உறவு என்றொரு சொல் இருந்தால் – ராமோஜி ஆங்கரே – ஆண்டு 1698

நான் கப்பலின் மேல்தளத்துக்கு ஓடிப் போய்ப் பார்க்க, சிறு விளக்கொன்று துணையாக ஒரு சிப்பாய் நூலேணியையும் படகையும் இறக்கி விட, விஜயசந்திரிகா கப்பலின் நூலேணி கீழே வர அமிட் போடப்பட்டதைக் கவனித்தேன்.

ஏணியில் தொங்கியபடி அவர் கடல் பரப்பில் இறங்கும்போது மற்ற ஏணி இருட்டில் தெரிந்து மறைந்தது.

கடல் வெகு கோபமாக இருந்த ராத்திரிப் பொழுது அது. இவரும் தான். இயலாமை ஏற்பத்திய சினம் அது என்று சொல்லாமலேயே புரிந்தது.

ஏமாற்றமும் வருத்தமும் கோபமுமாக அந்த இரவு அனுபவப்பட்டுக் கடந்து போனது என்று இங்கே எழுதி முடித்திருப்பேன். அது நடக்கவில்லை.

அரைமணி நேரம் சென்றபிறகு மணல் கடிகையில் நேரம் ஊர்ந்து இறங்கி மறைந்து கொண்டிருந்தபோது ஜல்ஜல் என்று சங்கிலிகள் சப்திக்க விஜயசந்திரிகாவின் படகும் அடுத்து நூலேணியும் இறக்கப்பட்டதைக் கேட்டும் கண்டும் உறைந்து போய் இருந்தேன்.

வேறே கொள்ளைக்காரர்கள் வந்திருக்கிறார்களா? ராமோஜி ராவ்சாகிப் சந்தோஷப்படுத்திய காலம் இத்தனை விரைவாக முடியப் போகிறதா?

மீகாமன் அறைக்கு ஓடிச் சென்று பார்க்க, ரங்கீலாவின் அதிகாரி விட்டோபா ராவ்ஜி தான் கப்பலைச் செலுத்திக் கொண்டிருந்தார்.

என்ன விசேஷம் நூலேணி இருட்டில் இறக்கப்பட்டிருக்கிறது என்று கேட்டேன்.

சேனாதிபதி வருகிறார் என்றார் அவர் என் முகத்தைப் பார்த்தபடி. எதற்கு என்று சொல்லி உடனே மாற்றிக் கொண்டேன்.

என்னாச்சு, எதையாவது விட்டுப் போய்விட்டாரா?

அதை அவரும் சொல்லவில்லை நீங்களும் சொல்லப் போவதில்லை.

விட்டோபா சிரித்தபடி சுக்கானை வலித்தார்.

மீகாமன் அறை வாசலில் கால் சத்தம். நான் போய்ப் பார்க்க ராமோஜி.

தாசிப்பெண்ணுக்கு அர்த்த ராத்திரியில் தரிசன யோகம் என்று எந்த ஜோசியனும் சொல்லவில்லையே என்றேன் அவரை இறுக அணைத்து கால்கள் மேல் கால் வைத்து உயர்ந்து அவர் உதடுகளைச் சுவைத்துவிட்டு.

அவர் ஏதும் பேசவில்லை. என்னை அப்படியே அள்ளியெடுத்துச் சுமந்து அறைக்குள் தூக்கிப் போய்ப் படுக்கையில் போட்டார். அடுத்த நொடி அங்கே இரண்டு மிருகங்கள் சீறிச் சினந்து மகிழ்ந்து நெருங்கி விலகி பாய்ந்து சுருண்டு பசியாறின. மறக்க முடியாத காதல் களியாடிய இரவு அது.

அந்த ராத்திரியும் அதற்கடுத்ததும், அதற்கு அடுத்து வந்ததும் ராமோஜிராவும் நானும் கணவன் மனைவியாக, அதைவிட நெருக்கமாக உறவு கொண்டு சுகித்திருந்தோம்.

நாளை நான் விலக்காகி இருப்பேன் என்று பொய் சொன்னேன். அதனால் என்ன என்றார் மெல்ல நகைத்து’ இது அறியா வினாவா அறிந்த வினாவா?

அந்தப் பகலிலேயே என்னை ஆக்கிரமித்தார் என் பேரரசர்.

வீட்டு விலக்கு வந்தாலும் உன்னோடு கட்டிக் கொண்டு கிடந்து உறங்கினாலே போதுமடி என்றார் ஒரு முறை. செய்யக் கூடியவர் தான். உன் உடலும் மனமும் அனுமதிக்காமல் அது நடக்காது என்றார் மறந்துவிடாமல்.

ரத்னா, நீ எங்கே இருக்கிறாய்? இப்படி நீ இவரைப் படுக்கையில் திருப்திப்படுத்தியதுண்டா? இங்கே காண வா. கண்ணை விரித்துப் பார். கற்றுக்கொள். நான் சங்கடப்பட மாட்டேன். சந்தோஷத்தோடு வரவேற்கிறேன். ராவ்ஜியை நான் முந்தானையில் முடித்து வைத்திருக்கிறேன் தெரியுமாடி மேனாமினுக்கி? நீ என் அடைப்பக்காரியாக தீபமும் தூபமும் பிடித்து நில். வா, உன் ராவ்ஜியின் ஆசைநாயகி நான். என் எச்சில் படிக்கத்தோடு வந்து ஓரமாக நில்.
*****************************
ஐந்து நாளாக இந்த நாட்குறிப்பை எழுத நேரம் இல்லை. இருந்தாலும் எழுத என்ன இருக்கிறது? அதெல்லாம் முழுக்க முழுக்க நானும் ராமோஜி ராவ்பகதூரும் மட்டும் பங்கு போட்டுக் கொண்டது.

ஒரு நாள் போல் அடுத்த நாள் இல்லை, ஒரு காலை நேரம் போல் அடுத்த காலை இல்லை. பகலிலும் முயங்கிக் கிடந்து ராத்திரி சதுரங்கம் விளையாடினோம். இது நிஜ சதுரங்க விளையாட்டு தான்.

அறுபத்து நாலு கரணம் சொன்ன வாத்சாயனனின் கலையை அபூர்வமான கையெழுத்துப் பிரதியாக வழவழத்த சீனக் காகிதத்தில் மசக்கொட்டை மசி கொண்டு எழுதியதை எல்லாம் ஒவ்வொன்றாக மேற்கொண்டு இன்பம் துய்த்தோம். வாத்சாயனனுக்கே இன்னும் நாலைந்து சொல்லித் தருவார் என் ராவ்ஜி.

”நீ என்ன குறைந்தா போனாய், துய்க்கத் துய்க்க உன்னோடு அனுபவித்துக் கிடக்க வெறி மூண்டெழுகிறது தாசிப் பெண்ணே” என்று ராவ்ஜி முத்தங்களுக்கிடையே சொல்வது வாடிக்கையாகிப் போனது.

ஒவ்வொரு ராத்திரியும் நான் ரதிதேவிக்கு நன்றி சொன்னேன். விலக்காகி வெளியே நிற்கும் அந்த நாட்களுக்கு முந்தியே இந்த இரவுகள் எனக்கு, எங்களுக்குக் கிடைத்திருக்கின்றன.

”இப்படி புவி புவி புவி என்று தவிட்டுக்குருவி மாதிரி நொடிக்கு நூறு தடவை படுக்கையில் பெயர் சொல்கிறீர்களே, கரை போனதும் புவிக்கு என்ன வைத்திருக்கிறீர்கள்?”

என்ன வேண்டும் என் கண்ணாட்டிக்கு என்று உதடு வலிக்கத் திருகி விளையாடியபடி கேட்டார்.

ரத்னாவோடு என்னையும் கல்யாணம் செய்து கொண்டு இரண்டாவது மனைவி என்று ஊர் அறிய வீடு ஏற்படுத்திக் கொடுத்து, வந்து போவீர்களா?

”நிச்சயம் உன்னை மறக்க மாட்டேன்”.

அதைத் தவிர அவர் வேறேதும் சொல்லவில்லை.

”ஒரு நாளைக்கு காவல் செலவு நூறு ஹொன் தரவேண்டும் என்றீர்களே. இன்று பதின்மூன்றாம் நாள். இதுவரை நான் காவலுக்காகக் கொடுக்க வேண்டிய தொகை ஆயிரத்து முன்னூறு ஹொன், சேனாதிபதி ராவ்பகதூர் அவர்களே”.

வாத்சாயனன் புத்தகம் கடைசி அத்தியாயத்தில் இருந்தபோது பகல் நேரத்தில் அவர் வந்தார். மனிதர் நல்ல உற்சாகத்தோடு இருப்பதாக முகம் சொன்னது.

”நீ என்ன கன்னடத்துப் பச்சைக்கிளியாகி விட்டாயா? ப வராதா உன் சிவந்த நாக்கில்” என்றார். பொன் என்ற தமிழ்ச் சொல் தான் ஹொன் ஆனதாம். அவர் சொன்னால் சரிதான்.

புவிச் செல்லப்பெண்ணே, உன்னோடு நல்ல சேதி பகிரத்தான் வந்தேன்.

கல்யாணம் செய்து கொள்ள முடிவு செய்து விட்டாரா?

மூச்சை அடக்கி அடுத்த வார்த்தைக்காக நின்றபோது ரத்னா என்றார். ரத்னா நான் வந்தபோது இரண்டு மாதம் கருவுற்றிருந்தாள். இப்போது வைத்தியன் அதை உறுதிப்படுத்தி இருக்கிறான். நான்காம் மாதம் தொடங்கிவிட்டதாக லிகிதம் கொடுத்து விட்ட ரோந்துப் படகை சற்றுமுன் எதிர்கொண்டோம்.

எனக்கு ஒரு ஏமாற்றமும் இல்லை. அவருடைய சந்தோஷத்தை நானும் கொண்டாடினேன். முந்திரியும் உலர்ந்த திராட்சையும் கல்கண்டும் விஜயசந்திரிகையிலும் ரங்கீலாவிலும் வண்ண மயிலிலும் எல்லோருக்கும் கொடுத்தேன். அவர் வாயிலும் ஒரு பிடி சர்க்கரையை எடுத்துப் போட்டேன்.

”தலைச்சன் பிள்ளையா, ராவ்ஜி?”

“ஆமடி புவனிப் பெண்ணே! மகளோ, மகனோ தெரியாது”

”கணித்துச் சொன்னால், எனக்கு என்ன பரிசு தருவீர்கள் ராவ்ஜி?” என்று கேட்டேன்.

”எப்போதும் போல் நான் தான்”.

வேறென்ன வேண்டுவேன் பேதை நான்?

ரத்னா என்ற, நான் சந்தித்திருக்காத அந்தப் பெண் மேல் வைத்திருந்த வன்மம் எல்லாம் கரைந்து போக, என் ராமோஜியின் உயிர்த்துளி உருவாக்கிய கருவைச் சுமக்கிறவள் என்று அவள் மேல் பரிவும் பாசமும் அந்தக் கணத்தில் ஏற்பட்டன. அவளை இனி இகழ மாட்டேன். சிறுமைப்படுத்தி வார்த்தை சொல்ல மாட்டேன்.

அடுத்த நாள் பகல் இரண்டு மணிக்கு என்னைத் தயாராக இருக்கும்படி ராமோஜி ஆங்கரே மகராஜ் சொல்லி விட்டுப் போனார். நாகைப்பட்டிணத்துக்கு அதிகத் தொலைவில் இல்லாத அந்தக் கடல் பரப்பில் வரப் போகும் பெரிய படகு ஒன்றில் நான் வீட்டுக்குப் பயணப்படலாம் என்றும் எடுத்து வந்த பொன், வைரம், நவரத்தினக் கற்கள், கம்பளங்கள் இவற்றை வீடு வரை வந்து கொடுத்து விட்டுப் போக நான்கு சிப்பாய்கள் கூடவே வருவார்கள் என்றும் தெரிவித்துப் போனார் அவர்.

வண்ணமயில் கப்பல்? அது தாற்காலிகமாக மராட்டி கடற்படைக் கப்பலாக ராமோஜி ஆங்கரே மகாராஜின் கட்டுப்பாட்டில் இருக்கும். அரேபியாவில் இருந்து யார் உரிமையாளர் என்ற தகவல் பெறப்பட்டு கப்பல் அவர்கள் வசம் விடுவிக்கப்படும்.

ஓய் ராவ்ஜி, என்னையும் பிடித்து உங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்களேன் என்றேன்.

அரபுக் கிழவர் உரிமை கோரி வந்தால் கொடுத்து விடலாமா என்றார் கண் சுழற்றி.

கொடுப்பீர், கொடுக்க மாட்டீர்?

அவரைத் கட்டித் தூக்க முயற்சி செய்து கீழே விழுந்தேன். மறுபடி கிடந்தோம் என் தனியறைத் தரையில்.

இன்றைக்கு இறுதித் தழுவலா?

ராத்திரி வந்த ராமோஜித் திருடனைக் கேட்டேன். அவன் இரக்கமே இல்லாமல் அக நெருப்பை ஊதிப் பெரிதாக்கிப் பற்றி எரிய வைத்தான்.

தப்பு தப்பு என் ராஜாவே. கணக்கு சொல்லுங்கள்.

பதிமூன்று நாள், ஒரு நாளைக்கு நூறு ஹொன் என்றபடி ஆயிரத்து முன்னூறு பொன். நாளை நாகை செல்ல சிப்பாய்க் காவலுக்கு இன்னொரு ஐம்பது பொன். ஆயிரத்து முன்னூற்றைம்பது பொன் மொத்தம். எப்போது வாங்கிக் கொள்ளட்டும்?

அவர் என் முகவாயை நிமிர்த்தி முத்தமிட்டபடி கேட்டார்.

காலம் வரும்போது வட்டியும் முதலுமாகக் கிட்டும் என்று நான் அவரைக் கீழே கிடத்திக் காதல் செய்தேன் அந்த ராத்திரி.

பகல் ரெண்டு மணிக்கு கப்பலில் இருந்து நாகை செல்லும் படகில் இறங்கிய போது கப்பல் விஜயசந்திரிகாவை பார்த்தேன். மேல் தளத்தில் யாரும் இல்லை. பறந்து வந்த ஒற்றைக் கடல் காகம் தனியாகக் கரைந்துவிட்டுத் திரும்பிப் பறக்க நான் வெறுமையை நோக்கிக் கையாட்டினேன். படகு நகர்ந்தது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன