அச்சுதம் கேசவம் – அத்தியாயம் 3


டைப்ரைட்டர் சத்தம் நின்றது. இரண்டு அத்தியாயம் முடிந்த சந்தோஷத்தோடு வைத்தாஸ் எழுந்தான்.

அவனுடைய எட்டாவது ஆங்கில நாவல் கர்கடக மழையில் சொட்டச் சொட்ட நனைந்து கொண்டு ஆரம்பித்திருக்கிறது.

கர்கடகம். மெல்ல சொல்லிப் பார்த்தான். சரியாக வருகிறது.

நந்தினி, எழுந்திருக்கலியா?

கட்டில் பக்கம் போய்க் குனிந்தான். உஷ்ணமேறிய கரங்கள் போர்வைக்குள்ளிருந்து நீண்டு கழுத்தைச் சுற்றி அணைத்து, வலுவாக இழுத்தன.

கர்கடகம் மட்டும் போதாது. மற்றதும் வேணும். மறுபடியும்.

நந்தினி சிணுங்கினாள்.

ஞாயிற்றுக்கிழமைக் காலை போகத்தோடு விடிகிறது.

நான் எம்..எம்பிரா..

வைத்தாஸ் வார்த்தை கிடைக்காமல் தடுமாறினான்.

எம்பிராந்திரி

ப்ரா பிராந்தா

விஷமமாகப் பார்த்தபடி அவன் உதட்டில் கடித்தாள் நந்தினி.

நீண்ட, சோகையான வெளுப்பு படர்ந்த கைகள் அவனுடைய கருத்த காது மடலை வருடி நகம் பதித்தன.

எம்பிராந்திரி ரெண்டாவது அத்தியாயத்தில் வரட்டும். படகுத் துறையில் ஆரம்பிச்சா என்ன?

அவள் மார்பை அள்ளியபடி கேட்டான். பதிலை எதிர்பார்க்கிற கேள்வி இல்லை.

அஞ்சு அஞ்சு அத்தியாயம் முடிச்சு அனுப்பிட்டா தமிழிலேயும் மலையாளத்திலேயும் மொழி மாற்ற ஸ்தூல சரீரப் பெண்கள் தயாரா இருக்காங்க.

அவன் மூக்கில் குத்தினாள் நந்தினி. மெலிந்த தேகம் காதலுக்கு உகந்தது. காமத்துக்கில்லை என்று வைத்தாஸின் மனம் சொல்ல அதைச் சபித்தான்.

நந்தினி திரும்ப அவனை விஷமமாகப் பார்த்தாள்.

Why don’t you hand it over in person and return after Shrama parikaram?

(நீயே நேரே கொண்டு போய்க் கொடுத்திட்டு சிரம பரிகாரம் பண்ணிட்டு வாயேன்).

சிரம பரிகாரம். அடுத்த அத்தியாயத்தில் அல்லது தொடர்ந்து வருவதில் கலவி முயக்கத்தைச் சொல்லும் போது வைத்தாஸ் உபயோகிப்பான்.

வேணாம். எனக்கு இன்னொரு ஜன்மத்துக்கு பரிகாரம் பண்ணிக்க இது போதும் நந்தினி.

ஊர்ந்த கையை விலக்கினாள்.

அடுத்த தடவை அங்கே போறபோது ஹவுஸ்போட் வாடகைக்கு எடுத்து காயல்லே மிதந்த படிக்கே, ஓகே டா?

கண் சிமிட்டினாள்.

எல்லாம் முடிந்து சுத்தம் செஞ்சுக்கறது காயல்லே சுலபமில்லியோ. அப்படியே படகுக்கு வெளியே கையை விட்டு அள்ளி தண்ணி எடுத்து இப்படி

டெவில்.. அங்கே இருந்து கையை எடுக்கச் சொன்னேனே.
கூச்சலாகச் சொன்னாள். ஆனாலும் அந்தக் கையை விடுவிக்கவில்லை. இன்னொரு கையும் துணைக்கு வந்தது.

பாதகமில்லை. எல்லா பாதகமும் கொண்டும் கொடுத்தும் தொடரட்டும்.எல்லாமே வேண்டித்தான் இருக்கிறது.

முதல்லே அவன் பெயரை சேஞ்ச் பண்ணு. நீயும் வைத்தாஸ், அவனும் வைத்தாஸ். அப்படி இருக்க முடியாது,

வெற்று முதுகில் தட்டிச் சொன்னாள் நந்தினி.

எப்படிச் சொல்றே?

நேத்து நீ தூங்கின பிறகு வந்திருந்தான் அவன். மழை வாசனையோடு காயல்லே ரமித்தபடி நாங்க சந்தோஷமா இருந்தோம். அவன் போன பிற்பாடு கூட அந்த ஈர வாசனை கூட இருந்தது. காயல்.

நந்தினி கண் மூடிக் கொண்டு சொன்னாள்.

அவளோடு பேச அவனுடைய நாவலிலிருந்து சகலரும் இறங்கி வந்து விடுகிறார்கள். முடித்து, புத்தகம் வெளியிட்டு, நாலைந்து பதிப்பு போன நாவல் என்றால் பரவாயில்லை. அவர்கள் முடிந்த காலத்துக்குத் திரும்பியே ஆக வேண்டும். ஆனால் எழுதிக் கொண்டிருக்கும் நாவலின் பாத்திரங்கள் இப்படி எல்லாத் திசைக்கும் வழுக்கி ஓடுவது எவ்வளவு தூரம் மேற்கொண்டு எழுதுவதைப் பாதிக்கும்?

வைத்தாஸுக்குத் தெரியவில்லை.

காயல். நல்லா இருக்கு இல்லே சொல்றதுக்கு?

நந்தினி கேட்டாள்.

இங்கிலீஷிலும் அப்படியே வச்சிருக்கேன். இதைக் கேளு.

எழுதியதை நினைவில் இருந்து சொல்ல ஆரம்பித்தான் வைத்தாஸ்.

ஏதாவது பேசாவிட்டால் காயல் காவு கொள்ளும் என்று பயந்தது போல் வெற்று வார்த்தைகளைப் பரிமாறியபடி நிற்கிறார்கள். வாய் ஓயாது பேசுகிறவர்கள் மழைநாளில் குரல் சலித்து ஓய்ந்த கணத்தைக் கணக்காக்கி, வந்த அலையைச் சாக்காக, போன அலையைச் சாட்சியாகக் கொண்டு தலை குப்புறக் கவிழ்த்துக் காலம் உறைந்த ஆழத்தில் அமிழ்த்தி உயிர் பறிக்கும் காயலை அவர்கள் அறிவார்கள். எல்லோரும் அறிவார்கள்.

கடவுளே. இது என்ன பனிக் கட்டியிலே பொம்மை பண்ற மாதிரி வெற்று வார்த்தையாப் பிசைஞ்சு நிறுத்தி வச்சிருக்கே?

நந்தினி சிரித்தாள்.

வைத்தாஸ் அவள் உதட்டில் விரலால் நீவினான்.

இந்த வெர்ஷன் தமிழிலே மொழிபெயர்க்கறதுக்குன்னே தயாராக்கினது. வார்த்தை விளையாட்டை அங்கே அதிகமா ரசிக்கறாங்கன்னு என் பப்ளிஷிங் ஏஜன்சி சொல்றாங்க. to threaten. மிரட்டினாத் தான் எழுத்தாம்.

நரகத்துக்குப் போகச் சொல்லு என்றாள் நந்தினி.

படகுத்துறையை முதல் அத்தியாயமாக வைத்தால் என்ன. காவு கொள்ளும் காவலில் தொடங்கி இன்னொரு ஈடு டைப் செஞ்சிடலாம்.

வைத்தாஸுக்கு மின்னலாக யோசனை வந்து போனது.

படகுத்துறையும் மற்றதுமெல்லாம் மழையில் உறைந்து நிற்கட்டும். இப்போது நந்தினியோடு கலப்பது மட்டும் போதுமானது

அவன் நக்னமாக எழுந்து நடந்து அலமாரியைத் திறந்தான்.

நக்ன யோகி மாதிரி இருக்கேடா.

நந்தினி குரல் பின்னால் தொடர்ந்தது.

திரும்பிப் பார்த்து, நிறைய ஒத்திகை பார்த்த குரலில் சொன்னான்.

யோகம் ஒரு மன நிலை. போகம் இன்னொரு மன நிலை. யோகத்துக்குள் போகம் உணர்ச்சிப் பெருக்கு மேவுதலால் அதீதமானது. போகத்துக்குள் யோகம் பெரும் ஞானிகளுக்கு வாய்க்கலாம். என் கதாபாத்திரங்களுக்கு அது சித்தியாகும். எனக்கு இல்லை.

நாலு மைக், ஆட்டோகிராப் வாங்க ரெண்டு பொண்ணுங்க. அப்போ உளறு.

இப்போ?

உறையை எடுத்தபடி விசாரித்தான்.

தனியா வாடா.

நந்தினி கண்டிப்பாகச் சொன்னாள். எடுத்த உறையைத் தலையணைக்குக் கீழே வைத்தபடி கட்டில் ஓரமாக உட்கார்ந்தான். அவசரமாகப் புரண்டு அவன் மடியில் தலை சாய்த்துக் கொண்டாள் அவள்.

வேணாம். ரூம் சர்வீஸ் காபி கொண்டு வருவாங்க.

வைத்தாஸ் குரல் அவள் உச்சந்தலையில் முத்தமாக ஒலி இதழ் பிரிந்து வழிந்தது.

இப்போ தானே ஃபோன் செஞ்சேன். இன்னும் பதினைந்து நிமிஷம் ஆகும். அதுக்குள்ளே நீ ராகம் தானம் பல்லவி முடிச்சுடலாம்.
நந்தினி அவனைப் பார்த்துத் திரும்பிச் சிரித்தபடி ராகம் இழுத்தாள்.

காபி வர வரைக்கும் பாட்டு போகணுமா இல்லியா?

அதுக்குள்ளே முடியலேன்னா?

வாடா.

நந்தினி அவனை மேலே இழுத்துக் கவிந்து கொண்ட போது எம்பிராந்தரி வீட்டு வாசலில் இருந்து வைத்தாஸும் சாமுவும் வீட்டு முன்னறைக்கு வந்து உட்கார்ந்தார்கள்.

பின் அலை ஆகஸ்ட் 28 1963 புதன்கிழமை
——————————————————————-

உள்ளே போகலாம் என்றான் சாமு. போய்த் தான் ஆக வேண்டுமா என்று வைத்தாஸுக்குத் தெரியவில்லை.

இது என்ன, சாமுவா வற்புறுத்தி குடைக் காம்பால் குத்தித் தள்ளி அழைத்துப் போவது? அவனா, இந்த மனையில் போய் பழைய கதை கிடைக்குமா பார், இந்தத் தரவாட்டில் அம்பலப்புழையும் மங்கலாபுரமும் சம்பந்தம் தேடிக் கிடைத்தவர்கள் உண்டா என்று பார் என்று விதித்தது?

ஊரும் மண்ணும் வைத்தாஸோடு ஒட்டுவதற்கு முன், இந்தப் பாவப்பட்ட சாமு எங்கிருந்தோ வந்து ஒட்டிக் கொண்டு விட்டான்.

சாமுவின் மூன்றாம் கரம் போல கருத்து நீண்ட குடை மழைத் தண்ணீர் சொட்டச் சொட்ட அவன் தோளில் தொற்றியபடி எங்கே போனாலும் கூட வந்தது. அவன் குடையைப் பிடித்து, அந்தக் கூரைக்குள் வைத்தாஸையும் கூட்டி வைத்தபடி, இரண்டு பேருக்கும் தலை நனையாமல் நடக்க யத்தனித்த முயற்சிகள் இதுவரை தோல்வியில் தான் முடிந்திருக்கின்றன.

இந்த நடை முடிவதற்குள்ளோ மழைக்காலம் ஒரு முடிவுக்கு வருவதற்குள்ளோ அது நடைமுறை சாத்தியமாகலாம்.

அதை எதிர்பார்த்து, கை இடுக்கில் அந்தக் குடை புகுந்து உட்கார்வது வைத்தாஸுக்கு ஒவ்வாதது. குடைக்கு ஒரு ராஜ கம்பீரம் உண்டு. அது பொத்தல் குடையாக இருந்தாலும், மானியம் இழந்த ராஜா அந்த கெத்து உண்டு. கட்கத்தில் இடுக்கிய குடை சாமான்யமாகிப் போகும்.

ஒரு கட்டன் காப்பி கிடைக்குமானால்.

வைத்தாஸ் ஒரு கார்வை கொடுத்து இழுக்க, அவனுக்குள் மலையாளத் தன்மை பரிபூர்ணமாக வந்து இறங்கியது போல தோணல். இந்த விசாரிப்பு, நீட்டி நீட்டி வேகம் குறையாமல் பேசுவது, எங்கேயும் குறிப்பாகப் பதியாமல் எல்லா இடத்திலும் ஒரு வினாடி நட்டுப் போகும் பார்வை இதெல்லாம் வந்து கொண்டிருக்கின்றன.

எனக்கெதற்கு இது? எந்தப் பிறவியில் நான் இங்கே பிறந்து இதெல்லாம் மிச்ச சொச்சமாக வருகிறது? வைத்தாஸுக்குப் புரியவில்லை.

என்றாலும், அவனைச் செலுத்துகிற பலமான நினைவுகளுக்கு சொந்தமானவள் இந்தப் பிரதேசத்துப் பெண். சின்ன வயசுக் கிழவி அவள்.

குஞ்ஞம்மிணி.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன