புதினம் ராமோஜியம் – கடல் கொள்ளைக்காரர்கள் 1698 அத்தியாயத்தில் இருந்து

கப்பல் மேல்தளத்தில் ஓடிக் கொண்டிருக்கிற சத்தம். பார்த்து விட்டு வந்து எழுதுவதைத் தொடரலாம் என்று நினைத்தது பூர்த்தியாக ஒரு வாரம் ஆனது ஆச்சரியத்திலும் ஆச்சரியமாகப் போனது.

வந்தவர்கள் கடற்கொள்ளைக் காரர்கள்.

கப்பலில் புகுந்த அந்த சண்டாளர்கள் இந்தப் பகுதி கடலில் சுற்றி வந்து கொள்ளையடிப்பவர்கள். பெரும்பாலும் இவர்கள் நீளமாக தாடி விட்ட, அழுக்கும் குமட்டும் துர் நாற்றமும் வீசும் வெள்ளைக்காரர்களாக இருப்பார்கள்.

கருப்புக் கடல் கொள்ளைக்காரர்கள் உக்கிரமானவர்கள். இவர்கள் பிடித்தெடுத்த வியாபாரக் கப்பல்களில் இருக்கும் பொருளை மட்டும் தங்களுடையதாக்கிக் கொள்வதில்லை. பிரயாணிகளில் ஆண்கள் எல்லோரையும் குற்றேவல் செய்யும் அடிமைகளாக்கி விடுவது சகஜமாக நடப்பது. பெண்களை பெண்டாள சர்வ சுதந்திரமாக வயது, இனம் வேறுபாடு இல்லாமல் எடுத்துக் கொண்டு விடுவார்கள். பயணிகளில் குழந்தைகள் இருந்தால் அவர்களைக் கடலில் தோணியில் வைத்து இறக்கி, ஒரு போத்தல் குடிநீரும் இரண்டு துண்டு ரொட்டியுமாக விட்டுவிட்டு வந்து விடுவார்கள். கடவுள் தான் அந்தச் சிறுவர், சிறுமியரை ரட்சிக்க வேண்டும்.

”புவியம்மா, கதவை அடைச்சு வச்சுக்குங்க.. அடைச்சுக்குங்க..”

மரதகம் அலறியது காதில் கேட்க, மேல் தளத்தில் இருந்து சிறிய படிக்கட்டில் இறங்கிக் கீழே போனேன். என் அறைக்குள் புகுந்து கதவைத் தாழ்ப்பாள் போட்டுக்கொள்ளும் முன்பு உள்ளே இருந்து என் தோளை அணைத்து ஊஊ என்று மிருகம் போல் ஊளையிட்ட வெள்ளைக்காரனை முன்னுக்கு இழுத்து நிறுத்தினேன்.

காப்பிரி இல்லை என்பதில் சற்றே நிம்மதி ஏனென்று புரியவில்லை.

அவன் காமம் கட்டுமீறிய விலங்கு போல் இடுப்பை அசைத்து என்னைத் தன்னோடு சேர்த்து நிறுத்தி ஊஊ என்று மறுபடி சொறிநாயாக ஊளை இட்டான். போதுமடா பன்றியே என்று என் சித்துவேலையை உடனே அவன் மேல் பிரயோகித்தேன். அந்த வெள்ளைத் தேவடியாள் மகனுக்கு உடம்பெங்கும் உடனடியாக கொப்புளங்கள் கண்டன. அவன் மயங்கி வீழ்ந்து இறந்தும் போனான்.

என் பின்னால் கனமான காலணிகள் அணிந்த கால்கள் எழுப்பிய நாராசமும் பயம் விளைப்பதுமான சத்தம். திரும்பிப் பார்த்தேன். இன்னும் பத்துப் பனிரெண்டு கடல் கொள்ளைக்காரர்கள் அங்கே என்னைப் பார்த்தபடி திகிலோடு நின்றார்கள்.

கொப்புளம் கண்டு இறந்தவன் அவர்களுக்குத் தலைவனாக இருக்கக் கூடும். நான் என் முன்னால் பயந்து நின்ற ஒருவனைச் சிலை போல் உறைந்துபோய் நிற்க வைத்தேன். பின்னால் இன்னும் பனிரெண்டு பேர், உலகமே அவர்கள் பயப்படும் விதத்தில் மாறியதாக தலைமுடி சிலிர்த்து நின்று ”போதும், போதும், விட்டுவிடு” என்று என்னிடம் மன்றாடினர்.

நான் அவர்களை உடனடியாக மண்டியிட வைத்துவிட்டு சுக்கான் அறைக்குப் போனேன். என் பாதுகாப்புக்கு வந்த எட்டு வீரர்களும், சக பயணிகளான வியாபாரிகளும், மரதகமும் சோளக்கொல்லை பொம்மை போல் ஆகியிருந்த அவர்களில் ஆறுபேரை வலிமையான கயிறுகளால் பிணைத்துக் கப்பல் அடித் தளத்து ஈரத்துக்கும் நாற்றத்துக்கும் மண்டிக் குடியேறிய புழு பூச்சிகளுக்கு இடையே கட்டி உருட்டிக் கல்லில் பிணைத்ததாக அறிவித்தார்கள். மற்ற ஆறு பேர் இன்னும் பயத்தில் நடுங்கி, மண்டி போட்டு நின்றிருந்தார்கள்.

நான் சுக்கான் அறையில் போய்ப் பார்க்க ஒரு மீகாமன் இறந்து போயிருந்தார். அவர் முதுகில் கொள்ளைக்காரனின் கட்டாரி பாய்ந்திருந்ததை ஒரு ஐந்து நிமிடம் முன்பு வந்திருந்தால் எடுத்து விட்டு ரத்தப் பெருக்கை நிறுத்தி, உயிர் பிழைப்பித்திருப்பேன். என்ன செய்ய? எது விதிக்கப்பட்டதோ அதுவே நிகழும்.

மண்டியிட்டிருந்த வெள்ளைக்காரர்களை எனக்கு அடிமையாக்கி உத்தரவு போட்டபோது அவர்களில் ஒருவன் அசிங்கமாகச் சிரித்தான். உடனடியாக அவனுடைய அரையில் தீபற்றி உடுப்பு எரிந்து போக கூக்குரலிட வைத்தேன்.

மண்டியிட்ட அந்த ஆறு கொள்ளைக்காரர்களையும் கப்பலின் அடியில் ஏராப்பலகையை சுத்தம் செய்யக் கட்டி இறக்கிப் பயந்து அலற வைத்தேன்.

அது முடிந்து, பூஞ்சைக்காளான் படர்ந்த ரொட்டியை உண்ண வைத்து, கக்கூசிலிருந்த அசுத்த வஸ்து கலந்த திராட்சை ரசத்தை வலுக்கட்டாயமாகக் குடிக்க வைத்தேன்.

என் சினம் அந்த அளவில் ஆற, அந்த அடிமைகளுக்கு உயிர்ப் பிச்சை ஈந்து, கப்பலில் குற்றேவல் பணி கொடுத்து உத்தரவு பிறப்பித்தேன்.

கொள்ளையர் தலைவனின் கொப்புளம் கண்ட உடலைக் கடலில் தள்ளிவிடச் சொன்னேன். அந்த உடல் கப்பலுக்குப் பின்னாலேயே ’நானும் வரேன், நானும் வரேன்’ என்று காற்றில் மிதந்து வந்து, கடல் ஆழத்துக்குள் மூழ்கியது.

அடுத்து, வாய் வார்த்தையாக சமர்ப்பிக்கப்பட்ட சகல மரியாதைகளோடும் இறந்த மீகாமனின் உடலைக் கடலுக்குள் இறக்கிப் பிரார்த்தனை செய்து, கப்பலில் இருந்து இணைப்பைத் துண்டிக்க வைத்தேன்.

மீகாமன் உடலும் கொள்ளைக்காரன் போல் கப்பலோடு சற்றுத் தூரம் வந்து, இருகை கூப்பி நமஸ்காரம் செய்து அலையில் மறைந்து போனது.
கப்பல் முழுவதையும் கடல் நீரும் கொஞ்சம் போல் நல்ல நீரும் இட்டு கழுவித் துடைக்கக் கட்டளையிட்டேன்.

உறைந்து போய் நின்றிருந்த அடிமையை அசைய வைத்தேன். அவனுக்குக் கப்பல் செலுத்தி அனுபவம் உண்டு என்று அவனும், மற்ற கொள்ளைக்காரர்களும் உறுதிப்படுத்தியதால், இறந்து போன மாலுமியின் இடத்தில் ஆனால், சங்கிலியால் கால் பிணைக்கப்பட்டு, அவனை மீகாமன் ஆக்கினேன்.

நானே கப்பலின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டேன். நாகப்பட்டிணம் இன்னும் பனிரெண்டு அல்லது பதிமூன்று நாளில் நங்கூரமிடும் தூரத்தில் இருந்தது என்று சுக்கான் அறைச் சுவரில் தொங்கிய வரைபடத்தில் விரலோட்டித் தெரிந்து கொண்டேன். கடல் கல் தூரக் கணிப்புமுறையும் நான் படித்திருந்ததால் எளிதாகக் கணக்கிட முடிந்தது.

(Excerpts from my forthcoming novel RAmOJIUM – from Karaikal Bhuvani 1698 chapter)

அருஞ்சொற் பொருள்

சுக்கான் அறை – a space where the helm of the ship (rudder) is placed

மீகாமன் – மாலுமி

ஏராப்பலகை keel of the ship
a long thin piece of wood or metal along the bottom of a boat that helps it to balance in the water

கடல் கல் nautical mile (1 nautical mile is equal to 1.151 miles)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன