தாந்தோன்றியாய் இயங்கும் சக்கரவண்டிகளும் கும்பளங்காய் மஹாத்யமும்

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் வரிசையில் நான்காவதில் இருந்து அடுத்த சிறு பகுதி

==============================================================================

 

கொச்சு தெரிசா என்று தன்னை அறிமுகம் செய்து கொண்ட, தூர தேசத்திலிருந்து வந்த பெண்ணோடு ரேடியோ லைசன்ஸ் உத்தியோகஸ்தர் பேசுவதற்கு முன் பெருஞ் சத்தம் எழுப்பி கப்பி ரோடில் ஒரு சைக்கிள் தாறுமாறாக விழுந்தது. உடுப்பில் படிந்த செம்மண்ணைத் தட்டி உதிர்த்தபடி தரையில் இருந்து எழுந்த சைக்கிளோட்டி, உலகைக் கனிவாகப் பார்த்துப் புன்னகை செய்தபடி வண்டியை நிலை நிறுத்தினார்.

 

சக்கர வண்டிகள் நம்புதற்கு உரியவை அல்ல என்று அவரைப் பரிவோடு நோக்கியபடி ரேடியோ உத்தியோகஸ்தர் கூறினார். தன்னிடமும் அதே போல் தாந்தோன்றியான ஒரு மோட்டார் கார் இருந்தது என்று சொல்ல நினைத்த கொச்சு தெரிசா, இந்த நபர்களோடு உரையாடல் நீண்டால் அந்தத் தகவலைச் சொல்லிக் கொள்ளலாம் என்று நினைத்தவளாக, கதா பிரசங்கம் செய்கிற கனவானின் வீடு இது தானே என்று மீண்டும் கேள்வியை, சைக்கிளோட்டி வந்த தியாகராஜ சாஸ்திரி என்ற மத்திய வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் புரோகிதனிடம், இந்த முறை, அவள் சற்றே பழகிக் கொண்டிருக்கும் மலையாளத்தில் கேட்டாள்.

 

இங்கிலீஷ் புழங்கும் தேசத்துப் பெண் வந்திருக்க, ரேடியோ லைசன்ஸ் போன்ற அற்பமான சமாசாரங்களை வலியுறுத்துவதையும், அவள் பார்த்திருக்கப் பெட்டியுடைப்பை நடத்துவதையும் தவிர்க்கலாம் என்று மனதில் பட்ட லைசன்ஸ் உத்தியோகஸ்தர் கையில் ஏந்திய, ஊருணி நீர் நிரம்பிய செம்பு சகிதம் பந்தலுக்குத் திரும்ப நடந்தார். அந்தப் பாத்திரத்தில் இருந்து, சன்னமான குரலில் சுருள் சுருளாக வசனம் சொல்லி ஆசிர்வதிப்பது கேட்டது.

 

நல்லது, அப்புறம் வைத்துக் கொள்ளலாம் இதையெல்லாம் என்று அந்தக் கலத்தை நோக்கி அன்போடு சொல்லியபடி நடந்தார் லைசன்ஸ் உத்தியோகஸ்தர். அவரை வியப்போடு பார்த்தபடி நின்ற கொச்சு தெரிசாவிடம் தியாகராஜ சாஸ்திரி சொன்னார் –

 

அது கும்பளங்காய் மகாத்மியம் என்ற அபூர்வமான ஹாஸ்ய கிரந்தத்தில் வரும் வரிகளாகும்.

 

கொச்சு தெரிசா அதென்ன என்று தெரிந்து கொள்ளும் அக்கறை முகத்தில் தெரிய முன்னால் வந்தாள்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன