From my forthcoming novel RAMOJIUM – excerpts from Year 1698 Karaikal Bhuvani chapter

வந்தநாள் முற்பகல் – அவருடைய கையில் கட்டைப் பிரிக்காமலேயே நீங்கிவிட்டது. அறை வாசலில் உட்கார்ந்திருந்த வைத்தியர் நல்ல உறக்கத்தில் இருந்தார். கப்பல் உயர்ந்தும் தாழ்ந்தும் ஆடுவது அவருடைய உறக்கத்தை ஆழத்திற்குக் கொண்டு போயிருக்க வேண்டும்.

பெண்ணே. ராவ்ஜி அழைத்தார்.

ஒரு சித்துவேலை செய்தால் என்ன? செம்பருத்திப் பூக்களை அவர் கைக்கு ஒத்தடமிட்டது போல் அடுக்கி அழகு பார்த்தேன்.

“இந்தப் பூவை எல்லாம் விட மாயம் செய்யும் உன் கன்னங்களை இங்கே சேர்த்துப் பிடித்துக் கொஞ்ச இடம் தருவாயா”

அவர் பிரியமும் காதலும் காமமும் ததும்பக் கேட்டார். நான் அந்தப் பூக்களை மறையச் செய்து அவரைச் சுற்றிச் சந்தன கந்தத்தைப் பரவச் செய்தேன்.

“இன்னும் குளிக்கவில்லையா, அழகியே இந்த வாசனை உன் உடம்பிலிருந்து வருவதுதானே மோடி கிறுக்குதடி தலையை” என்றவர், ”உன் உடல் கந்தங்கள் என் மேலும் பரவட்டும். என்னோடு இருக்க வா” என்றார்.

நீராடி பூஜை செய்து வந்தேனே என்று தயக்கம் காட்டினேன். உனக்கு நான் பூஜை செய்கிறேன். பிறகும் நீராடலாம் என்றார்.

ஒரு ராத்திரி தானே உங்களோடு இருந்தேன், தாசி என்பதால் தானே உரிமை வந்ததா என்று கிண்டலும் கேலியும் கொஞ்சம் உண்மையுமாகக் கேட்டேன்.

நீ சித்தினி. தாசியும் தாசனும் நாம் இப்போது ஒருவர்க்கொருவருக்குத்தான். வா, கூடி இருந்து மகிழ்ந்திருப்போம் என்றார் என் ராஜா.

கழிவறை போக துணை வேண்டுமா என்று குறுகுறுப்போடு விசாரித்தேன். அந்த உடல் எனதாகட்டும்.

திரும்பியபோது அவர் அணைப்பில் விழுந்தேன். வியர்வையும், குருதியும், அந்த தேக்குமர உடலின் சுபாவமான கந்தங்களும் தலையில் நேற்றுத் தடவிய கொழும்புத் தேங்காய் எண்ணெய்யின் மாறாத நறுமணமுமாக அவர் என்னை ஆக்கிரமிக்கக் காத்திருந்தேன். கண்களை அந்தத் திவ்விய நிமிடத்துக்காகக் காத்திருக்க மூடினேன். இல்லை, நான் கண் மூடியபடியே இருந்தேன். என்ன ஆனதோ, அந்தக் கணம் வரவேயில்லை. மயக்கத்தில் வீழ்ந்திருந்தார் என் அரசர் மறுபடியும். பொறு, இது பகல் தானே என்று உடல் கடிந்து கொண்டது.

வந்த நாள் பிற்பகல் – குழைய வடித்த அன்னமும், எளிதாக சீரணமாகும் உணவு என்று அரேபியாவில் என் வீட்டில் சிப்பந்திகள் கொடுத்திருந்த உலர் திராட்சையும் பாதாம் பருத்துத் தூவலும் தேனும் கலந்து பிடித்த சிறு உருண்டைகளும், மராட்டி சாம்பார் என்று உலகை எல்லாம் மயக்கும் காரமான பருப்புச் சாறுமாக அவருக்கு என் தோளில் தலை சாய்த்து வைத்து ஊட்டினேன். தோளை விட என் நிறைந்த மார்பு தான் அவருக்கு சுகமாக இருந்ததாக இறங்கிய தலை தெரிவித்தது.

அவருக்கு அளித்த அதே எச்சில் தட்டில் நானும் உண்டேன். பொழுதுபோக எங்கள் படுக்கைக்கு மேலே குளிர்ந்த காற்று சுற்றிவர சித்து வேலை ஒன்று செய்ததில் திருப்தியடைந்தேன். அவரை உறங்கவிட்டு வெளியே வந்து பார்த்தேன்.

விஜயசந்திரிகா மகாராணி போல கம்பீரமாக அசைந்து முன்னால் போக, தொடர்ந்து சேடிப்பெண் போல் ரங்கீலாவும், தொடர்ந்து வண்ண மயிலும் அலைகளோடு பேசிக்கொண்டு போய்க் கொண்டிருந்தன.

உள்ளே வந்தபோது புன்சிரிப்போடு ராவ்ஜி படுக்கையை அடுத்து நின்றிருந்தார்.

“புவனலோசனி மகாராணியார் விஜயம் முடித்தானதா? உங்கள் கப்பலை நல்ல விதமாகப் பராமரித்து, காவல் செய்து, இயந்திரங்களைச் செப்பனிட்டு சீராக்கி எங்களோடு சீராக மிதந்து வர அழைத்துக்கொண்டு வருகிறோமா?”

”ஆம் கடல் அரசரே, எல்லாம் தங்கள் சித்தம். உங்களுக்கு என் நன்றிகள்”.

”அது போதாது தாசிப் பெண் அணங்கே”.

”வேறென்ன வேணும் பிரபோ. நான் வேணுமென்றால் இந்த உடல் எப்போதும் உங்களுக்கு உண்டென சொல்ல எனக்குப் பெருமிதமே தவிர வெட்கமில்லை.”

”பாதுகாப்பு மற்ற உதவிப் பணிகளுக்காக, ஒரு நாளைக்கு நூறு பொன் சிவாஜிப் பணம் நீ எனக்குக் கூலி தர வேண்டும் புவனிப் பெண்ணே”.

”மன்னிக்கவும் அதைத் தர முடியாது”.

ஏன் என்றார் என் ராஜராஜஸ்ரீ மகாராஜர்.

”என்னைக் கொள்ளையடித்து என்னோடு பேசிக் கொண்டிருக்கும் பெருங்கொள்ளையருக்கு இன்னும் பணமும் வேண்டுமோ”.

”பெண்ணே நான் கொள்ளைக்காரனில்லை. எலி பிடிப்பவன். எலிப்பொறி உருவாக்கி தெருத்தெருவாக விற்றுத்தான் பிழைக்க ஆரம்பித்தேன்” என்றார் அவர் என் காது மடலை வருடியபடி. இங்கே நான் எலியா, பொறியா என்று அவரைக் கேட்டேன்.

அவர் என்னை இழுத்து அணைத்துக் கொண்டார். நான் எழுந்து போய் என் அறையின் கதவைத் தாழிட்டு வந்தேன். இணைவிழைய முற்பட்டபோது கதவு பலமாகத் தட்டப்பட்ட ஓசை. இருவரும் சிரித்தபடி விலகினோம்.

அவர் படுத்தபடி இருக்க, நான் மருந்துகளைத் தட்டில் வைத்து அவற்றை அவருக்கு ஊட்டுகிறவளாக கதவை திறந்து கொஞ்சம் போல் மூடி வைத்து சேனாதிபதி மருந்து உட்கொள்கிறார். கொஞ்சம் பொறுங்கள் என்றேன்.

”ஒன்றுமில்லை, கப்பல் போக வேண்டிய பாதையை தேர்வு செய்ய வேண்டும். அதுவரை இங்கேதான் மூன்று கப்பல்களும் சுற்றிச்சுற்றி வரவேண்டும். மகா சேனாதிபதி அவர்களுக்கு உடல் நலமில்லாமல் இருந்ததால்…”

”இருந்ததால்?”

ராமோஜி ராவ்பகதூர் குரல் உயர்ந்து உள்ளிருந்து ஒலிக்க, வந்தவர்கள் அமைதியாக நின்றார்கள். அரபுக் கடலில் செல்லலாம் என்றார். அவர்கள் புறப்படுவதற்கு முன் சேனாதிபதியைத் தொந்தரவு செய்ததற்காக மன்னிக்கக் கோரினார்கள்.

ராமோஜி ராவ்பகதூர் அவர்கள் ஒரு நிமிடம் மௌனமாக இருந்தார். சரி, வாருங்கள், நானும் அங்கே இருக்க வேண்டும் என்று கிளம்பி விட்டார்.

மருத்துவனும் விட்டோபாவும் இருந்து போகலாமே என்று கோரினாலும் அவர்கள் அவர் வருவதை ஆர்வத்தோடு எதிர்பார்த்திருந்தது போல் தெரிந்தது.

அவர் போகும்போது சமூகத்துக்கு நேரம் இருந்தால் இதைப் படித்துப் பாருங்கள் என சிறு மரக் குழலில் இந்த யார்க்கென்று விலாசமிடாத லிகிதத்தை எழுதிய வரைக்குமாகக் கொடுத்தேன்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன