அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 2

அச்சுதம் கேசவம்  – 2

படகுத் துறை. மழைக்கு முதுகு காட்டிக் கொண்டு நாலு பேர் நிற்கிறார்கள். துணிக்குடை பிடித்தவர்கள். கால் மாற்றி நின்று மழைக்கு நடுவே காயலில் படகுச் சத்தம் கேட்கக் காது கொடுத்து நின்று கொண்டிருக்கிறவர்களை லட்சியம் செய்யாமல் இடி முழக்கத்தோடு மழை நகர்ந்து கொண்டிருக்கிறது.

மழை மறைத்த கோடியில் இருந்து நீர்ப் பரப்பில் சலனம். பூம் பூம் என்ற முழக்கம். கோட்டயத்திலிருந்து வரும் படகின் முழக்கம் அது.  திருவனந்தபுரம் போய்க் கொண்டிருப்பது.

நீரில் அலைகள் எழுகின்றன. சலசலத்து விட்டு அவை காயல் பரப்பைச் சமனப் படுத்த, அடுத்த ஈடு அலைகள் எழுகின்றன.  படகின் அழைப்பை வலுக்கும் மழை சிதறடிக்கிறது. ஆனாலும் பயணிகள் கேட்டு விட்டிருந்தார்கள்.

வாழ்க்கையில் ஆயிரம் முறையும் அதற்கு மேலும் படகு ஏறிப் பயணப் பட்டு இன்னொரு காயல் துறையில் நீரிலிருந்து நிலத்திற்கு மெல்லக் காலடி எடுத்து வைத்துப் போனவர்கள் தான் எல்லோரும். என்றாலும் இன்னொரு படகுப் பயணம் அதுவும் மழையில். படகுத்துறை பேச்சு எதுவும் இல்லாமல் மழைச் சத்தம் மட்டும் சூழ நிற்கிறது.

மழை நாளைக்குத் தான் விடும் போல.

இல்லே. நாலு நாள் இருக்குமாம்.

ஏதாவது பேசாவிட்டால் காயல் காவு கொள்ளும் என்று பயந்தது போல் எளிதாக மனதில் தட்டுப்படும் மழை பற்றி வெற்று வார்த்தைகளைப் பரிமாறியபடி நின்றார்கள்.

இறங்கறவங்களை எறங்க விடுங்க முதல்லே

வந்து நிற்கும் படகைக் கழியில் பிணைத்தபடி, படகுத் துறைக்காரன் கூவுவது இப்படித்தான். அங்கே யாருமே இல்லாமல் இருந்தாலும் கேட்கும் ஓசை இது. நீரைக் கிழித்து அவமதிக்காமல், கம்பீரமாக நீரோடு சிநேகமாக அரவணைத்து மிதந்து வரும் நீண்ட படகுக்குச் செய்யும் குறைந்த பட்ச உபசரிப்பும் மரியாதையும் இந்தக் கயிறும் குரலும்.

காயங்குளம் படகு இது.

படகுக்காரன் உள்ளே இருந்து மழை சத்தத்தை மீறிக் கத்தினான்.

காத்திருந்தவர்கள் முகத்தில் ஏமாற்றம் அப்பட்டமாகத் தெரிய அவர்கள் மடக்கிப் பிடித்த குடைகளோடு நனைந்தபடி திரும்பக் கரைக்கு நடந்தார்கள். திருவனந்தபுரம் படகு இன்று வராமலே போய் விட்டால் என்ன செய்யலாம் என்ற நினைவோ எதுவோ அவர்கள் குரலை நிசப்தத்துக்குள் ஆழப் புதைத்திருந்தது.

அகன்ற தொப்பி தரித்த துரை ஒருத்தன் படகிலிருந்து வெளிப்பட்டான். கருப்புத் துரை. ஆப்பிரிக்க தேசத்திலிருந்து வருகிறவனாக இருக்கும் என்று படகுத் துறைக்காரன் ஊகித்தான். அவன் அப்படி இல்லாமல் போனாலும் ஒன்றும் பாதகமில்லை.

படகுப் பயணம் அதுவும் மழை நேரத்தில் செய்து பழக்கமில்லாதவனாக இருக்க வேண்டும். கையில் சுமந்து வந்த பெரிய தோல்பையைக் கரையில் சேர்ப்பது எப்படி என்பது குறித்த தீர்மானமான செயல்பாடு எதுவும் இல்லாதவனாக ஒரு வினாடி படகிலேயே நின்றான். பிறகு பையைப் படகுத் துறைக்கு தளம் அமைத்த மரப் பலகையில் வைத்தான். அதை வைத்து விட்டு இறங்குவதற்குல் விழுந்து ஆற்றோடு போய் விடும் என்று பட அதைத் திரும்ப எடுத்துக் கொண்டு படகுத் துறைக்காரனை எதிர்ப்பார்ப்போடு பார்த்தான்.

துரை ஏன் தடுமாறறே. ஒரு குரல் விட்டிருக்கலாமில்லே.

படகுத்துறைக் காரன் சொன்னது புரிந்ததா என்று தெரியவில்லை. என்றாலும் அவன் கைப்பையைப் பற்றி எடுத்துச் சுமந்து கொண்டு நிற்பதைக் கவனித்தபடி மெல்லப் படகை விட்டு இறங்கினான்.

படகுக்குள் இன்னும் கொஞ்சம் மூட்டை முடிச்சு இருப்பதாக சைகையால் சொன்னபோது படகுக்காரனுக்கு உதவியாக வந்தவன் அவற்றோடு இறங்கி மரப் பாலத்தில் அவற்றை வைத்து விட்டு ஓ என்று சத்தம் எழுப்பி மழையோடு கூவினான். அவனுடைய குரல் அவனுக்கே அந்நியமாகப் படும் ஆனந்தத்தை அனுபவித்தபடி கருப்புத் துரையிடம் கை நீட்டினான்.

கோயிலுக்குப் போகணுமா தொரே?

வேணாம். கோயில் பிஷப்பைப் பார்க்கணும்.

அப்படி எல்லாம் யாரும் கிடையாது.இங்கே தொரை.

அட பிஷப்னு சொன்னா பிஷப்பு தானா.. வேறே ..

வானம் உதிர்ந்து விழப் போவது போல் அதிரப் பெரும் ஒலியோடு இடிச் சத்தம் கருப்புத் திரள் மேகங்களில் மோதிப் பம்மிப் பின்வாங்கி அடுத்த வினாடி ஆக்ரோஷத்தோடு வெடித்துச் சிதறியது.

துரை இரண்டு காதிலும் கையை வைத்துப் பொத்தியபடி நின்றான்.

பயமா இருக்கா தொரே.

வந்தவன் சிரித்தான்.

ஆறு நொரைச்சுக்கிட்டுப் போகுது..மழை வேறே காட்டடியாப் பெய்யுது.

அவன் முடிப்பதற்குள், சரியான பதம் நினைவு வந்தவனாகச் சொன்னான் வந்தவன் – அம்பல மேல்சாந்தியைப் பார்க்கணும்.

சொன்னதைத் தானே மறந்து விடக் கூடும் என்று நினைத்தோ என்னவோ, இன்னொரு முறை அவசரமாகச் சொன்னான்.

படகுத் துறைக்காரன் மழையில் அசங்கித் தெரிந்த கோவிலையும் குளத்தையும் சுட்டு விரலால் காட்டினான். தெய்வத்தை அவன் கை விரல் கட்டுக்குள் கொண்டு வந்த ஆனந்தம் முகத்தில்.

அவரா, அம்பலக் குளத்திலே குளிச்சு கோவிலுக்குக் கிளம்பிட்டு இருப்பாரே.. அதுவும் ஒரு ஜீவிதம். நான் படகுத் துறையில் வந்த படகை அனுப்பிட்டு அடுத்த படகுக்காக உட்கார்ந்திருக்கற மாதிரி. நீ படகுக்காரனாப் பொறந்தாலும் நான் மேல்சாந்தியா ஜன்மம் எடுத்தாலும் இதேதான் கதை.

படகுத் துறைக்காரன் மழை நீரை உள்ளங்கையில் ஏந்திக் குடித்தபடி கூகூவென்று   போலியாகக் கீச்சிட்ட்படி சிரித்தான்.

சாமு. சாமு’வெ. எடொ சாம்’வெ.

கரையில் வெகு தூரம் தள்ளி உத்தேசமாகக் குரல் எறிந்தான் அவன். சாமுவுக்கு என்ன கேடு? வானம் கடமுடவென்று இடிக்கான முன்னேற்பாட்டோடு விசாரித்தது.

வந்தேன்.

படகுத் துறைக்கு எதிரே அடைத்துப் பூட்டியிருந்த ஒரு துன்னல் பீடிகை. என்றால், தையல் கடை. அதை அடுத்து மரம் அறுத்து புது வீடு பணிக்க, பழைய வீட்டைப் பராமரிக்க வழி செய்யும் மரக்கடை. இதுவும் பூட்டித்தான் இருந்தது. மேல் ஓரமாக நாவிதர் கடையில் விளக்கு எரிந்தது. குரல் அங்கே இருந்து தான் வந்தது என்பதைப் படகில் வந்த கருப்புத் துரை கவனித்தான்.

கெச்சலாக ஒரு மனிதன். மழையைச் சட்டமே செய்யாமல், உயர்த்திக் கட்டிய லுங்கியும் தலையில் அழுக்குத் துணி முண்டாசுமாக நந்தவனத்தில் உலவ வந்த ராஜகுமாரன் மாதிரி ஒவ்வொரு அடிவைப்பையும் ரசித்துக் கொண்டு படகுத் துறைக்குள் வந்து சேர்ந்தான்.

துரையைக் கூட்டிப் போகணும்.

படகுத் துறைக்காரன் வந்தவனை அவனிடம் காட்டிச் சொன்னான்.

எதற்கென்று இல்லாமல் கருப்புத் துரையைப் பார்த்துச் சிரித்தான். அது முடிந்து படகுத் துறைக்காரனுக்கு அடுத்த சிரிப்பு வினியோகிக்கப்பட்டது. அதுவும் முடிய, அவன் மழையும் அலையுமாகக் கிடந்த ஆற்றை நோக்கிப் பொதுவாகச் சிரித்தான். அந்தச் சிரிப்பு மிக நேர்த்தியாக இருந்ததாக துரை என்று இவர்களால் நாமகரணம் நினைத்தான்.

ஆலப்புழைக்குப் போகணுமோ?

சாமு விசாரித்தான்.  இங்கே படகு இறங்கியோ அல்லது கிழக்கே இருக்கும் ரயில்வே ஸ்டேஷனில் ரயில் நிற்க இறங்கி வந்தோ கால் பதிக்கிறவர்கள் எல்லோரும் அம்பலக் குளம் எங்கே, குளிக்கணும், தரக்கேடில்லாத ஓட்டல் எங்கே, இட்டலியும் சம்மந்தியும், கோப்பியும் அகத்தாக்கிக் கொண்டு அம்பலம் போகணும், நல்ல வண்ணம் ஒரு தரிசனம், சந்தனக்குறி தொட்டு நெற்றியில் பூசி வந்து ஒரு மிடக்கு பாயசம் கேட்டு வாங்கிச் சாப்பிடணும், ஓரமாகக் குத்த வைத்து விட்டு, நேரம் இருந்தால் அம்பலக் குளத்தில் கால் நனைத்துக் கொண்டு ரயிலுக்குக் காத்திருக்கணும்.

இனிமேல் கொண்டு ரயில் நாளைக் காலையிலே தான் சேட்டா.

சாமு சொன்னதைக் கேட்டு எல்லோரும் சலித்தபடி, அந்தி உறங்கித் திரும்பக் குறைந்த சார்ஜில் ஒரு முறி எடுக்க லாட்ஜ் ஏதும் இங்கே உண்டோ என்பார்கள். அம்பாடிக் கண்ணன் லாட்ஜ் உடமைஸ்தன் பார்க்கவன் பிள்ளைக்கும் அங்கே கட்டில்களில் மறைந்து காத்திருக்கும் ஆயிரக் கணக்கான மூட்டைப் பூச்சிகளுக்கும் வருமானமும் போஜனமும் கொண்டு சேர்ப்பிப்பதையும் சாமு வெய்யிலோ மழையோ கிரமமாகக் கவனித்து வருகிறான்.

வந்த சில கழுவேறிகள் அந்தி உறங்க ஏற்பாடாக ஒரு போத்தல் பிராந்தியும் அவர்களை விட மோசமான துஷ்டர்கள் கூடப் படுத்து உறங்க ரதி சுகமும் கேட்க போடா பட்டி என்று சாமு விலகி வந்ததும் உண்டு. அப்புறம் தான் அப்படியான பட்டி ஜனங்களை கோமரத்து அருமனிடம் கை காட்டி விடுவது. கோமரம் இப்படி அவனுக்கு வந்த ஒவ்வொரு தலை திரிஞ்ச பேர்வழிக்கும் ஐந்து ரூபாய் கொடுக்க ஆரம்பித்ததும் அதுவு பழகிப் போனது சாமுவுக்கு. வருமானம் இல்லாத சமயங்களில் அப்படியான மனுஷர்கள் வரணும் என்று உள்ளபடிக்கே ஆசைப்படுவதும் அவனுக்குப் படிந்து போனது. மழைக்காலம் தொடங்கி அந்த மனுஷர்கள் வருவதும் இல்லாமல் தான் போயிருக்கிறது. இந்தத் துரை எப்படி?

துரை, பெட்டியை இங்கே கொடு.

ஜாக்கிரதையாகப் பெட்டியை இடுக்கிக் கொண்டு படகில் வந்த கருப்பன் கேட்டான்.

எனக்கு எங்கேயும் தங்க வேணாம்.

சரி, உடம்பு சிஷ்ருசைக்கு மருந்து, அப்புறம்.

சாமு இழுத்தான். இவன் கழுவேறியாக இருக்க வேணாம் என்று அவன் மனசு சொன்னாலும் காசு தேவை என்று அடிமனதில் அழிக்க முடியாமல் எழுந்து வந்தது.

எந்த செர்வீஸும் வேணாம். கோவில் பிஷப். அது அந்த மேல்சாந்தி. அவரைப் பார்க்கணும். அவ்வளவு தான்.

கூட்டிப் போறேன். சாப்பாடு?

வரும்போதே முடிச்சாச்சு.

சரி பெட்டியைக் கொடு துரை. கனமா இருக்கும் போலே இருக்கே.

சாமு பெட்டியை வாங்கக் கை நீட்டினான். அவன் சின்னக் குழந்தை அடம் பிடிப்பது போல் மாட்டேன் என்று பின் வலித்துக் கொண்டான்.

இதுக்கு பணம்?

அவன் முன் ஜாக்கிரதையோடு சாமுவையும் படகுத் துறைக்காரனையும் ஒரே பார்வையிலாக்கி விசாரித்தான்.

என்னத்துக்குக் கவலை? நான் ஊருக்குப் போயிட்டு வந்தா, மேல் சாந்தி போய்ட்டு வந்தா பெட்டியை எடுத்துப் போகிற மாதிரித்தான் இது.

சாமு பெட்டியைத் தலையில் ஏற்றிக் கொண்டான்.

ஒரு டீயும் பன்னும் வாங்கிக் கொடுக்க மாட்டீங்களா என்ன துரை?

அவர்கள் படகுத்துறை கடந்து வந்தார்கள்.

என் பேர் துரை இல்லை. வைத்தாஸ். வைத்தாஸ் இக்வானோ ரெட்டி.

துரைன்னே கூப்பிட்டுக்கறேன். அதெல்லாம் வாயில் வராது.

நீ இனிமேல் கொண்டு எப்போதும் துரை தான்.

ஆற்றில் மிதந்து கொண்டு போன அடுத்த படகு சத்தமாக ஒலியெழுப்பிச் சேதி சொன்னது.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன