ராமோஜியம் – வளர்ந்து வரும் புதினத்தில் ‘1698 – ராமோஜி ஆங்கரே, காரைக்கால் புவனி’ அத்தியாயத்திலிருந்து

நான் நேற்று இந்தக் குறிப்பை எழுதத் தொடங்கியபோது கடலில் இரண்டு கலங்களைக் கண்டேன். இரண்டும் மங்கிய வெளிச்சத்தில் சரியாகத் தெரியாவிட்டாலும் இங்கிலாந்து கொடி போட்டவை என்பதை அறிந்து நிம்மதி கைவந்தது.

என் மாலுமியிடம் அந்த இங்க்லீஷ் கப்பல்களை இங்கே நம் கப்பல் பக்கம் வரவழைக்கச் சொன்னேன். முக்கியமாக மாலுமி தேர்ச்சியடைந்தவனாக இங்கே இல்லை. சாப்பாட்டுக்கு எடுத்து வந்ததும் பாதி கெட்டுப்போய் இன்னும் மூன்று அல்லது நான்கு நாளைக்கு வருவதாக மட்டும் இருந்தது.

அந்தக் கப்பலில் நிச்சயம் கப்பலோட்டத் தெரிந்தவர்கள் இருக்கலாம். சாப்பாடு குறையின்றி இருக்கக் கூடும்.

இங்கிலீஷ்காரர்கள் தின்று கெட்டவர்கள். மூச்சு விடாமல் கூட இருப்பார்கள். சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள். மேலும் ஒன்றுக்கு இரண்டாக ரெண்டு கப்பல்கள் வருவதால் இங்கே இருந்து உடம்பு நோய் கண்டவர்களைக் கவனிக்க நோய்ப் படுக்கைப் பகுதியும் மருத்துவரும் அங்கே இருக்கக் கூடும்.

நான் நேசத்தையும், அபாயத்தில் இருக்கிறோம், காப்பாற்றுங்கள் என்று அவசரக் கோரிக்கையையும் சொல்லும் வர்ணங்களிலான அமிட்டுகளை மேல்தளத்தில் இருந்து அனுப்பச் சொல்ல, பழக்கமில்லாத காரணத்தால் ஏதோ தம் போக்கில் அனுப்பியதோடு இல்லாமல் தம்பூர் அடிக்கவும் செய்தார்கள் அவர்கள்.

எனக்குத் தெரியாமல் போன ஒன்றைப் பற்றியும் சொல்லியாக வேண்டும். கைகால் கட்டி கப்பல் தரையில் உருட்டி விட்ட கைதிகளுக்கு சாயந்திரம் போதம் தெளிந்து போனது. அவர்களை எனக்கு நேரே கட்டி உருட்டியிருந்தால் அதை நான் கண்டு, மறுபடி மயக்கத்தில் ஆழ்த்தியிருப்பேன்.

இல்லாது போனதால், அந்த ஈனப் பிறவிகள் தாமே கட்டவிழ்த்துக் கொண்டதோடு இல்லாமல், கப்பல் தரையை விட்டு வெளியே வந்து சுங்கான் அறையிலும் என் அறையிலும், ஏன், வந்துகொண்டிருக்கும் ஆங்கிலேயக் கப்பல்கள் மேலும் தாக்குதல் நடக்க இருட்டோடு இருட்டாக ஒளிந்து காத்திருந்ததையும் நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

நான் குற்றேவலுக்கு நியமித்த கொள்ளைக்கார அடிமைகளும் அவர்களோடு சேர்ந்துவிட்டிருந்தார்கள் என்பதையும் நான் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

இங்க்லீஷ் கப்பல்கள் அருகே வந்ததும் பெரிய கப்பல் விஜயசந்திரிகா என்று பெயர் கொண்டது என்று புலனானது. சிறியது ரங்கீலா என்று தெரிந்தது. அவை இங்கிலீஷ் கப்பல்கள் இல்லை. மராட்டிய கடல் படையைச் சேர்ந்தவை.

என் கப்பல் அறையில் இருந்து வெளியே வந்தபடி விருந்தாளிகளுக்காக நூலேணி இறக்கச் சொன்னேன். ஆனால் அதற்குத் தேவையின்றி எப்படியோ பற்றி ஏறி, விஜயசந்திரிகா கப்பலிலிருந்து வண்ண மயிலுக்குள் வந்துகொண்டிருந்தார் ஒரு கம்பீரமான ராஜகுமாரர். அவரையே வைத்த விழி வாங்காமல் பார்த்தேன்.

அவரும் என்னையே பார்த்தபடி நிற்க, ஆங்கிலத்தில் முகமன் கூறத் தொடங்கினேன். என்னமோ தோன்ற அதைத் தமிழில் சொன்னேன். அவர் முகத்தில் மகிழ்ச்சியும் வியப்பும் மின்னலிட்டு மறைந்தன. தமிழன் தானோ.

அவர் பேசுவதற்குள் இடது பக்கம் இருளிலிருந்து ஒரு கட்டாரி பறந்து வந்து அவரைத் தோளில் காயப்படுத்தி கீழே சரிய வைத்தது.

கட்டாரி வீசிய கொள்ளைக்காரனையும் அவனோடு மறைந்து நின்ற இருவரையும் கப்பலுக்குள் வந்தவர்கள் பிடித்துக் கைகால் கட்டி எலியை அடித்துப் போடுவது போல் கப்பலில் இருந்து உருட்டி விட்டார்கள். அப்படி அவர்கள் உயிர் போகாதிருந்தால், நான் கொப்புளங்களை உடல் முழுக்கக் கொடுத்து நடுக்கடலில் சுராமீன்களுக்கு உணவாகும்படி தூக்கி வீசியிருப்பேன்.

என் சித்துவேலைகளை என் கப்பலுக்கு வந்திருக்கும் இவர்களிடம் காட்ட வேண்டாம், முக்கியமாக காயமுற்றுக் கிடக்கும் இந்த ஆஜானுபாகு ஆன கடற்படை மேலதிகாரி முன்.

ஒரு மணி நேரத்தில் போர் ஓய்ந்த நிலமாக ஆனது வண்ண மயில் கப்பலின் மேல்தளமும் உள்ளும். விஜயசந்திரிகா கப்பலில் இருந்து வந்து சேர்ந்த வைத்தியர் கெட்டியாக ஒரு மெழுகை அதிகாரியின் கையில் வைத்துத் தேய்த்து, மேலே பொதிய சுத்தமான துணி கேட்டார்.

என் பெட்டியில் இருந்து அதி வெண்மையாக மஸ்லின், பருத்தி, பட்டு, அரபுத்துணி என்று அவசரமாக எடுத்து நீட்ட, இரண்டாம் அதிகாரியாக என் கப்பலில் பிரவேசித்திருந்த சற்று வயதான மராட்டியர் புன்முறுவல் பூத்தார்.

பருத்தித் துணியால் கட்டுப் போட்டபின் வைத்தியர் சொன்னார் –

”நாளை சாயந்திரம் சமுத்ரநாயகரின் பிரக்ஞை திரும்பி விடும். கட்டாரி சற்று ஆழப் பதிந்ததால் ரத்தப் போக்கு அதிகமாகியிருந்தது. விட்டலன் அருளால் அது இப்போது கட்டுக்குள் வந்தது. மகா அதிகாரி இன்னும் இரண்டு நாள் இங்கேயே இருக்கட்டும். கையில் காயம் அதற்குள் உலர்ந்து விடும்”
.
என் அறையில் காற்று ஓட்டம் சீராக இருப்பதால் இங்கேயே அவரைத் தங்க வைக்க முடிவாயிற்று. நான் இன்னொரு இடத்துக்கு மாறிக் கொள்ள நினைத்தபோது வைத்தியர் சொன்னார் –

”எங்கள் மகா சமுத்ர சராப் ராவ்ஜிக்கு அருகிலேயே இருந்து நேரப் பிரகாரம் மருந்து கொடுக்க, கேட்டபோது தண்ணீர் கொடுக்க, மற்ற பணிவிடை செய்ய இங்கே தேவை உண்டு. அவரை உடனே விஜயசந்திரிகா கப்பலுக்குக் கூட்டிப் போக முடியாத காரணத்தால் அவர் இங்கே இருக்க, நடுவில் துணித் திரை கட்டி விசாலமான இந்த அறையில் இன்னொரு பக்கம் தேவியாரும் இருக்கச் செய்யலாம்”.

நான் குறுகுறுப்புடன் இந்த ஏற்பாட்டுக்குச் சரி என்று சம்மதித்தேன். கம்பீரமான இந்தக் கனவான் இருக்கும் ஒரே அறையில் நானும் இருப்பது மட்டுமில்லாமல், அவ்வப்போது அவரோடு தனியாக செலவழிக்கவும் நேரம் கிடைக்கும். இந்தப் புவனிக்கு அந்த முகத்தைப் பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றுகிறதே.

இங்கே சரியாக நேரம் காட்ட கடியாரம் இல்லாததால் விஜயசந்திரிகா கப்பலில் இருந்து மணல் கடிகையை இங்கே கொண்டு வந்து வைத்தார்கள்.

எங்கள் முதல் ராத்திரியும் பகலும் இப்படி சோபானமாக நகர்ந்தன –

அதிகாலை நான்கு மணி – அவருக்கு நினைவு திரும்பியது. நீ யார் என்று கேட்டார். புவனலோசனி என்று சொன்னேன். என் கனவில் நீ என்ன செய்கிறாய் என்று கேட்டுவிட்டு மறுபடி உறங்கத் தொடங்கி விட்டார். வாசலில் காத்திருந்த வைத்தியர் என்ன சங்கதி என்று வந்து கேட்டார். ஒன்றுமில்லை, நீங்கள் இளைப்பாறுங்கள் என்றேன்.

விடிகாலை ஐந்து மணி – சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தெரிவித்தார் இவர். வெளியே மருத்துவர் உறக்கத்தில் இருந்தார். வேறு ஆண்கள் யாரும் அருகில் இல்லை. நான் மறுபடி உள்ளே வந்தேன். இது மருத்துவம் என்று எனக்காகச் சொல்லிக்கொண்டு கடைகாலை எடுத்து படுக்கைக்குக் கீழ் வைத்தேன். அவர் உடுப்பைத் தளர்த்தினேன்.

காலை ஏழு மணி – பாலை உலர்த்தி எடுத்த பொடியோடு அரிசி, வெல்லப்பொடி கலந்து வைத்த சத்துமா உருண்டையை வென்னீரில் கரைத்தேன். அவரைத் தோளில் தாங்கி உதடுகளை ஒரு விரலால் பிரித்து கொஞ்சம் வாயில் இட்டேன். மறுபடி நினைவு வந்தது.
நீங்கள் யார் என்று என் தோளில் சாய்ந்த தலையை ஆதரவாகத் தாங்கிக் கேட்டேன். ராமோஜி ராவ் என்றார்.

எத்தனையோ யுகங்களாக அவரோடு இருந்த நினைவு. அவர் என் மடியில் தன் தலையை எடுத்து வைத்துக்கொண்டு வலியால் சற்று முனகினார். உடன் உறக்கத்தில் ஆழ்ந்தார்.

காலை எட்டு மணி – நல்ல நினைவு வந்தது. எல்லாம் ஞாபகம் வந்ததும் என் பெயர் மட்டும் மறுபடி மறந்து போய் யாரென்று விசாரித்தார். எத்தனை முறை கேட்டாலும் அலுக்காதே. புவனலோசனியென்றேன் மகிழ்ந்து.

முற்பகல் பதினொரு மணி – அரிசிச் சாதமும், மிளகு ரசமும், அவித்த கோழி முட்டையும் அவருக்கு ஊட்டி விட்டேன். உண்ட மிச்சம் எச்சில் சோற்றை சந்தோஷமாக உண்டேன். நான் குடித்து மிச்சம் வைத்த திராட்சை ரசத்தை அவருக்கும் புகட்டி மகிழ்ந்தேன்.

நடுப்பகல் – அவர் நல்ல உறக்கத்தில் இருந்தார். ஒரு தடவை திரும்பிப் படுத்தார். கண் திறந்து பார்த்துக் கேட்டார் –

நீ யார், யட்சியா?

நான் புவனலோசனி என்றேன். கேட்கவில்லை என்றார். குனிந்து காதருகில் பெயர் சொல்லும்போது கட்டவிழ்த்திருந்த கூந்தல் அவருடைய முகத்தை மறைத்தது. கட்டு இல்லாத அவருடைய இடது கரம் என்னை அவருடைய நெஞ்சில் இருத்திக் கொண்டு கூந்தலைத் தடவியது. என் ஈர இதழ்களை அவருடைய கடல் காற்றில் காய்ந்த உதடுகள் ஸ்பரிசிக்க, வந்த காற்றில் ஊதுபத்தி சந்தன கந்தம் பரப்பியது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன