விஸ்வரூபம் – புது நாவல்

 

விஸ்வரூபம் ஒரு தொடர். – அரசூர் வம்சம் நாவலைத் தொடர்ந்து வருகிற மற்றொரு நாவல். இதுவும் கடந்து இன்னொன்றும் வரும். பகிர்ந்து கொள்ள ஏராளமாக இருக்கிறது.

அரசூர் வம்சம் காட்டும் காலச் சூழல் 1850-1890 வரை என்று ஒரு சவுகரியத்துக்காக (என் சவுகரியம், உங்கள் சவுகரியம்) வகுத்துக் கொண்டால், விஸ்வரூபம் இருபதாம் நூற்றாண்டு பிறக்க ஒரு வருடம் முன்னால் தொடங்குகிறது. தமிழ்நாடு, கம்யூனிசத்தின் விதைகள் நிவர்த்தன சமரத்தில் விதைக்கப்பட்ட மலையாள பூமியான குட்டநாடு இவற்றோடு விக்டோரியா ம்கராணி காலத்து லண்டன், ஸ்காட்லாந்து என்று இது நிகழ்கிற தளம் கொஞ்சம் போல் முந்தைய நாவலிலிருந்து வித்தியாசமானது. விஸ்வரூபத்தில் மாந்திரிக யதார்த்தம் வ்ருமா என்று தெரிந்துகொள்ள நானும் ஆவலாக இருக்கிறேன். முன்னோர்கள் சாவகாசமாக அதைச் சொல்வதாக வாக்களித்திருக்கிறார்கள். ஒரு சுவாரசியமான கதை சொல்ல வேண்டும் என்று மட்டும் கட்டாயப்படுத்தினார்கள். சரி என்று சொல்லிவிட்டேன்.
அரசூர் வம்சம் தமிழில் கொஞ்சமாகவும் ஆங்கில மொழிபெயர்ப்பில் அதைவிடக் கொஞ்சம் கூடுதலாகவும் பேசப்படுகிறது என்ற மகிழ்ச்சியே அதன் தொடர்ச்சியாக விஸ்வரூபத்தை எழுதத் தூண்டியது. இந்தத் தூண்டல் உருவம் மாறும்போது இந்தப் படைப்பு முடிந்து அடுத்தது தொடங்கும். இப்போது இதை இங்கே தொடங்கலாம்.

கிருஷ்ணார்ப்பணம்.

(விஸ்வரூபம் நாவலின் முதல் இரண்டு அத்தியாய்ங்கள் ‘வார்த்தை’ ஆகஸ்ட் 2008 இதழில் பிரசுரமாகியுள்ளன.

தொடர்ந்து வாராவாரம் இப்புதினம் திண்ணை இணையத் தளத்தில் பிரசுரமாகும் – http://www.thinnai.com/)

—————————————————————————————–

விஸ்வரூபம் – அத்தியாயம் ஒன்று இரா.முருகன்

வெள்ளம்.

மூடிய கண்ணுக்குள் பச்சை வாடையோடு வெள்ளம் மெல்ல அலையடித்து விளிம்பு உயர்கிறது. குளம் விரிந்து விரிந்து நீளமும் அகலமும் ஆழமும் கூடிக் கொண்டே வர நடேசன் அதில் ஒரு துரும்பாக அடித்துப் போகப்படுகிறார். போகிறது எங்கே என்று தெரியவில்லை. இயக்கம் மட்டும் சீராக நடந்தபடி இருக்க, பழைய நிலைக் கதவு போல் நினைவு இறுக்கமாக அடைத்துத் தாழ்போட்டுக் கொள்கிறது. இருட்டு ஒரு பொதியாகச் சரிந்து விழிப் படலில் கருமையை அழுத்தமாக அப்புகிறது. வெள்ளத்தின் பச்சை வாடை நாசியில் அப்பி இருக்க, இந்த இருட்டுக் கருமையைப் பாளம் பாளமாகக் கடித்துச் சுவைத்து உள்ளே இறக்கும்போது அப்பு மாராரின் சோபான சங்கீதச் சத்தம் கைக்கு அருகே பிடி கூடாமல் மிதந்து வருகிறது.

வந்தே முகுந்த ஹரே ஜெய ஷவ்ரே

ஏய் நடேசன். தியானமா இல்லே உறக்கமா?

மேல்சாந்தி உரக்க விசாரிக்கிற சத்தம். நடேசன் கண் திறந்தபோது நடுக் குளத்தில் அவர் மட்டும் இருந்தார். குளப்படிகளில் ஏறி சந்தியாகால பூஜைக்கு நடை திறக்கக் கோவிலுக்குப் போய்க் கொண்டிருந்த மேல்சாந்தியின் பின்புறம் அவர் பார்வையில் பட்டது. சந்நிதியிலும் சந்திக்க வேண்டிய பிருஷ்ட பாகம் அது. இடுப்பு முண்டோடு கூட ஒரு கோணகம் உடுத்த மாட்டாரோ திருமேனி? கிருஷ்ண பகவானே கூப்பிட்டுச் சொன்னாலும் அது என்னமோ நடக்கப் போகிறது இல்லை.

நம்பூதிரி கோமணம் கிடக்கட்டும் என்று நடேசன் கரைக்கு வந்தபோது மடக்கி வைத்த குடைக்கு அடியே கைக் கடியாரத்தைத்தான் முதலில் தேடினார். இரண்டு ஓரங்களும் நசுங்கி நீண்டிருந்த அந்தக் கடியாரம் இதுவரை துல்லியமாக நேரம் காட்டத் தவறியதேயில்லை. பகல் மூன்று மணிக்குக் குளத்தில் இறங்கும் முன்னால் நேரம் பார்த்துவிட்டுத்தான் கழற்றிக் கரையில் வைத்திருந்தார் நடேசன்.

தலையில் இருந்து வழிந்த நீரைப் புறங்கையால் துடைத்துக் கொண்டு கடியாரத்தை உற்று நோக்கினார். நேரம் சரியாக மூணு மணி ஐந்து நிமிடம்.

ஐந்து நிமிடத்தில் கரைந்து போன யுகம் இன்னும் பச்சை வாடையோடு குளத்தில் மிச்ச சொச்சமாக அலையடித்துக் கொண்டிருந்தது. மேல்சாந்தி குளிக்கக் குளத்தில் இறங்கிக் கொண்டிருந்தார். அப்போ, குளித்துக் கரையேறி நடை திறக்கப் போனது?

நடேசன் கண்ணை மூடி குளக்கரையில் கோயிலைப் பார்க்க நின்றார்.

ஏய் நடேசன், தியானமா இல்லே உறக்கமா?

மேல் சாந்தி விசாரிக்கும்போது கோயில் கதவுகளின் முன் அப்பு மாரார் எடக்கா மீட்டியபடி பாட ஆரம்பித்திருந்தார்.

வந்தே முகுந்த ஹரே ஜெய ஷவ்ரே

நடேசன் தலையைக் குலுக்கிக் கொண்டார். சிரிப்பு உதட்டு ஓரத்தில் எட்டிப் பார்த்து தைரியமடைந்து மழை இரைச்சலோடு போட்டி போட்டபடி குதித்து வந்தது.

கிருஷ்ணா. இது என்ன விளையாட்டு. காலத்தை நீட்டியும் குறுக்கியும் என்னைச் சுத்தி இலவம் பஞ்சு மாதிரிப் பொதிஞ்சு வச்சு விளையாட நான் தானா உனக்குக் கிட்டினது?

ஈர மணல் காலில் ஒட்டி விலகி மறுபடி ஒட்ட அவர் கோவில் வாசலுக்கு வந்தபோது நடை திறந்து மணிகள் ஆரவாரமாக முழங்கும் சத்தம் மழையை அடக்கிக் கொண்டு உயர்ந்து வெளி எங்கும் வியாபித்தது.

மஞ்சள் தீபத்தின் இதமான வெளிச்சத்தில் சந்தனமும் முல்லையும் மணக்க மணக்க உள்ளே சிரிக்கிற கிருஷ்ணன். கிருஷ்ண சுவாமி. அம்பாடிக் கண்ணன்.

வா. இப்பவே இங்கே வந்துடு. என் காலடியிலே துகளுக்குள்ளே சிறு துகளுக்குள்ளே இன்னும் சிறிய துகளில் ஒரு அணுவாக உயிரை ஒட்டி வைத்துக் காலத்தைக் கரைத்து வளைத்து போதமில்லாமல் போய்விடு என்கிறான் அவன்.

ஆமா, உன் கையிலே அந்தக் கடியாரம் ஏன் இப்படி நசுங்கி இருக்கு? சந்தியாகாலம் தொழுதானதும் இப்படியே இறங்கி அம்பலத்துக்கு படிஞ்ஞாறே நடையில் மணிக்குட்டன் கடியார ரிப்பேர்க் கடையில் சரி பண்ணிட்டு வா.

கிருஷ்ணா உன் காலடியிலே அழிந்து போறபோது கடியாரம் எல்லாம் எதுக்கு?

உனக்குத் தெரியாதுடா நடேசா. சொன்னாக் கேளு. மணிக்குட்டன் கடை. உடனே போ. அவன் சோம்பேறி. கடையை எடுத்து வச்சுட்டு வீட்டுக்குத் தூங்கப் போயிடுவான். கிரமமா ராத்திரி ஏழு மணி சுமாருக்கு நித்திரை போறவன் அவன்.

அம்பல நடை அடைத்தது. உள்ளே மேல் சாந்தி பூஜையை ஆரம்பித்து விட்டார். கடியாரம் ஒக்கிட்டு வரும்போது அவருக்கும் ஒரு அம்பலப்புழை கோணகம் வாங்கி வந்து கொடுக்கலாமா? கிருஷ்ணன் சொன்னால் செய்யலாம். கோணகம் விலை அதிகம். பட்டுத் துணி. காசு வேணும் அதுக்கெல்லாம். கிருஷ்ணன் தரணும்.

நடேசன் நிதானமாக அடியெடுத்து வைத்து பிரதிட்சணம் வந்தார். சின்னச் சின்னதாக மழை ஈரத்தில் குளிர்ந்து கிடந்த கற்கள் நோவு கொடுக்காமல் அவற்றை விலக்கி நடக்க முழு நினைப்பையும் செலுத்தும்போது வயிறு முணுமுணுத்துக் கொண்டிருந்தது.

என்னையும் கவனியேண்டா பட்டி. நானும் கிருஷ்ணன் தான்.

விடிகாலையில் ஏகாம்பர அய்யர் காப்பிக் கடையில் ரெண்டு இட்டலியும் கொத்துமல்லித் துவையலும் சாப்பிட்டுக் கிளம்பிய நாள் இது. வழக்கமாக நடக்கிறதுதான். மழையோ தணுப்போ மீன மாசத்துச் சூட்டில் நாலு திசையும் எரியும் வெய்யிலோ, ஏகாம்பர அய்யர் காப்பிக்கடை அடைத்த நாளே கிடையாது என்பதால் இதுவரை இந்த ஏற்பாடு முடங்கவில்லை.

காலையில் பலகாரம் முடித்து அம்பலப்புழை முன்சீப் கோர்ட்டில் நுழைகிற வழக்கம். அது மட்டும் இன்றைக்கு நடந்தேறவில்லை.

நடேசன் அங்கே போனார்தான். வாதியும் பிரதிவாதியும் சாட்சியுமாக ஜனக்கூட்டம் அங்கே பரபரத்துக் கொண்டு இருந்ததும் உண்டுதான், ஆனால் இன்றைக்கு ப்ளீடர்கள் யாரும் வந்திருக்கவில்லை. ஜட்ஜ் வேலாயுதன் நாயர் மாத்திரம் கண்ணைக் கவிந்து கொண்டு வந்து தட்டுத் தடுமாறி கோர்ட்டில் நுழைந்து ஆள் இல்லாத கோர்ட்டை ஐந்து நிமிடம் பார்த்துக் கொண்டிருந்துவிட்டு பங்கா இழுக்கிற கோலப்பனைத் தேடினார்.

எடோ கோலப்பா, கச்சேரி இன்னிக்கு உண்டுங்கறது உன் புத்தியிலே தட்டுப்படலியோ?

நடேசன் தான் அதைக் கேட்டுவிட்டுக் கோலப்பனைத் தேடி சேம்பருக்கு உள்ளே நடந்து பின் தோட்டத்தில் புகுந்தார். சாப்பிட்டுக் கொண்டிருந்த கோலப்பனை எழுப்பிக் கூட்டி வருவதற்குள் ஜட்ஜ் குரிச்சியில் உட்கார்ந்தபடிக்கே தூங்கிப் போயிருந்தார்.

வக்கீல்கள் வராததால் கோர்ட் நடக்காமல் போன ஐந்தாம் தினம் இன்றைக்கு.

நடேசனுக்கு காந்தி மேல் ஏகத்துக்குக் கோபம் வந்தது. அந்த மனுஷன் தலைகாட்டியதற்கு அப்புறம்தான் இதெல்லாம் கோலாகலமாக நடந்தேறிக் கொண்டிருக்கிறது. பிள்ளைகள் பள்ளிக்கூடம் போவதில்லை. கயிற்றுத் தொழிலாளிகள் கயிறு திரிக்கக் கூட்டமாகக் கிளம்புவதில்லை. வக்கீல்கள் கோர்ட் கச்சேரி படியேறுவதும் இல்லை. அதற்கெல்லாம் நேரம் இல்லாமல் கொடி பிடித்துப் போய் இரைச்சல் இடுகிறார்கள். காக்கி உடுப்பும் தொப்பியும் வைத்த சங்கனும் பங்கனும் சர்க்கார் கொடுத்த போலீஸ்கார வேஷத்தில் தடதடவென்று ஓடிவந்து கொடியைப் பிடுங்கிக் கிழித்துப் போடுகிறார்கள். அவர்களோடு வம்பு வளர்த்துக் கொண்டு வக்கீல்களும் பிள்ளைகளும் ஜெயில் வாசலை மிதிக்கிறார்கள். பிள்ளைகள் சாயங்காலம் வீட்டுக்கு வந்து சேர்கிறார்கள். மற்றவர்கள் பத்து நாளோ பதினைந்து நாளோ உள்ளே இருந்து திரும்பி வருகிறார்கள். திரும்பக் கொடி தைக்க ராரிச்சன் துன்னல் கடை என்று பலகை எழுதித் தூக்கிய தையல் கடையில் காத்திருக்கிறார்கள்.

யாரோ எங்கேயோ காத்திருக்கட்டும். அவர்கள் எல்லோரும் கமிட்டி போட்டு தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றி, காந்தியையும், கடலைக்காய் கறியையும் வாரக் கடைசி ஒழிவு தினத்தில் வெளிச்செண்ணெய் புரட்டிக் குளித்த பகல் பொழுதுக்கு மாற்றி வைத்துவிட்டு, மற்ற நாளில் விதிக்கப்பட்ட கர்மங்களைச் சிரத்தையாகச் செய்து வரக் கூடாதா? பிள்ளைகள் பள்ளிக்கூடத்துக்குப் போகாவிட்டாலும் கூட ஒன்றும் குடி முழுகிவிடாது. இந்த வக்கீல்கள்?

அழிச்சாட்டியமாக இப்படி கோர்ட் பக்கம் போகமாட்டேன் என்று வீம்பாக வக்கீல்கள் கிளம்பினால், நடேசனின் மதியச் சாப்பாட்டில் இல்லையா அந்தத் தீர்மானம் திடமாக விழுந்து நசிப்பிக்கிறது? வக்கீல் இல்லாத கோர்ட்டில் நடேசன் போன்ற குமஸ்தன்களுக்கு என்ன வேலை? வேலை இல்லாத குமஸ்தன் வயிறு காயாமல் எப்படி இருக்கும்? அம்பலக் குளத்தில் முழுகியும், சந்தியாகாலம் தொழுதும் மனசும் கண்ணும் நிறைந்ததும் வயிறு தன்பாட்டில் கூக்குரல் இட ஆரம்பித்து விடுகிறது. பகவான் என்னடா என்றால் கடியாரக் கடைக்குப் போகச் சொல்கிறான். வெள்ளைக்காரனை கிளம்பி வந்த தேசத்துக்கே போகச் சொல்லியிருக்கலாம் அவன். வக்கீல்களையாவது பகல் நேரத்தில் சம்போகத்தில் ஈடுபடாமல், கோர்ட் கச்சேரி பக்கம் அவ்வப்போது நடமாட வைத்திருக்கலாம். நடேசனை பிளீடர் ஆக்காமல் போனதும் அவன் செய்த தப்புதான் என்று தோன்றுகிறது. இதெல்லாம் அவன் இலாகா இல்லாத பட்சத்தில் ஏகாம்பர ஐயரையாவது காசு வாங்காமல் நடேசனுக்கு மதியம் சோறு போடச் சொல்லியிருக்கலாம். சோற்றுக்கடை பாண்டிக்காரப் பட்டன் மூலம் வயிற்றுக்குப் படியளக்கிறது அந்த அம்பாடிக் குட்டனுடைய பிரதான ஜோலி இல்லையோ?

ஏகாம்பர ஐயர் ஓட்டல் வாசலில் ஒரு வினாடி நடேசன் கால் நின்றது. ஐயர் கல்லாவில் உட்கார்ந்தபடி நடேசனை ஒற்றை நோட்டமாகப் பார்த்தார்.

ஓய் நடேசன், உச்சி வேளை கழிஞ்சு தேடிண்டு இருக்கேன். எங்கே போனீர்? ஒரு பழைய டோக்குமெண்டை பிரதி எடுத்துத் தர வேண்டியிருக்கு. படி கேரி வாரும்.

நடேசன் அம்பலப்புழை கிருஷ்ணனுக்கு ஸ்தோத்ரம் சொன்னார். இன்னிக்கும் சாப்பாட்டுக்கு வழியைக் காண்பிச்சுக் கொடுத்துட்டார் பகவான்.

மணிக்குட்டனின் கடியாரக் கடைக்குப் போவதை நாளைக்கு ஒத்திப் போட்டபடி ஏகாம்பர ஐயர் ஓட்டலுக்குள் நுழைந்தார் நடேசன். மணிக்குட்டன் நேரத்தோடு வீட்டுக்குப் போய் சுகமாக உறங்கட்டும்.

ஒரு வாய் பசும்பால் காப்பி சாப்பிடுறீரா? அப்புறம் உக்காந்து தெம்பா கோப்பி பண்ணிடலாம்.

ஏகாம்பர ஐயர் சொன்னபோது வேண்டாம் என்று மறுத்துவிட்டு அவசரமாக ஓட்டல் சமையல்கட்டு இருட்டுக்குள் புகுந்தார் நடேசன்.

ஏய் பட்டாபி, இருக்கியோ இல்லே ஒழிஞ்சு மாறிட்டியோ? தைரும் சோறும் கொஞ்சம் இருந்தாச் சொல்லு. விசப்பு பிராணன் போறது.

சமையல்கட்டிலிருந்து எட்டிப் பார்த்த பட்டாபி காவிப் பல்லைக் காட்டிச் சிரித்தான்.

தைர் இல்லே. சம்பாரம் தான். ஆனாக்க, தீயலும், அவியலும், புளிக் குழம்பும் உண்டு. கோர்ட் உத்தியோகஸ்தர்கள் சாப்பிட வந்ததாலே கொஞ்சம் கூடவே உண்டாக்கினது மிச்சமாயிடுத்து. மாகாண காங்கிரஸ்காரன் வந்து தின்னுட்டு காசு கொடுக்காம போயிடுவான்னு ஏகாம்பர அண்ணா எல்லாத்தையும் ஓலைப் பாயைப் போட்டு மூடி வைக்கச் சொன்னார். இனியும் வச்சா கெட்டுப் போய்த் தூரத்தான் போடணுமாக்கும்னு நெனச்சேன். நீர் வந்து நிற்கறீர். இதோ எடுத்துண்டு வரேன்.

அப்ப ஊசிப் போற பதார்த்தத்தை எல்லாம் நடேசனுக்குப் போடற பரிபாடியா?

நடேசன் மனதுக்குள் மட்டும்தான் கேட்க முடியும். அல்லது கிருஷ்ணனிடம் விசாரிக்கலாம். அவன் இதற்கும் ஏதாவது பதில் வைத்திருப்பான்.

இலை நிறைய தணுத்துப் போய் மலை மாதிரி வந்து விழுந்த சோற்றை அவியலில் பிசைந்து கவளம் கவளமாகத் தின்றார் நடேசன். எத்தனை ஜன்மத்துப் பசியோ முன்னுக்கு வந்து ஆகுதி கொடுத்ததை விழுங்கித் தீர்க்கிற அக்னி போல் இலையில் விழுகிற எல்லாவற்றையும் தின்று தீர்க்க வைத்தது. இப்போது கிருஷ்ணன் வயிறாக மட்டும் இருந்தான்.

கிருஷ்ணன் கோவிலில் கோவிலில் நைவேத்தியமாகிற பால் பாயசம் நினைவுக்கு வந்தது நடேசனுக்கு. அதுதான் எத்தனை இனிப்பும் ஏலக்காயும் முந்திரியும் மணக்க மணக்க இருக்கும். கொல்லத்திலிருந்தும் திருவனந்தபுரத்தில் இருந்தும் ஏன் மதராஸ் பட்டணத்தில் இருந்தும் எல்லாம் வந்து அம்பலப்புழையில் அம்பலம் தொழுதுவிட்டு அவனவன் பாயசம் எங்கே கிடைக்கும் என்று நாக்கைத் தொங்க விட்டுக் கொண்டு அலைந்து வாங்கிப் போகிறான். தினசரி அங்கே போய்ச் சேவித்தும் நடேசனுக்கு அது இன்னும் அபூர்வ வஸ்துவாகத்தான் இருக்கிறது.

போன மாதம் நீலகண்டன் பிள்ளை வக்கீலுடைய கட்சிக்காரன் ஒருத்தன். அசமஞ்சமான பிரகிருதி. எட்டுப் பிரி சுற்றிய பளபளப்பான மூடியோடு கூடிய பித்தளை கூஜாவை பிசுக்கு இல்லாமல் முகம் பார்த்துத் தலை சீவக்கூடிய தோதில் நேர்த்தியாகத் துடைத்து ஊரிலிருந்து வரும்போதே எடுத்து வந்திருந்தான் அவன். தெலுங்கு பேசுகிற ராஜதானியில் இருந்து, அது மச்சிலிப் பட்டணமா, தெனாலியா என்று நடேசனுக்கு இப்போது ஓர்மை இல்லை. அந்தத் தெலுங்கன் வந்ததும் வராமலும் வக்கீலிடம் விண்ணப்பித்துக் கொண்டது இப்படி இருந்தது –

மகாப் பிரபோ. கேசு விஷயத்தை ஒரு நாள் உத்தேசம் முன்னே பின்னே கைகார்யம் செய்தாலும் பரவாயில்லை. இந்தப் பொழுதுக்கு பால் பாயசம் சாப்பிடுவது என்று ஏற்கனவே தீர்மானித்துத்தான் ஊரிலிருந்து பிரயாணம் வைத்திருக்கிறேன். உமக்கு கோயில் காரியஸ்தர் யாரையாவது பரிச்சயம் என்றால் தயவாகிக் காட்டித்தர வேண்டும். அம்பலப்புழை பால் பாயசம் சாப்பிட்டாலே மிச்ச வியவகாரங்கள் முனைப்பாக முன்னால் நகரும்.

அவன் சொன்னபோது வக்கீல் கையில் கூஜாவோடு நடேசனைத்தான் அம்பல நடைக்கு அனுப்பி வைத்தார்.

பாயசம் கிடைக்காமல் படி ஏறாதே. கோவிலில் இல்லை என்று கையை விரித்துவிட்டால், கிருஷ்ணவேணியிடம் சொல்லி நான் கேட்டேன் என்று ஒண்ணரைப் படி பாயசம் உண்டாக்கித் தரச் சொல்லு.

கிருஷ்ணவேணி மேல்சாந்திக்கு பெண்களை. அதாவது சகோதரி. கோட்டயத்தில் வேளி கழித்துக் கூட்டிப்போன நம்பூதிரிச் செக்கன் சொற்ப ஆயுசில் போய்ச்சேர திரும்பி வந்துவிட்டவள். நீலகண்டன் வக்கீலுக்கு காந்தியோடு கூடவே யௌவனமான விதவைகள் மேலும் அலாதி பிரியம் உண்டு. அவர்கள் சுகப்பட தன்னாலானதைச் செய்கிறவர் அவர். தேச சேவை பல தரத்திலான விஷயமாச்சே.

இதாக்கும் நான் சொன்ன டோக்குமெண்ட். அவசரமா பிரதி எடுக்க வேண்டியிருக்கு. நீர் எழுதிக் கொடுத்தா, நோட்டரி கிட்டே கைச்சாத்து கிடைச்சு கோர்ட்லே டிகிரி வாங்கிடலாம். விரசா முடிக்கற காரியம். மந்தமா இருந்தா, தோரணையோட சல்லாபிக்கும்போது பின்னாலே இருந்து கோணகத்தை யாரோ உருவின ஸ்திதியாயிடும்.

ஏகாம்பர ஐயர் பலமாகச் சிரித்தபடி ஒரு கத்தை பழுப்புக் காகிதத்தை நீட்டினார். அவர் சல்லாபிக்கும்போது இடுப்புத்துணியை உருவி யார் வேடிக்கை பார்க்கப் போகிறார்கள் என்று நடேசனுக்குப் புரியவில்லை. பட்டர் உடம்பு மட்டுமில்லே, வாய் வார்த்தையும் கோமணமும் கூட பெருங்காய வாடை அடிச்சில்லே கிடக்கும். கூட்டுப் பெருங்காயம், கட்டிப் பெருங்காயம், பால் பெருங்காயம் இப்படி ஏதோதோ பெயரில் ஊர் முழுக்க வாடை அடிக்க இந்தப் பெருங்காயத்தில் என்ன இருக்கு என்று நடேசனுக்குப் புரியவில்லை. ஆனாலும் அதைக் கரைத்துக் கொண்டு வந்து இலையில் வார்த்த சாம்பாரும் சம்பாரமும் கிர்ரென்று சம்போகத்துக்கு முந்திய விரைப்பை நரம்பில் ஏற்றுகிறது என்னமோ வாஸ்தவம் தான்.

சம்போகம் கிடக்குதடா புல்லே, டாக்குமெண்டைப் படியெடுத்து நாலு சக்கரத்துக்கு வழி பண்ணு.

பகவான் பழுப்புக் காகிதத்துக்குள் இருந்து எட்டிப் பார்த்து வார்த்தை சொன்னான்.

பொடி உதிர்கிற காகிதக் கட்டு, காய்ந்து போன வாழை நார் கொண்டு பொதிந்திருந்தது அது. நடேசன் வாழை நாரை விரல் நகத்தால் கீறித் திறந்தார். தும்மலுக்கு நடுவே அதைக் கண்ணுக்குப் பக்கமாகப் பிடித்துப் பார்க்க, அழுத்தமான கட்டைப் பேனா கொண்டு எழுதிய மலையாள எழுத்துகள். அம்பலக் குளத்தில் ஸ்தனபாரம் கொஞ்சம்போல் வெளித் தெரிய விடிகாலையில் கூட்டமாகக் குளிக்கிற ஸ்திரீகள் போல் புஷ்டியான சௌந்தர்யத்தோடு காகிதம் முழுக்க அவை நீந்திக் கொண்டிருந்தன.

‘கொல்ல வருடம் ஆயிரத்து எழுபத்து நாலு மேடம் ஒண்ணு. கிறிஸ்து சகாப்தம் ஆயிரத்து எண்ணூற்றுத் தொண்ணூத்தொன்பது. கொல்லூர் தேவி க்ஷேத்ரத்தில் புஷ்பம் சார்த்தி உத்தரவு கிடைத்தபடி அம்பலப்புழை மகாதேவய்யன் நல்ல தேக ஆரோக்யமும், ஸ்வய புத்தியும் பூர்ண திருப்தியுமாக தனது சிறிய தகப்பனார் ஜான் கிட்டாவய்யன் குமாரனும் ஒன்று விட்ட சகோதரனுமான கோட்டயத்து வேதய்யனுக்கு எழுதிக் கொடுத்தது யாதெனில்’.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன