நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 2

நீல.பத்மநாபனுடன் ஒரு நாள் – பகுதி 2

(காவ்யா இலக்கியக் காலாண்டிதழ் அக்டோபர் – டிசம்பர் 2014)

கமல்:நாடகம்னு சொல்லும்போது சுயநலமாக ஒரு கேள்வி.. ஷண்முகம் அண்ணாச்சி நாடகங்கள்லே என்னெல்லாம் பார்த்திருக்கீங்க? நான் அந்தக் குழுவிலே இருந்திருக்கேன்

நீல:அப்படியா? ஔவையார், மனிதன்.. எல்லாம் பார்த்திருக்கேன்..நீங்க அதிலே எல்லாம் நடிச்சிருக்கீங்களா?

கமல்: ஆமா, பஸ் டெர்மினஸுக்கு வர்றதுக்கு முன்னாடி, கடைசியாக ஒரு ஸ்டேஜ். பத்து பைசா டிக்கெட் வாங்கி எப்படியோ ஏறிட்டேன் ..

நீல:களத்தூர் கண்ணம்மா பார்த்திருக்கேன்

கமல்:அதுக்கு அப்புறம் இடைப்பட்ட காலத்திலே.. ரொம்ப பெரிய அனுபவம்.. ஷண்முகம் அண்ணாச்சிக்கு இலக்கிய ஆர்வ்ம் அதிகம். கேரளாவுக்கு வந்து நாடகம் போடறதுன்னா ரொம்ப கவனமாக, இன்னொரு முறை ஒத்திகை பார்க்கணும்பாரு.. ’நம்ம ஊர் மாதிரி இல்லேப்பா ஜாக்கிரதையா இருக்கணும்’னு சொல்வார்..

நீல:மனிதன் அன்னிக்கு அதிகமா பேசப்பட்ட நாடகம்..அதில் ஒரு வசனம் ’மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்’. அது ரொம்ப பிரபலம். அதைக்கூட சிலர் கேலி பண்ணினாங்க. நாடகத்துக்குக் கனமான கருப்பொருள். உங்களுக்கு நினைவு இருக்கலாம். மலையாளக் கதை, முன்ஷி பரமு பிள்ளை எழுதியது. அதைத் தமிழ்லே நாடகமா போட்டாங்க.

கமல்: ஆமா, விருமாண்டி படத்திலே கூட அந்த ‘மன்னிக்கத் தெரிந்தவனே மனிதன்’ பாதிப்பு இருக்கு.எழுத்தாளர்களுக்கு எங்கெங்கோ இருந்து கதைக்கரு கிடைக்கும்.ஆனா வழக்கமாக எழுத்தாளர்கள் நாடகம் பற்றிப் பெரியதாகச் சொல்வது அபூர்வம்.

நீல:உண்மையிலேயே நான் அப்படித்தான் வந்தவன். இஞ்சினீயரிங் காலேஜ்லே படிக்கும்போது கூட எஞ்சினியர்னு ஒரு நாடகம் எழுதினேன். அப்போ நான் எஞ்சினியர் ஆகலே. படிச்சுட்டுத்தான் இருந்தேன். பிஎஸ்ஸி படிச்சுட்டுத்தான் இஞ்சினியரிங் படிக்க வந்தேன். வெகேஷன்லே பரீட்சை எழுதி பப்ளிக் சர்வீஸ் கமிஷன் வேலை கிடைச்சது. விடுமுறைக் காலத்தில் கிடைத்த வேலை. திருச்சூர்லே போட்டாங்க. பொதுப் பணித்துறை. அங்கே விண்ணப்பங்கள் அதிகம் வரும். அந்த இடத்திலே ரோடு போடறாங்க.. வெட்டறாங்க.. எனக்கு அந்த இடம் வேணும்.. இப்படி.வரும் விண்ணப்பங்களைப் படிச்சுட்டு பதில் எழுதணும். மூணு மாசம் தான் வேலை பார்த்தேன். திருச்சூர் பூரம் திருவிழா பார்த்துட்டு திரும்ப வந்துட்டேன். அந்தக் கருவை வச்சுத்தான் எஞ்சினியர்னு நாடகமா எழுதினேன். தமிழ் நாடகம்.

இரா:அதுதான் உங்க முதல் படைப்பா?

நீல:இல்லை. அது முதல் நாடகம். அதுக்கு முந்தி சிறுகதைகள் எழுதியிருக்கேன். உதயதாரகை நாவல் முதலாவதாக எழுதினேன். பதில் இல்லைன்னு ஒரு சிறுகதை எழுதியிருந்தேன். நாடகம் அப்போது எழுதி,, இங்கே நடிச்சு, அதை டேப் பண்ணி .. நான் தான் எழுதி இயக்கினேன். சின்ன வேஷத்திலும் நடிச்சேன். ஒலிப்பதிவு செஞ்சு அதை தேசிய அளவில் கல்லூரிகளுக்கான நாடகப் போட்டிக்கு அனுப்பினாங்க.. அங்கே சென்னைப் பல்கலைக் கழக நாடகம் வந்திருக்கு.. உஸ்மானியா பல்கலைக் கழகக் கல்லூரியில் இருந்தும் வந்திருந்தது.. ஆனால், இதுக்குத்தான் முதல் பரிசு கிடைச்சது..

கமல்: என்ன ரோல் பண்ணினீங்க நாடக்த்துலே?

நீல: என்ஞினியராகத் தான் நடிச்சேன். அந்த நாடகத்தையும், பிற்பாடு நான் எழுதின மற்ற நாடகங்களையும் சேர்த்து தனிமரம்-னு புத்தகம் வந்திருக்கு. கடந்த புத்தக விழாவில் வந்தது

கமல்: எத்தனை நாடகம் எழுதியிருக்கீங்க?

நீல: ஒரு எட்டு நாடகம் எழுதியிருக்கேன். புத்தகமா வந்தபோது அதை வானதி பதிப்பகம் போட்டாங்க. சிவசு தான் முன்னுரை எழுதினார்.

கமல், இது எனக்குப் புதிய செய்தி

நீல: நாடகாந்தம் கவித்வமனு சொல்வாங்க. நாடகத்திலே எல்லாமே வந்துடும். கவிதையானாலும் சரி. மற்ற இலக்கிய வடிவங்களானாலும் சரி, எல்லாமே வருது..அப்புறமா நாடகத்தை நான் விடக் காரணம் என்னன்னு கேட்டால், நாடகம் ஒரு குழு முயற்சி. எழுத்தாளன் தனிக்காட்டு ராஜா. எழுத நேரம் இல்லே ..கிடைக்கும் போது நாம் எழுதறோம் ஏகாந்தம் ..தனிமை அமையும் போது நாம் நம் பாட்டுக்கு கற்பனை உலகத்தில் இருந்து எழுதிக் கொண்டு போறோம்..ஆனால், காட்சியுருவில் நாடகமாக நடத்திக் காட்ட ஆட்களைத் தேடணும்.. .. எழுத எண்ணங்கள் வரணும் சொல்லிக் கொடுத்து நடத்திப் போகத் திறமை வேணும் என அலைவரிசையில் அவர்கள் எண்ணங்களும் இருக்கணும்..அதுக்கு creative energy.. அதிகம் வேண்டும்

கமல்: ரொம்பவே ஜனநாயகம் ஆன நடைமுறை நாடகம் நடத்தறது

நீல: ஆமா, எனக்கு அந்த organizing capacity இல்லே. அந்த அளவுக்கு creative energy-யும் இல்லே. என் படிப்பு.. எழுத்து இது ரெண்டும் ரெண்டாகத் தான் இருக்கு. ..தீவிர இலக்கியம் தான் படிப்பேன், வேலையும் தனியானது.தான். சேர்த்துச் செய்ய முடியாது.. அது மட்டும் இல்லே.. நாடக வடிவங்கள்.. dramatic forms-னு சொல்வாங்க. நாவல் எழுதும்போது அதுலே நான் அந்த வடிவங்களைக் கையாள முடிஞ்சுது. கவித்துவம் செய்ய முடிஞ்சுது. இலக்கியத்தில் எல்லாமே இணைஞ்சு தான் இருக்கு.. கதை, கவிதை, நாடகம் பேரு நாம தான் கொடுக்கறோம் .. எல்லாமே இலக்கியத்திலே வகையறா. மொத்தத்திலே இதை எல்லாம் கையாள நாவலும் சிறுகதையும் உதவியாக இருந்ததாலே நான் நாவலும் சிறுகதையும் கவிதையும் எழுதினேன். நாடகத்தை அதிகமாக எழுதலே.

இரா: ஒவ்வொரு நகரத்துக்கும் ஒரு ஆத்மா உண்டு என்பது உண்மையானால், திருவனந்தபுரம் நகருக்கும் ஒரு ஆத்மா உண்டு. அதை எந்த மலையாள எழுத்தாளரும் இதுவரை தரிசிக்கவும் இல்லை; மற்ற்வர்கள் அறியச் சொல்லியதும் இல்லை. அதைச் செய்த ஒரே எழுத்தாள்ர், தமிழ் எழுத்தாளராகிய நீல பத்மநாபன் என்று ஒரு மலையாள் விமர்சகர் சொன்னார். அந்த அளவுக்கு உங்கள் கதைகளில் பௌதிக ரூபமாகவும் மன வெளியில் வந்து அதன் மூலம் வெளிப்படுவதாகவும் இந்த அனந்தை நகரம் உள்ளது. உங்களுக்கும் இந்த நகரத்துக்கும் உள்ள உறவு எப்படியானது? அது love-hate relationship அல்லது pure hate அல்லது ‘hate it but still want to be here– உறவா?

நீல: பள்ளிகொண்டபுரம் நாவலைப் பற்றி சொல்றதுக்கு முன்னாடி நான் தலைமுறைகள் நாவல் பற்றிச் சொல்லணும்

இரா: அது ரொம்ப முன்னால், உங்களோட இருபத்தெட்டாவது வ்யதில் எழுதின நாவல் இல்லையா?

கமல்: இருபத்தெட்டு வயசிலேயா?

நீல: ஆமா. நான் எதையும் எழுதும்போது இதைப் பிறர் யாரும் செய்யாது இருந்திருக்கணும்கறதுலே அக்கறை எடுத்துப்பேன்..ஏன்’னா நிறைய புத்தகங்கள் இருக்கு நிறைய எழுத்தாளர்கள் இருக்காங்க. எழுத்திலே நான் செய்யறதாக இருந்தால், என்னளவுக்கு இது புதுமையா இருக்கணும் .. என்னளவுக்கு யாரும் எழுதாத பாணியிலே அந்த நாவல் அமைஞ்சிருக்கணும்னு எப்பவுமே நான் நினைப்பேன்..அப்படித்தான் நான் தலைமுறைகள் எழுதினேன். நான் பிறந்து வளர்ந்த சமூகம். அவங்களோட ஆசார அனுஷ்டானங்கள்..:பேச்சு மொழி… .இரணிய்ல்லே செட்டிமார்கள் எப்படிப் பேசுவாங்கன்னு யாருக்கும் தெரியாது. மலையாளமான்னு பலரும் கேட்பாங்க.. ஆனா தமிழ்தான். அவ்ங்க காவேரிப்பட்டணத்திலே இருந்து வந்த கதை எல்லாம் பாட்டி சொல்லித்தான் எங்களுக்குத் தெரியும் ஆனால் தமிழ்நாட்டில் உள்ள தாய்த் தமிழன்னு சொல்லக் கூடியவங்க யாருக்கும் தெரியாது ஏன்னா இரணியல் வந்து அந்தக் காலத்திலே திருவாங்கூர்னு சொல்வாங்க இப்ப உள்ள கேரளத்துலே சேர்ந்து கிட்ந்தது. மாநில மறுசீரமைப்பு .. state reorganization வந்தபோது ஆரல்வாய்மொழியில் இருந்த செக்போஸ்டை எடுத்து களியக்காவிளையிலே வச்சாங்க. நீங்கள்ளாம் தமிழ்நாடு, இங்கே கேரளம்னு சொல்லி அப்படி வச்சாங்க முன்னாடியெல்லாம் இரணியல்லே உள்ளவங்க, நாகர்கோவில்லே இருந்தவங்க எல்லாம் தலைநகரம் என்றால் திருவனந்தபுரம் தான் வருவாங்க.. சென்னைக்கு போக மாட்டாங்க.. அப்படி இருந்ததாலே ஓணப் பண்டிகை கொண்டாடறது இருந்தது, மலையாளம் பேச்சு மொழி .. மலையாள கலாசாரம் அவ்ங்க கிட்டே இருந்தது. அடிப்படையில் அவங்க தமிழ் தான் அதை நான் தலைமுறைகள் நாவலில் கையாண்டிருந்தேன். அதனாலே முதல்லே அதுக்கு எதிர்ப்பு இருந்தது. ஜேசுதாசன் நாவலுக்கு ஒரு அருமையான முன்னுரை எழுதியிருந்தார் பிரமாதமா இருக்குன்னு பாராட்டினார்.. நகுலன் நல்ல விதமாகச் சொல்லியிருந்தார். ஆனா, நாவலை வெளியிட பதிப்பாளரோ, பத்திரிகையோ கிடைக்கலே. நான் என் மனைவி நகையை அடகு வச்சு திருநெல்வேலியில் – நாகர்கோவில்லே கூட அன்னிக்கு நல்ல பிரஸ் கெடயாது.. – கொண்டு போய் சொந்தமா போட்டேன்.. அந்த தலைமுறைகள் நாவல் தான் நிறையப் பதிப்புகள் வந்தது ரஷ்ய மொழியில் வந்தது

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன