சரஸ்வதி பூஜையும் ஒரு காலும்

 

ஏதோ ஒரு பக்கம் -9

சரஸ்வதி பூஜை. தி.ஜானகிராமன் தான் உடனடியாக ஞாபகம் வருகிறார்.

சரஸ்வதி பூஜையன்று எதையும் படிக்கக் கூடாது என்று சாத்திரம். ஆனால் அன்றைக்குத் தான் எதையாவது படிக்க மனம் அலைபாய்கிறது. பல்பொடி மடித்து வந்த காகிதமாக இருந்தால் கூட சரிதான்.

ஜானகிராமனின் அச்சு அசல் வார்த்தைகளில் இதைப் படிக்க அம்மா வந்தாளைத் தேடணும். இன்றைக்கு முடியாது. என் வலது கால் நான் சொல்வதைக் கேட்க மறுத்து வேலை நிறுத்தம் செய்து இன்றோடு வெற்றிகரமான ஆறாவது நாள்.

போன வாரம் ஒரு ராத்திரி கொல்கத்தாவிலிருந்து வந்து சேர்ந்து விமானம் இறங்கும்போது ஏணிப்படியில் கடைசிப் படியைப் பார்க்காமல் அவசரமாக இறங்கி, சரிந்து விழுந்தேன். கால், காலே அரைக்கால் ஆகி விட்டது.கையில் பிடித்திருந்த கே.சி.டே மிட்டாய்க் கடை மிஷ்ட்டி தொய் (இனிப்புத் தயிர்), ரசகுல்லா மற்றும் தோளில் மாட்டிய பொணம் கனத்துக்குப் பத்து கிராம் குறைச்சலான டெல் லாப்டாப் சமாசாரங்களுக்கு எந்த சேதமும் இல்லை.

இனிப்பில் சரிபாதியை மந்தவெளியில் சாக்லெட் கிருஷ்ணர் வீட்டில் சேர்த்தபோது, காரில் இருந்து கீழே இறங்கக் கூட முடியாமல் கால் ஸ்வீட் பூரி போல வீங்கியிருந்தது. தயிர் சாதத்தோடு கூட இனிப்பை பிசைந்து சாப்பிடும் அந்த இனிப்புப் பிரியருக்கான பங்கைச் செலுத்தியாகி விட்ட நிம்மதியில் என் வீட்டில் அதே ரக உறுப்பினர்களுக்கு மிச்சத்தை டெலிவரி செய்யப் பயணம் தொடர்கிறது. கலோரி பயம் இல்லாதவர்கள். மெட்டபாலிஸம் இயற்கையாகவே அதிகமான அதிர்ஷ்டக்காரர்கள். கோதுமை ரவை உப்புமா, தண்ணீர், மொட்டைத் தண்ணி மோர், சவசவ சுண்டல், இன்னும் கொஞ்சம் தண்ணி, பூங்காவில் பிரதட்சிணமாக இருபது சுற்று (ஆறு மைல்), வயிற்று எக்சர்சைஸ், சனிக்கிழமை டி-டாக்ஸ் உபவாசம் இத்யாதி இத்யாதி எல்லாம் எனக்குத்தான். எனக்கு மட்டும்தான்.

வீட்டில் லிப்டைப் புறக்கணிக்கிறேன். ஆர்க்காடு வீராசாமி சார் தயவில் எப்போது வேணுமானாலும் மின்சாரம் போய் அந்தரத்தில் இசகு பிசகாக மாட்டிக் கொள்ள வேண்டி வரும். பல வருடம் முன் ஒரு தடவை மாட்டிக்கொண்டு ‘அலுவலகம் போகும் கடவுள்’ சிறுகதை எழுதியாகிவிட்டது. பிராணன் போகிற வலியோடு அதற்கு ரெண்டாம் பாகம் எழுத முடியாது.

நின்று நின்று மாடிப்படி ஏறுகிறேன். குஷ்பு காலி செய்துவிட்டுப் போன முதல் மாடி வழக்கமான பரபரப்பு ஓய்ந்து காலியாக இருக்கிறது. எதிரே கார்த்திக் ராஜா ப்ளாட் வாசலில் காலணி மாநாடு. உள்ளே கம்போசிங் நடக்கிறதுக்கான அடையாளம். ஒரு சத்தமும் வெளியே கேட்கவில்லை. அமைதியும் அடக்கமுமான திறமைசாலி அந்த இளைஞர்.

இரண்டாம் மாடி வந்தாகி விட்டது. வீடு.

ராத்திரி தரையில் டர்க்கி டவல் விரித்துப் படுத்து, டிவியில் ‘சபாபதி’ பார்த்தபடி அசதியான தூக்கத்துக்குள் நழுவுகிறேன். வழக்கம்போல் பறக்கும் கனவு. கனவிலும் கால் வலிக்கிறது. பறந்து பறந்து 40, ரெட்டைத் தெரு வீட்டு வாசலில் மார்கழி மாதக் கோலத்துக்கு நடுவே இறங்குகிறேன். கோலத்தின் நடுவில் பரங்கிப் பூவில் கண் படிந்து திறக்க மறுத்து மென்மையான உறுத்துகிறது. அது டர்க்கி டவல் பக்கத்தில் வைத்த மொபைல் தொலைபேசி. எழுந்திருக்கணும்.

முடியவில்லை.

கால் ஒத்துழைக்க மாட்டேன் என்கிறது. கால் மட்டுமில்லை. உடல் மொத்தமும்.

எழுந்திருக்க வேணும். எப்படி?

நடக்கணும். அதுக்கென்ன அவசரம்?

முதலில் எழுந்து.

வாசல் தெளிக்கற நேரம். எழுந்து பாடத்தைப் படிச்சுட்டுப் பள்ளிக்கூடத்துக்குக் கிளம்பணம்னு கிடையாது. தூங்கிண்டே இரு. மார்க் வாங்கினா மட்டும் போறாது.

அம்மா எங்கே வந்தாள்? இப்போது என்ன மணி? விடிந்தாகி விட்டதா? கடியாரம் ராத்திரி ஒண்ணரை என்று சொல்கிறது. அம்மா இல்லை. இருபது வருடமாக இல்லை. கடியாரம் கண் முன்னால் மேஜையில் உட்கார்ந்திருக்கிறது.

கெட் அப். அப், ஐ சே. எழுந்திருடா. கெட் அப் யுவர் ரெச்சட் ஆஸ். யூ ப்ளோக். அப். கெட் அப்.

எழுந்திருப்பது எப்படி என்று எத்தனையோ வருடம் முன்பாக மூளையில் பதிந்திருந்த ந்யூரான்கள் ஒரே ராத்திரியில் அதை டெலிட் செய்து சாணச் சுருணையால் அழுத்தத் துடைத்து வெறிச்சென்று வைத்துவிட்டிருக்கலாம் – பயம் எட்டிப் பார்க்கிறது.

எழவும் நடக்கவும் இயலாமல் தவழ்கிறேன்.

ஐம்பத்தைந்து வயசுக்காரன் தவழ்கிற அபத்தத்தைப் பார்த்தபடி, அணைக்க மறந்த டிவியில் கறுப்பு வெளுப்பில் பூங்கொடி மாதிரியான கே.ஆர்.விஜயா. ‘நிலவே என்னிடம் மயங்காதே’ என்று பாடியபடி பைஜாமா ஜிப்பாவோடு மண்ணு மாதிரி நிற்கும் ஜெமினி கணேசன் பக்கம், உடலில் சாமுத்ரிகா லட்சணப்படியான த்ரிபங்க வளைவுகள் நேர்த்தியாக அமைந்த கே.ஆர்.விஜயா, இரண்டு கையும் துளிக்கூட அசையாமல் உடம்போடு கொடி மாதிரி ஒட்டிப் படர்ந்திருக்க ஒயிலாக நடந்து வருகிறார். வெள்ளைப் புடவைக்கு வெளியே நளினமாக அடியெடுத்து வைக்கிற அழகான பாதங்கள். ஜெமினி நகர்ந்து வேறு பக்கம் போகிறார். ஆனாலும் நடக்கிறார். என்னைப் போல் தவழவில்லை.

‘அஷ்வின், அஷ்வின்’. என் குரல் எனக்கே அந்நியமாக, பயம் வெளியே தெரியக்கூடாது, சத்தம் கூட்டி ஒலிக்கக் கூடாது என்ற அவசரமான சுய கட்டுப்பாடுகளோடு என் மகனைக் கூப்பிடுகிறேன். பதில் இல்லை.

அஷ்வின் மாநிலக் குழுவுக்காக விளையாட நாலு நாள் முன் தான் பட்டியாலா போனதை எப்படி மறந்தேன்?

தவழ்ந்தபடி சோபா, நாற்காலி பக்கம் நகர்கிறேன். டிவியில் ஆலயமணி சிவாஜி ஊன்றுகால்களோடு ‘சட்டி சுட்டதடா’ என்று கையை விரிக்கிறார். உமக்காவது ஊன்றுகோல் இருக்கே. எனக்கு?

வீடு முழுக்க அங்கங்கே கிரிக்கெட் kit Bag உண்டு. எத்தனை குழுக்களுக்காக அஷ்வின் ஆடுகிறானோ அத்தனை. அதில் ஒன்று கூடவா ஹாலில் இல்லை? சட்டென்று ஒன்று கையில் தட்டுப்படுகிறது. அவசரமாகத் திறக்க, thigh guard, abdomen guard, கோக்காபுரா பந்து, ரிஸ்ட் பேண்ட், துவைக்க வேண்டிய யூனிபார்ம், பெய்ல் கட்டைகள், அழுக்கான சாக்ஸ் குழப்பங்களுக்கு இடையே ஒரு கிரிக்கெட் மட்டை. அதை உருவி வெளியே எடுக்கிறேன்.

மொசைக் தரையில் வழுக்காமல் கிரிக்கெட் மட்டையைத் தரையில் ஊன்றுகிறேன். அதன் பலத்தில் எழவும் எழுந்து நிற்கவும் முடிகிறது. மெல்ல நடக்கவும் கூட.

மட்டை வைத்து விளாசி விளையாடி சிக்சர்கள், புதுசாக நைனர்கள் எடுக்கிறவர்கள் எடுக்கட்டும். எனக்கு அது செண்டிமீட்டர் செண்டிமீட்டராக ஊர்ந்து நடக்க ஒரு துணை. அவ்வளவுதான்.

காலையில் மருத்துவமனை. டெண்டான்கள் கொஞ்சம் பிசகியிருப்பதால் இன்னும் ஒரு வாரம் போல் ஊர்ந்தபடி வலம் வரச் சொல்கிறார் டாக்டர். அப்புறம் வென்னீர் சிகிச்சை. உப்புப் போட்ட வென்னீரில் காலை அமிழ்த்தி வைத்திருக்க வேணும்.

அப்படியே ஆபீஸ் போகிறேன். காலையில் சிக்கனமாக வாக்கிங் கூட. நடேசன் பூங்காவில் யோகாச்சார்யார் டி.கே.ராமகிருஷ்ணன் ‘ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணிக்கறது தப்பு’ என்று அறிவுரைக்கிறார். எண்பது வயது இளைஞர். வழக்கம் போல் ‘நீங்க பாடலாசிரியர் வாலிதானே’ சார் என்று அவரை யாரும் இன்று விசாரிக்காதது அதிசயம்.

இன்றைக்கு விடிந்ததும் ஆவி பறக்க சூப் போடும் பதத்தில் வென்னீரோடு வந்து மனனவி வலுக்கட்டாயமாக என் காலை அதில் அமிழ்த்துகிறாள். மிஷ்டிதொய் சாப்பிட்டு வந்த வலு. என் அலறல் அவள் காதில் விழாமல் டிவியில் வேளுக்குடி கிருஷ்ணன் அர்ஜூன விஷாத யோகம் சொல்லிக்கொண்டிருக்கிறார்.

கால் வலிச்சால் என்ன செய்யணும் கிருஷ்ணா?

பிரம்மஹத்தி. ஒரு படிக்கட்டு இறங்க துப்பு இல்லே. அஞ்சரைக் கழுதை வயசாயிடுச்சு. என்னைப் பாரு. தாவிய சேவடி சேப்பத் தம்பியொடும் கான்போந்து.

இந்த வென்னீரில் இன்னும் பத்து நிமிஷம் கால் இருந்தால் எனக்கும் சேவடி சேப்பக் கொப்பளிச்சுடும்.

உளறாதேங்கோ. கையைக் காலை வச்சுட்டு சும்மா ஆபீஸ் போய்ட்டு வராம, கொல்கத்தா போகலேன்னு யார் அழுதா?

போகலேன்னா மிஷ்டி தொய் எங்கேயிருந்து வரும் என் அன்பே?

இன்னிக்கு எங்கேயும் சுத்தக் கிளம்பிட வேண்டாம். ஏற்கனவே ப்ளைட் இறங்கத் தெரியாமல் காலைச் சுளுக்கிண்டு வந்து சேர்ந்தாச்சு. எனக்கு ஆபீஸ் லீவு. நான் ஒரு துரும்பையும் நகரத்தப் போறதில்லை. உங்களுக்கும் லீவு தானே? சும்மா விவித்பாரதி கேட்டுண்டு இருங்கோ. இல்லே லாப்டாப்பை மடியிலே வச்சுக் கொஞ்சிண்டு கிடங்கோ. சரஸ்வதி பூஜை. அதையும் இதையும் படிக்கறதை எல்லாம் சாவகாசமாக நாளைக்கு வச்சுக்கலாம்.

சரி, சாப்பாடு?

அதது தானே வந்துடும். உங்களுக்கு என்ன கவலை?

இன்றைக்கு எழுத வேண்டும். படிக்காவிட்டாலும் எழுத நிறைய இருக்கிறது.

(யுகமாயினி நவம்பர் 2008)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன