ஓபோவும் குழல்களும். வயலின்களும் இசைக்க கடவுளின் சகோதரி துயிலுணர்ந்தது

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நாவல் அடுத்த பகுதி இங்கே

வாழ்ந்து போதீரே  அத்தியாயம்  இருபத்தொன்று –   

          

வாசலில் ஒருமித்து இசைக்கப்பட்ட வாத்திய இசை நந்தினியை எழுப்பியது. நாலு வயலின்கள் கூட்டாக மெல்ல உயர்ந்து சஞ்சரிக்க, ஓபோவும் குழல்களும், தரையில் நிறுத்தி வைத்து வாசிக்கும் ஒரு பிரம்மாண்டமான செல்லோவும் இசைப் பூத்தூவியபடி தொடர, முரசு ஒன்று ஓங்கி ஒலித்து அதிர்ந்து காலை ஏழு மணி என்றது.

 

மேல் தளத்தின் ஜன்னல் வழியாக நந்தினி வெளியே பார்க்க, ஆணும் பெண்ணும் குழந்தைகளுமாக ஒரு சிறிய கூட்டம் தரையில் மண்டியிட்டு வணங்கி நின்றது.  துப்பாக்கிகளை உயர்த்திப் பிடித்துக் காவலுக்கு நின்ற ராணுவ வீரர்கள் சத்தமெழக் காலணிகளைத் தரையில் அறைந்து கூடவே வணங்கினார்கள்.

 

தினசரி நடக்கிறது தான் இதெல்லாம். குழந்தைகள் நீங்கலாக, இவர்கள் எல்லோரும், அரசாங்கத்தால் பணியமர்த்தப் பட்டவர்கள். குழந்தைகள் பெற்றோரோடு வருகிறவர்கள். அவர்களுக்கான தொகையோடு காலை உணவையும் அரசாங்கம் வழங்குகிறது. பெரியவர்களுக்கு காப்பி மட்டும் வழங்கப்படுகிறது. வாசலுக்குப் போன ஒரு அபூர்வ சந்தர்ப்பத்தில் நந்தினி இந்தத் தகவல்களைக் கேட்டுச் சேகரித்து வந்தாள்.

 

தொடர்ந்து மாறி மாறி வந்த பதினேழு அரசுகளின் ஆட்சியின் போது கடவுளின் மூத்த சகோதரி என்று நந்தினியை மரியாதை செய்து உயர்ந்த இடத்தில் வைத்திருந்தது மட்டும் நிலையாகத் தொடர்ந்தது. அவளுடைய அற்புதச் செயலாகச் சிறிதும் பெரிதுமான நிகழ்வுகள் ரேடியோ மூலமும், பத்திரிகை மூலமும் நாட்டு மக்களை அடைந்த வண்ணம் இருந்தன. அந்த நிகழ்வுகளால் ஈர்க்கப்பட்ட அடியார்கள் அவளுக்கு நாடு முழுக்க உண்டு என்பதும் அவர்கள் அரசுப் பணியில் இல்லாமலேயே அவள் வீட்டு வாசலில் நின்று அவளை வாழ்த்தி வணங்க ஒடி வருவார்கள் என்பதும் உண்மையே.

 

ஆனால், அவர்கள் யாரும், வார நாட்களில் காலை நேரத்தில் இப்படிக் காத்து நின்று வாழ்த்த முடியாத நிலையில் இருக்கப்பட்டவர்கள். செய்கிற வேலை காரணமாக அல்லது குழந்தைகள் பள்ளி செல்ல வேண்டியிருப்பது கருதி அவர்கள் வார நாட்களைத் தவிர்த்து, வார இறுதியில் பங்குபெற  முன்வருவார்கள் என்று பத்து நாள் மட்டும் நிகழ்ந்த ஓர் ஆட்சியின் போது அதன் ராணுவத் தலைவர் சொன்னார்.

 

ஆனால் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த மரியாதை செலுத்துதல் கிடையாது. கடவுளின் சகோதரி என்றாலும் ஞாயிறு ஞாயிறு தானே? உறங்கி ஓய்வெடுக்கவும், எந்தப் பரபரப்பும் இல்லாமல் மெத்தனமாகச் செயல்படவுமான அந்தத் தினத்தில் ஆராதகர்களை அழைப்பது முறையாக இருக்காது என்று கருத்துச் சொன்ன அந்த ராணுவத் தலைவர் மறுநாள் காலை வீட்டுக் கழிவறைக்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். கழிவறையைப் பயன்படுத்திய பிறகு அதைச் செய்து, அவர் மனநிறைவோடு இறக்க மனிதாபிமானத்தோடு வழி செய்த காரணத்தால், அடுத்து வந்த ஆட்சியில் அந்தத் துப்பாக்கிக்காரன் மன்னிக்கப் பட்டு விடுதலையானான். .

 

எனில், தற்போது, கடந்த ஒரு மாதமாக நாட்டின் அரசியலில் ஒரு வலுவான மாற்றம் உண்டாகி இருக்கிறது. வல்லரசுகள் இங்கே நிலையான ஆட்சிக்குத் துணை நிற்பதாக உறுதி சொல்வதோடு பாதுகாப்புக்காகப் படைகளையும் நிறுத்தி வைத்திருக்கிறார்கள். இந்த ஏற்பாடு இன்னும் பத்து வருடமாவது நிலைக்கும் என்று மந்திரவாதம் செய்ய நியமிக்கப்பட்ட உத்தியோகஸ்தர்கள் சொல்கிறார்கள். அவர்களுடைய தொழிற்சங்கத்தை அங்கீகரித்தால் இன்னும் தெளிவாக இதைச் சொல்ல முடியும் என்று நந்தினியைப் நேற்றுச் சந்தித்தபோது அவர்கள் தெரியப் படுத்தினார்கள். அவள் செய்ய வேண்டியவற்றில் இந்த அங்கீகாரமும் ஒன்று. பத்து வருடத்துக்குப் பதிலாக இருபது வருடம் இங்கே நிலையான ஆட்சி இருக்கும் என்று தெரிந்தால் நந்தினிக்குச் சொந்த எதிர்காலத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் விரிவாக, ஆழமும் அகலமுமாகத் திட்டமிட முடியும்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன