சடாரி என்னும் ஜப்பானிய ஞான அனுபவமும் எட்டாம் கிளாஸ் கையேடும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்காம் நாவலில் இருந்து அடுத்த சிறு பகுதி – சடாரியும் நோட்ஸும்

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

யாரோ எதையோ பாடமாக எழுதினாலும் அதையெல்லாம் படித்து மாணவர்கள் நேரத்தை வீணாக்க வேண்டாம். நான் எழுதும் கையேடுகளைப் படித்தாலே போதும் மூலத்தையும் அதன் மூத்த தலைமுறை ஆதிமூலத்தையும் பொருளோடு அறிந்த ஞானம் கிட்டும் என்றார். ஜப்பானிய மொழியில் அதற்கு சடாரி என்று ஒரு சொல் இருப்பதாகக் குறிப்பிட்டார். ஞான அனுபவம் என்றும் அதற்கு மேலும் பொருள் தரும் ஒன்று அந்தச் சொல் என்றார். அவர் வீட்டின் பெரும் வசிப்பிடத்தை அச்சடித்து வந்து கட்டுக் கட்டாக, சிப்பம் சிப்பமாகப் பரத்தியிருந்த விதம் விதமான  கையேட்டுப் பிரதிகளை மலைப்போடு முசாபர் பார்த்தான். இரண்டாம் வகுப்புத் தமிழ்ப் பாடத்தில் இருந்து முதுகலை தமிழ் வரை தான் எந்த பேதமும் பார்க்காது கையேடு எழுதி அச்சுப் போட்டு விற்பனைக்கு வெளியிடுவதாக அவர் பெருமையோடு அறிவித்தார்.

 

சுறுசுறுப்பாக அந்தக் கையேடுகளை வண்டியில் ஏற்றி யார்யாரோ வெளியே எடுத்துப் போக, இன்னொரு திசையில் இருந்து மலேயா கல்லூரிகளுக்கான பட்ட வகுப்பு தமிழ்க் கையேடுகள் குதிரை வண்டிகளில் வந்து இறங்கி வீட்டு முகப்பை ஆக்கிரமிக்க ஆரம்பித்தன. கூடவே எகிப்தில் குழந்தைகளுக்கு உதவி செய்யும் மூன்றாம் வகுப்பு தமிழ் உரைநடை கையேடுகளும் தலைச்சுமையாக வந்து இறங்கிப் புதுப் புத்தக, அச்சு மை வாடையோடு வெளியை நிறைத்தன.  சீக்கிரம் வந்த வேலையை முடித்துக் கொண்டு திரும்பிப் போகாவிட்டால் கையேடுகளின் கோட்டையில் சிறைப்பிடிக்கப் படுவோம் என்று மேலெழுந்த பயத்தைத் கொச்சு தெரிசா அடக்கிக் கொண்டாள்

 

தன்னைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லி, தன் வேர்களைத் தேடி அம்பலப்புழை வந்ததையும் அங்கே ஒரு வாரம் தங்க முடியாமல் சர்க்கார் இடைஞ்சல் செய்ததால் அரசூர் வந்ததையும் அவள் சொல்ல, ஆதினமிளகி இரு கையும் உயர்த்தி அந்த இரு ஊர்ப் பெயரையும் முணுமுணுப்பாகச் சொல்லிக் கண்கள் மூடி இருந்தார். அவர் கண் திறந்து கனிவோடு கொச்சு தெரிசாவைப் பார்த்தபடி சொன்னார் –

 

என் கொள்ளுத் தாத்தனார் தினம் விடிகாலையில் வளர்ப்புப் பசுக்கள் நான்கைந்தை வீதி வீதியாக அழைத்துப் போய்க் கறந்து பால் விற்றாராம். ஒரு காலை நேரத்தில் அந்தணர் ஒருத்தரைச் சந்தித்தாராம். அவர் அம்பலப்புழையில் நடக்கவிருந்த திருமணத்துக்காக அரசூரில் இருந்து பயணப் பட்டவர். அந்த அந்தணர் தன் வீட்டு நவராத்திரி கொலு பொம்மைகளில் அச்சு அசலாக என் கொள்ளுத் தாத்தனார் போல் பச்சை முண்டாசோடு மாடு கறக்கும் ஆணின் சிறு களிமண் சிற்பம் உண்டென்றாராம். அந்தச் சிலையே நினைவாக அன்று முதல் அவர் பச்சை முண்டாசு கட்டத் தொடங்க, அதே அந்தணர் கனவில் வந்து பசுவைப் போற்றச் சொல்லியும், எள்ளுருண்டை படைத்து வணங்கிப் பகிர்ந்து கொள்ளச் சொல்லியும் உரிமையோடு கட்டளை இட்டார். சகலருக்கும் சகாயம் செய்கிற புத்தகங்கள் எழுதிப் பிழைக்கச் சொல்லியும் அன்போடு சொன்னாராம். அவர் சொன்னபடி வாரம் ஒரு பிடி அருகம்புல் கொடுக்க வீட்டுப் பின்புறத்தில் பசுவும், வாசல் நிலைப்படியில் பதித்த பசுவின் உருவமும், எழுத இப்படியான கையேடுகளும் உண்டு என்றார் வித்துவான் ஆதினமிளகி. எள்ளுருண்டை விடயமோ, அது மங்கலச் செயல் இன்மையால் வீட்டுப் பெண்கள் பலமாக எதிர்க்க, நின்று போய்விட்டது என்றார். வெள்ளை எள்ளை நெய்யும் வெல்லமும் தேங்காய்த் துருவலும் கலந்து பிடித்த சுவையான எள்ளுண்டைகள் தேவதைகளுக்கு உரியவை தான் என்றார் ஏக்கத்தோடு.

 

மற்றப்படி, இதெல்லாம் மூத்தோர் கொடை.

 

அவர் ஐயமறச் சொல்லி மறுபடி அம்பலப்புழை, அரசூர் என்று பெயர் விளித்து, பக்கத்தில் கையேட்டுக் குவியலைக் காட்டி வணங்க, கொச்சு தெரிசா ஒரு நிமிடம் மௌனம் அனுஷ்டிக்கக் கோரப்பட்ட பாவத்தோடு சாந்தமும் மன்றாடலும் கருணையும் முகத்தில் தெரிய இருந்து, தானும் அத்திசை நோக்கி வணங்கி, மெல்லத் தன் கைப்பையைத் திறந்தாள்.

 

கொச்சு தெரிசா அவரிடம் அளித்த பழைய காகிதங்களைப் பார்வையிட்டார் வித்துவான். ஜான் கிட்டாவய்யன் எழுதிய தமிழ்க் கீர்த்தனங்கள் ஆங்கில மற்றும் மலையாள எழுத்து வடிவில் இருந்த காகிதங்கள் அவை.

 

இந்தப் பாடல்களை எழுதிய உங்கள் முன்னோர் மிக நல்லவர். ஆனால் அவருடைய தமிழ்ப் புலமை சங்கடமடைய வைக்கிறது. உதாரணத்துக்கு கிறித்துமசு பாட்டு எழுதும் போது ஏசுவைச் சிசுபாலனே என்று விளிக்கிறார். சிசுபாலன் புராணத்தில் கண்ணனுக்கு எதிரியாக வந்து அவனால் அழிக்கப்படும் அரக்கன். ஏசுவுக்கு இந்தப் பெயர் ஒட்டாதது மட்டுமில்லை அபத்தமானதும் கூட. கல்வாரிக் கற்கள் மகிழக் கர்த்தார் பிறந்தார் என்று  எழுதியிருக்கிறார். கல்வாரி என்பது ஏசுவைச் சிலுவையில் அறைந்த இடம். பிறந்த குழந்தையிடம், நீ சாகப் போகும் இடத்தில் இருக்கும் கல் நீ பிறந்ததைக் கொண்டாடுகிறது என்று சொல்வது மகா அபத்தம், அதுவும் ஏசுபிரானிடம்.

 

அவர் நிறுத்தாமல் சொல்லிக் கொண்டு போக முசாபர் தூங்கியிருந்தான்.

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன