புது நாவல்: அச்சுதம் கேசவம் : அத்தியாயம் 26 இரா.முருகன்

பாண்டேயைப் பார்க்காம பல்லுலே பச்சைத் தண்ணி படாது.

லோகசுந்தரிப் பாட்டி ஹரித்துவார் ரயில்வே ஜங்க்‌ஷனில் இறங்கியதும் அறிவித்து விட்டாள்.

மாமி, இங்கே இருக்கப்பட்டவா எல்லாருமே பாண்டேக்கள். புரோகித வம்சம் தான். ஒருத்தனுக்கும் இன்னொருத்தனுக்கும் வித்யாசமெல்லாம் கிடையாது. பணம் பிடுங்கறது தான் எல்லோருக்கும் பொது அதர்மம். வைதீகாளே அப்படித்தானே.

எல்லாம் தெரிந்த தோரணையில் ஆலாலசுந்தரமய்யர் மூக்கை நுழைக்க, பாட்டி அவரை முறைத்தாள்.

தெரிஞ்ச விஷயம்னா சொல்லுங்கோ. பாண்டே புரோகிதன்னு ஒரு வம்சமும் இல்லே. அதை முதல்லே தெரிஞ்சுக்குங்கோ. பாண்டேன்னாலே பாண்டித்யம் மிகுந்தவர். பண்டிட்னு சொல்றாளே. அது தான் வம்சத்துப் பெயர்.

ஆலாலசுந்தரமய்யர் மூக்கை அம்மிக்கல்லில் வைத்து அரிவாள்மணையால் ஆழமாக அறுத்து எறிந்து விட்டாள் பாட்டி. அவர் அப்புறம் வாயைத் திறக்கவே இல்லை.

யாத்திரை கோஷ்டி அதுவும் மதராஸி பாஷை பேசுகிற வயோதிகர்கள் என்று நோட்டமிட்டு, தரகர்கள் அரசூர் குழுவினரை உடனடியாகச் சூழ்ந்தார்கள்.

லோகசுந்தரிப் பாட்டி அவர்களைத் துச்சமாகப் பார்த்து, குழுவினருக்கு தொடர்ந்து நடக்கக் கட்டளை பிறப்பித்தாள்.

முகத்தில் இரண்டு நாள் வெள்ளை முள் தாடியும், நீர்க்காவி ஏறிய மூல கச்ச வேஷ்டியுமாக கெச்சலான வடக்கத்தி மனிதர் ஒருத்தர். அவர் அழுக்கு பனியன் தெரியக் கையைக் குப்பாயத்துக்குள் விட்டுப் பூணூலைக் கெட்டியாக பற்றியபடி மறித்து நின்றார்.

எந்தப் பாண்டேயைப் பார்க்கணும்னு சொல்லுங்க. அது போதும். எனக்கு நயாபைசா கூட தர வேணாம். ஒரு ஹிந்து இன்னொரு ஹிந்துவுக்கு செய்யற உதவி தான் இது. காசுக்காக உங்களை நான் கழுகு மாதிரி வட்டம் போடறவன் இல்லை.

பாட்டி கொஞ்சம் திணறித்தான் போனாள். இப்படி வம்படியாக நிற்கும் ஆசாமிகளைச் சமாளிக்காமல் காரியம் நடந்தேறாது என்று அவளுக்குத் தெரியும்.

ஜெயராம் பண்டிட்ஜி காந்தான் இருக்கே அங்கே போகணும். அட்ரஸ் இருக்கு.

சுருக்குப் பையைக் காட்டினாள் லோகசுந்தரிப் பாட்டி. பண்டிதர் பெயரோடு, ஹரித்துவாரம் என்று மட்டும் அடுத்த வரியில் எழுதிய அட்ரஸ் பேப்பர் தான் உள்ளே இருந்தது என்பது அவளுக்கு மட்டும் தெரியும்.

அவள் காந்தான் என்று சுத்த இந்தியில் பிரவேசித்ததும் தரகர் உஷாரானார். விஷயம் தெரிந்த கிழவி. பாஷையும் பரவாயில்லாமல் அர்த்தமாகிறது. அனுசரித்துப் போனால் கால், அரை தட்சணை அதுவும் ஒவ்வொருத்தரிடம் இருந்தும் வந்து சேர வாய்ப்பு உண்டு.

பூணூலை சட்டைக்குள் மறைத்துக் கொண்டு எந்த ஜெயராம் பாண்டேயைச் சொல்றீங்க என்று கேட்டார்.

பாண்டே இல்லை. வேறே மாதிரி பேர் வரும்.

வெப்பம் இல்லாத நடுப்பகல் இதமாக உடம்பில் பட, அந்த முதியோர் குழு ஹரித்துவார் ரயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே லோகசுந்தரியின் பிரச்சனை தீரப் பொறுமையாகக் காத்துக்க் கொண்டிருந்தது. அது அவர்களின் பிரச்சனையும் என்று எல்லோருக்கும் மனதில் பட்டிருந்தது.

இவ்வளவு நேரம் ரயிலில் குத்துக்கல் மாதிரி உட்காரந்து வந்து ஏற்பட்ட அலுப்பை எல்லாம் தலைக்குசரக்கட்டையைத் தலைக்குக் கீழ் இடுக்கிக் கொண்டு கொஞ்ச நேரம் கட்டையைக் கிடத்தினால் சரியாகி விடும் என்று பொது அபிப்பிராயம் எழுந்து கொண்டிருந்தது. எங்கே போய்ப் படுக்க என்று யாருக்கும் தெரியவில்லை.

படுத்துத் தூங்கவா வடதேச யாத்திரை வந்தது என்று அவரவர் அந்தராத்மா வேறே தொந்தரவு படுத்திக் கொண்டிருந்தது.

நல்ல வேளையாக முக்கியமான துப்பு நினைவு வந்த சந்தோஷத்தில் லோகசுந்தரி சொன்னது –

கருப்புச் சட்டைக்காரா பேசுவாளே அரண்மனை முக்குலே. அது மாதிரி பெயர் இங்கத்திய சாஸ்த்ரிக்கு.

இதென்ன தீராத முசலகிசலயமாப் போயிண்டிருக்கே என்றார் ஆலாலசுந்தரம் மறுபடியும். அடங்குகிற மாதிரி இல்லை அவர்.

பூணலை அறுக்கறதைச் சொல்றாளா?

சோமசுந்தரம் புரோக்கரைப் பார்க்க அவன் புரிந்த மாதிரி சிரித்தான்.

சிவசிவா. அதை இல்லே. எப்பவோ வந்தது. யாருக்கு பேரும் ஊருமெல்லாம் ஜட்ஜ் முத்துசாமி அய்யர் மாதிரி ஞாபகம் இருக்கு?

பாட்டி சற்றே பின்வாங்கினாள்.

முத்ஸ்வாமி?

புரோக்கரின் கரிசனமான கேள்விக்குப் பதில் சொல்லாமல், தயக்கத்தோடு கூட்டத்தைப் பார்த்தாள்.

சாஸ்திரிகள் குடும்பப் பெயர் அது கருப்புச் சட்டைக்காரா திராவிடம்னோ ஏதோ சொல்வாளே. ஜெயராம திராவிடம். அப்படிப் பேர் வச்சுப்பாளா என்ன?

பாட்டி தீர்மானமாக புரோக்கரைப் பார்க்க, அவர் சகலமும் புரிந்த திருப்தியில் தலையாட்டினார்.

ஜெயராம் த்ராவிட். நல்லாத் தெரியும். ஜெயராம் திராவிடுக்கு ரெண்டாம் மகன் ஸ்ரீராம் திராவிட் . ஸ்ரீராம் திராவிடுக்கு ராதாகிருஷ்ண திராவிட் சீமந்த புத்ரன். அவர் கொஞ்ச தூரத்திலே தான் இருக்கார். கூட்டிப் போறேன். வாங்க.

கொஞ்ச தூரம் என்பது டோங்கா குதிரை வண்டி வைத்து அரை மணி நேரம் ஜல்ஜல் என்று ஊர் நடுவே ஊர்ந்து போய் இறங்குவதில் முடிந்தது. வண்டிக் காரர்கள் தயங்கித் தயங்கி இரண்டு ரூபாய் தான் ஒரு வண்டிக்குக் கூலி என்று கேட்டார்கள். நம்ம ஊரில் இதைப் போல் பத்து மடங்கு கறந்து விடுவார்கள் என்று பொது அபிப்பிராயம்.

வாசலைச் சுற்றி ஒரு ஆள் மட்டத்துக்கு எழும்பி நின்ற சுற்றுச் சுவர். அதில் சின்னதாக மாடம் குழித்து கிருஷ்ண விக்ரகம். இத்தணூண்டுக்கு பட்டுத் துணி சுற்றிக் கொண்டு புல்லாங்குழல் ஊதினான் கிருஷ்ணன்.

வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்டதும், ஆணும் பெண்ணுமாக ரெண்டு பேர் வாசலுக்கே வந்து வரவேற்றார்கள்.

மஞ்சள் பீதாம்பரத்தைப் பாந்தமாகத் தோளில் வழிய விட்டுக் கொண்டு பஞ்ச கச்ச வேஷ்டியில் கம்பீரமாக நின்று வரவேற்கிற நடுவயதுக்குக் கொஞ்சம் குறைந்த அந்த மாநிற மனுஷர் தான் ராதாகிருஷ்ண சாஸ்திரிகள் என்று அர்த்தமானது. அவர் கன்னட பிராமணர் சாயையில் இருந்தாலும் கூடவே நின்று நமஸ்காரம் செய்த வீட்டுக்காரி அச்சு அசல் வடக்கத்திய ராதை, ருக்மணி சாயலில் அழகாக,, அச்சடக்கமாக இருந்தாள்.

நமஸ்காரம். வாங்கோ வாங்கோ. ரொம்ப நாளா காணோமே. ரொம்ப சந்தோஷம். அரசூர் மனுஷா தானே. ஊர் எல்லாம் எப்படி இருக்கு? எங்க தாத்தா காலத்துலே ராமேஸ்வரம் போறபோது அங்கே வந்ததா சொல்லியிருக்கார்.

சம்பிரதாயமான வரவேற்பு. இந்தி தெரிந்தவர்கள் தெரியாதவர்களிடம் சொல்ல, என்ன பாந்தமா பேசறார் என்று மேலெழுந்த சந்தோஷம். பசியோடும், களைப்போடும், தாகத்தோடு வியர்த்து விறுவிறுத்து வந்தாலும், அதெல்லாம் மாறுவதற்கு முன் இதமாக ஒரு வார்த்தை சொன்னால் கிடைக்கிற நிம்மதியும் சுகமுமே தனியில்லையோ என்று சுந்தரமய்யர் கேட்டபோது பதில் இல்லை.

ஜெயராம் திராவிட் பண்டிதரின் பேரனான ராதகிருஷ்ண திராவிட் தட்டுத் தடுமாறி, ஆசமனீயம் செய்ய உள்ளங்கையில் தண்ணீர் எடுத்த மாதிரி கொஞ்சம்போல் தமிழ் பேசினாலும் சடசடவென்று வந்த கூட்டத்தை உடனே எடை போட்டுப் பார்த்து அடிப்படையான பேச்சு வார்த்தை ஷணத்தில் நடத்தி முடித்து விட்டார்.

மொத்தம் ஐநூறு ரூபாயில் சாப்பாடு, தங்க இடம், ஹரித்வாரில் செய்ய வேண்டிய கர்மங்கள் நிறைவேற்றத் தேவையான சாமக்ரியைகள், கோவில், ஆற்றங்கரை போக வர போக்கு வரத்தாக டோங்கா. எல்லாம் செய்து தருவதாக வாக்குத் தத்தம் செய்தார். பிதுர்க் கடன் செய்ய அவரவர்களுக்கு விருப்பமானபடி தட்சிணை கொடுக்கலாம் என்றபோது தான் அது தனிச் செலவு என்று புரிந்தது.

இல்லாவிட்டாலும் இத்தனை அடிப்படை சௌகரியத்தோடு இருக்க, அலைய, வந்து சாப்பிட, படுத்து எழுந்திருக்க எல்லாம் சேர்த்து, தலைக்கு ஐம்பது ரூபாய் என்பது ரொம்பவே நியாயமானது என்று ஆலாலசுந்தரமய்யர் தவிர மற்றவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

குளிக்க, கக்கூஸ் போக எல்லாம் வெளியோ போகணுமோ?

அவர் கேட்டபோது நடுச் சந்தியில் குளிக்க வேண்டி இருக்கக் கூடிய பயத்தில் உறைந்து போன மிச்சம் பாட்டிகளை லோகசுந்தரிப் பாட்டி சகஜ நிலைக்குக் கொண்டு வந்ததோடு திராவிடப் பண்டிதரிடம் விளக்கம் கேட்டது நல்லதாகப் போயிற்று. அவர் வீட்டுக்குப் பின்னால் இந்த மாதிரி விருந்தினரைக் கவனித்து சிஷ்ருஷை செய்து வழியனுப்பவே செங்கல் கட்டிடம் எழுப்பி இருப்பதையும் அங்கே நாலு கழிப்பறை, குளியல் அறை சௌகரியங்கள் இருப்பதையும் கூட்டிப் போய்க் காட்டினார்.

அது தவிரவும் செங்கல் அடுக்கி, காரையும் வழுவழுப்பான சுண்ணாம்பும் சேர்த்துப் பூசி உள்ளே இரண்டு அறையிலும், வாசலிலுமாக மொத்தம் பத்து படுக்கைகள் இருந்ததையும் காட்ட எல்லோருக்கும் சந்தோஷம்.

கட்டைப் பலகை தலைக்கு உசரமாக வைத்துக் கொள்ளத் தேவையின்றி தலகாணியும் அழகாகச் செய்திருந்ததை ஆலாலசுந்தரம் சிலாகித்து பணம் என்ன பணம் மனுஷா தான் முக்கியம் என்று அந்தர் பல்டி அடித்தார். அதுவும் நல்லதுக்கே என்று மற்றவர்கள் நினைத்துக் கொண்டார்கள்.

முன்பணமாக ஆளுக்கு முப்பது ரூபாய் தர முடியுமா என்று கேட்டபோது உடனடியாகப் பணம் திரட்டப் பட்டது. புரோக்கனையோ வேறே யாரையோ அனுப்பி திராவிடப் பண்டிதர் அரிசி, காய்கறி வாங்கி வரச் சொன்னபோது இதெல்லாம் எப்போ வந்து எப்போ சாப்பிடறது என்று விசனப் பட்டது உண்மைதான். ஆனால் வீட்டில் இருந்து சுடச்சுட சப்பாத்தி ரொட்டியும், இளம் சூடும் கொஞ்சூண்டு காரமுமாக கத்தரிக்காய்க் கூட்டும் வந்தபோது திவ்யமான ஆகாரத்துக்காக இன்னொரு தடவை திராவிடர் பாராட்டப் பட்டார்.

கல் படுக்கைகள் அடுத்த அரை மணி நேரத்தில் அவை கட்டப்பட்டதற்காக ஒதுக்கப்பட்ட புண்ணியத்தை முழுமையாகக் கட்டிக் கொண்டன. ஜிலுஜிலு என்று கங்கைத் தண்ணீர் விழுகின்ற குழாய்களிலிருந்து இரும்பு வாளியில் பிடித்து செம்பு செம்பாக ஊற்றிக் கொண்டு, ஆளாளுக்கு சாயந்திரம் கங்கா ஸ்நானம் ஆனது. வென்னீர் கிடைக்குமா என்று அப்பாவியாக விசாரித்த ஆலாலசுந்தரம் தற்காலிகமாக ஊர் விலக்கு, உறவினர் விலக்கோடு ஜாதிப் பிரஷ்டமும் செய்யப்பட்டார்.

கங்கா ஆரத்திக்கு இப்போ போனா கூட்டத்துக்கு முன்னாடி இடம் பிடிச்சுடலாம்.

திராவிடர் சொன்னார். அது என்ன என்று யாரும் கேட்கவில்லை. பணக்காரப் பத்தியச் சாப்பாடு மாதிரி இருந்தாலும் முழுக்க சாத்வீகமான, மட்டாக நெய் தடவிய வடக்கத்தி ரொட்டியும், கூடவே சிலாக்கியமான புது அவதாரம் எடுத்த கத்தரிக்காய்க் கூட்டும், மதியம் சற்றே தலை சாய்த்துப் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டதும், அமிதமான வெப்பமும் குளிருமான சீதோஷ்ணமும், வீட்டுக் குழாயில் ஆவாகனமான குளிர்ந்த கங்கைத் தண்ணீரில் குளித்ததும் ஈசுவர சிந்தையைப் பரிபூர்ணமாக அந்த முதியவர்களில் நிறைத்திருந்தது.

நாளைக்குக் காலம்பற உமக்கு வென்னீர் சொல்லி வச்சுடறேன்

சகல அபத்தங்களையும் மன்னிக்கும் கருணையோடு லோகசுந்தரிப் பாட்டி ஆலாலசுந்தரத்திடம் சொன்னாள்.

டோங்கா ஏற்படுத்திக் கொண்டு ஹர் கி பாவ்ரி என்ற கங்கைப் படித்துறைக்கு அவர்கள் போய்ச் சேர்ந்தபோது சாயந்திரம் ஐந்து மணி ஆகி இருந்தது. ஒருத்தர் இருவராகக் கூட்டம் வர ஆரம்பிக்கும் முன்னாலேயே அரசூர் கோஷ்டி படித்துறைக்குப் போய்ச் சேர்ந்து, தரிசிக்க வாகான படிகளில் இடம் பிடித்தது.

கங்கா மாதாவுக்கு புஷ்பமும் நெய் தீபமும் ஏற்றி, எல்லா சாஸ்திரத்தில் இருந்தும் நாலு வேதத்தில் இருந்தும், ஆமா நாலும் உண்டு, அதர்வம் உள்பட, நாலு வேதத்திலே இருந்தும் மந்திரங்கள் சொல்லி செய்யற வழிபாடு. இதைப் பார்க்கப் பூர்வ ஜென்ம பலன் இல்லாமல் வாய்க்காது. உங்களுக்கெல்லாம் வாய்ச்சிருக்கு. அம்மா, நீங்க எங்க தாத்தா காலத்திலே வந்தபோது பார்த்திருப்பீங்களே?

ஜெயராமப் பண்டிதரின் பேரரான ராதாகிருஷ்ண திராவிடர் லோகசுந்தரிப் பாட்டியை விசாரித்தார். அவள் அவசரமாகத் தலையாட்டினாள்.

அறுபது வருஷம் முன் வந்திருக்கிறாள். அப்போது அவளுக்கு இருபது சொச்சம் வயது. கல்யாணம் செய்து ஐந்து வருஷம் கழித்து அவளும் வீட்டுக்காரர் கிராமக் கணக்கர் கங்காதர ஐயரும் தனியாக இருக்க அப்போது தான் நேரம் வாய்த்தது. கணக்கரின் அம்மா காலமாகி, அஸ்தியை ஹரித்துவாரிலும் வாரணாசியிலும் கங்கையில் கரைக்க ஏற்பாடாக வந்தார்கள்.

தொண்ணூறு வயசில் காலமானாள் கணக்கரின் அம்மா. உயிர் பிரியும் தறுவாயில் நினைவு தடுமாறாமல் பேசினாள் –

நானும் உங்க அப்பாவும் சுப்பிரமணிய அய்யரோடவும், பாகீரதி அம்மாளோடும், நித்ய சுமங்கலி சுப்பம்மா கிழவியோடயும் வட தேச யாத்திரை வந்தபோது மனசுலே சங்கல்பமாச்சு. நான் போனா, என் பிள்ளை அஸ்தியை கங்கையிலே கரைக்கணும்னு. போய்த் தவறாம செஞ்சுடு.

அந்தப் பயணத்தை நினைக்கும்போதெல்லாம் புதுசாகக் கல்யாணம் ஆன சின்னப் பெண் மாதிரி லோகசுந்தரிப் பாட்டி நாணப்படுவாள். இங்கே இந்தக் கங்கை ஆரத்திக்கு வந்திருக்கிறாள் தான். கூட்டம் அதிகமாவதற்குள் கணக்கர் கண்காட்ட இருவரும் தங்கியிருந்த சத்திரத்துக்கே அவசரமாகத் திரும்பி விட்டார்கள். அவளுக்கு சோபான சாயங்காலமாக அமைந்து போன அந்த மாலைப் பொழுதை நினைவு படுத்திக் கொள்ள கிழவிக்கு இப்போது ஏக வெட்கம்.

பார்த்தாலே தூய்மையாக்கும் ஸ்படிகம் போன்ற நீர்ப் பெருக்கில் கங்கை இருந்தது. அந்தப் பரிசுத்ததை கையளைந்து கூட, விரல் நனைத்துக் கூட களங்கப்படுத்த சகிக்காதவர்களாக கங்கைக் கரையில் ஒரு பெருங்கூட்டம் கூடியிருந்தது.

தினசரி கூடுகிற கூட்டம் தான். தினம் தினம் புதிதாக யார்யாரோ வருகிறார்கள். கிழக்கிலும் தெற்குத் திசைக் கோடியிலும் மேற்கிலும், பனி மூடித் தவத்தில் நிற்கும் இமயப் பெருமலைக்கு அந்தப் பக்கம் இருந்தும் இங்கே வந்து கூடுகிறவர்கள். ஆயிரம் ஆண்டுகளாக, அதற்கு மேலாக தினம் தினம் இந்தக் கல் படிக்கட்டுகளில் இருந்தும் நின்றும் தொழுது வணங்கியும் அழுதும் தொழுதும் கங்கைக்கு ஆராதனை நடப்பதைக் கண்ணில் நீர் மல்கப் பார்க்கிறார்கள். அம்மாவை ஷண நேரம் பிரிந்து திரும்ப வந்த குழந்தை போல் தேம்பித் தேம்பி அழுகிறார்கள். எதுவுமே எனக்கு வேண்டாம். உன் காலடியிலேயே சேவை செய்து இந்த வாழ்க்கையைக் கழிக்கிறேன் என்று படிகளில் முட்டி முட்டி அழுகிறார்கள். மனசே இல்லாமல் திரும்பப் போகிறார்கள். இந்த அனுபவம் மறக்கப்பட்டு வாழ்க்கையில் சந்தோஷமாகவும் துக்கமாகவும் எத்தனையோ நிகழ்வுகள். மழை ஓய்ந்த ராத்திரிகளில் தூக்கம் கலைந்து கிடக்கும்போது கங்கைப் பிரவாகமும் ஆரத்தியும் அழுகையும் அம்மாவும் நினைவு வர மீண்டும் உறக்கம் கவிகிறது.

சூரியன் மங்கி நீளமான நிழல்கள் கங்கைக் கரையில் படிந்து பரவி அதிர்ந்து கொண்டிருக்க, கனமான இருள் தொலைவில் இருந்து இறங்கி வர ஆரம்பித்தது. நீர்ப் பெருக்கு கருநீலத் தாரையாக வேகம் கூட்டாது, சட்டம் கூட்டாது பிரவகித்துக் கொண்டிருந்தது.

எத்தனையோ தலைமுறையாகக் கங்கையின் குழந்தைகள் வருகிறார்கள். இன்னும் எத்தனையோ தலைமுறை அவர்கள் வருவார்கள். கங்கை வற்றாமல் கங்கோத்ரியின் பனிச் சிகரங்களில் உருக்கொண்டு ஓடி வந்து, ஹரித்துவாரில் சமவெளியில் நடந்து கொண்டே தான் இருப்பாள்.

சங்குகள் ஒரு சேர முழங்க, லோகசுந்தரி முதுகைச் சிலிர்த்துக் கொண்டாள். தூரத்திலும் பக்கத்திலும் கோவில் மணிகள் சேர்ந்து ஒலித்தன. வேதமோ உபநிஷதமோ, கனமான குரல்கள் ஒன்றிரண்டாக உயர்ந்தன. இன்னும் நூறு குரல்கள் அவற்றோடு சேர்ந்தன. ஆயிரம் குரல்கள் அதற்கு மேலும் ஒன்று கலந்தன. அம்மா அம்மா என்று எல்லா மொழியிலும் அரற்றும் குழந்தைகளாகப் பக்தர்கள்.

இருட்டில் நடக்கும் கங்கைக்கு வழி சொல்ல சின்னச் சின்னதாக தீபங்கள் கரையெங்கும் ஒளி விடத் தொடங்கின. அவை சற்றுப் பொறுத்து, கங்கைப் பிரவாகத்தில் மெல்ல வைக்கப்பட்டன. ஆடி அசைந்து மெல்ல நதியோடு போகிற தீபங்களின் ஒளி தவிர வேறேதும் வெளிச்சம் இல்லாத காற்று ஓய்ந்த அமைதியான முன்னிரவு.

சங்குகள் ஒலி மிகுந்து சேர்ந்து ஒலித்தன. கரையில் கொளுத்திப் பிடித்த தீவட்டிகள் போல, பிரம்மாண்டமான அர்ச்சனை தீபங்கள் ஏற்றப்பட்டன.

கங்கா மாதா கி ஜெய்.

திரும்பத் திரும்ப ஒலிக்கும் குரல்கள் சூழலை முழுக்க ஆக்கிரமித்துப் படர்ந்தன,. லோகசுந்தரி கூடச் சேர்ந்து உச்சரிக்க, கண்ணில் நீர் வழிந்தபடி இருந்தது.

முப்பது வருஷம் முன் இறந்து போன அவளுடைய வீட்டுக்காரக் கணக்கர் பொடி மட்டை வாடையோடு பக்கத்தில் வந்து உட்கார்ந்தார். அவருடைய பொடி மட்டையைப் பறித்து வீசி விட்டு லோகசுந்தரி கும்பிடச் சொன்னாள். அந்த மனுஷனும் கண்மூடி வணங்கியபடி கலைந்து போனான்.

கங்கைக் கரையில் இருந்து திரும்பி வரும்போது திராவிடப் பண்டிதர் சொல்லிக் கொண்டே வந்தார் –

பஞ்ச பூதங்கள்லே காற்றை நாம பார்க்க முடியாது. அனுபவிக்கறோம். மெல்ல வீசினா சல்லகாலி தென்னல் காற்று. கொடூரமா வீடு தோட்டம் தோப்பு எல்லாம் சாய்ச்சு எரிஞ்சு நாசமாக்கிட்டா கெட்ட காற்று. புயல் சூறாவளி. இருந்தா மூச்சில் வரும் இல்லேன்னா நாம இல்லை. அவ்வளவு தான் காற்றோட நமக்கு உறவு. அஞ்சிலே அடுத்தது ஆகாயம். தொட முடியாத உசரம். யாராலும் கட்டிப் போட முடியாம, முடக்க வழியில்லாம பரந்து விரிஞ்சு கிடக்கு. எல்லையும் இல்லை. ஆயுசு பூரா அடிமையாக் கட்டிப் போட்ட மனுஷன் தலையை உசத்திப் பார்த்தாக் கூட சுதந்திரம் சுதந்திரம்னு மேகம் பாடிட்டு போகிற ஆகாசம் பாக்கி இருக்கு. எல்லாத்தையும் விட்டு விடுதலையாகி வரச் சொல்லி அந்த நீல அம்பரம் கூப்பிடறது.

அரசூர் கூட்டத்தில் அந்நிய பாஷை புரியாதவர்களுக்கும் அதிசயமாக இந்தியிலும், தமிழிலும், தெலுங்கிலும், சம்ஸ்கிருதத்திலும் திராவிடர் கலவையாகப் பேசிக் கொண்டிருப்பது அட்சரம் விடாமல் புரிந்தது.

பஞ்ச பூதத்திலே நெருப்பு நம்மை பயப்படுத்தற கண்டிப்பான அப்பா மாதிரி. நம்மளோட நல்லதுக்காகக் கோபப்படற அம்மா மாதிரி. பள்ளிக்கூடத்திலே கற்பிக்கற வாத்தியார் மாதிரி. ரொம்ப தூரத்திலே இருந்தா வெப்பமே இல்லாம, உடம்பு ஒரேயடியாக் குளிர்ந்து சீக்குலே கொண்டு விட்டுடும். ரொம்பப் பக்கத்தில் இருந்தா கரிஞ்சு போயிடுவோம். சகலமானதையும் எரிச்சுப் பஸ்பமாக்கிற அக்னியை ரெண்டு கையும் குவித்து எல்லாப் பணிவும் மனசுலே வந்து நிற்க கும்பிடத்தான் செய்ய முடியும். ஆனா பஞ்ச பூதத்திலே மிச்ச ரெண்டு இருக்கே.

நிலமும் நீரும். எவ்வளவு நெருங்கி இருக்கு மனுஷனோட இது ரெண்டும்.

லோகசுந்தரி யோசிக்கக் கண்ணில் மறுபடி கண்ணீர் துளும்பியது.

நிலமும் நீரும் நம்மோட இருக்கப் பட்டவை இல்லை. நாம தான் அதோட நம்ம வாழ்க்கையைப் பிணைச்சுண்டு ஆயுசு பூரா அது ரெண்டையும் சொந்தம் கொண்டாடிண்டு இருக்கோம். அது ரெண்டும் நமக்கு மட்டுமில்லே நம்ம எல்லோருக்குமே, நமக்கு பந்து மித்ரர் மட்டும் இல்லே, தெரியாத, இந்த பூமியில் எங்கெங்கோ இருக்கற எல்லாருக்குமே பூமியும் ஜலமும் பெற்றவங்க மாதிரின்னு ஞானம் வந்தா எல்லாம் சரியாயிடும். சண்டை எதுக்கு? சச்சரவு தான் எதுக்கு?

லோகசுந்தரி பின்னால் திரும்பி, தூரத்தில் கருத்து வளைந்து சிறிய தீபங்கள் மிதக்க நடந்து கொண்டிருந்த கங்கையப் பார்த்தாள்.

லோக நடப்பிலே நமக்கு சின்ன வயசா இருக்கலாம். நடு வயசு, ஆடி ஓஞ்சு போன வயோதிகம் எதுவுமாக இருக்கலாம். ஆனாலும், கங்கைத் தாயாரே, என் அம்மா, என் பிரியமான அம்மா, நான் இன்னும் பிறக்கவே பிறக்காத சிசு, கரு. என் அம்மா நீ. ஜலமாகி வா. உனக்கு நமஸ்காரம். என் அப்பா இந்த மண். பிறப்பிச்சுப் போட்ட அம்மா, அப்பா, கையைப் பிடிச்சுக் கூட்டி வந்த புருஷன், எல்லாரும் இருந்து, நடந்து, மரித்து மண்ணோடு மண்ணாகக் கலந்த நிலத்துக்கு நமஸ்காரம்.

பாண்டாவோடு சேர்ந்து தூரத்தில் தெரிந்த கங்கைப் பிரவாகத்தை மௌனமாக வணங்கினார்கள். கால் புதைந்து அளையும் மண்ணைக் குனிந்து கும்பிட்டார்கள். இருப்பிடம் வந்திருந்தது.

அருமையான மதராஸி சாப்பாடு ரெடியாயிட்டிருக்கு. பத்தே நிமிஷம்.

திராவிடப் பண்டிதர் பெண்டாட்டி சிரித்தபடி வரவேற்று எல்லோருக்கும் கல்கண்டு தித்திப்பும் நாக்குக்கு வேண்டியிருந்த சுக்கு மேலோங்கிய காரமுமாக, வயிற்றுக்கு அனுசரணையான பானகம் வழங்கினாள்.

பண்டிதரும் அவருக்கு ஒத்தாசை செய்யும் பையனும் அரசூர் கூட்டத்தில் ஒவ்வொருவரிடமும் இருந்து பெற்றவர்கள் பெயர், ரெண்டு வழியிலும் பாட்டனார் பெயர், கோத்திரம், பூர்விக ஊர், ஜீவித்திருந்த காலம் என்று தகவல்களைச் சேகரித்தார்கள்.

பெண்களுக்குப் புகுந்த வீட்டுத் தகவல் கொடுத்தால் போதும் பிறந்த வீட்டு விவரங்கள் இருந்தால் வாங்கி ஒரு ஓரமாக வைத்துக் கொள்ளலாம்,, எதற்காவது பிரயோனஜப்படும்.

ராதாகிருஷ்ண பாண்டாவின் அசிஸ்டெண்ட் சொல்ல, அவையும் பெரும்போக்காகச் சேகரிக்கப் பட்டன.

பாட்டனாருக்குத் தகப்பனார், பாட்டனாருக்குப் பாட்டனார் பற்றிய தகவல்களும் கோரப்பட்டாலும், லோகசுந்தரிப் பாட்டி தவிர மற்றவர்களுக்கு அதெல்லாம் தெரிந்திருக்கவில்லை. அவளுக்கு மாமியார் சொன்னது

சதா நமநம என்று சாப்பாட்டில் இருந்து சகலமானதுக்கும் பிடுங்கிக் கொண்டே இருந்த மாமியாரை லோகசுந்தரிப் பாட்டி நன்றியோடு நினைவு கூர்ந்தாள்.

தால் சாவல் என்று சுடச்சுட வெள்ளிக் கும்பாவில் வைத்து பண்டிதரின் தர்ம பத்தினி பிரியமாகக் கொண்டு வந்து நீட்டிய பருப்புச் சாதம் கூட வேண்டாம் என்று மறுத்து விட்டாள் லோகசுந்தரிப் பாட்டி.

மௌஸி, நாலு சம்மச் சாவலாவது சாப்பிட்டுப் படுத்துக்கணும். நான் வேணும்னா ஊட்டி விடட்டா?

அந்தப் பெண்ணுக்கு திருஷ்டி கழித்துக் கன்னத்தைக் கிள்ளிக் கொஞ்சினாள் பாட்டி.

ஊர் எது என்று தெரியாமல் வளைந்து நெளிந்து உயரமான படித்துறைகளைத் தொட்டு ஓடும் ஆறு. படிப் படியாக, வீங்கி விதிர்க்கும் முழங்கால் மூட்டைப் பிடித்துக் கொண்டு இறங்கி நீரில் கால் நனைக்கிறாள் லோகசுந்தரி. ஆற்றுப் போக்கு திசை மாறி வந்த வழியே திரும்பி ஓடுகிறது. சொப்பனத்தில் இதெல்லாம் கண்டபடி அவள் தூங்கி இருந்தாள்.

விடிகாலையில் எழுந்தவர்கள் திராவிடப் பண்டிதர் சுருள் சுருளாகப் பட்டுத் துணி கட்டி வைத்திருந்த, அனுமார் வால் போல நீண்ட காகிதங்களைக் கையில் பூதக் கண்ணாடி வைத்து மிகக் கவனமாகப் பரிசோதித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார்கள்.

மற்ற எல்லா வாஹியும், அதான் விவரம் எழுதின காகிதச் சுருள், ராத்திரி மூணு மணியோட கிடைச்சுது. இவங்க குடும்பத் தகவல் விடிகாலையில் தான் கிடைச்சது. கூடவே அரசூர் சுப்பிரமணிய அய்யர் குடும்பச் சுருளும் அவங்களோடு பாத்தியப்பட்ட அம்பலப்புழை குடும்பத்து வாஹியும் எடுத்து வச்சிருக்கேன். இதை சரி பார்த்து புதுத் தகவல் எல்லாம் எழுதிட்டுக் கங்கைக்குப் போகலாம். குளிக்க, அனுஷ்டானங்களுக்குன்னு நேரம் சரியா இருக்கும். வந்து தான் ஆகாரம். அதான் நடைமுறை.

லோகசுந்தரிப் பாட்டியைப் பார்த்தபடி சொன்னாலும் எல்லோருக்கும் பொதுவானது அது.

பண்டிதர் சொல்லுக்கு எதிர்ச் சொல் இல்லாமல் போனது.

வந்திருக்கும் ஒவ்வொரு அரசூர்க் குடும்பத்துக்கான பட்டியலைச் சரிபார்க்கும் போதும் அந்த முதியவர்கள் வாய் விட்டு அழுதார்கள். நிலை மறந்து சிரித்தார்கள். தேகம் விதிர்விதித்துக் கண்மூடி கை கூப்பி உறைந்து போனார்கள். எல்லாத் தகவலும் உண்மை. இதில் கண்ட பிரகாரம் தான் உலகம் முன்னால் போகிறது என்று ஒவ்வொருவரும் கையெழுத்துப் போடும் போது கண்ணீர்த் துளி காகிதத்தில் விழுந்து அங்கங்கே எழுத்து கொஞ்சம் கலைந்தது.

ஆலாலசுந்தரமய்யர் எழுபது வருஷம் முன்பாக ஹரித்துவார் வந்த அவருடைய பாட்டனார் கையெழுத்தைப் பார்த்து நிலத்தில் அந்தக் காகிதச் சுருளை வைத்து சாஷ்டாங்கமாக விழுந்து கும்பிட்டார். சோமசுந்தரமய்யரின் பாட்டனார் நூறு வருஷம் முன்னால் வந்த போது வீட்டில் பிறந்திருந்ததாகக் குறிப்பிட்டிருந்த குழந்தை அவருடைய அப்பாதான் என்று கொள்ளுப் பேரன் பிறந்த சந்தோஷத்தைச் சொல்கிறது போல் உரக்க ஆனந்தப்பட்டுப் பகிர்ந்து கொண்டார். பக்கத்தில் ஒரு அஸ்கா சர்க்கரை டின் மட்டும் இருந்திருந்தால் எல்லோருக்கும் பிடிப்பிடியாக வாயில் போட்டிருப்பார்.

அட்சர சுத்தமாக லோகசுந்தரிப் பாட்டி சொன்னதற்கும், அவள் குடும்ப வாஹிக்கும் எல்லாம் பொருந்தி வந்தது. அவளுடைய மாமியார், சுப்பிரமணிய அய்யர், நித்திய சுமங்கலி சுப்பம்மா, அண்ணாசாமி ஜோசியர் வகையறாவுடன் ஹரித்வார் வந்து போன, நூறு வருஷம் முந்திய தகவல்கள் சரி பார்க்கப்பட்ட அப்புறம் திராவிடப் பண்டிதர் அதற்கு அடுத்த காலகட்டத்துக்கு வந்தார்.

சொல்லுங்க. அதுக்கு அப்புறம் நடந்தது எல்லாம்.

மாமியார் காலமானது பற்றிச் சொல்லி நிறுத்தினாள் பாட்டி. எப்போது, எங்கே, என்ன காரணத்தால் ஏற்பட்ட மரணம் அது என்று தகவல் பதியப்பட்டது. கணக்கரான அவளுடைய வீட்டுக்காரர் பற்றி அடுத்துச் சொன்னாள். பெயரை மட்டும் பக்கத்தில் இருந்த இன்னொரு முதுபெண் மெல்லிய குரலில் சொன்னாள்.

சாவுச் செய்தியைப் பதியும், சந்தோஷம் தென்படாத முக பாவத்தோடு பண்டிதர் கட்டைப் பேனாவால் காகிதத்தில் விவரம் எழுதி விட்டு லோகசுந்தரிப் பாட்டியின் பிள்ளைகள், பெண்கள் பற்றிக் கேட்டார்.

ரெண்டு பிள்ளைகள். பொண்ணு கிடையாது.

ரொம்ப நல்லது. அவங்களோட கல்யாண விவரம் சொல்லுங்க. எந்த ஊர், எந்தக் குடும்பத்திலே பெண் எடுத்திருக்கீங்க?

லோகசுந்தரிப் பாட்டி பெருங்குரல் எடுத்து அழுதாள்.

ரெண்டு பெத்தேன். ரெண்டையும் பறி கொடுத்தேன். ஒண்ணு அம்மையிலே போச்சு. மத்தது டிப்தீரியாவிலே போச்சு.

ஒரு வினாடி பண்டிதர் மௌனமாக இருந்து விட்டு அந்தப் பிள்ளைகளின் பெயர், இறந்த வருஷம் கேட்டார். பாட்டி ஐந்து நிமிடம் முகத்தை மூடி அழுது விட்டுக் கண்ணைத் துடைத்துக் கொண்டு தெளிவான குரலில் அதைத் தெரிவித்தாள்.

ரெண்டாம் பிள்ளை எப்படிப் போனார்னு சொன்னீங்க?

அவர் டிப்தீரியா பற்றி இத்தனை வருடம் கேட்டே இருக்கவில்லை என்பது அரசூர் கோஷ்டிக்குப் புதுத் தகவலாக இருந்தது. சோமசுந்தரமய்யர் இங்கிலீஷ் ஸ்பெல்லிங் சொல்ல அதை கவனமாகப் பதிந்தார் பண்டிதர். லோகசுந்தரிப் பாட்டி நீளமாகக் கையெழுத்துப் போட்டாள்.

ஆற்றுக்குக் கிளம்பலாம் என்று எல்லோரும் எழுந்தபோது பண்டிதர் கையமர்த்தினார்.

இன்னும் ஒண்ணு பாக்கி இருக்கு.

அது அரசூர் ஊர்ப் பெரியவர் சுப்பிரமணிய அய்யர் குடும்பத் தகவல் கொண்ட வாஹி.

சுப்பிரமணிய அய்யர் நூறு வருஷம் முன்பு ஹரித்துவார், காசி வந்ததுக்கு அப்புறம் அந்தக் குடும்பம் எங்கெங்கேயோ போயாச்சு. டெல்லியில் சுப்பிரமனிய அய்யரோட கொள்ளுப் பேரன் சின்னச் சங்கரன் மினிஸ்டிரியிலே பெரிய உத்யோகத்திலே இருக்கான். அவன் தான் எங்களை அங்கே சகல உபசாரமும் பண்ணி இங்கே அனுப்பினது. திரும்பும்போது அவனையும் வீட்டுக்காரியோடு இங்கே ஒரு தடவை சீக்கிரம் வந்துட்டுப் போகச் சொல்றேன்.

சோமசுந்தரம் அய்யர் நன்றியோடு சொல்ல, பண்டிதர் கண்ணாடியைத் துடைத்துப் போட்டுக் கொண்டார்.

எல்லா விவரமும் கையெழுத்து போட்டு சரி பார்க்கப் பட்டிருக்கு. ஆனால், அம்பலப்புழை குடும்பத்தில் ஒரு கடைக்கோடியில் குஞ்ஞம்மிணின்னு பெயர் என் தாத்தாவால் பெரிய எழுத்தில் எழுதப்பட்டுக கேள்விக்குறியோடு நிக்கறது. யார் சொன்னது, எப்போது வந்தவர், கையெழுத்து ஏதும் கிடையாது. அந்த அம்மாள் இப்ப இருந்தா எழுபது வயசு இருக்கலாம். உங்கள்லே யாருக்காவது விவரம் தெரியுமா? இது அபூர்த்தியான வாஹிங்கறதாலே, உபயோகிக்கக் கூடாதுன்னு நடைமுறை.

யாருக்கும் குஞ்ஞம்மிணியைத் தெரிந்திருக்கவில்லை.

கங்கைக் கரைக்குப் போனார்கள்.

திராவிடப் பண்டிதரும் அவர் ஏற்பாடு செய்திருந்த இன்னும் இரண்டு புரோகிதர்களும் வழி நடத்திக் கொடுத்தபடி எல்லாக் கருமங்களும் நிறைவேறின.

லோகசுந்தரிப் பாட்டியும் மற்ற பெண்களும் சூரியனுக்கும், எல்லா முன்னோருக்கும் மொத்தமாகப் படையல் வைத்தார்கள். பாண்டா அவர்களின் குடும்பங்களின் சார்பில் தரையில் விழுந்து கும்பிட்டபோது இலையைத் தொட்டுக் கொடுத்து, கையில் உத்தரிணி ஜலம் வாங்கி ஒதுங்கினார்கள்.

கர்மம் தொடங்கும் போதும் முடிகிற போதும் லோகசுந்தரிப் பாட்டி அவளுக்குத் தெரியாத குஞ்ஞம்மிணிக்காகப் பிரார்த்தித்து கங்கையில் முழுகி எழுந்தாள்.

டோங்காக்கள் வீடு போகும் போது பண்டிதரிடம் சோமசுந்தரமய்யர் சொன்னது –

அரசூரிலே சாவு விழுவது நின்னு போயிருக்கு தற்காலிகமா. அடுத்து அங்கே இருந்து யாராவது வந்தாலும் புதுசா சாவு நடந்ததுன்னு சொல்லத் தகவல் இருக்காது.

பண்டிதர் வீட்டு வாசலில் டோங்காவில் இருந்து இறங்கும்போது லோகசுந்தரிப் பாட்டி குழைந்து விழுந்தாள். அவளைத் திண்ணையில் படுக்க வைத்தார்கள்.

பானி பானி பானி

பண்டிதர் இரைய, அவர் மனைவி வீட்டு பூஜை அறையில் இருந்து கங்கைத் தண்ணீரை எடுத்து வந்தாள்.

ஒரு மடக்கு அதை அருந்திய லோகசுந்தரிப் பாட்டி கடமை எல்லாம் முடித்த சந்தோஷத்தோடு எல்லோரையும் பார்த்தாள்.

என் குடும்ப வாஹியிலே இதையும் சேர்த்துடுங்கோ.

உச்சிக் கால பூஜைக்காக கோவில்களில் சங்கொலித்த போது அவள் கண்கள் நிரந்தரமாக மூடி இருந்தன.

(தொடரும்)

Viswanathan Meenakshisundaram மிக அருமையாகச் செல்கிறது கதை…”நிலமும் நீரும் நம்மோட இருக்கப் பட்டவை இல்லை. நாம தான் அதோட நம்ம வாழ்க்கையைப் பிணைச்சுண்டு ஆயுசு பூரா அது ரெண்டையும் சொந்தம் கொண்டாடிண்டு இருக்கோம். அது ரெண்டும் நமக்கு மட்டுமில்லே நம்ம எல்லோருக்குமே, நமக்கு பந்து மித்ரர் மட்டும் இல்லே, தெரியாத, இந்த பூமியில் எங்கெங்கோ இருக்கற எல்லாருக்கும் பூமியும் ஜலமும் பெற்றவங்க மாதிரின்னு ஞானம் வந்தா எல்லாம் சரியாயிடும். சண்டை எதுக்கு? சச்சரவு தான் எதுக்கு?” …..இதுபோன்ற போகிறபோக்கில் நின்று ஆழ்ந்து சொல்லிப்போகும் இடங்களும் இந்த நாவலின் உயிர்ச்சத்தாக இருக்கிறது..இரா. முருகனுக்குப் பாராட்டுக்கள்……..அன்பன், மீ.விசுவநாதன்
51 mins · Unlike · 1

EraMurukan Ramasami விசு, உன் ரெஸ்பான்ஸ் படிக்க ரொம்ப சந்தோஷமாக இருக்கு. நட்பூ

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன