்மாவைப் பார்த்தார். எல்லோரும் எல்லாருக்கும் தெரிந்த தில்லி தென்னிந்தியச் சூழலில் புரோகிதர்கள் வெகு பிரபலம். அதுவும் ஜெயம்மா வீட்டுக்கு வந்து போகும் அதே சீனியர் வைதீகர் தான் இவர்.

இல்லேம்மா கொழந்தே, அரணியெல்லாம் எதுக்கு? ஒரு தீப்பெட்டியும் காக்கடாவும் எதேஷ்டம் என்றார்.

அப்படியே அண்டர் செக்ரட்டரி சார் கிட்டே சாக்கடை குத்தறதெல்லாம் சாவகாசமா வச்சுக்கலாம், ஸ்நானம் பண்ணிட்டு மனையிலே உக்காரும்ன்னு சொல்லும்மா.

உள்ளே இருந்து டபரா செட்டில் வழிய வழியக் காப்பி கொண்டு வந்து கொடுத்த சமையல் மாமியையும் தெரிந்தவர் என்பதால் தில்லியில் பீப்ரி காப்பிக் கொட்டை கிடைக்காமல் ரோபஸ்டா மட்டும் வறுத்து அரைத்த காப்பி தொண்டையில் இறங்க மறுப்பது பற்றி அவர் மாமியிடம் புகார் செய்ய, பாத்ரூம் பிரச்சனை தீர்த்து வந்த சங்கரன் தனக்கும் ஒரு காப்பி என்று அடி போட்டான்.

நான் காப்பி குடிக்கறதில்லே என்று ஜூனியர் சாஸ்திரிகள் டபராவை சங்கரனுக்கு நீட்ட, ஜெயம்மா உள்ளே திரும்பி குட்டி சாஸ்திரிக்கு நாலு ஸ்பூன் அஸ்காவும் நாலு கட்டெறும்பும் போட்டு பால் கொண்டாங்கோ என்று சத்தமிட்டாள். வெட்கத்தோடு தாங்க்ஸ் மாமி சொன்ன ஜூனியர், சீனியரிடம் இருந்து வாங்கிக் கொண்ட ஹோம குண்டத்தை மேல் வேஷ்டியால் பிரியமாகத் துடைத்தார்.

ஹோம குண்டம் இப்படி கைக்கடக்கமா செஞ்சு விக்கறதா? நம்மாத்திலே எல்லாம் தரையிலே செங்கல் வச்சுன்னா அக்னி வளர்த்தது? இது எனக்கு ஒண்ணு வேணுமே,

ஜெயம்மா புரோகிதர் கையில் இருந்து அஸ்பெஸ்டாசும் மரமும் இன்னும் ஏதோ உலோகமும் கலந்த ஹோம குண்டத்தை வாங்கிப் பார்த்து விட்டுக் கேட்டாள்.

ஆமா மாமி, புதுசுதான். இது நூர்ணி மேட்.

ஜூனியர் சாஸ்திரி சந்தோஷமாக அறிவித்தார்.

நூர்ணி அப்படீன்னா? ஜெயம்மா புரியாமல் கேட்டாள்.

பாலக்காட்டு பக்கம். எனக்கு ஸ்வதேசம்.

ஜூனியர் சாஸ்திரிகளுக்கு பெருமை பிடிபடவில்லை, சொந்த ஊரில் ஒரு கொல்லர், ஒரு தச்சர், ஒரு மோட்டார் மெக்கானிக் இப்படி ஒரு குழுவை அமைத்து டிசைன் ஸ்பெசிபிகேஷன் சொல்லி வாங்கி வந்த பெருமை அடுத்த ஐந்து நிமிடம் அரங்கேறியது.

என்ன செய்ய, தில்லி பட்டணத்துலே வந்து கவர்மெண்ட் குவார்ட்டர்ஸ் சிமெண்ட் தரையிலே அக்னி வளர்த்தா நாளக்கே மெமோ வரும்

உங்களுக்கு யார் மெமோ தர? ஜெயம்மா சிரித்தாள்.

ஏன் கேக்கறேள். ஒரே ஒரு காரியத்துக்குத் தான் கைக்கடக்கமா இன்னும் செஞ்சு வாங்கலே. அதுக்கு அங்கே நிகம்போத் காட்லே கொண்டு போய்க் கிடத்தினா எட்சட்ரா எட்சட்ரா

ஜூனியர் பால் குடித்தபடி தெம்பாகச் சொல்ல, அசத்தே அடக்கி வாசி என்றார் சீனியர்.

புண்ணியாஜனன நேரத்தில் சாவுச் சடங்கு பற்றி வேறெதும் குறிப்பிடாமல் கவனமாக அவர் தவிர்க்க, ஜெயம்மா உள்ளே நோக்கினாள்.

உங்க ப்ரண்டை பாஷாண்டியா நிக்காம குளிக்கச் சொல்லுங்கோ. புண்ணியமாப் போகும்.

வசந்தி மெல்ல குழந்தை உள்ளு என்று தாற்காலிகமாகப் பெயர் சூட்டிய உள்ளறையில் இருந்து எட்டிப் பார்த்து ஜெயம்மாவிடம் சொல்ல, அவள் சாடிப் பாய்ந்து அடி என் சமத்துக் கொடமே என்று வசந்தியைக் கட்டிக் கொண்டாள்.

இந்த மாதிரி அணைப்பு பெண்கள் மத்தியில் அந்நியோன்யத்தை அழகாகக் காட்டுகிற போது ஆண்கள் கட்டிக் கொண்டால் அராஜகமாக இருப்பதை நினைத்தபடி சங்கரன் குளிக்கப் போனான்.

உன்னை மாதிரி அழகா இருக்கா இந்தப் பொண்ணரசி.

பிடார் ஜெயம்மா குழந்தையை கன்னடத்திலோ, இல்லை, குழந்தைகளைக் கொஞ்சவே பொதுவாக யாரோ ஏற்படுத்திய மொழியிலேயோ சரம் சரமாக வார்த்தை சொல்லிக் கொஞ்சுவது குளியல் அறையில் எதிரொலிக்க, சோப்பு வாசனையோடு வந்து சாஸ்திரிகள் பக்கம் உட்கார்ந்தான் சங்கரன்.

இந்த வாசனைக்கும் இதமான பொழுதுக்கும் வசந்தி பக்கத்தில் இல்லையா உட்கார்ந்திருக்க வேண்டும்!

ஆரம்பிக்கலாமா? ஆத்துக்காரியை கூப்புடுங்கோ. நீங்க பஞ்ச கச்சம், அவா மடிசார். அதான் நியதி

சங்கரன் சற்றே சலிப்போடு வேஷ்டி மாற்ற உள்ளே போக, ஹோகித்தாரே, ஒன் மினிட் சாஸ்திரிகளே என்று ஜூனியர் சாஸ்திரியை அவனுக்கு பஞ்ச கஞ்சம் உடுத்தி விடக் கண் காட்டி உள்ளே அனுப்பியது ஜெயம்மா தான்.

ஏம்மா உனக்கு ஹெல்ப் தேவையா?

உள்ளே பார்த்து குரல் கொடுத்து விட்டு, சமையல் மாமிக்கும் தெரியாதுன்னா நான் வரேன் என்றாள் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு.

சங்கரனாலே அவுக்கவே முடியாம கொசுவம் வச்சுப் புடவை கட்ட நானாச்சு.

சொன்ன அடுத்த வினாடி அவளுடைய அவுட்டுச் சிரிப்பு வீடு பூரா எதிரொலித்துத் தொட்டில் குழந்தையை எழுப்பி விட்டது.

மங்களகரமான சிசு அழுகை என்றார் கடியாரத்தைப் பார்த்தபடி காத்துக் கொண்டிருந்த சாஸ்திரிகள்.

சாஸ்த்ரிகளே பசுமாடு, ஒட்டகம் எல்லாம் வராதே? பிடார் ஜெயம்மாள் அக்கறையாக விசாரித்தாள்.

அதை ஏன் கேக்கறேள் நியூஸ் மாமி. கல்காஜியிலே ஒரு ஆந்திராக்கார கிருஹத்திலே ஆயுட்ஷேமம் பண்றபோது பசுமாடும் கன்னுமா ஹோமகுண்ட அக்னி தெரிஞ்சதுன்னு நம்ம ராஜப்பா சாஸ்திரிகள் ரெண்டு மாசம் முந்தி சொன்னாலும் சொன்னார், எல்லோரும் அவரை தீவிரமா அவாவா கிருஹங்கள்லே வைதீகத்துக்குக் கூப்பட ஆரம்பிச்சுட்டா. கணபதி ஹோமம் பண்ணினா யானை, நவக்ரஹ ஹோமம் செஞ்சா சனி பகவான், திவசம் பண்ணினா போய்ச் சேர்ந்தவா இப்படி அக்னியிலே முகம் காட்டணும்னு ஆசைப் படறா. சொன்னா உடனே இதெல்லாம் நடக்க, கவர்மெண்ட் ஆர்டர் போட்டு நடத்திக்கறதா என்ன?

ஜூனியர் சொல்வதை புன்சிரிப்போடு அங்கீகரித்தபடி, காக்கடாவில் தீக்குச்சியால் பற்ற வைத்து கைக்கடக்கமான ஹோம குண்டத்தில் அக்னி வளர்க்க ஆரம்பித்தார் பெரியவர்.

சங்கரன் அவசரமாக உத்ருணியில் ஜலம் வார்த்து மூன்று தடவை உறிஞ்சி ஆசமனியம் செய்து விட்டு சாஸ்திரிகளை வெற்றிப் பார்வை பார்த்தான்.

ஏத்து வாங்கி மந்திரம் சொன்னாப் போறும் அண்டர் செக்ரட்டரி சார். நான் சொன்னதுக்கு அப்புறம் ஆசமனியம் செய்யுங்கோ. எதேஷ்டம்.

இந்த சடங்கை நிர்வகித்து நடத்திக் கொடுப்பதில் தனக்குத் தான் முதலிடம் என்று தெளிவாக சீனியர் நிலைநாட்ட சங்கரன் அவசரமாகப் பின்வாங்கிக் கட்டளையிடக் காத்துக் கொண்டிருந்தான்.

புண்ணியாஜனனத்திலே அக்னி வளர்த்தா அதிலே என்ன வரும்?

ஜெயம்மா கேட்க, ஓரமாக நின்ற பகவதியைப் பார்த்து நான் அக்னியிலே தலை காட்டப் போகட்டா என்று அவசரமாக விசாரித்தாள் குஞ்ஞம்மிணி.

வேண்டாம்டி கொழந்தே, இனிமே அங்கங்கே சட்டுபுட்டுனு போய் நின்னுடக் கூடாது. உனக்கு இன்னிக்கு இருந்தா எழுபது வயசு, பகவதிக்கு எண்பத்தைஞ்சு, எனக்கு நூத்துப் பத்து. வயசுக்கு ஏத்தாப்பல நடந்துக்கறது தான் சரிப்படும், கேட்டியா?

விசாலம் மன்னி சொல்லியபடி மற்ற இருவரையும் அங்கே இருந்து வெளியே நடத்திப் போனாள். குழந்தை அழுகை நின்று போன வீட்டில் மந்திரங்களின் ஒலி மட்டும் இருந்தது

அண்டர் செக்ரட்டரி சார் மந்திரம் சொல்லலாமோன்னோ

சங்கரன் ஹோம அக்னியில் பார்த்த மூன்று பெண்டுகளையும் காலையில் உறக்கமா விழிப்பா என்று விளங்காமல் கிடந்த நேரத்தில் பார்த்த நினைவு வந்தது. ஒன்று பகவதிப் பாட்டி, மற்ற இருவர்?

அவாள்ளாம் யாரு?

சங்கரன் சாஸ்திரிகளிடம் கேட்க, யாரெல்லாம் என்று எதிர்க் கேள்வி கேட்டார் அவர்.

அதற்கெல்லாம் நேரமே கொடுக்காமல் உள்ளே இருந்து மாவிலை, ஜிகினாக் காகிதம், பட்டு ரிப்பன் என்று அலங்காரம் செய்த ஆகி வந்த மகா பழைய தொட்டிலும் வசந்தி அம்மா ஜாக்கிரதையாகத் தலைக்குப் பின்னால் அணைத்துப் பிடித்த குழந்தையும் வந்தானது. அந்தத் தொட்டில் ஜெயம்மா வீட்டில் மூணு தலைமுறையாக வம்சம் வளர்ப்பது.

கொழந்தையை தோப்பனார் மடியிலே வச்சுக்க வேண்டியது.

சாஸ்திரிகள் அறிவிக்க, ஜெயம்மா கவுண்டர் போட்டாள்.

இவன் மடியிலா? வசந்தியைப் போட்டுண்டாலே ஒழுங்காப் பிடிச்சுக்கத் தெரியாது. தலை நிக்காத குழந்தை அவனோட சிசு. இருங்கோ. பின்னாலே நின்னு நான் பிடிச்சுக்கறேன்.

ஆறடியை நாலடியாக வாமனக் குறுக்கம் செய்து பின்னால் இருந்து குழந்தையை ஏந்தியபடி ஜெயம்மா நிற்க, சங்கரனுக்கு மனசு நிறைந்து போனது.

சிநேகிதம்னா இப்படி இருக்கணும் என்றாள் குஞ்ஞம்மிணியின் கண்ணீரைத் துடைத்தபடி பகவதி. இந்தக் காலத்திலும் இப்படி ஒருத்தருக்கொருத்தர் அனுசரணையாக இருக்கப்பட்ட சிநேகிதத்தை விசாலம் கை அசைத்து ஆசீர்வதித்தாள்.

அக்னியிலே யாரோ ஒரு மாமி ஆசிர்வாதம் பண்ற மாதிரி இருக்கு

வசந்தி சொல்ல, சாஸ்திரிகள் எல்லாம் புரிந்த திருப்திச் சிரிப்பு சிரித்தார்.

ரொம்ப நல்லது அண்டர் செக்ரட்டரி மாமி. இதை நான் நாலு ஆத்திலே சொன்னா, எனக்கும் வைதீகம் விருத்தியாகும்.

அந்தக் கதம்ப பாஷையையும் அதன் உள்ளுறை பொருளையும் ஜெயம்மா தவிர வேறு யாரும் புரிந்து கொண்டு சிலாகித்ததாகத் தெரியவில்லை. என்றாலும், ஜெயம்மாவின் அங்கீகாரத்தை ஏற்று வாங்கி, ஏமாற்றத்தை ஒதுக்கிவைத்தார் சீனியர் சாஸ்திரிகள்.

தொட்டில் போட்டு சீதா கல்யாண வைபோகமே பாடுவதையும் ஜெயம்மாவே எடுத்துக்கொண்டாள். வசந்தி வீட்டுக்காரர்களில் பாடத் தெரிந்தவர்கள் யாரும் கிடையாது. அவளுடைய அப்பா ஒரு வினாடி கூட யோசிக்கவில்லை.

கொழந்தே, நீ வசந்திக்கு உடன் பொறக்காத அக்கா. முகத்திலே ஜாடை கூட ஒரே மாதிரி இருக்கு, நீயே பாடு.

ரெண்டு குடும்பத்துக்கும் தீராத களங்கமாகப் புரிந்து கொள்ளக் கூடியதாக நல்வாக்கு சொன்னார் அவர். நற்சொல் என்பதால் அதற்குள் ரொம்ப ஆழமாக இறங்காமல் மேலோட்டமாகக் கால் நனைத்து அனுபவிக்க மட்டுமாக எல்லோரும் அதை எடுத்துக் கொண்டார்கள்.

தொட்டில் போட்டபோது பக்கத்தில், எதிரில் இருக்கும் சர்தார், வங்காளிக் குடும்பக் குழந்தைகள் ஆச்சரியமாகப் பார்த்துக் கொண்டு குழந்தையை விட்ட தொட்டிலை மெல்ல ஆட்டி வசந்தி அம்மா சின்னச் சின்னதாக இந்துஸ்தான் டைம்ஸ் நியூஸ்பேப்பரில் கட்டி வைத்த காப்பரிசி வாங்கிக் கொண்டார்கள்.

தொட்டில் போட்டா இதான் ஸ்வீட் என்றாள் வசந்தியின் அம்மா.

அவள் தம்பி, ஜ்யோத்ஸ்னா நினைப்பில் இடுப்பு இடுப்பாகப் பார்த்துக் கொண்டிருந்ததை சங்கரன் தவிர வேறு யாரும் கவனிக்கவில்லை.

காப்பரிசியை அப்படியே சாப்பிட்டுட வேண்டியதுதான். அரிசி, வெல்லம், தேங்காய்க் கீத்து, வெள்ளை எள்ளு எல்லாம் போட்டது. நடுவிலேயே இருபது பைசாக் காசு வச்சிருக்கும். அதை முழுங்காம எடுத்துண்டு போய் அம்மா அப்பா கிட்டே கொடுங்கோ.

வசந்தியின் அப்பா சுந்தர வாத்தியார் பேசிய வினோத இந்தி புரியாமல் காப்பரசி மகத்துவமறியாது அதையும் தொட்டிலில் விட உத்தேசித்த அண்டை அயல் குழந்தைகளுக்காக ஜெயம்மா ஒரு பாக்கெட்டை பிரித்து ரெண்டு பிடியாக உள்ளே இருந்து எடுத்துச் சாப்பிட்டு, அதன் சேர்மானம் சொல்லி அதுகளையும் சாப்பிடவும், இலை போட்டபின் பந்திக்கு உட்காரவும் வைத்தாள்.

பந்தியில் பாயசம் பரிமாறிக் கொண்டிருந்தபோது கார் வந்து நிற்கும் சத்தம். சங்கரன் எட்டிப் பார்த்தான். ஏகமாக அம்பாசடரும், அடுத்த படியாக பியட் காரும் நிறைந்த தில்லியில் விசேஷமான இந்துஸ்தான் ஸ்டாண்டர்ட் கார் கொஞ்சம் தான் உண்டு. சங்கரனின் சிநேகிதனும் ஜாக்ரன் பத்திரிகை ஆசிரியருமான சந்தோஷிலால் குப்தா அதில் ஒருத்தன்

குப்தாக் கடன்காரனையும் வரச் சொல்லிக் கூப்பிட்டியா, பேஷ்.

வடையைக் கடித்துக் கொண்டே ஜெயம்மா சிலாகிக்க, ஞாயிற்றுக்கிழமை பகல் கானாவுக்கு அப்புறம் எப்பவாவது இப்படி குப்தா வருவது வாடிக்கை தான் என்றான் சங்கரன்.

சாப்பிட்டியாடா பிரம்மஹத்தி?

ஜெயம்மா குறையாத அன்போடு குப்தாவை விசாரிக்க, கழிச்சு கழிஞ்சு என்று விசித்திரமாக மூக்கை சுருக்கிக் கொண்டு பதில் சொன்னான் குப்தா.

அட பீடை, அது மலையாளம். எனக்கு அர்த்தமாகாது. நீ இந்தியிலேயே பேசு என்றபடி பரிமாறுகிற பெண்ணிடம் ஒரு இலை நறுக்கில் ரெண்டு வடையும் பால் திரட்டுப் பால் ஒரு குத்தும் வைத்து குப்தா உட்கார்ந்த அப்புறம் கொடுக்கச் சொன்னாள் ஜெயம்மா.

பாயசமும் கொண்டு போய் வை, தாராளமா குடிச்சுட்டு கழிஞ்சுண்டு கிடக்கட்டும்.

பந்திக்கு முதுகைக் காட்டிக் கொண்டு ஹால் ஓரமாகக் குரிச்சி போட்டு குப்தாவை உட்கார வைத்தான் சங்கரனின் மைத்துனன்.

சாம்பார் குடிக்கறானான்னு கேளு முதல்லே. அப்புறம் வடையும் திரட்டுப்பாலும் தின்னுட்டு பாயசம் குடிக்கட்டும்.

ஜெயம்மா கேட்டதுக்காகக் காத்திருந்த மாதிரி எல்லாத்துக்கும் சரி என்றான் குப்தா.

ஒரு பெரிய கும்பா நிறைய முருங்கைக்காய் சாம்பாரும் வெள்ளிக் கிண்ணம், ஸ்டெயின்லெஸ் தட்டில் மற்றதும் ஸ்டூல் போட்டு வைக்கப்பட குப்தா ஆசையாக வடையைக் கடித்து அரசூர் நியூஸ் சொல்லு என்றான் சங்கரனிடம்.

எச்சக் கையோடு என்னத்தைச் சொல்ல?

சங்கரன் கை அலம்பி விட்டு ஒரு வெற்றிலையை சர்க்கரை உள்ளே வைத்துப் போட்டுக் கொண்டு, குப்தா எதிரே, கதை சொல்கிற சுவாரசியத்தோடு வந்து உட்கார்ந்தான். அப்படியான மதராஸி பானும் வேண்டுமென்ற குப்தாவின் கோரிக்கை உடனே நிறைவேற்றப்பட்டது.

தினசரி ஒரு நாள் விடாமல் ராமாயணம் பிரசங்கம் செஞ்சு முப்பது வருஷத்துலே முடிக்க திட்டம் போட்டிருந்த பஞ்சாபகேச சாஸ்திரிகள்கற பண்டிதர் அரசூர்லே இருந்தார். ராமர் காட்டுக்குப் போகும் முன்பா ஒவ்வொருத்தராச் சொல்லிண்டு போற இடத்திலே ரொம்ப நாள் சிக்கி பரலோகம் போயிட்டார். இப்போ தினம் அவர் கதை சொல்ற நேரத்திலே ஒரு குடத்திலே தண்ணியைக் கொண்டு வந்து சபையிலே நடுவிலே வச்சுட்டா அதிலே ஆவாஹனமாகி கதையைத் தொடரறாராம். என்ன, குரல் கொஞ்சம் சன்னமா இருக்கு, அதோடு தண்ணியிலே வர்றதாலே அடிக்கடி தொண்டை கட்டிப் போயிடறதாம்.

இதை அடுத்த ஞாயிறு சப்ளிமெண்டுக்கு ஊர் பேர் போடாம கதையா எழுதிட சொல்றேன். ரெண்டு வடையை மிதக்க விட்டு இன்னும் கொஞ்சம் சாம்பார் கொடு.

குப்தா வாயும் காதுமே உடம்பாக இருந்து மீதிக் கதை கேட்க ஆயத்தமானான்.

வேறே என்ன விசேஷம் உங்க ஊர்லே என்று இலைக்கு முன்னால் கொஞ்சம் சிரமத்தோடு இருந்து தயிர் சாதத்தை ரசித்துக் கொண்டிருந்த ஜெயம்மாவும் கேட்டாள்.

அங்கே இப்போ மனுஷர்கள் எல்லாம் விதி முடிஞ்சு சாகறது திரும்ப நடக்கறது ஆனா, மிருகங்கள் ஆயுசு நீண்டு போயிருக்காம். சீரியஸா ஒரு தோஸ்த், தியாகராஜன்னு பேரு, எனக்கு போஸ்ட் கார்ட் போட்டிருக்கான். அங்கே சீனியர்மோஸ்ட் சாஸ்திரிகளாக்கும்.

உங்க ஊர்லே எல்லோரும் தரைக்கு அரை அடி மேலே கோழி, கரப்பான் பூச்சி மாதிரி பறக்கற வழக்கம் உண்டோ?

குப்தா சிரிக்காமல் கேட்க, ஜெயம்மாவுக்குப் புரை ஏறி விட்டது.

அரசூர்லே பறக்காட்ட என்ன, அம்பலப்புழையிலே உண்டே. எங்க சிநேகா மன்னி அப்பா சாவக்காட்டு வயசர், கோயில் கொடி மரத்தை நனைச்சுண்டு திந்தோம்னு பறந்தார்னு இந்த மனுஷருக்கு யாராவது சொல்லணும் என்றாள் யாருக்கும் கேட்காத குரலில், பகவதி. உள்ளே குட்டி பகவதி அசந்து தொட்டிலில் உறங்க குட்டியம்மிணி சீராக ஆட்டிக் கொண்டிருந்தாள்.

காத்துலே என்ன அழகா தொட்டில் ஆடறது பாருங்கோ.

வசந்தியின் தம்பி வெற்றிலை பாக்கு வாங்கிக் கொள்ள வந்த மேல் ப்ளாட் பஞ்சாபிப் பேரிளம் பெண்ணை வெறித்தபடி சங்கரனிடம் சொன்னான். நல்ல வேளையாக அவள் இடுப்பு தெரியாத படிக்கு சூடிதாரில் வந்திருந்தாள்.

வம்பும் வாய்க்கு ருசியான சாப்பாடுமாகக் கடந்து போன பகல் அது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன