ராமோஜியம் நாவல் : ராமோஜி ஆங்கரே – மன்னர் சாஹுஜி போன்ஸ்லே சந்திப்பு 1708

மகராஜ் எதுக்கு உடம்பை வருத்தி பல்லக்கோடு ஓடி வரணும்? நீங்க ஏறி வந்ததை விட கூடவே ஓடி வர்றது தான் அதிகம்.. உரிமையோடு கோபித்துக் கொண்டான் நாகேந்து.

சரி, நீ வேணும்னா பல்லக்கு உள்ளே உட்காரு.. தூக்கிக்கிட்டு ஓடி வரேன் என்றான் ராமோஜி.

அய்யோ அய்யோ என்று கன்னத்தில் போட்டு பாவம் விலக்கிக்கொண்டு நாகேந்து சொன்னான் –
”மகாராஜா, விளையாட்டுக்குக் கூட அப்படி எல்லாம் சொல்லாதீங்க.. விட்டலன் கிருபையிலே நீங்க இன்னும் பல வருஷம் பல்லக்கிலேயும், குதிரை, யானையிலேயும், சமுத்திரத்துலே கப்பல், படகிலேயும் விஜயத்தோடு பவனி வரணும்.. ஜெய் விட்டல்..”

எல்லோரும் ஜெய் ஜெய் விட்டல் சொன்னார்கள்.

நல்ல வேகமாக ஓடி வந்திருக்கிறார்கள் யாத்திரா கோஷ்டி முழுவதும். காரைக்கால் சத்திரம் கால் காதம் என்று அடுத்த சுமைதாங்கி தகவல் சொல்ல, நேரே நேரே என்று சுமைதாங்கியைக் கடந்து சுமட்டுக்காரர்கள் ஓடினார்கள்.

அவங்க அளவை வேறேயா இருக்கே.. இன்னொரு பல்லக்குத் தூக்கி மரியாதையோடு புக, சூரியன் அஸ்தமித்து அடிவானத்தில் சிவப்புப் பூசிய தருணத்தில் மேற்கிலிருந்தும் தெற்கில் இருந்தும் தொடர்ந்து இதமான கடற்காற்று வீசிக்கொண்டிருந்தது.

மூணரை மைல்தானா பாக்கி மகாராஜா? நாகேந்து புதியதாக அறிந்ததைப் பயன்படுத்தும் சந்தோஷத்தோடு பல்லக்குக்கு அருகே ஓடியபடி சொன்னான்.

பல்லக்குத் திரையை ஒதுக்கியபடி உள்ளே சிறிது கண்ணயர்ந்திருந்த ராமோஜி கழுத்தில் மாட்டியிருந்த தூரதரிசினி வழியாக முன்னால் பார்க்க இடப்புறம் ஒரு கல் தூரத்தில் நேர்த்தியான கல் கட்டுமானமும் வேலைப்பாடும் அருகில் என்பது போல் தெரிந்திட ராமோஜி திருப்தி தெரிவிக்கும் வகையில் தலையை அசைத்தான்.

தாசிப்பெண் உழைத்திருக்கிறாள். அவள் ஏற்படுத்தப் போகும் சத்திரத்தை போகம் மீறாமல் இருக்க கலவியின் இடையே பிரஸ்தாபித்திருக்கிறாள்.

இதோ அவள் சொன்ன நான்கு வாசல்படிகள் கல்லில் அமைத்து காரை இடையிட்டு. முன்வரிசையில் இரு பெரும் தூண்கள் புவியின் தொடைகள் போல் அடர்ந்து விரிந்து அழகாக நிற்பது கண்ணை நிறைத்தது ராமோஜிக்கு. பின்வரிசையில் நான்கு துணைத் தூண்கள் அழகு சேர்த்தன. மண்டப முகப்பில் இரண்டு பக்கமும் சேர்ந்தெழுந்து நிற்கும் யாளிகளும் கூட அவளுடைய திண்ணென்ற மார்பகத்தை நினைவு படுத்தின.

புவிப்பெண்ணே, ஏன் தொடர்பு வேண்டாம் என்று துண்டித்து விட்டாய்? ராமோஜி போய் ஒரு சோமோஜி கிடைத்தானா இங்கே?

இது எலிப்பொறிச் சத்திரம் என்று காரியஸ்தன் வணங்கிச் சொன்னான். ராமோஜியின் புன்சிரிப்பு சந்தோஷமாக ஒரு நிமிடம் விரிந்தது.

யாத்திரை கோஷ்டி உள்ளே நுழையும்போது சத்திரத்தின் முன்வாசலில் மாலை மரியாதைகளும் பன்னீர்ச் செம்புமாக இரண்டு அதிகாரிகளும், ஆட்டக்காரிகளும், மிழவு வாசிக்கிறவர்களும் நிற்பதை ராமோஜி கண்டான்.

அட, அடா, நாம் வரும் நேரத்தில் யாரோ உள்ளூர்ப் பிரமுகரோ, வடக்கில் இருந்து தனவந்தரோ ராமேஸ்வரம் யாத்திரையாக இங்கே ராத்தங்க வருகிறார்கள் போலிருக்கே. என்று சிந்தனை ஓட்டம் அவனுக்குள். வேறு சத்திரம் தேடிப் போய்விடலாமா என்று கூடத் தோன்றியது. ராத்திரி இருட்ட ஆரம்பித்த இந்த நேரத்தில் வேறு இடம் தேடிப் போவது உசிதமில்லை தான்.

பல்லக்கு தரை இறக்க சமிக்ஞை செய்தான் ராமோஜி. வெளியே வந்தபோது மரியாதையோடு வணங்கியபடி நின்ற குழுவினரை பதிலுக்கு வணங்கினான் அவன்.

”சுவர்ணதுர்க்கத்திலிருந்து யாத்திரை வரும் அடியார் கோஷ்டி இது. வருடா வருடம் விட்டல மகாராஜ் தரிசனத்துக்கு பண்டரிபுரம் கால்நடையாகப் போகிற அடியார்கள் நாங்கள். இந்த வருஷம் அமைதியும் சுபிட்சமும் ஆனந்தமும் பாதுகாப்பும் இங்கே நிலவுவதால் தெற்குப் பகுதிக்கு சேது நோக்கிப் பயணம் மேற்கொண்டோம்”.

அவன் பேசி நிறுத்த, கையில் பிடித்திருந்த ரோஜாப்பூ மாலையைத் தோளில் போட்டவர், “நான் சத்திரத்தின் பேஷ்கார். உங்களுக்கு மாலை மரியாதை அளித்து வரவேற்க அரண்மனை உத்தரவு வந்திருக்கிறது” என்றார்.

“தவறாக அடையாளம் கண்டிருப்பீர்கள். நாங்கள் எளிய யாசகர்கள். இந்த மாலையும் பரிவட்டமும் பட்டும் பெறத் தகுதியானவர்கள் அல்லர் நாங்கள்”
என்றான்.

”நிச்சயம் உங்களுக்கு எல்லாத் தகுதியும் இருக்கிறது சமுத்திர சேனாதிபதி ராமோஜி ஆங்க்ரே ராவ்பஹதூர் மகராஜ்”.

பேஷ்காரை அடுத்து நின்ற கம்பீரமானவர் கை கூப்பி வணங்கிச் சொன்னார். இவரை எங்கோ பார்த்த நினைவு ராமோஜிக்கு. பதிலுக்குக் கை கூப்பி வணங்கியபோது நினைவின் அறைகளை ஒவ்வொன்றாக அடுத்தடுத்துத் திறந்து தேட, சட்டென்று மனதில் பட்டது. இது சத்ரப்தி சிவாஜி மகாராஜின் முகச்சாயல். அவர் எங்கே இங்கே?

எனில் அவருடைய சகோதரர் வெங்கோஜிராவ் என்ற ஈகோஜிராவ் முந்தைய தஞ்சை மராத்தி மன்னர். இப்போது அவருடைய மூத்த புதல்வர் சாஹூஜி போன்ஸ்லே அரசர். அவரா?

”மாமன்னர் அவர்களே, இந்த எளியோன் ராமோஜி உங்களை வணங்குகிறான்” என்று அடிபணிந்து வணங்க மண்டியிட்டான் ராமோஜி.

மன்னர் சாஹூஜி போஸ்லே குனிந்து ராமோஜியைத் தடுத்து நிறுத்தி அணைத்துக் கொண்டார்

Excerpts from my forthcoming novel RAMOJIUM – Ramoji Angre meets with Emperor of Thanjavur Sahuji Bhonsle 1708

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன