தீபாவளிமலர் சிறுகதை

 

Short Story published in Amudhasurabhi Deepavali Malar 2008

கருப்பு வெளுப்பில் ஒரு படம்
***********************

நாயர்.

யாரோ கூப்பிட்டார்கள். அவனைத்தான்.

நாயர் என்று கூப்பிட்டால் திரும்பிப் பார்க்கவேண்டும் என்று இந்தப் பட்டணத்தில் குடியேறும் எல்லா மலையாளிகளையும் பழக்கியிருக்கிறார்கள். அல்லது அவரவர்களாகவே வந்த நாலைந்து நாளில் புரிந்து கொள்கிறார்கள்.

‘டீ வேணுமா, நாயர்?’

கூப்பிட்ட சின்னப் பையன் கையில் இரும்பு வளையத்தில் தூக்கு மாட்டித் தொங்கிய டீ கிளாசுகளும், அலுமினியத் தட்டில் எண்ணெய் மினுக்கோடு வடையுமாக நின்றான்.‘அப்படிப் போடு. நாயருக்கே டீயா? நீ திருநெல்வேலிக்கே அல்வா தர்ற ஆளுடா.’

முத்துப்பட்டியான் உரக்கச் சிரித்தான். நாயருக்கும் சிரிப்பு வந்தது.

இது கொஞ்சம் விநோதமான கூட்டம். தெற்குத் தமிழ்நாட்டிலிருந்து வந்து சேர்ந்த விவசாயக் கூலித் தொழிலாளர்கள், ஆந்திரா மசூலிப்பட்டிணம் கடல் பிரதேசத்திலிருந்து புறப்பட்டு வந்த மீனவர்கள், பீஹாரில் சிங்கரேணி பகுதியில் நிலக்கரிச் சுரஙகத்தில் கரி அள்ளிய அனுபவத்தோடு கிளம்பி வந்தவர்கள் என்று கிட்டத்தட்ட ஐநூறு பேர் இருக்கிறார்கள். எல்லோரும் இங்கே கட்டிடத் தொழிலில் எடுபிடிகளாக சிமிட்டியும் கருங்கல்லும் பளிங்கும் சுமந்துகொண்டு மழையில் நனைந்து உச்சி வெய்யிலில் உலர்ந்து சாரங்களில் ஏறி இறங்கிக் கொண்டிருக்கிறார்கள். நகரத்தின் வடக்கு வசத்தில் வரிசை வரிசையாக எழுந்து நிற்கும் பிரம்மாண்டமான கட்டிடங்களை அமைக்கிறவர்கள் இவர்கள். எதிரே ரயில் பாதையை ஒட்டி சிதறிக் கிடக்கிற ஓலைக் குடிசைகள் இவர்களுடையது.

‘சேட்டா, கையிலே காசு இல்லே. பர்ஸ் வெள்ளப் பொக்கத்தில் ஒலிச்சுப் போயி.’

டீ கொண்டு வந்த பையன் நாயரைப் பார்த்துச் சொன்னான். இது தினசரி நாயர் சொல்வது. எங்கே வெள்ளம், எப்போது வந்து நாயருடைய பர்ஸை அடித்துப் போனது என்றெல்லாம் யாரும் கேட்பது இல்லை. இன்றைக்கு அந்தப் பதில் வராததால் பையனே பூர்த்தி செய்தபடி வடையையும் ஒரு கிளாஸ் டீயையும் நாயரிடம் நீட்டினான்.

நாயர் கிளாஸை வாங்கினான். வடையைக் கடித்தபடி பகுதி உருவாகி முன்னால் நிற்கும் கட்டிடங்களை ஒரு வினாடி உற்றுப் பார்த்தான். கம்ப்யூட்டர் தொழில் செய்து கோடி கோடியாக வருமானம் நாட்டுக்கு ஈட்டித் தர சர்வதேச நிறுவனங்களுக்கு அந்தக் கட்டிடங்கள் தேவைப்படுகின்றன.

‘சாயந்திரம் வந்து துட்டு வாங்கிக்கறேன்.’ சொல்லியபடி பையன் நகர்ந்தான். நாயர் பக்கத்தில் வைத்திருந்த மலையாளத் தினசரியை மடக்கி வாசிக்க ஆரம்பித்தான்.

நம்பிக்கை தரும் செய்திகள் எல்லாமே. வேகமாக வளர்ந்து வருகிற நாடு. ஒன்பதரை சதவிகிதம் பொருளாதார வளர்ச்சி. தொழில் நுட்பத்தில் உலகத்துக்கே தலைமை தாங்குகிற வல்லுனர்களின் பூமி. வெள்ளைக்காரத் துரைகள் முக்கி முனகி வாயில் நுரை தள்ளிச் செய்ய முடியாமல் திணறுகிற வேலை எல்லாம் இங்கே சுளுவாக, சகாயமாக முடித்துத்தரப் பட்டுக் கொண்டிருக்கிறது.
‘சீக்கிரம் குளி நாயர். தண்ணி நின்னு போயிடும். உனக்கு அப்புறம் நான் குளிச்சுட்டு வேலைக்குக் கிளம்பணும். வெள்ளைக்காரத் துரை கட்டிடம் எம்புட்டு முடிஞ்சிருக்குன்னு மேற்பார்வை பார்க்க கிளம்பி வந்துட்டு இருக்காங்களாம்’. பக்கத்து குடிசையிலிருந்து எட்டிப் பார்த்து யாரோ முறையிட்டார்கள்.

வந்து சேர்கிற துரைகளையும் சீமாட்டிகளையும் இந்தக் கட்டிடங்களும் அவற்றில் ராவும் பகலும் கம்ப்யூட்டர் டெர்மினல்களுக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் இளைஞர் படையும் அவர்களின் தொழில் நேர்த்தியும் பிரமிப்படையச் செய்யும் என்பது நாயருக்குத் தெரியும். . பரம திருப்தி என்ற சுகானுபவத்தை அவர்கள் அடைய இடைஞ்சலாக எதிரே இந்தக் குடிசைகள் இருந்து தொலைக்கின்றன என்பதும்.

நாயர் தன் குடிசைக்குள் நுழைந்து சிகப்பு பிளாஸ்டிக் வாளியை எடுத்துக் கொண்டு குளிக்கக் கிளம்பினான். நூறு குடிசைக்கும் சேர்த்து கையாலடிக்கிற நாலே நாலு பம்ப். இறைத்து நிரப்ப, குடிசைவாசிகளே அவசரமக நிறுத்திவைத்த தகர டிரம்கள் பத்து இருபது. பத்து மாடி கட்டிடங்களுக்கு சவால் விட்டபடி தகர டிரம்மும் அழுக்குத் துணி துவைத்துப்போட்டு உலரும் கயிறுகளோடு குடிசைகளும்.

‘இந்த எழவையெல்லாம் பெயர்த்து எடுத்துக் கடாசிவிட்டு, கைநிறையக் காசோடு இங்கே வருகிற துரைகள் கண்ணுக்கு நிறைவாக பூந்தோட்டம் அமைக்கக் கூடாதா?’ நிறுவனங்கள் முறையிட்டதும் நாயர் படிக்கும் பத்திரிகையில் வந்த செய்தி.

‘நியாயம் தான்’. நிர்வாக யந்திரம் அனுதாபத்தோடு தலையாட்டியது. ‘இது தற்போது முடியும் காரியமில்லை. வேணுமானால் ஒன்று செய்யலாம். பாதை நெடுக ஓரமாக ஒரு தடுப்புச் சுவரை எழுப்பிக் குடிசைகளைக் காணாமல் போக்கி விடலாம். வறுமை ஒழிந்து விட்ட நாடு இது. வளத்தைத் தவிர வேறு எதுவும் காணக் கிடைக்காது’.

நிர்வாக யந்திரம் அளித்த தீர்வு நிறுவனங்களுக்குப் பிடித்துப் போனது.

நாயர் தடுப்புச் சுவர் பக்கமாக ஒரு டிரம்மை தள்ளிக்கொண்டு வந்து நிறுத்தினான். பம்ப்பை இரண்டு கையாலும் பற்றி அடிக்கும்போது சுவரின் அந்தப்பக்கம் இன்றைக்கு வேலை தொடர வேண்டிய பகுதியை நினைவு படுத்த முயற்சி செய்தான்.

சீனப் பெருஞ்சுவர் மாதிரி அந்தப் பெருஞ்சாலை ஓரத்துக் குடிசைகளை முழுக்க மறைத்துக்கொண்டு கிட்டத்தட்ட இரண்டு கிலோமீட்டர் தூரம் நீளும் தடுப்புச் சுவர்தான் நாயருக்கு இப்போது சோறு போட்டுக் கொண்டிருக்கிறது.

‘சுவர் மட்டும் கட்டி சிமெண்ட்டும் காரையும் வழி நெடுகத் தெரியற மாதிரி இருந்தா பார்க்கறவங்களுக்கு அலுத்துப் போயிடும். அவங்க கண்ணுலே அழகாப் படற மாதிரி சுவர் முழுக்க நல்ல படங்களை வரைஞ்சு வச்சா புதுமையாக இருக்கும்.’

நிறுவனங்களும் நிர்வாக யந்திரமும் யோசித்துப் போட்ட திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்த ஆரம்பிக்க, ஓவியம் வரைகிற சிலருக்கு உடனே வேலை கிடைத்தது. சுவருக்குப் பின்னால் அழுக்குக்கும் அசுத்தத்துக்கும் நடுவே இன்னும் சில குடிசைகள் முளைக்க, அவற்றில் குடியேறியவர்கள் தூரிகை பிடித்து பாதையோரத்தை வண்ணமயமாக்கிக் கொண்டிருந்தார்கள். நாயர் அதில் ஒருத்தன்.

நாயர் பிளாஸ்டிக் வாளியில் தண்ணீர் நிறைத்து குவளையால் நாலைந்து முறை தலையில் கவிழ்த்துக் கொண்டான். அவன் கண்கள் மூடியிருந்தன. தலையையும், முதுகையும் பேருக்கு நனைத்து காய்ந்த மண்ணில் விழுந்து உறிஞ்சப்படுகிற மெலிந்த தாரையாக விழுகிற தண்ணீர் இது. இல்லை, இது வெள்ளம். பொங்கிப் பெருகி வழிந்து காயலில் நிறைந்து நுங்கும் நுரையுமாக அலையடித்துப் போகும் வெள்ளம்.

நாயர் காயல் கரையில் நிற்கிறான். படகுத் துறை அது. கொல்லத்திலிருந்து ஆலப்புழை போகவேண்டிய அடுத்த படகு கருமாடி கிராமம் கடந்து வந்து இங்கே நிற்க இன்னும் பத்து நிமிடமாவது ஆகும். தூரத்தில் புள்ளி மாதிரி ஊர்ந்து வருவது அதுவாக இருக்கலாம். இல்லாமலும் இருக்கக் கூடும்.

‘இன்னிக்கு குழந்தையை பள்ளிக்கூடத்திலேருந்து நீ கூட்டிட்டு வந்துடறியா?’

நாயர் அம்மிணியைக் கேட்டது எந்த நாள் காலையில்?. காயலில் சின்னப் படகில் ஏறித் துடுப்புப் போட்டுத் துழாவி மகனை கருமாடியில் பள்ளிக்கூடப் பக்கம் பத்திரமாகக் கரை செர்ப்பதும், சாயந்திரம் அதே கொதும்பு வஞ்சியில் குழந்தையைத் திரும்ப அழைத்து வந்து வீடு சேர்ப்பதும் அவன் தான். அன்றைக்கு என்ன வந்தது?

ரெண்டு ஏக்கர் நெல் விளையும் பூமி, அருகிலேயே கடலிலிருந்து பிறந்து கடலில் கலக்கப் பிரவாகமாகப் பொங்கி அலையடித்து நடக்கும் காயல், கரையில் சிறு தென்னந்தோப்பு. தோப்புக்கு நடுவே குடிசையும் இல்லாமல், ஓட்டுக் கட்டிடமும் இல்லாமல் ரெண்டுங்கெட்டானாக ஒரு வீடு. அதில் மனைவி, ஐந்து வயதுப் பிள்ளை. வயலில் வேலை பார்க்கவும், காயலையும், கரையையும் ஆத்மார்த்தமாக கான்வாஸில் வரையவுமாக நிதானமாகப் போகிற வாழ்க்கை. எப்போது? எந்த ஜன்மத்தில்?

‘கொதும்பு வள்ளம் வேணாம். உன்னால அத்தனை தொலைவு துழைய முடியாது. டிரான்ஸ்போர்ட் போட்டிலே போய்க் குழந்தையைக் கொண்டு விட்டுக் கூட்டி வந்துடு. ‘

நாயர் சொன்னதை வீட்டுக்காரி அம்மிணி கேட்கவில்லை. ‘போக ரெண்டு ரூபா, வர ரெண்டு ரூபா. நாலு ரூபாயைச் சேர்த்து வைச்சா ஓணத்துக்குக் குழந்தைக்கு இன்னும் நல்லதா ஒரு சட்டையும் டவுசரும் எடுக்கலாமே.’

அவள் சின்னப் படகில் துடுப்புப் போட்டு குழந்தையோடு காயலில் போகிறபோது நல்ல மழை. குழந்தை எழுந்து தனக்கும் அம்மாவுக்குமாகக் குடை பிடித்தபடி படகில் நின்று கையசைத்துப் போனது அந்தக் காலையில்தான். கடைசியான காலைநேரம்.

நாயர் தலையில் இன்னொரு குவளை தண்ணீரை ஊற்றிக்கொண்டான். நீர் திடீரென்று மேலே மேலே பிரவாகமாக உயர்ந்தது. சுழித்துப் போகும் வெள்ளம். அது உயர்ந்து பச்சை வாடையோடு சுற்றிலும் கவிகிறது. மழையின் கனமான நீர்க்கம்பிகள் காயலின் குறுக்கே சாட்டையாக அடித்துச் சிதறி கரைபுரளும் வெள்ளத்தில் கலக்கின்றன. படகு திசையறியாது திரும்புகிறது. உள்ளே குழந்தையின் அழுகையும் அம்மிணியின் அலறலும். தண்ணீர் தலைக்கு மேலே உயர்ந்து மூச்சு முட்டுகிறது.

நாயர் குவளையை பதற்றத்தோடு எறிந்துவிட்டு குடிசைக்கு ஓடினான். ஈரத்துணியோடு மண் தரையில் குப்புறப் படுத்து விம்மினான். உடல் அதிர்ந்து குரலும் உடைந்து ஒரு நிமிடம் அழுகையாக வெடித்து அப்புறம் மௌனம்.

ஒரு மணி நேரம் கழித்து நாயர் சுவர்ப் பக்கம் அவனுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் குந்தி இருந்து வண்ணம் குழைத்தான். அவனுக்கு முன்னால் அலையடிக்கிற காயலும் கரையும் அந்திப் பொழுதில் உறைந்த ஓவியமாக விரிந்து கொண்டிருந்தது.

‘என்னய்யா இது நாலு நாளா இந்த் ஒத்தச் சுவரைக் கட்டி மாரடிச்சுட்டு இருக்கே. மத்ததிலே எல்லாம் எப்ப பொம்மை போட்டு ரொப்பப் போறே? முழுக்க முடிச்சாத்தான் இந்த வாரக் கூலி. ஆமா, இப்பவே சொல்லிட்டேன்.’

மோட்டார் சைக்கிளில் வந்தவன் நாயர் வரைந்து வைத்திருந்த்தை சிரத்தையில்லாமல் பார்த்தான். மோட்டார் சைக்கிளை நிறுத்தாமலேயே அதன் சத்தத்தோடு சேர்ந்து கூவினான் கூலிப் பணம் பட்டுவாடா செய்ய வந்தவன்.

‘உன்னைக் கட்டிக்கிட்டு மாரடிக்கறேனாம் குட்டி. அடிச்சு அழுதாச்சே ஏற்கனவே’.

படத்தில் தூரத்தில் வந்தபடி இருக்கும் படகில் கண்கள் நிலைத்தபடி சொன்னான் நாயர். மோட்டார் சைக்கிள் ஒலி தேய்ந்து மங்கி மறைந்து போனது.

கொஞ்ச நேரம் ஏதோ யோசனையில் முழுகி இருந்தான் அவன். அப்புறம் பரபரவென்று அந்தப் படத்தைத் தொடர ஆரம்பித்தான். கால்வாய் வெள்ளத்தில் இப்போது கொப்பும் குழையுமாக மிதந்து போகும் கடல் தாவரங்கள் மெல்ல முளைத்துப் படர்ந்தன. தூரத்தில் வரும் படகு இன்னும் இரண்டு கீற்று வண்ணங்களோடு சாம்பல் பின்புலத்தில் தெளிய, மழையின் வண்ணங்கள் அந்தப் பரப்பை முழுக்க ஆக்கிரமித்தன. தொட்டு முகர்ந்து குளிரக் குளிர உணர்ந்து மேலே கவியும் மழைநீரும் சுற்றி வளைக்கும் காயலின் நீர்மட்டமும் ஜீவனோடு எழுந்து வந்தன.

அதிசயமான மழை. ஆனந்தமான வெள்ளம். பயத்தை உண்டாக்கும் மழையும் காயல் நீரும் கலந்த வெளியில் ஒற்றைப் பறவை நனைந்தபடி பறக்கிறது. வரைந்து விட்டு நாயர் கேள்விக்குறியோடு அந்தப் பறவையைப் பார்த்தான்.

‘நீ எப்படி வந்தே? இந்த மழையிலே சிறகுகள் நனைய எதுக்கு வந்தே?:’

அந்தப் பறவை நாயரைப் பார்த்து நெல்மணிக் கண்ணைச் சிமிட்டியது.

‘உன் பிள்ளை அனுப்பினான் என்னை. அம்மணியும் தான் கூடவே இருந்தா. நீயும் வர்றியா? கொண்டு போய் அவங்க கிட்டே சேர்க்கறேன். படகு வேணாம். வெள்ளத்திலே நீச்சல் போட்டு கரை கடக்க வேணாம். படகு கவிழ்ந்து கண்ணுக்கு முன்னாலே உன்னோட உயிர் உருக்குலைஞ்சு நீரோட நீரா, நீர்ப்பாசியா, பச்சை பிடிச்சு ஈரப் பசையோடு பறந்து போறதைப் பார்த்து சடலமாகி நிக்க வேணாம்.’

‘சோத்துக்கார அம்மா வந்தாச்சு.’

சேர்ந்து ஒலிக்கும் குரல்கள். நாயர் திரும்பிப் பார்த்தான். சோற்றின் வாசனை புழுக்கமான பகலுக்கு வடிவம் கொடுத்துக் கொண்டிருந்தது. கூடையில் சோறும் கறியும் பூவரச இலையும் சுமந்து வந்து இறக்கியவளைச் சுற்றி அந்தக் கூட்டம்.

‘நாயர், வந்து குந்து. ஆயா அப்பாலே கறிக்கொளம்பு கலாஸ்னு பிட்டைப் போட்டுடும்.’

முத்துப்பட்டியான் நாயரைக் கையசைத்து அருகில் இருந்த வெற்றிடத்தைக் காட்டினான். வா வா என்று ஆயா பொக்கைவாயில் புகையிலைக் கட்டையைத் திணித்தபடி பிரியத்தோடு கூப்பிட்டாள். ஆறு மாதப் பழக்கத்தில் எல்லோரும் நெருங்கிய உற்றாரும் உறவினரும் ஆகியிருக்கிறார்கள்.

படகு வரவேண்டும். வந்ததும் கண்ணனைக் கையில் பிடித்துப் பத்திரமாக இறக்கிவிட்டு விட்டுப் பின்னால் குடையைத் தாழப் பிடித்தபடி அம்மணி இறங்குவாள். நாயர் அம்மிணியிடம் சொல்வான் – ‘நமுக்கு மதராசியில் ஒருபாடு பெந்துக்கள் உண்டல்லோ அவரெ ஒண்ணு காணான் போயாலோ?’

‘வா, வந்து சாப்பிடு நாயர்’. பின்னால் இருந்து குரல்கள் தொடர்ந்து அழைத்தன.

‘படகு வந்துடட்டும். அப்புறம் சாப்பிடறேன்’.

நாயர் முணுமுணுத்தபடி ஓவியத்தைத் தொடர்ந்தான். படகின் சுவர்களும், நாலு வரிசையாக உள்ளில் இட்ட மரபெஞ்சுகளும் இப்போது வடிவம் பெற ஆரம்பித்தன.

திரும்பவும் மோட்டார் சைக்கிள் ஒலி. தொடர்ந்து சீறி வரும் கார்கள் வரிசையாக வந்து நின்றன. தடதடவென்று யாராரோ இறங்கி முன்னும் பின்னும். ஓடினார்கள்.

நாயர் வரைவதை நிறுத்திவிட்டுப் பார்த்தான். தலைகள். சுவருக்கு எதிரே எழுந்து நிற்கும் நிறுவனங்களின் தலைகள். நிர்வாக யந்திரத்தை இயக்கும் தலைகள்.

‘ஆறு வழிப் பாதை இதுவரை பூர்த்தி ஆயிடுச்சு. இதுக்கு அப்புறம் நாலு லேன்லே வேலை நடக்குது. அதுவும் அடுத்த மாசம் முடிஞ்சுடும்.’

யாரோ பணிவாகச் சொன்னார்கள்.

‘அடுத்த மாசம் முடியறது இருக்கட்டும். அடுத்த வாரம் இங்கிலாந்து பிரதமர் இங்கே வரும்போது பார்க்க என்ன இருக்கும்?’

கருப்புக் கண்ணாடி போட்ட தலை கேட்டது..

‘இந்தக் கட்டிடம் எல்லாம் ரெடியா இருக்கும் சார். லேண்ட்ஸ்கேப்பிங் பண்ணி பாதை ஓரமா புல் வளர ஆரம்பிச்சு, இப்போதைக்கு பூத்தொட்டி வரிசையா நின்னிருக்கும். மெர்க்குரி, சோடியம் விளக்கு வழியெல்லாம் ராத்திரியைப் பகலாக்கிட்டு எரிஞ்சுட்டிருக்கும். சில்க் மாதிரி வழுவழுன்னு ஒரு அப்பழுக்கில்லாம ரோடு போட்டு.’

கருப்புக் கண்ணாடி சுவர் பக்கமாக வந்தது.

‘வாட் நான்சென்ஸ்? இந்த ஆள் என்ன பண்ணிட்டு இருக்கான்?’

நாயர் கையில் பிரஷ்ஷோடு எழுந்து நின்றான். சங்கோஜமாகச் சிரித்தான்.

‘படம். வேம்பநாட்டுக் காயல் இது. கேரளத்துலே ஆலப்புழை மாவட்டத்திலே இருக்கு. எங்க ஊர் கருமாடி. காயல் ஓரமா நானும் என் வீடும் புரையிடமும்’

நாயர் முடிக்கும் முன் கைகாட்டி நிறுத்தியது இன்னொரு தலை.

‘படமாய்யா இது? இது டெக்னாலஜி ஹைவே. பெருஞ்சாலை. மாடர்னா கம்ப்யூட்டர், நாகரீகமான பொண்ணுக, பசங்கன்னு யங்க்ஸ்டர்ஸ். அவங்க நிக்கற மாதிரி, நடக்கிற மாதிரி, டான்ஸ் ஆடற போஸ்லே வரைஞ்சு வச்சா போற வரவங்களுக்கு கண்ணுக்கு ரம்மியமா இருக்கும். காயலும் கண்றாவியும் யாருக்கு வேணும்?’

கருப்புக் கண்ணாடி ஆதரித்துத் தலையசைத்தது

‘நாளைக்குக் காலை வ்ரை டைம். நறுவிசா வரஞ்சு எஞ்ஜினியர் சார் சொன்னபடிக்கு இடத்தை க்ளீனா வைக்கணும். இல்லியா, நீ இன்னியோட ஏறக்கட்டிட்டு போய்க்கிட்டே இரு. இங்கே என்னய்யா கூட்டம்? போய் வேலையைப் பாருங்க. இன்னிக்கு எம்மா நேரம் ஆனாலும் முடிச்சுட்டுத்தான் போகணும் எல்லாரும்.’

எல்லா காரும் ஜீப்பும் புறப்பட்டுப் போனபிறகு மோட்டார் சைக்கிள்காரன் உத்தரவிட, சுவர் பக்கம் சாப்பிட்டுக் கை கழுவிக் கொண்டிருந்தவர்கள் அவசர அவசரமாக வேலையைத் தொடர ஓடினார்கள்.

சாயந்திரம் மங்கி சோடியம் விளக்குகள் எரியத் தொடங்கிய அப்புறமும் வேலையைத் தொடர்ந்தார்கள். முடிவு காணாது நீண்ட இரவில் நடுவில் எப்போதோ களைத்து சுவர் அருகில் படுத்து உறங்கிப் போனார்கள் அவர்களில் நிறையப் பேர்.

எழுந்து பார்த்தபோது வெயில் ஊர்ந்து மேலேறிக் கொண்டிருந்தது. டீக்காரப் பையன் குவளைகளோடு எழுப்பினான்.

‘ராத்திரி ஓவர்டைம் துட்டு கெடைக்குமா அண்ணே?’

‘ முடிதான் கிடைக்கும். அதுக்கும் கீளே சொல்ல வாய் வரல்லே விடிகாலையிலே.’

முத்துப்பட்டியான் டீக்காரப் பையனிடமிருந்து ஒரு குவளை தண்ணீர் வாங்கி வாய் கொப்புளித்துவிட்டு டீயைக் குடித்தான்.

‘இது என்ன அண்ணே?’

டீக்காரப் பையன் சுவரைக் காட்டினான்.

நாயர் வரைந்து கொண்டிருந்த படம். காயல். பொங்கிப் பெருகி உயரும் வெள்ளம். மேலே கருமேகங்கள். தாரை தாரையாக இறங்கி நீரோடு நீராக அலையடித்துக் கலக்கும் மழை. தூரத்தில் வந்து கொண்டிருக்கும் படகு. படகுத் துறை.

படகில் இரண்டு பேர் வந்து இறங்குகிறார்கள். முண்டும் ரவிக்கையும் கையில் குடையுமாக ஒரு பெண். அவள் கையைப் பிடித்தபடி, தோளில் பள்ளிக்கூடப் பையை மாட்டியபடி ஒரு குட்டிப் பையன். கழுத்துக்கு மேல் தலை காணப் படவில்லை இரண்டு பேருக்கும். சின்னதும் பெரிதுமான இரண்டு கம்ப்யூட்டர்கள் அந்த இடங்களை நிறைத்திருந்தன. காயல் பரப்பிலும் கம்ப்யூட்டர்கள் மிதந்து கொண்டிருந்தன. வானத்தில் ஒற்றை கம்ப்யூட்டர் ஈரச் சிறகுகளோடு பறந்து கொண்டிருந்தது.

நாயர்? நாயர் எங்கே?

படகுத் துறையில் நின்று தூரத்தில் கண்ணை நிலைக்க வைத்து பார்த்தபடி நாயர் நின்றிருந்தான். படத்தில் அவன் தலையும் பாதி கம்ப்யூட்டராகி இருந்தது.

Amudhasurabhi Deepavali Malar 2008

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன