காரில் நிச்சயிக்கும் கல்யாணங்கள்

 
விடிந்தும் விடியாத காலைப் பொழுதில் ஊர் வழக்கப்படி, மாநிலப் பழக்கப்படி அரைக் கிலோ நெய் வடியும் ரவா கேசரி. கேசரிக்கு கம்பெனி கொடுக்க சம அளவில் ரவா உப்புமா. அதுக்குத் தோழியாக வெல்லம் கரைத்து ஊற்றிய அசட்டு தித்திப்பு சாம்பார். பின்பாரமாக பில்டர் காப்பி. இந்தப்படிக்கு வயிற்று உபசாரம் முடிந்தது. அடுத்து என்ன செய்யலாம்? வாசல் திண்ணையில் உட்கார்ந்து யோசித்தார் முத்தாலிக். சுகமாக எழுந்து வந்த ஏப்பம் பதில் சொன்னது. வானர சேனை தொடங்குக. கேசரி சாப்பிட்ட இன்னும் நாலு பேரோடு கிளம்பி விட்டார்.

முத்தாலிக்கின் முன்னோர்கள் உப்புமாவோடு உணர்ச்சி பூர்வமாக அவருக்குச் சொல்லிக் கொடுத்த பாடத்தின் படி ஆண்களும் பெண்களும் வெவ்வேறு கிரகங்களிலிருந்து வருகிறவர்கள். ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணைத் தெரியும் என்றால் ஒன்று அவள் அவனுக்கு ஹெண்டத்தி. அதாவது பெண்டத்தி ஆன மனைவி. அல்லது அம்மா, அக்கா, சித்தி, பாட்டியம்மா, அம்மன் சாமி வகை உறவு. இதைத் தவிர இந்த இரண்டு வர்க்கமும் பேச, பழக எந்த விதத் தேவையும் இல்லை. அது பாவமும் கூட. அந்த மாபாதகத்தை யாராவது செய்ய முற்பட்டால், உடனே தடுத்தாட்கொள்ள வேண்டும். உருட்டுக் கட்டையால் உபதேசம் செய்து முடித்ததும் சர்க்கரை தூக்கலாக இன்னொரு டம்ளர் பில்டர் காப்பி சாப்பிடலாம்.

உள்ளூர் அன்பர்களுக்கு உபதேசம் செய்தால் நாடு முழுக்கக் கேட்காது. எனவே டெக்னாலஜியை துணை கொள்ளுதல் அவசியமாகும். உருட்டுக் கட்டை எடுக்கும்போதே சுற்றமும் நட்புமான லோக்கல் கேபிள் டிவிக்காரர்களுக்கும் கேமிரா, லைட்டோடு உடனே வந்து சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டது. டிவிக்காரர்கள் மறைவாக நின்று காமிராவில் கோணம் பார்த்துத் திருப்தியோடு ‘ஸ்டார்ட்’ சொல்ல, முத்தாலிக் அணியினர் பாய்ந்து ஓடினார்கள். மங்களூர் நகரத்துக் கல்லூரி மாணவிகளையும், கூடப் படிக்கும் நண்பர்களையும் கடை கடையாக ஏறி இறங்கித் தூண்டில் போட்டுத் துரத்திப் பிடித்து இழுத்து வந்து காமிரா முன் நிற்க வைத்தார்கள். கலந்து பழகிய குற்றத்துக்காக அவர்களுக்கு அடி உதை பிரசாதமாக வழங்கப்பட்டது. நகர வீதியில் ஒரு பெரிய கூட்டமே சுவாரசியமாக வேடிக்கை பார்க்கத் திரண்டு வந்தது. கம்ப்யூட்டர் அறிவுமிகு கர்னாடக பூமி பத்தாம் பசலிப் பஞ்சாங்கமாகத் தேய ஒரு நாள் தான் பிடித்தது.

முத்தாலிக்குக்கு நாடு முழுக்க அங்கங்கே இஷ்ட மித்ர பந்து ஜனங்கள். நானே நாட்டாமை என்று சுயமாக அப்பாயிண்ட்மெண்ட் செய்து கொண்டு, ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விஷயமாகத் தேர்ந்தெடுத்து எதிர்த்தபடி அலைவது வாடிக்கையாகி விட்டது. மொழி, மதம், மாநிலம் என்ற பாகுபாட்டை எல்லாம் மீறி ஊருக்கு ஒருத்தர், மாவட்டத்துக்கு பத்து பேர் என்று உருட்டுக் கட்டையோடு திரிகிற இவர்கள் ஆணும் பெண்ணும் கலகலப்பாகப் பேசினால், சேர்ந்து பேல்பூரி சாப்பிடப் போனால் அடித்து நொறுக்குவார்கள். அண்டை நாட்டில் இருந்து அகதியாக வந்த பெண் எழுத்தாளர் பேனா பிடித்தால் கையை ஒடிப்பார்கள். இந்தக் கலாசாரக் காவலர்கள் மொத்தமாகவும் சில்லறையாகவும் நீதி போதனை செய்வதைக் குத்தகைக்கு எடுக்க முயற்சி செய்ய, ஓவியம் வரைந்தால் எரிப்பு. மைதானத்தில் பந்து விளையாட முழங்கால் தெரியும் உடுப்பு அணிந்தால் எதிர்ப்பு. கவிதை எழுதினால் ஊர் விலக்கு. பாட, நாடகம் நடத்த நாட்டாமைகளின் தடை

காதலர் தினத்துக்கு இந்த தடியெடுத்த தண்டல்காரர்களின் சிறப்பு நிகழ்ச்சி நடமாடும் கல்யாண கோஷ்டி. அம்பாசரட் காரில் ஒரு சின்ன கோஷ்டி ஊரைச் சுற்றி வரும். மந்திரம் சொல்ல ஒரு புரோகிதர். மஞ்சள் கயிறு. அட்சதை. பூ. கூடவே அண்ணாவியாக ரவாகேசரி சாப்பிட்ட நாலைந்து முத்தாலிக்குகள். இவர்கள் ஊரெல்லாம் சுற்றிச் சுற்றி சின்ன வய்து ஆணும் பெண்ணுமாக யாராவது எங்காவது பேசிக் கொண்டு நிற்கிறார்களா என்று வலைவீசித் தேடுவார்கள். கையில் மாட்டினால், பையன் கையில் தாலிச் சரடைக் கொடுத்துக் கண்ஜாடை காட்டுவார்கள். புரோகிதர் அவசர அவசரமாக மாங்கல்யம் தந்துனானே சொல்ல, கூட இருக்கும் பெண் கழுத்தில் வலுக்கட்டாயமாகத் தாலி ஏறும். ரெண்டு பேரும் தயங்கினால், தாலிக்கயறு உடனே சகோதர பாசத்தைச் சொல்லும் பாசக் கயிறாக மாறும். ‘அண்ணன்’ கையில் ‘தங்கை’ அதை அணிவிக்க ‘கட்’. தி எண்ட்.

அது என்ன ஓரவஞ்சனை? சம்பிரதாயப்படி கல்யாணம் என்று முடிவு செய்து விட்டு, புரோகிதர் மட்டும் எப்படிப் போதும்? நாதஸ்வரம், பூமாலை, அடுப்பு, பந்திப் பாய். இலைக்கட்டு. அரக்கப் பரக்க கேசரியும், உப்புமாவும் கிண்டி சுடச்சுடப் பரிமாற சமையல் கோஷ்டி. எல்லாம் கூட வேண்டாமா? அப்படியே பிள்ளைக்கும் பெண்ணுக்கும் கல்யாணத்தில் சம்மதமும். அங்கே கிடைக்கவில்லை என்றால் அகில இந்திய யாத்திரை நடத்தட்டும் இந்த சேனை. எல்லா ஊரிலும் கல்யாணம் செய்து கொள்ள காசில்லாத ஏழை ஜோடிகள் உண்டு. விருப்பத் திருமணம் ஆயிரம் செய்து வைத்தால் சொர்க்கத்தில் ரவாகேசரி கிடைக்கும் என்று தெரிகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன