சாபுதானா வடை மணக்க ஒரு தொடர் திருமண வாழ்த்து

வாழ்ந்து போதீரே – அரசூர் நான்கு நாவல் தொகுதியில் நான்காம் நாவலில் இருந்து

]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]]

கல்யாணம் ஆச்சா?

 

அவர் ஆவலோடு விசாரிக்க இல்லையென்றான் திலீப். குருக்கள் வந்துண்டிருக்கார் என்று அவன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே காக்கி பேண்டும் டெர்லின் சட்டையுமாகப் பரபரவென்று உள்ளே வந்தார் ஒரு இளம்  வயசுக்காரர், திலீப் வயது இருக்கலாம், அல்லது நாலைந்து அதிகமாக இருக்கலாம் அவருக்கு. சுவர் ஓரமாகப் போய் உடுப்பை அவிழ்த்தபடி மேலே வேஷ்டியை அணிந்து கொண்டு தலையைச் சிறு உச்சிக் குடுமியோடு முடித்து முப்பது வினாடி நேரத்தில் குருக்கள் ஆனார் அவர். விழுத்துப் போட்ட துணிகளை சீராக மடித்துக் கொடியில் போட்ட பிறகு நெற்றி நிறைய வீபுதியும் வாயில் அஷ்டோத்திரமுமாக சந்நிதிக்கு வந்தார்.

 

வரேளா?

 

திலீப் இதோ என்று சாடை காட்டி, அகல்யா அப்பாவையும் கூட வந்த அவள் சித்தப்பாவையும் அருகே அழைத்தான்.

 

அகல்யா அப்பாவை விட திலீப் குறைவான நேரத்தில், சொல்லப் போனால் உடனேயே விஷயத்துக்கு வந்து விட்டான். அகல்யா விருப்பம் போல் அவளுடைய சம்பாத்தியத்தைச் செலவு செய்யலாம் என்று சம்மதம் சொன்னான்.

 

அவ எங்கே இருப்பா?

 

இது ஒரு கேள்வியா சார். இந்தச் சால் விட்டா அந்தச் சால். அந்தச் சால் விட்டா இது. டால்டா டப்பாவிலே தண்ணியோட காத்திருக்கற டாய்லெட் ரெண்டு இடத்திலேயும் உண்டு

 

மாப்பிள்ளே, என்ன கல்யாண நேரத்துலே கக்கூஸ் பத்தி எல்லாம்.

 

அந்தக் கல்யாணம் மழைக்கு நடுவே சிரித்துக் கொண்டே நடந்து முடிந்தது காலையில் தான். குருக்கள் கூட தாலி எடுத்துக் கொடுக்கும் போது சிரித்துக் கொண்டே இருந்தார். மனதில் இறுக்கமாக உணர வைக்கும் மழை நாளில் சிரிக்க ஒரு சந்தர்ப்பத்தைத் தேடியிருந்த அவருக்கு அதற்கான சூழ்நிலை ஏற்பட்டதாக அவர் நினைத்திருக்கலாம்.

 

திலீப் மெல்ல விசாரிக்க, அவர் அகல்யாவைத் தவிர்த்துத் திலீப் காதில் மட்டும் விழ, ரகசியம் பேசும் குரலில் அவனிடம் சொன்னார் –

 

குளிச்சுட்டுத் துவட்டின துண்டை இடுப்பிலே கட்டியிருந்தேனா. லோக்கல் டிரெயின் பிடிக்கற அவசரத்துலே அது மேலேயே பேண்ட்டைப் போட்டுண்டு வந்துட்டேன். இங்கே உங்களைக் காக்க வைச்சதுலே டென்ஷன். சட்டுனு ஏண்டா இடுப்பு கனமா இருக்குன்னு கையை வச்சுப் பாத்தா

 

அவர் இன்னும் சிரிக்க நிறைய இருந்தது. திலீப்பும் கல்யாணத்துக்கு வந்த அவன் சகாக்கள் ரெண்டு பேரும் சிரிக்க, அகல்யா அதற்காக இப்போது சர்வமங்கள் சாலில் சிரித்தாள்.

 

ரொம்ப தெய்வீகமா சிரிக்கறா இந்த மத்ராஸ் சோக்ரி

 

அண்டை அயலில் இருந்து பித்தளைத் தாம்பாளத்தில அவசரமாக மஞ்சள், குங்குமத்தைக் கரைத்து ஆரத்தி செய்து எடுத்து வந்த பெண்கள் தம்பதியருக்கு ஆரத்தி சுற்ற அப்ஸரா ஆளி என்று மழையோடு திரும்பத் திரும்பப் பாடிக் கொண்டிருந்தாள் ஷாலினி. அந்தப் பெண்களும் நேர்த்தியாக அவளோடு பாட ஆரம்பித்தார்கள். சிக்கல் சிடுக்கு இல்லாத வாழ்க்கை இவர்கள் எல்லோருக்கும் வாய்த்திருக்கும் என்று ஒரு வினாடி சந்தோஷமாக நம்பினாள் அகல்யா. அவளுக்கும் அது லாவணியின் துள்ளி வரும் குதூகலத்தோடு சதா வாய்க்கட்டும். அந்தப் பெண்கள் அதைத்தானே பாடினார்கள்.

 

ஆரத்தி எடுத்தவர்களுக்கு எல்லாம் சட்டை பாக்கெட்டில் தேடித் தேடி ஐம்பது பைசாவும் ஒரு ரூபாயுமாகத் தட்டில் போட்டான் திலீப்.

 

கஞ்சூஸ். அண்ணி கிட்டே கேட்டு வாங்கிப் பத்து ரூபா ஆளாளுக்குப் போடு.

 

பக்கத்துக் குடியிருப்புப் பெண் செல்லமாக மிரட்டி, அகல்யாவின் முகவாயை வருடி ஜவ்வரிசி வடை சாப்பிட்ட வாடையோடு அவள் கன்னத்தில் முத்தமிட்டாள். அப்சரா வந்த ஆரத்திப் பாடல் தொடர, தோளில் மாட்டிய பையில் இருந்து இன்னும் கொஞ்சம் பணம் எடுத்து திலீப்பிடம்  கொடுத்தாள் அகல்யா. வாழ்த்துகிற இந்தப் பெண் இன்னும் நிறைய ஜவ்வரிசி வடை உண்டு மங்களம் பொங்கி வழிந்து ததும்ப நூறாண்டு இருக்கட்டும்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன