புது நாவல் : அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 28 இரா.முருகன்


பாகம்பிரியாளூர் பஞ்சாபகேச சிரௌதிகள் அவருக்குப் பழக்கமான தினசரி கடமையில் லயித்திருந்தார்.

வால்மீகி ராமாயணத்தில் இருந்து தினசரி விடிந்ததும் ஒரு அரை, காலே அரைக்கால் ஸ்லோகம் எடுத்து வைத்துக் கொண்டு அதை விஸ்தாரமாக ஒரு மணி நேரம் சொல்வார் அவர். சில நாள் ஒரு ஒற்றை வரி மட்டும் இப்படி எடுக்கப்பட்டு வால்மீகி சொன்னது, பவபூதி சொன்னது, தெலுங்கில் ஒருத்தர், மலையாளத்தில் இன்னொருத்தர், உருது ராமாயணம், எல்லாத்துக்கும் மேல் பஞ்சாபகேசனின் சொந்த சிந்தனையில் வந்தது என்று ஒரு மணி நேரம் விடாமல் பொழிந்து நிறுத்துவார். அவர் வீட்டுத் திண்ணையில் தவறாது நடக்கும் சுபநிகழ்ச்சி இது.

முப்பது வருஷம் தினமும் இப்படி அசுர சாதகமாகத் தொடர்ந்து ராமாயணம் சொல்லிப் பட்டாபிஷேகத்தில் முடிக்கத் திட்டம். ஆரம்பித்து எட்டாவது வருடத்தில் இருந்தார் அவர்.

அரசூர் சிவன்கோவில் தெற்குத் தெருவும், ஜில்லாவும், பாரத கண்டமும், அகில உலகமுமே அந்த நித்தியச் சொற்பொழிவுக்காக தினசரி காத்துக் கொண்டிருக்கிறதாக ஐதீகம்.

ராமாயணத்துக்கு ஊரில் அங்கங்கே அடியார் இருந்தாலும், தினசரி விடிகாலையில் ராமாயணப் பிரசங்கம் இன்னும் முப்பது வருஷம் கேட்க வேண்டும் என்ற எதிர்பார்ப்ப்பு அவர்களைத் தர்மசங்கடத்தோடு விலக்கியே வைத்தது. ராமாயணம் என்று இல்லாவிட்டாலும், பஞ்சாபகேசன் என்ன பிரசங்கம் செய்தாலும் புளகாங்கிதமடைந்து கேட்க அங்கே ரெண்டு மூன்று பேர் வாய்த்தது சிரௌதிகளின் அதிர்ஷ்டம் காரணமாக அமைந்து போனது.

இவர்கள் கேட்க வந்தவர்களிடம் ராமாயணம் ஆரம்பிக்கும் முன்பாகவே வரப் போகும் பேச்சை சிலாகித்து, தட்சணையாகக் குறைந்த பட்சம் ஒரு தேங்காயாவது கொடுத்துப் போக வைக்க முயற்சி செய்வார்கள். சில அழுகுணிகள் அம்மா திவசத்துக்குப் புறப்பட்டது போல ஒற்றை வாழைக்காயோடும் தர்த்தியான இளிப்போடும் வந்து நிற்கும்போது ஸ்லோகம் சொல்லி ஒற்றைக் காயை ரெண்டாகப் பாவிக்க வைத்து வாங்கிப் போடுவதும் இவர்களே.

வராதவர்களைத் தெப்பக்குளக் கரையிலோ, பஜாரிலோ தோளைப் பிடித்து நிறுத்தி நைச்சியமாக ஆரம்பிப்பார்கள் இந்த சிஷ்ய கோடிகள் –

இன்னிக்கு ராமன் காட்டுக்குப் போறேன்னு சொல்றது. சிரௌதிகள் ராமன்னு சொன்னதுமே எல்லாரும் அழுதாச்சு. அவரும் கூட அழறார். காலையிலே அழலாமான்னு கண்ணைத் தொடச்சிண்டு ராமன் தாயாரிடத்திலே அம்மா, நான் காட்டுக்குப் போறேன் நீ அழாதேன்னு சொல்றான். ஆஹா. நீ வராம போய்ட்டியே.

பிடிபட்ட பேர்வழி முகத்தில் எந்த பாவமும் காட்டாமல் அமுக்குப்புளி போல நிற்பான். அப்படியே அசங்காமல் இருந்தால் அடியார் பிடியில் இருந்து சீக்கிரமாகத் தப்பித்துப் போய்விடலாம் என்று நப்பாசையே காரணம்.

என்ன சம்ஸ்கிருதம். என்ன ஸ்லோகம். மிரட்டறாராக்கும் பஞ்சுவண்ணா. புராணம் கேட்டால் அதி புண்ணியம்னு கைவல்ய நவநீதம் சொல்றது. இல்லே நரகம் தான்.

இருட்டில் தனியாக அற்ப சங்கை தீர்த்துக் கொள்ளக் குத்தவைப்பதற்கும், நரகத்துக்கும், வௌவால், எலி, கரப்பு போன்ற துஷ்ட ஜந்துக்களுக்கும் பயப்படுகிறவனாக இருந்தால் ஆழாக்கு அரிசியும் அரிசி மூட்டைக்குள் பழுப்பதற்காக அழுத்தி வைத்திருந்த வாழைத்தாரில் பிய்த்த மஞ்சளோடிய ரெண்டு வாழைக்காயுமாக அடுத்த தினம் காலையில் தலைகாட்டுவான் பிடிபட்டவன்.

அவன் திரும்பப் போகும்போது ராமன் வாசல் படிப்பக்கம் நின்று காட்டுக்குப் போகிறேன் என்று பஞ்சாபகேசனின் குரலில் சொல்வான். இன்னும் ஒரு வாரம் அவர் அயோத்தி அரண்மனைக்குள்ளே கண்ணில் படுகிற நெருங்கிய சொந்தம், விருந்தாளிகளாக வந்த தாயாதி பங்காளிகள், வேலைக்கு வந்தவர்கள், அந்தப்புரச் சேடிகள், புழங்கும் வஸ்துக்களான சந்தனம் அரைக்கும் கல், பாயசம் கொண்டு வந்த மூடி போட்ட தாமிரப் பாத்திரம், தென்னோலை விசிறி என்று சகலமானவர்களிடம், சகலமானதிடத்திலும் தன் தீர்மானத்தைச் சொல்வான். நித்தியப்படி கர்மம் இது.

கடைவீதியில் வழி மறிக்கப்பட்டவன் கொஞ்சம் வாய் சாலகம் உள்ளவன் என்றால் அடிப்பொடிகளைக் கேட்பது உண்டுதான் –

ஏன் ஸ்வாமி, வாத்தியார் முப்பது வருஷமாவா ராமாயணத்தைத் தினசரி சொல்வார்?

ஆமா. அப்படித்தான். அப்புறம் அவர் வாத்தியார் இல்லை. பண்டிதர்களுக்குச் சக்ரவர்த்தி. மகோன்னதமான பண்டிதர்.

அப்படியென்றால் சரி. சாஸ்திரிகள் முப்பது வருஷமா ஒரு திவசம் முடங்காமல் கதை சொல்லட்டும். எள்ளுப் போட்டால் எள்ளு விழாத பக்த ஜனக்கூட்டம் நிரம்பி வழியட்டும். ரொம்ப சந்தோஷமான விஷயம் தான் இது.

சாஸ்திரிகள் இல்லை. அதுக்கும் ரொம்ப மேலே உள்ள ஞானஸ்தர். தேசத்திலே, லோகத்திலேயே ரெண்டு பேர் தான் இப்படி. இவர் ஒண்ணு. ஆஸ்திரேலியாவிலே இன்னொருத்தர் இருக்கார்னு பேச்சு. அதீத புத்திமான். இவர் காலத்திலே நாம இருக்கறதே நமக்கு கிடைச்ச அதிர்ஷ்டம். அப்புறம், திவசம் எள் என்றெல்லாம் நல்ல காரியம் பற்றிப் பேசும்போது சொல்லாதீர், சரியா?

ஐயோ நான் மலையாளக் கரையில் பெண் எடுத்தவனாதலால் இப்படிப் பேச வந்தது. நாளைக்கு கோர்ட்டில் அமீனா உத்தியோகத்துக்குப் போகும் முன்பாக, தோட்டத்தில் விளைஞ்ச பறங்கிக்காய் சகிதம் ராமனைக் குசலம் விசாரிக்க வரேன். மகா பண்டிதர் ராமாயணத்தை தாராளமாக முப்பது என்ன, நாற்பது, ஏன், ஐம்பது வருஷம் தினசரி சொல்லட்டும். என் நமஸ்காரம். அவர் மங்களகரமாகப் பட்டாபிஷேகத்தில் முடிக்கும் போது நான் ஜீவித்திருந்தால் இன்னொரு நமஸ்காரமும் வாழைக்காயுமாக வருகிறேன்.

சில கல்லுளிமங்கன்கள் முகத்தை இறுக வைத்துக் கொண்டு சொல்வதோ வேறு தினுசாக இருக்கும் –

என் மாமியார் செத்ததில் இருந்து திவசத்தன்று தவறாமல் ராமாயணத்தைக் கேட்க ஐந்து நிமிஷமாவது தலைகாட்டி விட்டு, ஒரு ரூபாய் தட்சணையும் தட்டில் போட்டுத்தானே போறேன்? வேறே யாரும் போனாலும் வரலாம் தான். போகலியே?

இதுக்காக அவனைக் கண்டிப்பதா, சும்மா விட்டு விடுவதா இல்லை ஆதரவாக நாலு வார்த்தை சொல்வதா என்று யோசிப்பதற்குள் போயொழிந்திருப்பான்.

இன்னும் துடுக்கான பேர்வழி என்றால் பஞ்சாபகேசன் மகாபாரதத்தையும் தினசரி இப்படி இன்னொரு நூறு வருஷம் பிரவசனம் செய்யலாமே. அரசூரில் தான் சாவு என்பதே இல்லாமல் போனதே. ச்ரௌதிகளுக்கும், மகாபாரதத்துக்கும் அடியாருக்கும், எல்லாம் தீர்க்காயுசாச்சே என்று கேள்வி போடுவதும் உண்டு தான்.

அடிப்பொடி அடிப்பொடியாக இருப்பதால் இந்த மாதிரியான விதண்டாவாதங்கள் எல்லாம் முகச் சுளிப்பும் அசடர்களை அருளாலும் கசடர்களைக் கருணையாலும் எல்லாரையும் பயத்தாலும் ஆட்கொண்டு புராதன தத்துவ மெய்ஞான தரிசனம் கிட்டச் செய்யும் அவசரமுமாக எதிர்கொள்ளப் படும். எதிராளி தோளை இறுகப் பிடித்து இதோபதேசமாக வருவது இந்த மாதிரி இருக்கும்-

ஓய் அவர் ஐம்பது வருஷமும் சொல்வார். நூறு வருஷமும் சொல்வார். அனுமதி கொடுக்க நீர் யாராக்கும்? வந்தால் வாரும். இல்லாவிட்டால் வேடிக்கையும் விநோதமுமாக பாட்டும் லச்சை கெட்ட கூத்துமாகக் கிடந்து ஒழியும். இன்னும் நாலு மாசத்தில் சனி வக்கரிக்கும்போது நல்ல வார்த்தை கேட்காத எல்லோருக்கும் மகா கஷ்டமாம். நம்ம ச்ரொதிகளுக்கோ, நேப்பாள மகாராஜா வல்லவெட்டு கட்டி, வெள்ளித் தேங்காய் கொடுத்து வெள்ளைக் குதிரையில் ஏற்றிப் பவனி வரும்படிக்கு மரியாதை செய்யப் போகிறார் அப்போ நீரும் உம் போன்ற அதிகப் பிரசங்கிகளும் மூஞ்சியை எங்கே வைப்பீர்? பிழைத்துப் போம்.

நேப்பாள மகாராஜா அதெல்லாம் செய்யட்டும். எனக்கு ஒரு நோப்பாளமுமில்லை என்று சொல்ல ஆள் இருக்காது. அவன் ஓடி ரட்சைப் பட்டிருப்பான்.

இன்றைக்கு அடியார்களுக்குச் சொல்ல இன்னொரு புண்ணியச் சேதியும் உண்டு.

அரசூரில் சாவு அஸ்தமித்துப் போனதா?

இந்தக் கேள்வியே தலைப்பாக ஆங்கிலப் பத்திரிகையில் வந்த கட்டுரையைப் படித்து அமெரிக்காவில் இருந்து யாரோ அரசூருக்கு வருகிறார்களாம். அவர்கள் முக்கியமாகப் பேசப் போவது ச்ரௌதிகளோடு என்று தகவல் வந்தாச்சாம்.

குளித்து, மடி வேட்டியும் அங்கங்கே நைந்த பட்டுத் துண்டுமாகப் பிரதி தினம் உதயம் ஏழு மணிக்கு வீட்டுத் திண்ணையில் கிழக்குப் பார்த்து உட்கார்ந்து பஞ்சாபகேசன் ராமாயணம் சொல்ல ஆரம்பிப்பது வழக்கம். முன்னால், ஆகாசம் வெளிவாங்கின வெக்கையை கிளப்பும் சாதாரண தினத்தில் நாலு பேரும், மழை நாளில் ரெண்டு பேரும் மட்டுமே இருக்க அவர் யார் எவர் என்றெல்லாம் சிரத்தையில் போட்டுக் கொள்ளாமல் கட்டைக் குரலில் ஆரம்பித்து விடுவார்.

இன்றைக்கு திண்ணையில் இல்லை அவர். வாசலில் அவசரமாகப் போட்ட தென்னோலைப் பந்தலில் நிலம் தெளித்து வரி வரியாகக் கோலம் போட்டு அதன் நடுவிலே பாந்தமாகச் செம்மண் பூசியிருக்கிறது.

அந்துருண்டை மணக்கிற பட்டு வேஷ்டி இடுப்பில் நிற்பேனா என்கிறது. ரொம்ப நாள் மடித்தே இருந்ததால் வேட்டியின் முனைகளும் மடிப்புகளும் துருத்திக் கொண்டு தெரிகின்றன. எட்டு மாதம் முன்பாக விஜயதசமிக்கு பூஜை செய்ய உட்கார்ந்தபோது பானகம் சிந்திய கரை மடியில் தெரிகிறது. வேஷ்டியோடு அப்போது பகல் சாப்பாட்டுக்கு உட்கார்ந்தபோது குழம்பு வேறு பட்ட இடத்திலேயே திரும்பப் பட்டு கரையை இன்னும் விகாரமாக்கி இருக்கிறது.

துவைத்தால் கரை அநேகமாகப் போய் விடலாம். ஆனால் இப்போது இல்லை. ராம பட்டாபிஷேகத்தின் போது அதைப் பார்த்துக் கொண்டால் போதுமானது.

பஞ்சாபகேசன் ஓடுவதற்கு ஆயத்தம் செய்கிறது போல் கவிழ்ந்து உட்கார்ந்திருந்த ஆசனத்தைப் பார்த்தார்.

அடிக்கடி நகர்ந்து போய் அவர் எக்கிக் கீழே திணித்துக் கொள்ளும் கட்டைப் பலகை இல்லை ஆசனமாக. கோவிலில் அவசரமாகக் கடன் வாங்கி வந்து கிழக்கு நோக்கிப் போட்டிருக்கிறது தாமரைப் பூ விரித்த மாதிரி தரையிலிருந்து அரை அடியில் நிற்கிற ஆசனம். திருவாதிரைக்கு அதில் உட்கார்ந்து தான் தலைப்பா கட்டிய ஓதுவார் திருப்பாவை இருபதும் திருப்பள்ளி எழுச்சி பத்தும் பாடி ஒவ்வொரு பாட்டுக்கும் நிறுத்தி தீபாரதனை எடுக்கிற பழக்கம்.

கீகடமான அந்த ஆசனத்தில் எப்படி வருஷா வருஷம் நல்லசிவ ஓதுவார் உட்கார்ந்து பொறுமையாக முப்பது பாட்டு பாடி வெண்பொங்கல் மரியாதையோடு போகிறார் என்று பஞ்சாபகேசனுக்குப் புரியாவிட்டாலும் ஒன்று மட்டும் நிச்சயமானது. இந்த ஆசனத்தில் தினசரி உட்கார்ந்து தான் ராமாயணம் சொல்லணும் என்று சர்க்காரோ மற்ற யாரோ விதித்தால், சூர்ப்பனகை வருவதற்குள் பஞ்சாபகேசனுக்கு எமன் வந்துவிடலாம். ஊரோடு சாவு திரும்பி வருவதாக சூசனை கொடுத்தபடி மயில்கள் பின் நோக்கிப் பறக்கிற காலமாக இருக்கும் அது. அல்லது தாழப் பறக்கிற கழுகள் வட்டமிட இருட்டு நகர்ந்து போகிற தெருக்களாக அரசூர் வீதிகள் தட்டுப்படும்.

மனசில் எழுந்த இந்தச் சித்திரம் உள்ளபடிக்கே பஞ்சாபகேச ச்ரௌதிகளுக்கு இஷ்டமாக இருந்தது. யாராவது மஹாகவி, மஹரிஷி சொன்னதாக முன்பாரம் பின்பாரமாக ஏதாவது உபநிஷத்தில் இருந்து ரெண்டு ஸ்லோகம் சொல்லி நடுவில் கனமான அர்த்தமாக இதை வைத்து விளம்பி விடலாம். சாவு பயத்தோடு இருந்த தசரதனுக்கு அரண்மனை புரோகிதர் சொன்னதாக வைத்துக் கொள்ளலாம். வால்மீகி ராமாயணப் புத்தகத்தை தூசி தட்டி முகர்ந்து பார்த்த ஒருத்தனாவது இங்கே இருப்பதாக அவருக்கு நினைவில் இல்லை.

வழக்கத்துக்கு மாறாக ஐம்பது அறுபது பேர் வந்து காத்திருந்த பந்தலில் அவர் நிறையக் குரலை உயர்த்தி தியான சுலோகம் சொல்லி முடித்ததும் மனசில் சரஞ்சரமாக யோசனை. சோவியத் ராக்கெட்டில் ஒரு நாயும், அப்புறம் யூரி ககாரிதன்னு ஒரு விஞ்ஞானியும், அதானே பேரு, இல்லே யூரின் ககாரினா? போறது ஒரு எழுத்து ரெண்டெழுத்து கூடக் குறைய ஆனா என்ன கேடு வரப் போறது. அப்புறம் அந்தப் பொம்மனாட்டி ராக்கெட்லே போனாளே தெரண்டுகுளின்னு பேரு வருமே. வேண்டாம். பேரைச் சரி பார்க்க நியூஸ் பேப்பரைக் கொண்டான்னு காத்திருக்க முடியாது. நியூஸ்பேப்பர் பாத்துட்டுத்தானே அமெரிக்க தேசத்துலே இருந்து வரப் போறா.

அடுத்த பத்து நிமிஷத்தில் ரஷ்ய ராக்கெட், புஷ்பக விமானம், றெக்கை மொளைச்சுப் பறக்கும் கந்தர்வர்கள், ரஷ்ய ராட்சசர்களுடைய ராக்கெட்டில் உக்காந்து குண்டு போடப் போன ககாரிதன். அசுரர்களோட யுத்தம் பண்ண ஆசிர்வாதம் வாங்கியிருக்கற அமெரிக்க ஜனங்கள் இப்படி வரப் போகிற வெள்ளைக்காரர்களுக்காக ஒரு எதிர்பார்ப்பை ஏற்படுத்த ராமன் காட்டுக்குப் போவதை இன்னும் கொஞ்சம் தள்ளிப் போட்டான். அவன் ஓரமாகக் கூட்டத்தோடு கூட்டமாக நின்றான்.

ஏழே முக்கால் மணி ஆன போதும் அமெரிக்காக்காரன் வருகிற வழியாகக் காணோம். சிஷ்யகோடிகள் தெருமுனைக்கு ரெண்டு மூணு தடவை பொறுமையில்லாமல் நகர்ந்ததையும் அதில் ஒருத்தன் அங்கேயே குத்த வைத்துச் சங்கை தீர்த்து கை அலம்பாமல் கூட்டத்தில் திரும்பக் கலந்து நின்றதையும் பஞ்சாபகேசன் கவனிக்கத் தவறவில்லை.

கூட்டமாக இருக்கிற நேரத்தில் அயல்நாட்டான் வந்தால் இங்கே வாழைக்காயும் கத்திரி, வெண்டையும், அரை ஆழாக்கு அரிசியுமாக வந்திருக்கிற பெண்டுகளுக்கும், அரை ரூபாய், ஒரு ரூபாய்க்கு அதிகப்படாத தட்சிணையை காசாகக் கொண்டு வந்திருக்கும் புருஷர்களுக்கும் பஞ்சாபகேசன் யாரென்று மனசில் அழுத்தமாகப் பதியும். தினசரி ராமாயணம் அதுவும் முப்பது வருஷம் நாள் தவறாமல் சொல்வது சாதாரணப் பட்ட விஷயமா? இத்தனை நாள் இவர்கள் காட்டிய உதாசீனம், வெள்ளைக்காரன் தினசரி ராமாயணம் பற்றி விசாரிக்கும் போது மாறும். அவன் விசாரிப்பான். இல்லாவிட்டாலும் இவர் சொல்வார்.

முடிய இன்னும் ஐந்து நிமிஷமே பாக்கி என்றானபோது அயோத்தித் தெருவில் நடக்கிற ராமனைக் கொண்டு வந்து கொஞ்சம் நீட்டலாமா என்று யோசித்தார் பஞ்சாபகேசன். ஒவ்வொரு தெருவும் ஒரு மாதிரி – நால்வர்ணத்துக்கும் ஏற்பட்ட உடுப்பு, ஆபரணம், பேச்சு, ஆகாரம் என்று ஒவ்வொன்றாகச் சொல்லி ராமனைத் தெருவோடு நீள நடக்க வைக்கலாம்.

தெருமுனையில் ஒரு ஜட்கா வண்டி தட்டுப்பட்டது. அது ச்ரௌதிகள் வீட்டு வாசலுக்கு வந்து நிற்க ரெண்டே நிமிஷம் தான் ஆனது.

வெள்ளைக்காரர்கள். சின்னதாக பெட்டிக் கேமிராவும் கையில் சுருட்டிப் பிடித்த நோட்புக்கும். அவ்வளவுதான் கட்டிக் கொண்டு வந்த சொத்து. பெரிய பெரிய டேப்ரிகார்டர், விளக்கு, உசரமான ஸ்டாண்டில் பிரதிஷ்டை செய்ய வேண்டிய காமிரா, குச்சி கட்டின மாதிரி நீண்ட மைக் – எதுவும் இல்லை அவர்களிடத்தில்.

ஆனால் என்ன, வெள்ளைக்காரர்கள்.

அரசூர் அரண்மனையில் ஜமீந்தார் மருதையரோடு பேசியதில் நேரமாகி விட்டதாக அவர்கள் அறிவித்ததையும் அதற்காக மன்னிப்புக் கோரியதையும் கூடவே நின்ற ஒரு மதுரைக்காரர் மொழி மாற்றிச் சொன்னார். அவர் மருதையனின் கூட காலேஜில் ப்ரபசராக வேலை பார்த்தவர் என்றும் சொல்ல, ச்ரௌதிகள் சங்கடமாகப் புன்சிரித்தார். இவன்கள் தனியாக வந்திருந்தால் தன் போக்கில் நாலு வார்த்தை சொல்லி, வேண்டப்பட்டவர் மூலமாக சாதகமாக வெள்ளைக்காரன் மனசில் பதிய வைத்திருக்கலாம். இந்த மதுரைக்கார புரபசர் எல்லாத்திலும் மூக்கையும் இங்கிலீஷையும் நுழைத்து வேலையைக் கெடுத்து விடுவார்.

என்ன ஆனாலும் சரிதான் என்று மயில்கள் பறந்ததிலும், சாவு அற்றுப் போனதிலும், சம்ஸ்க்ருதத்தில் பழைய கிரந்தங்களில் மயிலுக்கும் சாவுக்கும் சம்பந்தம் இருப்பதைச் சொல்வது பற்றியும், அவர் ராமாயணத்தை எட்டு வருஷமாகச் சொல்லி வருவதையும் காட்டுக்குப் போய்க் கொண்டிருக்கிற ராமனுக்கு இன்னும் இருபத்திரெண்டு வருஷத்தில் பட்டாபிஷேகமாகும் என்றும் லோகத்தில் தன்னைத் தவிர இப்படி அசுர சாதகமாக முப்பது வருஷம் கதை சொல்லவில்லை என்பதையும் அதிவிநயமாகத் தெரியப் படுத்தினார். கூட வந்த மதுரைக்கார புரபசர் இதில் எத்தனை சதவிகிதம் துரைகள் காதில் விழ வகை செய்தாரோ, ஈஸ்வரனுக்கே வெளிச்சம்.

அவருக்குச் சட்டென்று நினைவு வந்த எப்போதோ வேத பாடசாலையில் உருப்போட்ட காளிதாசனின் ரகுவம்சம் காவிய வரிகளைச் சம்பந்தமில்லாமல் சொல்லி அப்படியான பாரத தேசம் என்று தேசபக்தி மூலமும் அப்படியான ராமன் என்று காவிய ரூபமாகவும் வெள்ளைக்காரர்கள் மெச்ச சம்பந்தம் உண்டாக்க முற்பட்ட போது தெருமுனையில் திரும்ப வண்டிச் சத்தம்.

இந்தத் தடவை அது பேரிரைச்சலாக இருந்தது.

அரசூர் ரயில்வே ஸ்டேஷனில் வழக்கமாக நிற்கிற ஐந்து வண்டியும் நிரம்பி வழிய ஐந்துமே இங்கே வந்து நிற்க, இறங்கினவர்களைப் பார்த்து பிரசங்கம் கேட்க வந்தவர்கள் உற்சாகமானார்கள்.

காசிக்கு போனவர்கள் வந்து விட்டார்கள். அவர்கள் கொண்டு வந்திருக்கும் கங்கைத் தண்ணீரையும், வடக்கத்திக் கோவிலில் தரும் அசட்டுத் திதிப்புப் பொறி பிரசாதத்தையும் எதிர்பார்த்து வண்டிப் பக்கம் போய் நின்றார்கள் எல்லோரும்.

ஆலாலசுந்தரம் மௌனமாக இறங்கினார். லோகசுந்தரிப் பாட்டி ஹரித்வாரில் உயிரை விட்ட தகவலைத் தெரியப் படுத்தினார். எப்போ எப்படி என்று சத்தம் உயர்ந்தது. பதில் வந்து சேர்ந்த எல்லோராலும் கொஞ்சம் கொஞ்சம் சொல்லப்பட்டு முழுமைப் படுத்தப் பட்டுக் கொண்டிருந்தது. பஞ்சாபகேசன் விஷயம் என்ன என்று தெரிய அடியார்களைப் பார்த்தார். அவர்கள் புதுசாக வந்த சாவுச் செய்தியின் பரபரப்பில் இருந்ததால் அவர் பக்கமே திரும்பவில்லை.

பந்தலில் மீதி இருந்த நாலைந்து பேரும் சுவாரசியம் கருதி இப்போது மற்றவர்களோடு கலந்து வெளியே வந்து நின்றார்கள். பஞ்சாபகேச ச்ரௌதிகள் வந்த வண்டிகளையும் வெளியே குவிந்த கூட்டத்தையும் பார்த்து கொண்டிருந்தார்.

ஒரு நிமிடம் தாமதித்து விட்டு ராமன் அரண்மனைக்கு வெளியே நடக்க ஆரம்பித்தான்.

வெள்ளைக்காரர்கள், மொழிபெயர்க்க வேண்டாம் என்று சொல்லி விட்டுக் கேட்டபடி இருந்தார்கள்.

(தொடரும்)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன