மும்பையின் அதிகாரபூர்வ தென்மொழி பாலக்காட்டுத் தமிழ் என்றபடி

வாழ்ந்து போதீரே -அரசூர் நாவல் நான்காவது= சிறு பகுதி வரிசையாக வருவது தினம்

ஐயோ, கஷ்டம். ஆத்துக்குக் கூட்டிண்டு வர பொண்டாட்டி கையை எடுத்து ரொம்பக் காரியமா யாராவது கஷ்கத்திலே திணிச்சுப்பாளா? எட்டு ஊருக்கு திவ்விய வாசனையா இருக்கு. குளிச்சேளோ இன்னிக்கு?

 

அவள் சிரித்ததைப் பார்த்து அவனுக்கும் சிரிப்பு குமிழிட்டு வந்தது. திலீப்புக்கு இரண்டு விஷயங்கள் மனசிலானது. முதலாவதாக, இன்று காலை எந்தத் தடங்கலும் இல்லாமல் நடந்த கல்யாணமோ, அது முடிந்த நிச்சயத்தால் அவன் மேல் வந்து சேர்ந்த உரிமையோ அவளை சுபாவமாகச் சிடுசிடுக்கவும் கண்டிக்கவும் வைக்கிறது. ரெண்டாவது, அவள் பேசுகிற தமிழில் டோம்பிவிலி பிராமணக் கொச்சை  ஏறியிருக்கிறது.  உரிமை இன்னும் கொஞ்சம் நாளில் அவனை இடுப்பில் முடிந்து கொள்கிற சுவாதீனமாக மாறுமோ என்னமோ, அந்தக் கொச்சை அரைகுரை மலையாளம் வண்டலாகப் படிந்த பாலக்காட்டு பாஷையாக அடுத்த வினாயக சதுர்த்திக்குள் முழுசாக மாறிவிடும் என்று திலீப் அறிவான்.

 

இதானே நம்ம ஆ’ம்?

 

அகல்யா லெதர் பேக்கை தோளை உயர்த்திப் பின்னால் தள்ளியபடி திலீப்பைக் கூர்ந்து பார்த்துக் கேட்டாள். ஆமா என்று அவள் கை விரல்களை இறுக்கிய அவன் கை சொன்னது.

 

சர்வ மங்கள் சாலில், பழைய தினசரிப் பத்திரிகைப் பக்கமும், வாழைப் பழத் தோலும், வாழைச் சருகும், முட்டை ஓடும் மிதக்க, மழைத் தண்ணீர் கலங்கிச் சூழ்ந்த இரண்டாவது கட்டிடம். அங்கே முதல் மாடி. பால்கனியில் வைத்த  டால்டா டப்பாவில் ஓங்கி உயரமாக ஏதோ செடி. அகல்யா அந்தக் குடியிருப்பில் எதிர்பார்த்த மெல்லிய ஆர்மோனியச் சத்தம் தான் கேட்கவில்லை.

 

படி இங்கே இருக்கு.

 

தண்ணீர் வழிந்து கொண்டிருந்த குறுகிய படிக்கட்டைக் காட்டினான் திலீப். அங்கே பெரிய நத்தை ஒன்று படிகளுக்கு இடையே  ஊர்ந்து கொண்டிருந்தது. கீழே இன்னும் இரு சிறு நத்தைகள் தரையோடு ஒட்டியபடி கிடந்தன. மாடிப் படி ஏறும் வளைவு இருட்டில் இருந்து மராட்டியில் ஒரு குரல் குதூகலமாக வந்தது.

 

திலீப் மயிலோடு வந்துட்டான்.

 

அகல்யா திரும்பித் திலீப்பைப் பார்த்தாள். ஆமாம் என்று தலையசைத்தான். அம்மா தான்.

 

அவன் குடையை மடக்குவதற்குள் குனிந்து உள்ளே புகுந்து அகல்யாவின் கண்ணுக்கு மிக அருகே தன் சோர்ந்த கண்கள் நிலை குத்தி நிற்க, ஷாலினி சத்தமாக அறிவித்தாள் –

 

இந்த மயில் தான் இத்தனை நேரம் ஆடிட்டு இருந்தது இங்கே. மழை, ஈரம் எதுவும் பொருட்டில்லே இதுக்கு. எனக்காக ஆடறதுக்கே வந்திருக்காம். போய்ட்டு அப்புறம் வா தூங்கணும்னேன். பாரு, கேக்காம உன்னோட வந்துடுத்து.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன