நான் இங்கிலாந்திலிருந்து வரும் கொச்சுதெரிசா. கதாப்ரசங்கம் நடப்பது இங்கேதானா?

 

கனமான குரலில் சிஷ்யகோடிகள் முன்னோடியாக வழக்கமாகப் பாடப்படும் தோத்திரப் பாடல்களைப் பாடி முடித்து ஒரு நிமிடம் இடைவெளி விட்டு பஞ்சாபகேச சிரௌதிகள் குரல் கொரகொரவென்று மெதுவாக ஒலிக்க ஆரம்பித்தது. இரண்டு நிமிடம் பேசி அது ஓய, பின்னால் பட்டுத் துணி விரிப்பில் பத்மாசனம் இட்டு அமர்ந்திருந்த சிஷ்யை தொண்டையைக்  கனைத்துக் கொண்டு கம்பீரமாக அவர் விட்ட இடத்தில் தொடங்கினாள்.

 

ரேடியோக் காரரின் முகம் பொறுப்பையும் உத்தியோகத்தையும் பிரதிபலிக்க அவர் நிமிர்ந்து படை வீரன் போல நின்றார். கையில் கிடாரங்காய் அந்தக் கம்பீரத்தை அதிகரித்ததே ஒழியக் குறைக்கவில்லை.

 

அவர் ஏதோ கேட்கவோ சொல்லவோ கையுயர்த்த, பந்தலில் பலமான மௌனம் நிலவியது.

 

அந்த ரேடியோ பெட்டிக்கு லைசன்ஸ் இருக்கிறதா?

 

அவர் தண்ணீர் நிரப்பிப் பூமாலைகளும் மாவிலையும் சார்த்தி வைத்திருந்த செம்பைச் சுட்டிக் காட்டிக் கேட்டார்.

 

அது ரேடியோ இல்லை என்று அவசரமாக யார்யாரோ எழுந்து நின்று கை காட்டியும், உட்கார்ந்தபடிக்குச் சுற்றுமுற்றும் திகைப்போடு பார்த்து ஆமோதிக்க ஆள் தேடியும் கூச்சலாகச் சொன்னார்கள். ரேடியோக்காரர் எல்லாக் குரல்களையும் அரசு நடவடிக்கையாக உடனே தடை செய்து தன் புன்னகையை மறுபடி அணிந்து கொண்டு விளக்கினார் –

 

மனிதர்களின் பேச்சு தேகத்தில் இருந்து அந்நியப்பட்டு வந்து ஒரு ஜனக் கூட்டத்துக்குக் கேட்க கிடைக்கிறது. இதுவும் ஒரு வகை வானொலி தான். அவசியம் இதற்கான லைசன்ஸ் கட்டியிருக்க வேண்டும்.

 

ரேடியோக் காரர் முன்னால் நகர்ந்து செம்பைக் கைப்பற்றக் கை நீட்ட கூட்டத்தில் இரைச்சல். அவர் கம்பீரமாக எல்லோரையும் திரும்பிப் பார்த்துக் திரும்பவும் கையமர்த்தினார். பள்ளிப் பிள்ளைகளை சத்தம் போடாமல் கைகட்டி வாய்பொத்தி இருக்க உத்தரவிடும் ஆசிரியர்களின் சைகைகள் அவை என்று கூட்டத்தில் யாரோ அறிவித்தார்கள்.

 

சர்க்கார் உத்தியோகஸ்தரை வேலை செய்ய விடாமல் தொந்தரவு கொடுத்தால் உங்கள் எல்லோரையும் பிடித்துச் சிறையில் தள்ளவும் எனக்கு அதிகாரம் உண்டு.

 

அவர் மிரட்டியபடியே தண்ணீர்ச் செம்பை எடுத்துக் கொண்டு வெளியே போனார்.

 

பேரிளம் பெண் ஒருத்தியும் கூடவே அவளுடைய வீட்டுக்காரன் என்று சொல்லத் தக்க விதத்தில் உயரமும் உடம்பு கனமும் கொண்ட ஒரு ஆணும் குதிரை வண்டி விட்டிறங்கி ரேடியோக் காரரை நோக்கி வந்தார்கள்..அந்தப் பெண் அவரை விசாரித்தாள் –

 

நான் கொச்சு தெரிசா. இங்கிலாந்தில் இருந்து வரேன். கதாபிரசங்கம் நடக்கிற் இடம் இதுதானா?

 

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன