அப்ஸரா ஆளி இந்தர்புரி துன் காலி – இந்திரபுரியிலிருந்து வந்த தேவதை

வாழ்ந்து போதீரே = அரசூர் நான்கு நாவல் தொகுதியின் நான்காம் நாவலில் இருந்து

அவள் ஈர்க்குச்சி போலிருந்த கைகளால் அகல்யாவின் கன்னத்தில் வருடியபடி பாட ஆரம்பித்தாள் –

 

அப்ஸரா ஆளி இந்த்ரபுரி துன் காலி

 

அகல்யா ஷாலினியை மெதுவாக அணைத்துக் கொண்டாள். ஷாலினி பாட்டிலேயே மூழ்கி,சட்டென்று விலகி நின்றாள். லாவணி தொடர, ஒரு கால் இழுத்திருக்க மற்றதை மட்டும் ஊன்றி திரும்பத் திரும்ப இந்திரபுரி விட்டு அப்சரஸ் வந்த அதிசயத்தைப் பாடிக் கொண்டிருந்தாள்.

 

சரி, அப்சரஸுக்கு வழி விடு அம்மா.

 

திலீப் ஷாலினித்தாய் தோளில் அன்போடு அணைத்தபடி சொல்லி விட்டு அகல்யாவைப் பார்த்தான்.

 

அகல்யா அவன் கையை இறுகப் பற்றிக் கண் காட்டினாள். இருவரும் மாடிப்படி வளைவு ஈரத்தில் ஷாலினியின் கால் தொட்டு வணங்கினார்கள்.

 

நமஸ்காரம் பண்ணனும். இங்கே எடம் இல்லே. உள்ளே வரட்டும்

 

அகல்யா திலீப்பிடம் சொல்லிக் கொண்டிருக்க, படிகளில் தாய் தாய் என்று யாரோ விளித்தபடி இறங்கி வரும் ஓசை. அகல்யா நிமிர்ந்து பார்த்து உங்க பாட்டித் தள்ளையா என்றாள்.

 

அம்மாவை கவனிச்சுக்க நான் போட்டு வச்சிருக்கற நர்சிங் ஆர்டர்லி. ரேணுகாம்மா.

 

ரேணுகா, ஏண்டி ரேணுகா

 

ஸ்தூல சரீரத்தோடு மத்திய வயசு ஸ்திரி ரேணுகா இறங்கும்போதே அவளை அழைத்தபடி மேலே இருந்து வந்த குரல் யாரென்று அகல்யாவுக்குத் தெரிந்தது. திலீப் அடிக்கடி பெருமையோடும் வருத்தத்தோடும் சொல்கிற கற்பகம் பாட்டியம்மா. பெரிய மனுஷியாக வாழ்க்கை பூரா வாழ்ந்து கற்பூரமாக எரிந்து போனபடி கடைசித் துளியிலும் பிரகாசிக்கும் மகா மனுஷி என்று திலீப் அடிக்கடி சொல்வான்.

 

நிமிர்ந்து பார்த்தபோதே அவளுடைய கம்பீரமும் இந்த வயதிலும் உடம்பில் பிடிவாதமாகத் தங்கி இருக்கும் சௌந்தர்யமும் மனதை ஈர்க்க, மழைச் சாரல்  புகையாகப் படிந்து இறங்கும் ஒடுங்கிய படிகளில் ஊறும் நத்தைகளை ஜாக்கிரதையாக விலக்கி மெல்லப் படி ஏறினாள் அகல்யா.

 

சுமந்து வந்த கான்வாஸ் பையும் லெதர் பேக்கும் அவள் நடைக்குத் தடை சொல்லவில்லை. பின்னாலேயே ஷாலினியைத் தாங்கிப் பிடித்தபடி திலீப் வந்து கொண்டிருக்க, ரேணுகா உரக்கக் கேட்டாள் –

 

திலீப் தம்பி, கல்யாணம் ஆயிடுச்சா? எப்போ?

 

தடதடவென்று கட்டிடத்தில் சகல குடித்தனங்களிலும் மழைக்காகவும், ஞாயிறு விடுமுறைக்குக் கிடந்து உறங்கி ஓய்வெடுக்கவும் அடைத்திருந்த கதவுகள் எல்லாம் திறந்தன.  சந்தோஷமாக வரவேற்கிற குரல்கள் முன்னால் வர, ஆணும் பெண்ணுமாக அடுத்து அடுத்து வந்ததைப் பார்க்க அகல்யாவுக்கு மனம் கொள்ளாத மகிழ்ச்சி. அவள் இருப்பிடத்திலும் இப்படி நடந்திருக்குமா என்று தெரியவில்லை அவளுக்கு. அப்பா அவளை நுழைய விட்டிருப்பாரா?

 

அப்பா காலையில் கோவிலுக்கு வந்திருந்தார். படபடப்பு இல்லாமல் கையில் வைத்திருந்த வாழைப்பழச் சீப்பை அவளிடம் கொடுத்து விட்டுத் தரையில் உட்கார்ந்து கொஞ்சம் அழுதார். அவர் இந்த வருடக் கடைசியில் ரிடையர் ஆவதால், அகல்யா இல்லாமல் வீடு எப்படி இயங்கும் என்று கேட்டார்.

 

ஆர்ய சமாஜ்னு தப்பாச் சொல்லிட்டா. அங்கே போய் தேடிப் பார்த்துட்டு இங்கே வர நேரமாயிடுச்சு. செம்பூர்லே கோவில் இருக்குன்னே ரொம்பப் பேருக்குத் தெரியாது.

 

இந்தக் கடைசி வாக்கியத்தை கழுத்தில் மாலையோடு வந்த திலீப்பிடம் ஒரு தகவல் சொல்கிற குரலில் சொன்னார். சட்டையைப் பிடித்து இழுத்துக் கூச்சல் போட்டு சண்டை பிடிக்கும் ஒரு முதியவரைக் கற்பனை செய்து வந்திருந்த திலீப்புக்கு அந்த சாத்வீகமான மனிதர் பெரிய சங்கடத்தை அளித்தார். அவரையும் அகல்யாவின் அம்மாவையும் இரண்டு தம்பிகளையும் அவளுடைய மாதம் ஐநூறு ரூபாய் வருமானத்தில் இருந்து பிரித்து நிர்க்கதியாக நிற்க வைத்ததாகத் தன் மேலேயே கோபம் வந்தது அவனுக்கு.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன