என் அடுத்த புதினம் ராமோஜியம் – ராமோஜி புனிதப்பயணம் போகும் 1708 – அத்தியாயத்திலிருந்து

17.ராமோஜி ஆங்கரே – எலிப்பொறிச் சத்திரம் 1707

இரண்டு ஒட்டகங்கள். ஒரு மட்டக்குதிரை. ஒரு பல்லக்கு. பல்லக்குத் தூக்கிகளாகவும், ஒட்டகம் நடத்திக் கூட்டிப் போகிறவர்களுமாக மொத்தம் பனிரெண்டு காலாட்கள். மட்டக்குதிரையில் ஆரோகணித்து கெச்சலாக ஒரு காரியஸ்தன். கூடவே மூங்கில் கடகங்களைத் தலையில் சுமந்தபடி ஓடும் இரண்டு பேர். ஆக பதினைந்து பேர் சேர்ந்து வர சுவர்ணதுர்க்கத்தில் இருந்து புறப்பட்டது போன ஞாயிற்றுக்கிழமை காலையில். மராட்டிய சமுத்திர சேனையில் படைத் தளபதியான ராமோஜி ஆங்கரே யாத்திரையில் இருக்கிறான்.

மனைவி ரத்னா பாய் ஆங்க்ரேயும் பிரிய மகள் ஸ்வதந்த்ரா ஆங்க்ரேயும் ராமோஜியோடு வருவதாக இருந்தது, ரத்னா பாய்க்கு ஜூரம் கண்டதால் நிகழாமல் போனது.

அவள் இன்னும் ஒரு மாதமாவது எந்த அலைச்சலும் இல்லாமல் ஓய்வெடுத்துக் கொள்ளவேண்டும் என்றார் மருத்துவர். ஆக, ராமோஜி மட்டும் யாத்திரை போயாக வேண்டும். ஜோசியர்கள் பரிகாரங்கள் கற்பித்து அவற்றை நிறைவேற்றி ராமோஜி தனியாகப் போய்வர அனுமதித்தார்கள்.

தஞ்சாவூரில் நிசும்பசூதனி காளிமாதா கோவிலில் பிரார்த்தனையும் வழிபாடும் குலதெய்வம் கொண்டாடுதலும், தேவிபட்டிணம் வழியே திருப்புல்லாணியும், ராமேசுவரமும் தொழுது வருவதும் தவிர ராமோஜிக்கு கனோஜி ஆங்கரே சேர்ப்பித்த இன்னொரு காரியமும் உண்டு.

வழியில் இருக்கும் சத்திரங்களிலும் சாவடிகளிலும் தங்கி இருந்து நாட்டுநடப்பையும், ஜனங்களின் பேச்சையும் கவனிக்க வேண்டும். மராட்டா ஆட்சி கலகலத்துப் போய்க்கொண்டிருக்கும் நேரம். சத்ரபதி சிவாஜியின் மகன் சாம்பாஜி போஸ்லே மறைவுக்கு அப்புறம் தொடங்கிய சிவாஜியின் இன்னொரு மகன் ராஜாராம் போஸ்லே ஆட்சி எல்லா சிரமங்களோடும் நடந்து கொண்டிருக்கிறது. இன்னும் எத்தனை நாள் தாக்குப்பிடிப்பார் என்பது தெரியவில்லை.

ராஜாராம் போன்ஸ்லே ஆட்சி விழுந்தால், தெற்கே கடலோடு நகர்ந்து வந்து நாகைப்பட்டணம் கடந்து தஞ்சாவூரில் மையம் கொள்ள கனோஜி ஆங்கரே நினைப்பது பகிரங்கமானது இல்லை. தஞ்சாவூரில் சத்ரபதி சிவாஜியின் சகோதரரான வெங்கோஜி போன்ஸ்லே அரசாண்டு முடிந்து, அவருடைய மகன் சாஹூஜி போன்ஸ்லே பட்டத்துக்கு வந்திருக்கிறார். நல்ல பெயர் எடுத்திருக்கிறார் என்றும், மதுரை நாயக்கர் அரசு தொல்லை கொடுத்தாலும் நிலையான ஆட்சியைத் தர சாஹூஜி எல்லா முயற்சியும் எடுப்பதாகவும் கேள்விப்பட்டார் கனோஜி. அது எவ்வளவு உண்மை என்று நம்பகமான தகவலாக ராமோஜி வழியே கேட்க நினைக்கிறார் அவர்.

இது தவிரவும், அவுரங்கசீப்பின் முகலாயப் பேரரசு முதியவரான அவருக்கு அப்புறம் என்ன ஆகும் என்றோ, அவுரங்கசீப் சிறையில் வைத்திருக்கும் சிவாஜியின் பேரன் போஸ்லே சாஹு விடுவிக்கப்படுவாரா என்றோ யாருக்கும் தெரியவிலை.

பேரரசுகள் நிலை குலையும்போது அங்கங்கே அதிகாரத்தை நிலைநிறுத்திக் கொள்வதே ஆங்கரே போன்ற திறமைசாலிகள் வகுத்த வாய்க்கால்களாகும் என்பதை ராமோஜி அறிவான்.

எல்லா துறைமுகங்களிலும் நிச்சயமற்ற தன்மை தென்படும்போது கனோஜி நிலத்துக்கு வந்து ஆட்சி ஏற்படுத்த ராமோஜி போன்ற மற்ற இளம் தளபதிகளை நம்பி இருக்கிறான் என்பது ராமோஜிக்குப் புரியும்.

அவனுடைய ஒரு மனது கனோஜி ஆங்கரேயோடு போகச் சொல்கிறது. மற்றது, பிறந்த தஞ்சைக்குத் திரும்பி சாஹூஜியோடு இருக்கச் சொல்கிறது. இந்தப் பயணம் அதை ஓரளவுக்கு முடிவு செய்யவும் வழிவகுக்கும் என்று எதிர்பார்க்கிறான் அவன்.

மராட்டிய கடற்படை அதிகாரியாக இல்லாமல் மராட்டிய யாத்திரைக்காரனாக ராமோஜி இந்தப் பயணம் புறப்பட்டிருக்கிறான்.

அரசியல் ஆலோசனைகளை இந்த யாத்திரைக் காலத்தில் கைக்கொள்ள மாட்டார் ராமோஜி என்று ஒற்றர்கள் மூலம் தகவல் பரப்பியதோடு, விட்டோபா கோலி மூலம் யாராரோ அரசியல் பேச வந்ததாகவும் ராமோஜி மறுத்துத் திருப்பி அனுப்பியதாகவும் சொல்ல நாலைந்து பேரையும் ஏற்பாடு செய்திருந்தார்கள்.

ராமோஜியின் உடுப்பும் அதிகார மிடுக்கு இல்லாமல் கைத்தறியில் நெய்த பருத்தித் துணி வேஷ்டியும், முகலாய பாணி குப்பாயமுமாக இருந்தது. தலையில் அலங்காரங்களோடு வீற்றிருந்த வண்ணத் தலைப்பாகை போய், சாதாரணக் கைத்தறித் துணிக் குல்லாயானது தலையலங்காரம்.

கடலோடும்போது அணிந்த கெட்டியான தோல் பாத அணிகளின் இடத்தில் இடத்தில் மர ஜோடுகளும், மெல்லிய தோல் செருப்புகளும் அணி செய்தன. கையில் குரல் வீசிப் பாடும்போது முழக்கக் கைத்தாளமும் தானே ஏறியது.

பாடிப் பரவி ஆண்டவனைத் துதித்துப் போகும் யாத்ரிகன் ராமோஜி. கனோஜி ஆங்கரே ஏற்பாடு செய்த ஒற்றர் குழு இவர்களுக்கு ஐந்து கல் இடைவெளி விட்டுத் தொடர்கிறது.

ராமோஜி பாதை மாறிவிடத் தீர்மானித்து தஞ்சை மராட்டிய ஆட்சியை ஆதரிக்க முனைந்தால் அந்தத் தகவல் மராட்டியப் பேரரசின் கடற்படைப் பெருந்தலைவன் கனோஜி ஆங்கரேவுக்கு உடனடியாக ஒற்றர்களால் அறிவிக்கப்படும். எல்லோருடைய எல்லாத் திட்டங்களும் மாறுதலுக்கு உட்பட்டவை, எப்போதும்.

இரண்டு ஆட்சிகளுமே மராத்திய அரசின் இரு வடிவங்கள் தான் என்பதால் யாரும் யாரையும் எதிரிகளாகக் கருத இடமில்லை. எனினும் இந்தக் காலகட்டத்தில் ராமோஜி போன்ற இளைய படைத் தலைவர்கள் மராத்தியப் பேரரசோடு இல்லாமல் தெற்கே தஞ்சைக்கு குடிபெயர்வது சிவாஜி ஸ்தாபித்த அரசுக்குப் பின்னடைவை ஏற்படுத்தலாம்.

ஆறு நாளில் ஸ்வர்ணதுர்க்கத்தில் இருந்து திட்டமிட்டபடி மந்திராலயம் வந்தாகி விட்டது. அடுத்து, காரைக்காலில் தங்கிப் போகவேண்டும். ராமோஜி காரைக்கால் போவதை எதிர்பார்த்திருக்கிறான்.

தாசிப்பெண் புவனலோசனி அவருக்கு நெருங்கியணைத்த நெருப்புக் கனலாக உடலையும் உள்ளத்தையும் ஒரு பத்து நாள் மீட்டி ஏதும் சொல்லாமல் மறைந்து போனதை அவன் ஆயுள் இருக்கும்வரை மறக்க மாட்டான்.

புவி என்ற புவனலோசனியைக் கல்யாணம் செய்து கொள்வதாக அவளுக்கு வாக்குறுதி கொடுத்ததாக அவன் நினைவில் இல்லை. வந்தால் பேருக்குத் தாலி கட்டி, ஒரு வைப்பாடியாக வைத்திருப்பான். ரத்னா பாய் இதை எல்லாம் ஒரு விஷயமாகக் கருதுவது எப்போதோ நின்று போயிருக்கிறது.

ஒரு லிகிதம் எழுதியிருந்தால் அவளுக்குத் தன்மீது இருந்தது இன்னும் வடியாத காதலும் மோகமும் என்று உறுதியாகி இருக்கும். தாசிப்பெண் தாசிப்பெண் தானே. காரைக்கால் போனதும் கப்பல் களியாட்ட தினங்களை மறந்து போனாளோ.

Excerpts from my forthcoming novel RAMOJIUM – Ramoji Angre on a pilgrimage 1708

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன