ராமோஜி ஆங்கரே 1698 – வண்ண மயில் என்ற கப்பலில்

பிற்பகல் நான்கு மணி – புவனலோசனி எழுந்திரு. அவர் தான். தமிழில் சொன்னார். என் காதுகளையே நம்பாமல் நான் அவர் நெஞ்சில் கை ஊன்றி அந்தக் காந்தக் கண்களுக்குள் ஊடுருவிப் பார்த்தேன்.

தமிழ் தெரியுமா?

”தெரியாமல் என்ன, தஞ்சாவூர்காரனுக்கு மூச்சுக் காற்றுக்கு அடுத்தது பேசுகிற பாஷை தானே”.

நான் எழ முற்பட்டேன். அவருடைய இடது கரம் திரும்ப அழுத்தமாக என்னை அவர் நெஞ்சில் பரவிக் கிடக்க வைத்தது. இன்னொரு கரம் காயப்படாமல் இருந்தால் என்ன செய்திருக்குமோ. அவர் நெற்றியில் முத்தமிட்டு எழுந்து கூந்தலை முடித்துக்கொண்டு வெளியே போனேன்.

மாலை ஐந்து மணி – தயாராக வென்னீர் சுடவைத்து கப்பல் சமையல்காரர் எடுத்து வந்திருந்ததில் அஸ்கா ஜீனியும், சத்துமாப் பொடியும் கலந்து சூடான பானமாகக் கரைத்துக் குவளையில் ஊற்றி திரைக்கு அப்புறம் எடுத்துப் போனேன்.

படுக்கையில் அமர்ந்திருந்த அவர், நன்றி சொல்லி என் கையில் இருந்து குவளையை வாங்கிக் கொண்டார். வாசலில் விளக்கு நிழலாடியது.

இரவு எட்டு மணி

ரங்கீலா கப்பல் அதிகாரி வந்திருந்தார். கூடவே ராத்திரி முழுக்க கப்பல் தளத்தில் உறங்காமல் உட்கார்ந்திருந்த கப்பல் மருத்துவர். அவர்களோடு, வென்னீரும், காடியும், சுட்ட ரொட்டியும், பாடப்படுத்தி வைத்த கிழங்கு உணவுமாக இரண்டு சிப்பாய்கள் என்று கூட்டமாக நுழைய நான் விலகி நின்றேன்.

வந்த அதிகாரி சத்தமாக என்னிடம் மேட்டிமையோடு சொன்னது –

“பெண்ணே, சற்று விலகி, இந்த அறையை முழுக்க ஒழித்து சேனாதிபதிக்குக் கொடுத்து விட்டு நகர்ந்து இரு. அதிகாரிகளோடு சேனாதிபதி ஆலோசனை நடத்தும் நேரம் இது”.

”அப்படியே ஐயா, என் துணிகள் இங்கே உண்டு, காலை எழுந்த அரை மணி நேரத்தில் நான் குளித்து பூஜைக்கு இருப்பேன். பூஜை முடிந்தாலே காலை உணவு. நான் சாப்பிடாவிட்டாலும் சரிதான், பூஜைக்கு வைத்த சாளகிராமங்களையும், தெய்வ சக்தி ஆவாஹனமான ஸ்படிக எண்கோணத் திருவுருவத்தையும் பூஜிக்க எனக்கு அனுமதி அளித்தால் நன்றியுடையவளாக இருப்பேன்”.

இதை இந்துஸ்தானியில் சொன்னேன்.

“அதெல்லாம் உன் தேசத்துக்குப் போய் வைத்துக்கொள்” என்றார் அந்த மூத்த அதிகாரி.

“விட்டோபா, அந்தப் பெண்ணுக்கு அவளுடைய நம்பிக்கையும் உபாசனையும் பெரிய விஷயங்கள். உங்களுக்கும் எனக்கும் எப்படி நம் ஆலோசனை நேரமும், திட்டமிடும் நேரமும் இருக்கிறதோ, அது போல”.

இதை மராட்டியில் சொல்லி அடுத்து என்னிடம் தமிழில் சொன்னது –

“காரைக்கால் பெண்ணே, நீ இந்த மூலையில் உன் அறைக்குள் இருந்து உன் காரியங்களைக் கவனி. நானும் இங்கிருந்து படை நடத்துகிறேன்”.

இரவு பதினோரு மணி
எதுவும் நடக்கவில்லை. ராவ்ஜி களைப்போடு உறங்கிவிட்டார்.

அடுத்து வந்த நாள் காலை – பூஜை நேரத்தில் சிறு மணி அடித்ததும் பேசிக்கொண்டிருந்த சேனாதிபதியே எழுந்து வந்து விட்டார். கூடவே அடுத்த நிலை அதிகாரி என்று நான் அவதானித்திருந்த விட்டோபா ராவ்ஜி என்ற முதிர்ந்து வரும் அதிகாரியும். அவருக்குப் பின்னால் உலரந்த திராட்சை, முந்திரி, பாதாம், அக்ரூட், கற்கண்டு என்று தாம்பாளத்தில் வைத்து எடுத்துக் கொண்டு படை வீரர்கள்.

தண்ணீரும், பன்னீரும் பொழிந்து அபிஷேகம் செய்து என் விக்கிரகங்களைப் பூத்துவாலை கொண்டு ஈரம் ஒத்தியெடுத்து தூபக்காலில் சாம்பிராணி போட்டு வட இந்தியக் கோவிலாக்கி வழிபட்டேன்.

கண் திறந்தபோது தாம்பாளங்கள் எல்லாம் வரிசையாக பூஜைக்கு நைவேத்தியமாகப் படைக்கப்பட்டிருந்தன. என்னோடு விட்டோபாவும் அவற்றை வினியோகித்தார்.

ராமோஜி என்ற என் எஜமானர், என் ராஜா, என் சர்க்கரை பொம்மை, என் ஆராதனாமூர்த்தியான இவர் எழுந்து ஆடும் கப்பலின் பக்கவாட்டு மூங்கிலைப் பிடித்துக்கொண்டு நின்றார்.

நான் தீப ஆராதனை காட்டும்போது அந்த சுடரில் ஒரு சுந்தரியைப் பார்த்தேன். இவருக்கு வேண்டியவள் என்று அந்தச் சுடர் சொல்லி அணைந்தது. பூஜை முடித்து வரும் மன சாந்தியை மீறி அந்தப் பெயர் தெரியாத பெண்மேல் சொல்ல முடியாத பொறாமை ஏற்பட்டது. துளசி மாலை உருட்டி அந்த எண்ணங்களை அப்பால் போக்கினேன்.

”சரி, யோசித்து வைத்தபடி செய்யுங்கள். நான் இன்னும் ஒரு மணி நேரத்தில் விஜயசந்திரிகாவுக்குத் திரும்பி விடுவேன்” என்றார் ராமோஜி மகராஜ்.

“சேனாதிபதி அவர்கள் மன்னிக்கணும். இன்னும் ஒரு பொழுதாவது, இந்த ராத்திரி விடிந்து காலை ஆவது வரையாவது சேனாதிபதி அவர்கள் இங்கே இருக்க வேண்டியது அவசியமானது. நாளை விடிந்து கட்டைப் பிரித்துக் காயத்தைப் பார்த்துக்கொண்டு குணமான நிலைமை உறுதிப்படுத்தி சமூகம் இடமாற்றம் செய்யலாம்” என்று பணிவோடு அறிவித்த கப்பல் மருத்துவரை அன்போடு நோக்கினேன்.

இந்த இரவும் இவர் இங்கே தான் என்று அறிய மனம் றக்கை கட்டிப் பறந்தது. அவரிடம் யார் என்ன என்று என்னைப் பற்றி முழுவதும் சொல்ல வேண்டும். அவரையும் ஒரு அங்குலம் விடாமல் தெரிந்து கொண்டுவிட வேண்டும்.

உடலும், மனமும், பிறந்த கதையும், வளர்ந்ததும், கற்றதும், அனுபவித்ததும், இழந்ததும், ஏங்குவதும் எல்லாம் தான். தெரிந்து கொள்ள, தெரியப்படுத்த. ஒரு ராத்திரி போதுமா இதற்கெல்லாம்?

Excerpts from my forthcoming novel RAMOJIUM – from the chapter Karaikal Bhuvani 1698)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன