An evening in West Mambalamகச்சேரி

காய்த்ரி வெங்கட்ராகவனின் குரலும் எப்போதும் சிரித்த முகமும் மனதுக்கு இதமானவை. தம்பி ஈரோடு நாகராஜ் பக்க வாத்தியம் வேறே. நேற்று மேற்கு மாம்பலம் அயோத்யா மண்டபத்தில் ஸ்ரீராம நவமி கொண்டாட்டம் இவர்கள் கச்சேரியால் களை கட்டியது.

வாசலில் ஆர்ய கௌடா வீதியில் ஒரு செகண்டுக்கு ஒரு மாநகராட்சி பஸ்ஸும், பதினேழரை ஆட்டோ, பத்து மோட்டார் பைக், ஏழு கார் என்று இரண்டு திசையிலும் ஊர்ந்து கொண்டிருக்க, இரண்டரை மணி நேரக் கச்சேரியின் போது யாருமே ஹாரன் அடிக்கவில்லை என்பது ஆச்சர்யம். அடித்திருந்தாலும் நிரம்பி வழிந்த ரசிகர்களில் யாரும் அதைப் பொருட்படுத்தியிருக்க மாட்டார்கள்.

வெகு பொருத்தமாக சாவேரி தொடங்கி ராகமாலிகையில் பாவயாமி ரகுராமம். அட்டகாசமான காம்போதி (ஏமய்யா ராம ப்ரஹ்மேந்த்ரா). ரஞ்சனி, நிறைவான நிரஞ்சனி..

கே வி என் சாரின் சிஷ்யைக்கு சிஷ்யையான காயத்ரி, அவர் பாடிப் பிரபலமான ‘வருகலாமோ’ (மாஞ்சி) பாடுவாரா என்று நாகராஜிடம் மதியமே விசாரித்து கோபால கிருஷ்ண பாரதியார் எப்படிக் கச்சேரியில் வருவார் என்று ஒரு மாதிரி விக்கி லீக்ஸ் விவரம் கிட்டியிருந்தது.

‘குனித்த புருவமும்’ என்று காயத்ரி அழகாகத் தேவாரத்தைத் தொடங்க, மேற்படி பாரதியார் மோகனமாக வருவார் என்று ஊர்ஜிதமானது. நந்தன் சரித்திரக் கீர்த்தனை ‘தரிசனம் கண்டார்க்கு’ நேற்று கச்சேரியில் கேட்டவர்கள் அடுத்த ராம நவமி வரை மறக்க மாட்டார்கள்.

தொடர்ந்து அம்ருதவர்ஷிணியாக சுதாமயி சுதாநிதி..

நாகராஜ் தனியாக மிருதங்கத்தோடு மேடையில் ஏறினாலே அமர்க்கப் படுத்துவார். நேற்று கடம், கஞ்சிரா என்று படையோடு வந்து இறங்கி விட்டார். தனி பொறி பறந்தது.

வயலினில் காயத்ரி குரலோடு சுநாதமாக இழைந்த சாருமதி வில்லை எடுத்தது கண்டார். இசைத்தது கேட்டார்.

காலை வாக்கிங் போகணும்.. சாவகாசமாக எழுதறேன்..

———————-
Kejriwal promises Aam Adhmi Party election manifesto for each constituency. Not enough. Each voter, one manifesto.
————————
அண்மையில் படித்த சிறுகதைகளில் மனதை வெகுவாகப் பாதித்த ஒரு கதை – சுப்ரஜா ஸ்ரீதரனின் ‘அம்மா’.

கதையில் வரும் கதை சொல்லி கதை இறுதியில் செய்தது மனதில் சுழன்றபடி இருக்கிறது. அதை நியாயப்படுத்தவில்லை. ஆனால்.. வேறு என்ன செய்திருக்க வேண்டும்?

சுப்ரஜா ஸ்ரீதரனின் வெற்றி இந்த விவாதத்தைத் துவக்கி வைத்ததில் தான்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன