போகிற போக்கில் 2

 

Feb 23, 2009 திங்கள் காலை 7 மணி

நேற்றுப் பகல் (ஞாயிறு, 22, ஃபிப்ரவரி 09) க்ரேஸி மோகனின் ‘சாக்லெட் கிருஷ்ணா’ 150-வது மேடையேற்றம் நாரதகான சபாவில் கோலாகலமாக நடந்தது. நம்ம வீட்டுக் கல்யாணம். கமல் அவர்கள் சிறப்பு விருந்தினர்.

மோகன் இதுவரை எழுதிய நாடகங்கள் 21. எல்லாமே குறைந்த பட்சம் 100 தடவையாவது மேடையேறியவை. இவற்றில் பல 200 ரன், மற்ற சில 500 ரன் அடித்து சனத் ஜெயசூர்யா மாதிரி இன்னும் சாதனை புரிந்து கொண்டிருக்கின்றன.

அவர் கதை வசனம் எழுதி பெருவெற்றி கண்ட 21 திரைப்படங்களில் கமலுக்காக மட்டும் 11 சூப்பர் ஹிட்ஸ். மோகன் கைவண்ணத்தில் உருவாகி சின்னத்திரையில் prime time சீரியல்களாக எட்டு நகைச்சுவைப் படைப்புகள் சக்கைப்போடு போட்டன.இதில் பத்தில் ஒரு பங்கு சாதித்தாலே இங்கே பலர் சோப்புக் குமிழி மாதிரி levitate ஆக ஆரம்பித்து விடுவார்கள். மோகனுக்கோ, வெற்றிலை சீவல் மென்றபடி இன்னும் தரையில் கால் பதித்து நடக்கிற level headedness. மனப் பக்குவம். அவர் தம்பி மாது பாலாஜியும் வெற்றிலை சீவல் இல்லாமல் அதேபடிதான்.

நாடக வெற்றிக்காகப் பாடுபட்ட குழு நண்பர்களை ஒவ்வொருவராக மோகன் அறிமுகப்படுத்தி நன்றி சொன்னதோடு நண்பர் சு.ரவியையும் மேடைக்கு அழைத்து நன்றி கூறினார். ‘இவர் வந்திருக்காரான்னு தெரியலே’ என்று ஆரம்பித்து இரண்டாம் வரிசையில் இருந்து உள்ளேன் ஐயா என்று கை மேலே எழுந்ததும் பெயரைச் சொல்லி அவர் நன்றி சொன்ன இன்னொரு நண்பன் இதை எழுதுகிறவன். கமல் அவர்களின் ‘தலைவன் இருக்கின்றான்’ படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கும் செய்தியையும் அந்தப் பெருங்கூட்டத்தில் அறிவித்த பரந்த மனத்துக்காக நான் இல்லையா மோகனுக்கு நன்றி சொல்ல வேண்டியது?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன