இரா.முருகன் குறுநாவல்கள் – தொகுப்புக்கு எழுதிய முன்னுரையிலிருந்து


வெளிவர இருக்கும் ‘இரா.முருகன் குறுநாவல்கள்’ நூலுக்கு (கிழக்கு பதிப்பகம் வெளியீடு) நான் எழுதிய முன்னுரையில் இருந்து –

குறுநாவல் வடிவம் மட்டுமில்லை, அதைப் பற்றிய இன்னொரு நிதர்சனமும் யாரும் சொல்லிக் கொடுக்காமலேயே கற்றுக் கொண்டாயிற்று. குறுநாவல்கள் கண்டிப்பாக இலக்கியப் பத்திரிகைகளுக்கு, அதாவது சிற்றிதழ்களுக்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டியவை. வெகுஜனப் பத்திரிகைகள் இப்படி ஒரு இனம் தமிழ் இலக்கியத்தில் இருக்கிறது என்ற பிரக்ஞையே இல்லாமல், அல்லது தெரிந்தும், இப்ப என்னங்கிறே என்கிற அலட்சியத்தோடு சிறுகதையை மட்டும் கலர்ப் படங்களோடு பிரசுரித்து தமிழ் கூறும் நல்லுலகத்துக்குக் கதை சொல்லும் கடமையாற்றிக் கொண்டிருந்தன. அது தமிழ்ச் சிறுகதையின் பொற்காலம் என்று சொல்லலாமா? தாராளமாகச் சொல்லிக் கொள்ளலாம்.

குறுநாவல் இலக்கணமாகப் பயின்று வரும் மற்றக் கூறுகள் யாவை? சொல்வோம்.

குறுநாவலுக்குப் பரபரப்பான முடிவு இருக்க வேண்டும். ஒரே ஒரு ஒற்றை இழையாகத் தான் கதை ஓட வேண்டும். சப் ப்ளாட் என்று கதைக்குள்ளே கதையாகக் குறுக்குச் சால் போட அனுமதி இல்லை. அத்தியாயங்களாகப் பிரித்து நம்பர் போட்டு எழுதக் கூடாது. போனால் போகிறது, இரண்டு அடுத்தடுத்த பகுதிகள் இடையே போதிய இடைவெளி கொடுத்துப் பிரிவினையை ஊக்குவிக்கலாம்.

இதெல்லாம் தெரியாததால் எல்லா இலக்கணத்தையும் மீறிக் குறுநாவ்ல எழுதப் போனோம். அத்தியாயங்களுக்கு நம்பர் போடுவதை மட்டும் பத்திரிகை கம்பாசிட்டர்களும் உதவி ஆசிரியர்களும் கவனித்துக் கொண்டார்கள்.

எல்லா இலக்கியப் பத்திரிகைகளும் குறுநாவல்களைக் கேட்டு வாங்கிப் பெற்று மகிழ்ந்து பிரசுரம் செய்தன என்று சொல்ல முடியாது. முப்பத்திரெண்டு பக்கமுள்ள பத்திரிகையில் குறுநாவல் முப்பது பக்கத்தை அடைத்துக் கொண்டு விட்டால், சந்தா அனுப்புங்கள் கோரிக்கையும் ’போன மாதம் வந்த எந்தக் கவிதையும் நன்றாக இல்லை’ என்ற வாசகர் கடிதமும் பிரசுரிக்க மீதி ரெண்டு பக்கம் மட்டும் இருக்கும்.. அபூர்வமாக கோல்ட் கவரிங் விளம்பரம் கிடைக்கும் பத்திரிகையாக இருந்தால் இந்த ஏற்பாடும் அலங்கோலமாகி விடக் கூடும்.

தமிழ் இலக்கிய இதழ்களில் குறுநாவலை மிகத் தீவிரமாக ஆதரித்து வந்த பத்திரிகைகளில் கணையாழிக்கு முக்கிய இடம் உண்டு. 1990-களில் ஆண்டு தவறாமல் குறுநாவல் போட்டி நடத்தித் தேர்ந்தெடுத்துப் பிரசுரித்த கணையாழியும் கஸ்தூரிரங்கன் சாரும் இல்லாமல் இருந்திருந்தால் நான் முதல் குறுநாவலான ‘விஷம்’ எழுதி இந்த இலக்கியப் பகுப்பில் அடியெடுத்து வைத்திருப்பேனா என்று சந்தேகம் தான்.

அந்தக் காலகட்டத்தில் என்னோடு ஆண்டு தோறும் கணையாழிப் போட்டிக்கு எழுதிய நண்பர்களான ஜெயமோகன், பாவண்ணன், எஸ்.ராமகிருஷ்ணன் மற்றும் நானும் நாவலுக்குப் போய்விட்டோம் அழகியசிங்கர் விருட்ச் நிழலில் அமர்ந்திருக்கிறார். மற்றவர்களும் குறுநாவலுக்குத் திரும்பும் உத்தேசத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

குமுதத்துக்கு சுஜாதா ஆசிரியராக இருந்த ஆண்டில் அவர் அந்த லட்சச் சுழற்சி வெகுஜன இதழில் புகுத்திய மாற்றங்களில் குறுநாவ்லும் உண்டு. அந்த அத்தி அவருக்குப் பின் பூக்கவில்லை.

இனியும் ஒரு முறை நீராட முடியாத நதியாகக் குறுநாவல் தோன்றுகிறது. என் இந்தக் குறுநாவல்களை பாசத்தோடு பார்க்கிறேன். மறு வாசிப்பிலும் இவை எனக்கு நல்ல வாசக அனுபவத்தையே தருகின்றன. முதல் வாசகனான எழுத்தாளனுக்குக் கிடைத்த அதே அனுபவம் இவற்றை நூல் வடிவில் இப்போது படிக்கும் வாசகர்களுக்கும் கிட்டும் என நம்புகிறேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன