பாலத்தில் அணில்கள்

 

Kungumam column – அற்ப விஷயம் -14

இரா.முருகன்

புதிய திரைப்படத்துக்குக் கண்ணதாசன் பாட்டு எழுதிக் கொண்டிருக்கிறார். இது செய்தி. இருபது வருடத்துக்கு முந்தி வெளிவந்த பழைய தொடர்கதையை பைண்ட் செய்து வைத்த புத்தகத்தில் ஏதாவது ஒரு பக்கத்தைத் திருப்பும்போது படத்தோடு படிக்கக் கிடைத்தால் பழைய நினைப்பில் அசைபோட சுவாரசியமாக இருந்திருக்கும். ஆனால் உச்சந்தலையில் முடி குத்திட்டு நிற்கத் திகிலோடு படிக்க வேண்டிப் போனது. காரணம் முந்தாநாள் வந்த பத்திரிகைச் செய்தி இது.

கவியரசர் ஆவியாக வந்து இங்கே ஒருத்தர் விரல் வழியே கவிதை எழுதுகிறாராம். அதை இசையமைத்துப் பாடி வாயசைத்துப் படமெடுப்பார்களாம். என்ன கூத்து இதெல்லாம்? காலம் கடந்து நிற்கிற அந்தக் கவிஞர் மறைந்து பலகாலம் ஆகிவிட்டது. நல்ல ஆன்மீகவாதியான அவர் கண்ணன் திருவடியில் இளைப்பாறிக் கொண்டிருக்காமல் கோடம்பாக்கத்தில் சினிமாப் பாட்டு எழுத எதற்குத் திரும்பி வரவேண்டும்? அதுவும் பாட்டு எழுத இங்கே ஒரு படையே இருக்கும்போது.

இப்படியே போனால், மறைந்த வசனகர்த்தாக்கள் வசனமழை பொழிய ஆரம்பிப்பார்கள். ‘மொத்தப் படத்துக்குமே முக்கால் பக்கம் வசனம் போதும்’ என்ற இந்தக் காலக் கணக்கெல்லாம் புரியாமல் பக்கம் பக்கமாகப் பறக்கும் ஆவிகள் அவை. மறைந்த ஒளிப்பதிவாளர்கள் வந்து ஒரு நிமிடம் உற்றுப் பார்த்துவிட்டு உடனே திரும்பிப் போய்விடலாம். லைட்ஸ் ஆன் சொன்னதும் செட்டில் எரிய வைக்க விளக்கே இல்லாமல், இருட்டில் படம் பிடிக்க அவர்களுக்குச் சரிப்பட்டு வராது. ஆவிப் பின்னணிப் பாடகர்கள்? வராமல் இருப்பதே நல்லது. தமிழைக் கணீரென்று உச்சரிக்கக் கூடிய நல்ல குரல் வளமும், ஆழ்ந்த இசை ஞானமும் கொண்ட அந்த அற்புதக் கலைஞர்களை ஆயுசோடு இருக்கும்போதே அசரீரிப் பாட்டு பாட மட்டும் பயன்படுத்திக் கொண்ட சினிமா உலகம் இங்கே இருப்பது.

ஆவி வேலைக்குக் காசு கொடுக்க வேண்டியதில்லை என்ற சிக்கன நடவடிக்கையாக மேலோட்டமாகத் தோன்றினாலும், கொஞ்சம் ஆராய்ந்தால் அடிப்படைக் காரணம் புரியும். ஆரம்பத்தில் சொன்ன பழைய நினைப்புதான். நாஸ்டால்ஜியா. நாம் எல்லோருமே ஆளுக்கொரு பொற்காலத்தை நினைவு வைத்திருக்கிறோம். சில நேரம் இது நாம் பார்த்தே இருக்காத பத்தாம் நூற்றாண்டில் ராஜராஜசோழன் ஆண்ட காலம். இன்னும் சில நேரங்களில் வீட்டுப் பெரிசுகள் அவ்வப்போது சிலாகிக்கும் 1940 காலகட்டம். அதுவும் இல்லாவிட்டால் நம் சிறுவயதுப் பொழுதுகள். இன்றைக்கு நாம் இருக்கிற 2008-ஐ விட நாம் புனைந்த பொற்காலம் இன்ப மயமானது. வாழ்ந்தால் அப்போது வாழவேண்டும். கலையும் இலக்கியமும் இப்படியான மாயக் கூடு ஒன்றை நமக்காக ஏற்படுத்தித் கொடுக்கும்போது கூட்டுப்புழு போல் உள்ளே முடங்க சுகமாகத்தான் இருக்கிறது.

இந்தப் பொற்காலக் கனவு தலைமுறை தலைமுறையாக நீள்கிற ஒன்று. சோழர் காலம் நமக்குப் பொற்காலம். சரி, அந்தக் காலத்தில் வாழ்ந்தவர்களுக்கு? ராஜராஜசோழன் ஆட்சியில் நிலவரி உயர்த்தப்பட்டு ஏழை விவசாயிகள் வரி கொடுக்க முடியாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கல்வெட்டு படித்து ஆராய்ச்சி அறிஞர்கள் கூறுகிறார்கள். போராடிய அந்த உழவர்களுக்கு அது நிச்சயம் பொற்காலமாக இருக்க முடியாது. அவர்கள் கனவில் வந்தது அதற்கும் முந்தைய பழங்காலமாக இருக்கக்கூடும். இந்தத் தொடர் இழை முடிவது வெற்றுவெளியில்.

பழையன கழிதலும் புதியன புகுதலும் காலத்தை அனுசரித்து நடக்கிற ஒன்று என்று இயல்பாக எடுத்துக் கொள்ள முன்னோர்கள் சொல்லியிருப்பதை நாம் சவுகரியமாக மறந்து போகிறோம். இந்த விஷயத்தில் மட்டும் நம்மை ஆண்ட வெள்ளைக்காரர்களின் பாதிப்பு நம்மீது எக்கச்சக்கமாகக் கவிந்திருக்கிறது. பிரிட்டனில் இருநூறு வருடத்துக்கு முற்பட்ட கட்டிடங்களை இன்னும் போற்றிப் பாதுகாக்கிறார்கள். அதற்கான பொருள் வளமும் அளவான மக்கள் தொகையும், இருப்பிட நெருக்கடி இல்லாத நிலைமையும் அங்கே உண்டு. இங்கே? நம்முடைய பூமியின் சுட்டெரிக்கும் வெய்யில், பெருமழைக்கு ஈடு கொடுத்து நூறு வருடம் நின்ற தாத்தா காலக் கட்டிடங்களைப் பற்றிப் பெருமைப்படலாம். புகைப்படம் எடுத்து நன்றியோடு நினைவு வைத்துக் கொள்ளலாம். செங்கலும் காரையும் உதிர்ந்து, புழங்க ஆபத்தாக இப்போது பரிதாபமாக நிற்கிற இவற்றை இடித்து வலிமையாகப் புது அமைப்புகளை உருவாக்குவதில் என்ன தவறு? நூறு வருடத்துக்கு முற்பட்ட சென்னையைப் பற்றி எழுதிப் படித்து சுகமாக அசை போடுவது வேறு. அந்தக் காலத்தை இழுத்துப் பிடித்து நிறுத்த முயற்சி செய்வது வேறு. இரண்டையும் சேர்த்துச் செய்வது இங்கே நடக்கிற காரியமில்லை.

போதாக்குறைக்குத் தலைமுறைகள் கடந்து நம்மை அடைந்த பொற்காலப் புனைவுகள் புனிதங்களாகி விடுகின்றன. இவற்றை யாராவது கேள்வி கேட்டால் சீறுகிறோம். உணர்ச்சிகளைப் புண்படுத்திவிட்டதாகக் குறை சொல்கிறோம். முன்னேற்றத்துக்கு முட்டுக்கட்டை போடுகிற நாஸ்டால்ஜியாவால் என்ன பிரயோஜனம் என்று கேட்கும் சாதுவான அணில்களை முதுகில் தடியால் வருடி மூணு போடு போட காக்கி நிஜாரோடு இங்கே சிலர் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். ஆவிகள் பாட்டெழுதி இவர்களைத் திருத்தினால் சரிதான்.

(Published in last week Kungumam)

 

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன