என் புது நாவல் ராமோஜியம் – காரைக்காலில் ராமோஜி ஆங்கரே – வருடம் 1708

பல்லக்கோடு கூட நடந்து கொண்டிருந்த ராமோஜி பின்னால் திரும்பி ஒரு குவளை தண்ணீர் கேட்டான். குளிர்ந்த நீராக பல்லக்கின் முன்பகுதியில் மண்பானைக்கு மேல் ஈரமான கனத்த துணி கட்டி வெட்டிவேரும் ஏலப் பொடியும் சீரகப் பொடியும் கலந்து சற்றே பழுப்பு நிறத்தில் இருந்த தண்ணீரை ஓடி வந்து ஒரு சிப்பந்தி கொடுத்தான்.

தண்ணீரை நின்றும் நடந்தும் குடிக்கக் கூடாது என்று எந்தக் காலத்திலோ தஞ்சையில் திண்ணைப் பள்ளியில் சொல்லிக் கொடுத்த சீலம் நினைவில் எப்போதும் இருப்பதால், அவன் நின்றான். மடக்கி வைத்திருந்த மர நாற்காலியைச் சுமந்து ஓடும் ஒருத்தன் வந்து மரியாதையாக நாற்காலியை மண்ணில் இட, இன்னொருவன் குளிரக் குளிரத் தாழங்குடை பிடித்தான்.

ஓஓஓ என்று முண்டாசை அவிழ்த்து வியர்வையைத் துடைத்தபடி பல்லக்குத் தூக்கிகள் சத்தமிட, பல்லக்குகள் தரையிறக்கப் பட்டு தாங்கிகளில் தரைக்கு இரண்டு அடி மேலே இருக்கும்படி இருத்தப்பட்டன.

பக்கத்து மாந்தோப்பில் தோப்புக்காரர் அனுமதியோடு பகல் உணவு சமைக்கத் தீமூட்டினார்கள். ராமேஸ்வரம் யாத்திரையாக மேற்கிலிருந்து வரும் யாத்ரீகர்கள் என்று தெரியவர, மாந்தோப்புக்காரரும், பக்கத்து தென்னந்தோப்பு, அருகே காய்கறித் தோட்டம், சுற்றிப் பரந்த நெல்வயல் இப்படி வளமான நிலங்களின் உடமையாளர்களும், அங்கே எல்லாம் உழைப்பவர்களும் இவர்களை கும்பிட்டு விழுந்து நல்ல வார்த்தைகளைப் பாட்டாகக் கேட்க சிரத்தை காட்டினார்கள்.

பல்லக்குத் தூக்கிகளில் நாலு பேர் நன்றாக விட்டல பஜனை செய்யக் கூடியவர்கள். அவர்கள் இருவர் இருவராக பக்திமயமான அபங்குகளை குரலெடுத்து, கைத்தாளம் தட்டிப் பாட, மொழி தெரியாவிட்டாலும் ஊரே கூடப்பாடியது. ராமோஜியும் ரசித்தபடி அரிசி வெந்ததையும் சாம்பார் பொங்கி நுரைப்பதையும் மேற்பார்வை செய்து சுற்றி வந்து கொண்டிருந்தான்.

எஜமான் அதெல்லாம் செய்ய வேண்டாம், இருந்து கட்டளை பிறப்பித்தாலே போதுமானது என்று சகயாத்திரீகர்கள் முறையிட்டாலும் அவன் அதையெல்லாம் கேட்கும் நிலையில் இல்லை.

தோப்புக்கு அடுத்த கிராமத்துப் பெண்கள் சுடச்சுடச் சமைத்த சோறும் புளிக்குழம்பும் எடுத்து வர, கூட வந்த சிறுவர்கள் கவிச்சி கவிச்சி கவிச்சி என்று விசாரித்தபடி நின்றார்கள்.

அது என்ன மாதிரியான சமாசாரம் என்று புரியாமல் வந்தவர்கள் நிற்க, சுற்றி வரும்போது காதில் விழுந்த ராமோஜி, கவிச்சிக்கு என்ன போச்சு, மாடு தவிர சகலமும் சாப்பிடப்படும் என்று நல்ல தமிழில் சொல்ல அந்தப் பெண்களும் சிறுவர்களும் ஓவென்று ஆரவாரம் செய்தார்கள்.

அரை மணி நேரத்தில் அந்த இடம் முழுக்க கவிச்சி வாடை வீசியது. விரதம் இருக்கிறபடியால் ராமோஜிக்கும், அந்த கூட்டத்தில் இரண்டு பிராமணர்களுக்கும் மாமிசம் விலக்கி சர்வ ஜாக்கிரதையாக மற்ற உணவு சமைத்ததும், செய்து எடுத்து வந்ததுமாக போதும் போதும் என்று கை உயர்த்தும் வரையும் அது கடந்தும் வந்து கொண்டே இருந்தது.

தமிழ்ப் பிரதேச விருந்து உபசாரத்துக்கு வேறே எந்த ராஜ்யத்திலும் ஒப்பில்லை என்ற் ராமோஜி சொன்னபோது அந்த யாத்திரீகர் குழு ஆரவாரம் செய்தது.

பெரிய மரக் குடுவைகளில் கள் நிறைத்துக் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதை பத்திரமாக ராமோஜியின் நேர்காவலுக்கு உட்படுத்தி நன்றி சொல்லிப் பிரயாணத்தைத் தொடர்ந்தது அந்த யாத்திரீகர் குழு.

காரைக்கால் கால் காதம் என்று கல்லில் கொத்தி வைத்த சுமைதாங்கி ஒன்று கண்ணில் பட்டது. சுமைதாங்கிகளில்,தலைச்சுமைக்காரர்கள் சுமை இறக்கி ஓய்வு கொள்வது இந்த மாதிரி யாத்திரைகளில் அனுமதிக்கப்பட்டது. அங்கே சுமை இறக்கி நிற்க யார் அனுமதியும் அவர்கள் வாங்க வேண்டியதில்லை.

நாகேந்து என்ற சுமைக்காரன் ராமோஜியைத் தயக்கத்தோடு பார்த்தான். இது அனுமதி சம்பந்தமான ஒன்றில்லை என்று தெரியும் ராமோஜுக்கு.

என்ன,சுருட்டு வேணுமா என்று அவன் கண்ணைக் குறுக்கி பகடி செய்து பார்த்தபோது, ராஜா சாகேப், நீங்க நினைச்சால் தப்பாகுமா என்ன என்றான் உடலே குழைந்து வளைந்து நின்ற நாகேந்து.

புதுச் சுருட்டு தரட்டா என்று கேட்டான் ராமோஜி. அய்யோ அது எதுக்கு? நீங்க பிடிச்சு பாதியிலே அமர்த்தி வச்சது போதும் என்று அவசரமாகச் சொன்னான் அவன்.

காலே அரைக்கால் மீதி உறையூர் சுருட்டு மீதமிருக்கும் புகையிலைச் சுருட்டை அவனுக்கு ஈந்தான் ராமோஜி. ஓரமாகப் போய் பற்ற வைத்து ஓரமாகவே உட்கார்ந்து புகை விட்டான் அவன்.

ராமோஜி ஒரு புதுச் சுருட்டை உறையிலிருந்து எடுத்துப் பற்றவைக்க சிக்கிமுக்கிக் கல் தேட, மட்டக் குதிரையில் வந்த காரியஸ்தன் ஓடிப்போய் எடுத்து வந்து தந்தான்.

”ஒரு காதம்கிறதை வெள்ளைக்காரன் மைல்னு சொல்றான்.. ரெண்டும் ஒண்ணுதான்”.

நாகேந்து குரல் பலமாக ஒலிக்க, போனால் போகட்டும் என்று ராமோஜி எல்லோருக்கு அனுமதித்த ஒரு மடக்கு கள். அதற்கு மேல் வழியில் வைத்துக் குடித்து போதையேறித் தள்ளாட அவன் அனுமதிக்க மாட்டான்.

புகையும் சுருட்டோடு பல்லக்குத் தூக்கிகளின் பேச்சில் புகுந்து கொண்டான் ராமோஜி. அவர்களோடும் அந்நியோன்யம் வேண்டியிருக்கிறது. பேஷ்வாவிடம் வேலை பார்த்து விட்டு சொந்த ஊரென்று சுவர்ணதுர்க்கம் அருகே துறைமுக நகருக்கு வந்த நாகேந்து, பேஷ்வா பற்றி வேறே யாருக்கும் தெரியாத சமாசாரம் அவ்வப்போது ராமோஜிக்குத் தெரிவித்திருக்கிறான். இன்னும் சொல்ல அவனிடம் உண்டு என்று ராமோஜி அறிவான்.

”நாகேந்து, மைலும் தூரத்தை அளக்க ஒரு அளவை தான். ஆனா, ஒரு மைல் ஒரு காதம் இல்லே. ஒரு காதம் என்பது பதினாலு மைல் சரியா நூல் பிடிச்சா பதிமூணே கால் மைலா இருக்கலாம்.. தமிழ்ப் பிரதேசத்துலே மைலை கல் அப்படீன்னு சொல்றாங்க.. வெள்ளைக்காரன் புழங்கி வரதாலே, மைல் தூரத்தை அளந்து கல் நாட்டி வைக்கறதாலே, ரெண்டு கல் தூரம், பத்து கல் தூரம் எல்லாம் பேச்சுலே, எழுதி வைக்கறதுலே வந்துட்டிருக்கு..”

பல்லக்கோடு நடந்தும் ஓடியும் வந்தபடி ராமோஜி சொன்னான்.

Excerpts from my forthcoming novel RAMOJIUM – from the chapter Ramoji Angre at Karaikal ElipoRi chathram 1708

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன