குட்டப்பன் கார்னர் ஷோப்

 

‘வார்த்தை’ பத்தி

மூணரை மணிக்கு எழுந்தேன். அதிகாலைக்கு முற்பட்ட அசதியான காலை. தரையில் ஊன்றிய வலது குதிகால் போய்யா புண்ணாக்கு என்று முனகுகிறது. குளித்துத் தொழுது, ரசஞ் சாதமும் சுட்ட அப்பளமுமாகச் சாப்பாடு. தூக்கக் கலக்கத்தோடு வீட்டுக்காரி கேட்கிறாள் – உங்களுக்கே கேணத்தனமாத் தெரியலை இது?

நாலரை மணிக்கு சென்னை விமான நிலையம். தில்லி, மும்பை, கொல்கத்தா என்று எல்லா பெருநகரங்களுக்கும் போகிற முதல் விமானங்கள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் கிளம்புவதால் செக்யூரிட்டி செக் இன் கவுண்டர்களில் இரையெடுத்த மலைப்பாம்பாக நீண்டு மெல்ல நகரும் க்யூ. வரிசையில் நிற்கும் எத்தனை பேர் ரசஞ் சாதம் சாப்பிட்டு விட்டு வந்தவர்கள் என்று தெரியவில்லை. கொல்கத்தா விமானம் பத்து நிமிடம் தாமதமாகக் கிளம்புகிறது. சீட் பெல்ட், ஆக்சிஜன் முகமூடி, தண்ணீரில் மிதக்கும்போது எரியப் போகிற விளக்கு, ஊதல் பற்றி எல்லாம் விளக்க உரை முடிந்து இன்னொரு அறிவிப்பு.

பயணிகளின் சௌகரியத்துக்காக, தரமான உணவும் பானமும் குறைந்த விலைக்கு விற்கப்படும். குடிதண்ணீர் சிறிய போத்தல் முப்பது ரூபாய். வெண்ணெய் தடவிய ரொட்டித் துண்டு எண்பது ரூபாய். சமோசா அறுபது ரூபாய். காப்பி அதே விலை.

சென்னையிலிருந்து கொல்கத்தா போகிற இரண்டு மணி நேரத்தில் தாகத்துக்குக் கூட தண்ணீர் கொடுக்காத சிக்கன நடவடிக்கையில் விமானக் கம்பெனிகள் இறங்கி சில மாதங்களே ஆகின்றன. அதற்கு முன்பு, ஐந்து நட்சத்திர ஹோட்டல் சாப்பாடு சுடச்சுடப் பரிமாறிய ஹோஸ்டஸ்கள் தோளில் பையைத் தொங்கவிட்டுக் கொண்டு சமோசா எடுத்து நீட்டுகிறார்கள். வீட்டில் ரசம் சாதம் சாப்பிடாமல் புறப்பட்ட அசல் கேணையர்கள் அசட்டுச் சிரிப்போடு நூறு ரூபாய் கொடுத்து பாக்கி துட்டுக்காக அலைமோதுகிறார்கள். தண்ணிக்கு யார் காசு தர்றதாம்?

நல்ல வேளை, டாய்லெட்டில் துடைத்துப் போட பேப்பர் இன்னும் இலவசமாகத் தான் வழங்கப்படுகிறது. இதை எழுதுகிறவரை.

*****************

நூறு வருடத்துக்கு முற்பட்ட பழமையான கட்டிடங்களில் இருந்து இயங்கும் நவீனமான நிர்வாகவியல் கல்லூரி. கொல்கத்தாவுக்கே உரிய குறுகிய இரும்பு மாடிப் படிகள் சுவர் ஓரமாக கொடி மாதிரி படர்ந்து நீள்கின்றன. ஒரு கொடியைப் பிடித்துக் கடகடவென்று கீழே இறங்க, குதிகால் அதட்டுகிறது. பார்த்துடா.

சுற்றிலும் தெரிந்த புறாக் கூண்டு பாணி அறைக் கட்டிடங்கள் சிப்பாய்கள் வசிக்கும் இடம் போல் தெரிகின்றன. ஆர்மி பேரக்ஸ் தான் என்கிறார் தொளதொள ஜிப்பா அணிந்து மூக்குக்கண்ணாடி போட்ட ஸ்டீரியோடைப் பேராசிரியர். இங்கேயே குடியும் குடித்தனமுமாக மூன்று தலைமுறையாகத் தங்கி இருந்த குடும்பங்கள் உண்டு என்றும் அதில் சிலவற்றில் இருந்து நிர்வாகக் கல்லூரியில் படிக்கிற நாலாந் தலைமுறை மாணவர்கள் வந்திருக்கிறார்கள் என்றும் தெரிகிறது.

‘இண்டர்வ்யூவுக்கு எல்லாரும் ரெடி’. அவர் பற்ற வைத்த சிகரெட்டோடு நடக்கிறார். வங்காள அறிவுஜீவிகள் சிகரெட் புகை இல்லாமல் சுவாசிப்பது கஷ்டம். அக்டோபர் ரெண்டு முதல் ஒரு வர்க்கமே காணாமல் போகலாம்.

லீமன் சோதரர் வீழ்ச்சி, நச்சு செக்யூரிட்டிகள், ஏ.ஐ.ஜி ஜாமீன் எடுப்பு, சொத்து-கடன் பொருத்தமின்மை, ரெசஷன். பட்டனைத் தட்டி விட்டது போல் நிர்வாக இயல் மாணவர்கள் பதில் சொல்கிறார்கள். குறுந்தாடி புரபசர்கள் சிகரெட் குடிக்காத நேரங்களில் சங்கு சங்காகக் கரைத்துப் புகட்டி இருப்பார்கள்.

நாங்க முடிச்சிட்டு வரும்போது வேலை எல்லாம் காலி இருக்குமா சார்?

ஒரு பெண் எல்லாக் கேள்விகளுக்கும் பதில் சொன்ன பிறகு மெல்லிய குரலில் கேட்கிறாள். நம்பிக்கை வைக்கச் சொல்கிறேன். அடுத்த வருடம் இவள் படித்து முடித்து வருவதற்குள் இந்தியாவும் சீனாவும் வல்லரசுகளாக மாறி இருக்கலாம்.

வழமையான பொருளாதாரத் துறை கேள்விகளிலிருந்து தொழில்நுட்பத்துக்குத் தாவுகிறேன். எல்லோருக்கும் கம்ப்யூட்டரைத் தெரிந்திருக்கிறது. மைக்ரோசாப்ட் எக்செல் ஸ்ப்ரெட்ஷீட் உபயோகித்துத்தான் சிக்கலான மாண்டகார்லோ சிமுலேஷன் கணக்கு எல்லாம் போடுகிறோம் என்று உள்ளங்கையில் கற்பூரம் அணைத்துச் சொல்லாத குறையாகச் சத்தியம் செய்கிறார்கள். அத்தனை பேருக்கும் தலா ஒரு கேர்ள் பிரண்டோ பாய் பிரண்டோ கம்ப்யூட்டர் விற்பன்னராக உண்டு. பத்து வருடம் முன்னால் இந்த மாதிரி இண்டர்வியூக்களில் கம்ப்யூட்டர் தெரிந்த அண்ணா, அக்கா, சித்தி பெண் இப்படித்தான் உதவிக் கரம் நீட்டும் உறவுகள் இனம் காட்டப்படும். குடும்பங்கள் வலுவிழந்து போய்க்கொண்டுள்ளன.

ரெஸ்யூமேயின் கடைசிப் பத்தி பொதுவாக கண்டு கொள்ளப்படாதது. கிரிக்கெட் விளையாடுவது, சினிமாவுக்குப் போவது, சமூக சேவை (பொய்) இத்யாதி உருப்படிகள் கிரமமாக ‘பொழுதுபோக்கு’ என்ற தலைப்பில் அடுக்கப்பட்டிருக்கும். அங்கே இலக்கியம் என்று எழுதியிருந்த பெண்ணிடம் மஹாஸ்வேதாதேவி பற்றிக் கேட்கிறேன். வங்காள மொழி இலக்கியம் படித்ததில்லை என்கிறாள் அந்த பானர்ஜிப் பெண். அயண் ராண்ட் பற்றி நல்லதாக நாலு வார்த்தை சொல்கிறாள். தஸ்லிமா நஸ்ரின் பற்றி அபிப்பிராயமில்லையாம்.

பழைய சினிமா பாட்டு பிடிக்கும் என்று குறித்திருந்த ஒரு முகோபாத்யாயா பையனிடம் ‘தும் புகார் லோ’ யார் பாடிய பாட்டு என்று கேட்கிறேன். அவன் சட்டென்று எழுந்து நின்று கையைக் கட்டிக் கொண்டு உரத்த குரலில் பாட ஆரம்பித்து விடுகிறான். மின்சாரம் நிற்க சர்வமும் அமைதியான பெரிய அறை முழுக்க எதிரொலித்துக் கொண்டு ஹேமந்த் குமார் சாட்டர்ஜி குரல் மிதந்து கொண்டு வருகிறது. மூடி வைத்த வாசல் கதவு திறக்க யார் யாரோ உள்ளே பார்க்கிறார்கள். முகோபாத்யாயா முழுப்பாட்டையும் பாடி முடித்து வெளியே போகிறான். மர்மயோகிக்கான செலக்ஷனுக்கு வந்திருந்தால் அவனை நிச்சயம் தேர்ந்தெடுத்திருப்பேன்.

சாயந்திர நெரிசலுக்கு முந்தைய கொல்கத்தா. துர்க்கா பூஜை நேரம். கட்சி வேறுபாடு இல்லாமல் வசூல் செய்து பந்தல் போட்டு காளி வழிபாடு நடத்தி பத்து நாள் நகரத்தை இயங்கவிடாமல் நிறுத்திவிடுவார்கள். இன்றைக்கு முதல் நாள் என்பதால் கொஞ்சம் நெரிசல் குறைவாக இருக்கும். இருந்தது.

விமானத்தில் வேகமாக ஏறும்போது படி வழுக்கி கிட்டத்தட்ட விழுந்து. இதை படுத்துக்கொண்டே தான் எழுதுகிறேன். பேய் வலி. எழுத்து வலி நிவாரணி கூட.

(Vaarththai Nov 08)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன