ஆண்டு 1698 – ராமோஜி ஆங்கரேயும் காரைக்கால் புவனியும் – ராமோஜியம் நாவலில் இருந்து

வந்த நாள் இரவு – சலிப்போடு ஊர்ந்து போனது சாயந்திர வேளை. எதிர்பார்க்க வைத்துவிட்டு ஏமாறுவதாகவே எனக்கு அனுபவமானது. ஆக்கிரமித்து அதிகாரம் செய்யும் கொள்ளையர் போல் இரவு நுழைந்தபோது சிநேகத்தோடு ராவ்ஜியும் எங்கள் கப்பலுக்குள் வந்துவிட்டார். வரும்போதே இதழ்க் கோடியில் ஒரு புன்னகை. பாலை எதிர்பார்த்து வரும் பூனை முகத்தில் தென்படும் விஷமச் சிரிப்பு அது.

”இன்றும் இங்கே சற்று நேரம் இருந்து போகலாமா தாசிப் பெண்ணே” என்று விசாரித்தார் அவர்.

”இந்தா உன் எழுத்ததிகாரம். படித்துவிட்டேன். மிகப் பிடித்துப் போனதடி பெண்ணே. அங்கே எடுத்துப் போய்ப் படித்ததை எல்லாம் இனி இங்கே தான் சரிபார்க்க வேண்டும்” என்று இழுத்து என்னைப் படுக்கையில் கிடத்தினார்..

“ என்னைப் பற்றித் தெரிந்தும் என்னைப் பிடிக்கிறதா?” கேட்டேன்.

”உன்னைப் பற்றித் தெரிந்ததால் தான் உன்னைப் பிடிக்கிறது” அவர் கண் சிமிட்டிச் சொன்னார்.

“அப்புறம் வேறென்ன பிடிக்கிறது?” ஒன்றும் தெரியாதவளாகக் கேட்டேன்.

”நீ கற்பனை செய்த உன் கண்கட்டு வித்தைகள்…”

“அதெல்லாம் கண்கட்டு இல்லை… சித்து வேலை”

“அப்படியா, உன் சித்து வேலையால், எங்கே, என் கையை மறையச் செய், பார்க்கலாம்”

“நான் மாட்டேன்” என்றேன் அவசரமாக.

”சரி கையை விட்டுவிடலாம்.. வேறு அவயம்..” வலித்து இழுத்துக் காதில் வேறேதோ சொன்னார். அவரோடு நானும் சிரித்தேன். இப்படியுமா பேசுவார்!

“வேண்டாம் மகராஜ். உங்கள் உடல் உங்களுக்கு சொந்தமானதில்லை. என்னுடையது. முழுசாக இருக்கட்டும் அது”.

அவர் திருப்பிக் கொடுத்த லிகிதக் குழலை பத்திரமாக என் பெட்டியில் வைத்துவிட்டு நானும் அவரருகே வந்தேன்

உனக்கு ரத்னாபாய் தெரியுமா என்றார். சொன்னால் தானே தெரியும். உனக்கு முன் என் பிரியத்தை என்னோடு என்றும் பங்குபோட வந்திருப்பவள் என்றார்.

ரத்னா எப்படி இருப்பாள்?

அழகாக இருப்பாள். அன்பாக இருப்பாள். அவளாக இருப்பாள். நானாகவும் இருப்பாள்.

கவிதை மொழிந்தார்.

என் சக்களத்தியா அவள்?

துணிந்து கேட்டதை அவர் ரசிக்கவில்லை என்று முகக் குறிப்பு சொன்னது. அவள் என் மனைவி என்றார் பெருமையோடு.

ரத்னாவிடம் இவ்வளவு உரிமை எடுத்து எப்போது வேண்டுமானாலும் இணை விழையக் கூப்பிடுவீர்களா என்று கேட்க நினைத்தேன். செய்திருப்பார் தான்.

என்னமோ, அவரை, அவருடைய ஆகிருதியைப் பார்த்ததும் அவருக்கு இப்போதோ, இதற்கு முன்போ, இனி வரும் காலத்திலோ கூட இருந்து சுகம் தர நிறையப் பெண்கள் வந்து போவார்கள் என்று தோன்றியது. புணர்ச்சி மட்டுமா வாழ்க்கை? தாசிப்பெண்ணுக்கு வேறேதும் கனவும் நினைவுமில்லையோ.

”ராவ்பகதூர், வெறும் வயிற்றோட விளையாடப் போக வேணாம். கொஞ்சம் உணவருந்திப் போகலாம்” என்று அழைத்தபடி பழங்களையும் இனிப்புகளையும் சித்தம் செய்து வைக்க மரதகத்திடம் சொன்னேன்.

உலர்ந்த பழங்களும், ஜிலேபி, பூந்தி லட்டு, அரேபிய கோதுமை அல்வா, கோழி அல்வா, பாதாம் அல்வாவும் எடுத்து வந்து தட்டுகளில் வைத்து நீட்டும்போது காரமான முறுக்கு, தட்டையும் கார பூந்தியும் வெவ்வேறு தட்டுகளில் வைத்து அளித்தார்கள், மரதகத்தின் நேர்ப்பார்வையில் சேவகர்கள்.

எதிர்பார்த்தபடி கோழி அல்வா வேண்டாம் என்று முகம் சுளித்து ஒதுக்கி விட்டார். கோழிக்கோடு பட்டணத்திலிருந்து வருவது அது. கோதுமை அல்வா கிண்டும்போது கோழிச்சாறு கலந்து செய்யப்படும் இனிப்பு. மிட்டாயில் அசைவம் எந்த நாளும் வரக்கூடாது என்று தீர்மானமாக மறுத்துவிட்டார்.

கூடவே அரேபிய திராட்சை மதுவும், ஐரோப்பிய துருக்கி மதுவும் சிறு பீங்கான் குவளைகளில் வந்தது.

அந்த ரத்னா பீங்கான் குவளையில் துருக்கி மது விளம்புவாளா என்று கேட்க நினைத்தேன். அழகியாக இருப்பாள். என்னை விட நல்ல நிறமாக, உயரமாக, மெலிய வேண்டிய இடங்களில் மெலிந்தும் பருத்திருக்கும் அங்கமெல்லாம் பருத்தும், என்னை விட வயதில் குறைந்தவளாக இருப்பாள்.

அழகு என்னத்துக்கு? உடல் சுகம் கேட்கும்போது, இருளில் முயங்கும்போது அழகை மனதில் கற்பனை செய்து அனுபவிப்பது ஆணும் பெண்ணும் தானே, சொல்லுங்கள் ராமோஜி ராவ்ஜி.

இனிப்பும், வாயில் காரமான சுவை அனுபவப்படும் பொறித்த பலகாரங்களும், பழக் கூழும், உலர் திராட்சையும் திராட்சை மதுவுமாக வயிற்றுப்பசியைத் தீர்த்துக் கொள்ள, உடற்பசி நானுமுண்டு என்று முன்னால் வந்து கானகப் பெருந்தீயாக அடர்ந்து வெப்பம் கூடி நிலம் கடந்து நின்றது.

கையசைத்து சித்துவேலையாக படுக்கையில் புத்தம்புது ரோஜா மலர் இதழ்களைத் தூவினேன். சந்தனத் துகள்கள் பன்னீரில் கலந்து வெள்ளிக் கிண்ணத்தில் வைத்ததை நான் கை நிறைய எடுத்து அவருடைய விரிந்த மார்பில் தடவினேன். அவரும் எனக்கு சந்தன அபிஷேகம் செய்யப் பின்வாங்கவில்லை. இந்தக் கேளிக்கையை ரத்னாபாய் பார்த்திருக்க நடத்த வேண்டும் என்று எனக்கு விநோதமான ஆசை ஏனோ எழுந்தது.

புலிகள் பொருதுவது போல் சிறு உறுமலோடு இன்பம் சுவைக்கத் தொடங்கினோம். ஒரே நிமிடத்தில் அவரை புவி புவி புவி என்று என்னை என் உடலை என் மணத்தை, என் நாற்றத்தை, என் தூய்மையை, என் அழுக்கை, என் கண் இமையை, கண்ணில் பீளையை, நாவை, நாவில் படிந்த இனிப்பு மிச்சத்தை யாசிக்கும் பசி மிகுந்த யாசகனாக, எனக்கு மட்டும் சொந்தமான ராவ்பகதூராக நான் ஆக்கினேன்.

விரித்த கையால் மூடியும், தரையில் கவிழ்ந்து படுத்தும், திரும்பிப் படுத்தும் என் உடலை அவருக்குத் தராமல் போக்குக்காட்டி, வேட்கை மிகுந்து ஏங்கி இரைஞ்ச வைத்தேன். கட்டிலின் முகப்பில் மண்டியிட்டு தா தா என்று என் முகவாயைப் பற்றி வேண்டினார் மகாசேனாதிபதி. என் பாதங்களை முத்தமிட்டார். வா என்றார்.

அவர் என்னில் எந்த நிமிடமும் வரலாம். இரண்டு உடல்களும் உயிர்களும் ஒன்றாகலாம். ரத்னாபாய், என் சித்து வேலை கடல் கடந்து போக முடியும் என்றால் உன் கண் முன் நாங்கள் ரமிப்பதைப் பார்த்து நீ இன்பமடையச் செய்ய முடியும். பார்க்கிறாயா? நான் காமுறுவதைக் கற்றுத் தெளிந்தவளடி. உன்னைப்போல் இன்னும் கற்றுக்கொள்ள நிறைய உள்ள மாணவி இல்லை.

ராவ்பகதூர் ராமோஜி ராவ் கரங்களைப் பற்றி நான் அவர் கண்களுக்குள் மெழுகுவர்த்தி ஒளியில் நோக்க அவர் கண்களுக்குள் காமம் கனல் வீசி எரிந்தது. அடுத்த வினாடி அவர் உடல் தளர்ந்ததை முகக் குறிப்பு காட்டியது. அதீத சுகம் கொண்டாடிப் புறப்பட அவருடைய புலன்கள் அடுத்த வினாடி சட்டென்று அடங்கி, அவரை ஆடாமலே அடங்கிய வெற்றுடலாக, மனம் முந்தி உடல் பிந்தி ஒரே வினாடியில் வேகமற்றுப் போன சோகத்தை அவர் கண்கள் தாழ்ந்து பார்த்திருந்து ரகசியம் போல் கூறின.

நீங்கள் மிக்க களைப்பாக இருக்கிறீர்கள். அதனால் இது நிகழ்ந்திருக்கலாம் மகாபிரபு. நான் இருக்கிறேன் இணையாக கூட வர.

நான் பேசுவதை நிறுத்தச் சொல்லிக் கைகாட்டினார். கட்டிலில் இருந்து இறங்கிப் போனார்.

Excerpts from my forthcoming novel RAMOJIUM – chapter Year 1698 Karaikal Bhuvani and Ramoji Angre

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன