காலண்டரைத் தொலைத்து விட்டுத் தினசரி பண்டிகை கொண்டாடும் வீடு

வாழ்ந்து போதீரே = அரசூர் நாவல்களில் நான்காவதில் இருந்து அடுத்த சிறு பகுதி

[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[[

கும்பளங்காய் மகாத்மியம் என்ற அபூர்வமான ஹாஸ்ய கிரந்தம்.

 

அந்த கிரந்தம் பற்றிப் பிற்பாடு விசாரித்துக் கொள்ளலாம் என்று முசாபர் பின்னால் இருந்து துரைமார்களின் தோரணையோடு கூடிய ஆங்கிலத்தில் சொல்ல, சாஸ்திரிகள் ஒரு வினாடி திகைத்து நின்றார். தன் ஆங்கிலம் தன் ஆகிருதிக்கு ஒத்து வராமல் லுங்கி கட்டிய துரை பிம்பத்தை உருவாக்குவதை எப்போதும் ரசிக்கத் தவறாத முசாபர், கொச்சு தெரிசாவிடம் கூறியது –

 

இந்த வீடாகத்தான் இருக்கும். இருட்டுகிற முன்பு உள்ளே போய்ப் பார்த்துட்டு வா. இங்கே தங்கியிருக்க விடுதி இருக்குமான்னு வேறே தேடணும்.

 

காலியாகிக் கொண்டிருந்த பந்தலில் ஓரமாக ஒரு மர நாற்காலியை இழுத்துப் போட்டு முசாபர் அமர, கொச்சு தெரிசா சற்றுத் தயக்கத்துடன் பந்தலை ஒட்டி இருந்த கட்டடத்துக்குள் போனாள். வட இந்தியப் பெண் போல பைஜாமா தரித்து, மேல் துணியால் தலையில் பதவிசாக முக்காடு போட்டிருந்த அவள் உள்ளே போகும்போதே வாசலில் மரப் பரணியில் வைத்திருந்த குங்குமத்தை எடுத்து நெற்றியில் வைத்தபடி நடந்தாள். முசாபர் அதைக் கவனித்திருந்தாலும் ஒன்றும் சொல்லியிருக்கப் போவதில்லை தான்.

 

தினசரி பண்டிகை கொண்டாடுகிற, காலண்டரைத் தொலைத்த வீடு போல அந்த இடம் இருந்தது. கூடை நிறைத்து இருந்த பூக்களின் வாசமும், சின்னதும் பெரிதுமான பாத்திரத்தில் பாலும், வைத்தியன் சொல்லி அனுப்பியபடி வாங்கி வைத்தது போல் தேனும், தட்டு நிறைய சர்க்கரை, இனிப்புப் பதார்த்தங்களும் பண்டிகைச் சூழலை அதிகப்படுத்தியது.

 

பனை ஓலைத் தடுக்குகளில் உட்கார்ந்திருந்த பஞ்சாபகேச சிரௌதிகளின் சிஷ்ய கோடிகள் உண்டியலில் சேர்ந்த சொற்பக் காசையும், பொருளாக வந்த காணிக்கையையும் கணக்கிட்டுப் புத்தகங்களில் கவனமாகப் பதிந்து கொண்டிருந்தார்கள். ராத்திரி ஒன்பது மணி அடிக்க  இன்னும் முப்பது நிமிடம் இருக்கிறது, இருபத்தெட்டு நிமிடம் இருக்கிறது என்று ஒருவர் சிரத்தையாக அறிவித்துக் கொண்டிருந்தார். ஒன்பது மணிக்கு இங்கே ஏதோ அற்புதம் நிகழப் போவதாக இருக்கும் என்று கொச்சு தெரிசாவுக்குத் தோன்றியது.

 

கொச்சு தெரிசா கைப்பையில் இருந்து நூறு ரூபாய் நோட்டையும், ஒரு பிரிட்டீஷ் பவுண்ட் நாணயத்தையும் காணிக்கை வட்டிலில் போடப் பக்கத்தில் இருந்த பெண் சிஷ்யை எழுந்து நின்று என்ன மொழி என்று புலனாகாத கோரிக்கையாகவோ பிரார்த்தனையாகவோ ஓங்கிய குரலில் சொல்லி, இன்னொரு தடுக்கை அவளருகில் பரத்தி  கொச்சு தெரிசாவை இருக்கச் சொன்னாள்.

 

கதை சொல்லி ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறாரா?

 

கொச்சு தெரிசா கேள்விக்கு ஒரு சிரிப்பே பதிலாக வந்தது. சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு வாசலில் விட்டு விட்டு உள்ளே வந்த தியாகராஜ சாஸ்திரிகளை, உள்ளே இருந்தவர்கள் தன்னை வரவேற்றது போல் முகத்தில் மகிழ்ச்சியும் சிரிப்புமாக வரவேற்கவில்லை என்பதை கொச்சு தெரிசா கவனித்தாள்.

 

காலட்சேபக் காரர் போய்ச் சேர்ந்து ஒரு வருஷத்துக்கு மேலே ஆச்சே. போன மாசம் தான் ஊரோடு உக்காந்து எள்ளும் தண்ணியும் ஊத்தி பிண்டம் பிடிச்சு வச்சானது. அப்புறமா செம்புலே வரார், பைப்பிலே வரார்னு இவா ஏதோ சொல்லிண்டு இருக்கா.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன