செம்மறி ஆட்டின் பக்குவமாக சமைக்கப்பட்ட கல்லீரல் போல் வலிமை தருகிறவர்

வாழ்ந்து போதீரே = அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நாவல் பகிரப்படுகிறது, வாசித்து மகிழ்க


 

குனிந்து வளைந்து காப்பி ப்ளாஸ்கை சிறிய மேஜையில் வைத்துப் போனாள் பணிப்பெண். இந்தப் பானம் பரிசோதிக்கப்பட்டது என்று அறிவித்தபடி பின்னோக்கி நடந்து வணங்கிப் போன பரிசோதனை அதிகாரியைத் தொடர்ந்து வந்த ஊழியர் பானம் அருந்த நல்ல நேரம் என்று அறிவித்துப் போனார். நந்தினி காப்பியைக் குவளையில் சரித்து அருந்த  ஆரம்பித்தாள்.

 

அறை வாசலில் மரியாதையோடு நின்ற வீட்டு நிர்வாக ராணுவ அதிகாரி அவள் பார்வை தன்மேல் படப் பொறுமையாகக் காத்திருந்தார்.  என்ன என்ற கேள்வியை நந்தினி பார்வையில் கேட்க அவர் சொன்னார் –

 

எங்கள் அன்பு அன்னையும் நாங்கள் விசுவாசிக்கும் மதங்கள் கடந்த கடவுளின் மரியாதைக்குரிய மூத்த சகோதரியும், ஆயிரம் ஆண்டு நிறைவாழ்வு வாழ்ந்த பெருமைக்குரியவரும், இன்னும் ஆயிரம் ஆயிரம் ஆண்டு வாழ்ந்து அருள வந்தவரும், இந்தியப் பறவை பாடி ஆடும் முகப்பு கொண்ட மாளிகையில் வசிப்பவரும்,  எதிரிகளுக்குக் காட்டு எறும்புகளின் புற்று போலப் பயமூட்டக் கூடியவரும், அடியவர்களுக்கு செம்மறியாட்டின் கல்லீரலைப் பக்குவமாகச் சமைத்த உணவு போல் ஆனந்தமும் வலிமையும் அளிப்பவருமான நாட்டின் உன்னதத் தலைவர் இதைக் கேட்க மனம் கொண்டு செவி தர வேணும்.

 

சொல்லு என்பது போலக் கையைக் காட்டினாள் நந்தினி. இந்த மெய்க்கீர்த்தி இவர்களுக்கு கரதலப் பாடமாகச் சொல்லத் தெரிந்த பிறகு தான் நந்தினி வசிக்குமிடத்தில் இவர்களுக்குப் பணி ஒதுக்கப் படுகிறது. மாதம் ஒரு முறை இந்த வரிகள் அங்கங்கே மாற்றப்பட்டு, புது வரிகள் சேர்க்கப்பட்டு, பழையவை நீக்கப் பட்டு ராகத்தோடு சொல்ல இவர்களுக்குப் பயிற்சி தர அரசு ஊழியர்கள் நியமிக்கப் பட்டிருக்கிறார்கள். அவர்களில் சிலர் காலையில் வாத்திய இசையோடு பள்ளி எழுப்பவும் வருகிறவர்கள், நந்தினிக்கு எல்லாம் தெரியும்.

 

எனில் கேட்டருளுக. ஒன்பது மணிக்கு ராணுவத் தலைவர் உங்களைச் சந்திக்க வருகிறார். நேரம் உசிதமல்லாத பட்சத்தில் கருணை கூர்ந்து அறிவிக்க வேண்டும்.

 

வரச் சொல்லு என்று சலிப்போடு கை காட்டி அவள் குளிக்கக் கிளம்பினாள். எல்லா தினமும் ஞாயிற்றுக்கிழமையாக இருந்தால் என்ன? ஞாயிறன்று மொத்தம் ஐந்து பேர் மட்டுமே காவலுக்கு இருப்பார்கள்.

 

வழக்கம் போல் பதினைந்து இல்லை. ஏற்கனவே செய்து வைத்த உணவையோ, உணவு விடுதியில் அதிகாரிகளின் நேர் பார்வையின் கீழ் சமைத்த உணவையோ உண்ண அவளுக்கு இயலும். அதாவது அவள் விருப்பப் பட்டால் காலடியில் வைத்து வணங்கிப் படைக்கப்படும். அந்த உணவும் எச்சில் செய்யப்பட்டதாக இருக்கும். உணவுப் பரிசோதனை அதிகாரி வீட்டுக்கு உணவை எடுத்துப் போய் அக்கறையோடு செய்யப் படும் சோதனை அது. ஞாயிற்றுக் கிழமைக்கான அதிகாரி கடமைகளில் தட்டிக் கழிக்க முடியாத ஒன்று.

 

எல்லாத் தடியன்களோட எச்சிலையும் தினம் தின்னுட்டிருக்கேனண்டா வைத்தாஸ் திருட்டு மகனே, வாடா நாள்பட்ட காட்டெறும்புப் புற்றே. என் அரைக்கட்டில் தகிக்கும் நெருப்பணைக்க வராத உனக்கு அதுதான் குறைந்த பட்சத் தண்டனை. நிலையான அரசியல் மாற்றம் ஏற்பட்டு ஒரு வாரம் நாளையோடு ஆகிறது. நீ என்னைப் பார்க்க, என்னோடு கூடி அனுபவிக்க ஓடி வந்திருக்க வேணாமோ? உள்ளே வா உள்ளே வா என்று நான் கேட்க வேண்டிய அவசியமே இல்லாமல் நீயாக வரவும், நீ எதிர்பார்ப்போடு என்னைக் கேட்கச் சொல்லி, நான் கேட்டு, மறுபடி மறுபடி எனக்குள் வரவுமாக உடல் கலக்க ஓடோடி வராமல் எந்த நாடோடிப் பெண்ணின்  வியர்வை வாடையைத் தீர்க்கமாக முகர்ந்து கொண்டு அவளுக்குத் துணி துவைத்துக் கொண்டிருக்கிறாயடா அயோக்கியா?

 

நந்தினி குளித்து உடுத்து வரும்போது ஒன்பது மணி அறிவிக்கப் பட்டது. சந்திக்கவும் பேசவும் நல்ல நேரம் என்றும் கூறப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன