என் அடுத்த புதினம் ‘ராமோஜியம்’ – ராமோஜி ஆங்கரே காரைக்கால் சத்திரத்தில் – ஆண்டு 1708

”மகாராஜா சமூகம் இந்த எளியோனை எலிப்பொறி ராமோஜி ராவை எப்படி பொறி வைத்துப் பிடித்தது?”

”இது எலி இல்லை, சிங்கமாச்சே. பிறந்த இடத்துக்குத் திரும்பி வரும் சிங்கராஜனுக்கு எங்களின் எளிய மரியாதை இது. ஏற்றுக் கொள்ளும்” என்றார் அரசர் சாஹூஜி போன்ஸ்லே.

ராமோஜி ஸ்வர்ணதுர்க்கத்தில் இருந்து புறப்பட்ட போதே இந்தப் பயணம் பற்றிய முழுத் தகவலும் வந்தாகி விட்டது என்றார் மகராஜா. அந்த நேரத்தில் யாத்திரை பற்றித் தெரிந்தவர்கள் கனோஜி ஆங்கரேயும், ராமோஜியும், விட்டோபாவும் தான்.

விட்டோபாவா தகவல் கசிய வைத்தது? தஞ்சை மன்னருக்கு அவர் எப்போது வேண்டியவரானார்?

கடலில் தொடர்ந்து இருந்து தரையில் நடப்பதை அறியாமல் இருந்து விட்டேனா என்று ராமோஜியின் மனம் அங்கலாய்த்துக் கொண்டிருந்தது.

தஞ்சையில் வரவேற்பும், அன்பும் மரியாதையும் நெஞ்சை நிறைக்க, சொந்த ஊரோடு இருந்துவிட்டால் என்ன என்று மனம் கேட்க ஆரம்பித்து விட்டது. கொஞ்சம் பொறு என அடக்கி வைத்தான்.

கனோஜி ஆங்கரேயின் ஒற்றர் படைக்கும் அவர்களிடமிருந்து கனோஜிக்கும் இந்நேரம் செய்தி போய்க் கொண்டிருக்கலாம். திரும்பும்போது ராமோஜி அவன் வேடமிட்டதைப் போல் வெறும் யாத்திரைக்காரனாக மட்டும் இருப்பானோ?

இங்கு வர முடிவெடுத்தால், தஞ்சைக்கு ரத்னாவையும், மகள் ஸ்வதந்திராவையும் இடம் மாற்ற எவ்வளவு நாள் பிடிக்கும்? சாஹூஜி மன்னர் பரிவோடு இருப்பாரா இனி என்றும்? மராத்திய மண்ணில் மராத்திய ஆட்சியை விட தமிழ் பேசும் தஞ்சையில் மராத்திய ஆட்சி ஆண்டாண்டாகத் தொடருமா?

போன்ஸ்லே மகாராஜா உள்ளே அழைத்துப் போய் தனியறையில் ராமோஜிக்கு பழரசம் கொடுத்து ஷேமலாபம் விசாரித்த பிறகு சுருக்கமாக ராமோஜியின் கடற்படை நடவடிக்கைகள் பற்றிக் கேட்டதை உறுதிப்படுத்திக்கொண்டார்.

அப்படியே அரசர் ராஜாராம் போஸ்லே மற்றும் கனோஜி ஆங்கரே பற்றியும் பேச்சு நீண்டது. கனோஜி ஆங்கரே அகண்ட பாரதத்துக்கு சொந்தமான மகாவீரன் என்று இரண்டு மூன்று முறை குறிப்பிட்டார் சாஹூஜி போன்ஸ்லே அரசர்.

முகலாய மாமன்னர் அவுரங்கசீப் முதுமையினாலும் நோயினாலும் வாழ்க்கையின் அந்தத்தை நோக்கிச் செல்வதாக நேற்றுச் செய்தி வந்திருப்பதைக் குறிப்பிட்டார்.

அவர் நீண்ட காலமாகச் சிறைப்பிடித்து வைத்திருக்கும் சத்ரபதி சிவாஜி மகாராஜின் பேரர் சாஹு மகராஜ் அவுரங்கசீப் மறைவுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டால், இந்துஸ்தான அரசியல் சமன்பாட்டு நிலைமை மாறலாம். எல்லா நிகழ்வுகளையும், ஊகங்களையும். எதிர்பார்ப்புகளையும் குறித்துத் தெளிவாகப் பேசினார் தஞ்சை மன்னர்.

”நீங்கள் சொந்த ஊரை விட்டு, அது என்னதான் இந்துஸ்தானத்தின் இன்னொரு பகுதி மண்ணாக இருந்தாலும், கடலாக இருந்தாலும், அங்கே புறப்பட்டுப் போய் யாரோடோ கோபித்துக் கொண்டது போல் முகம் திருப்பி உட்காரலாமா? கனோஜியோடு இருந்தால் என்ன, தஞ்சை வரக்கூடாதா? நீங்கள் எங்களுக்கெல்லாம் ராமோஜி ஆங்கரே இல்லை, ராமோஜி பத்மனாப ராவ்ஜி தான்”.. பேச்சுக்கு நடுவே குறிப்பிட்டார் அவர்.

ராமோஜி இருகை குவித்து வணங்கினான்.

”இது உங்கள் நண்பர்களின் ராஜ்ஜியம். உங்களைப் போல தஞ்சாவூர் மண்ணின் புதல்வர்களுடைய அரசு. தமிழும் மராட்டியும் தழைக்கும் சூழ்நிலை இது. இசையும் காவியமும் நடனமும் செழிக்கும் காலம்.. தஞ்சைக்கு வாருங்கள் நண்பரே”

சாஹூஜி மன்னரின் குரல் நேசத்தோடும், பரிவோடும் ஒலித்தது.

”நாளை சந்திக்கிறேன்.. உங்களுக்கான உணவு தயாராக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஏழைகள் நாங்கள் எங்களால் முடிந்த அளவு…” அவன் கைகளைப் பற்றியபடி சொன்னார் அரசர் சாஹூஜி போன்ஸ்லே.

இலக்கியத்திலும் இசையிலும் தோய்ந்த அந்த நல்ல மனம் கருணையும் அன்பும் குடிமக்களிடம் கொண்டது. தெருவுக்கு இறங்கி வந்து நடக்கும் ஆட்சி இது. கோட்டை கொத்தளங்களில் அமர்ந்து கையசைத்து ஆணையிடுவதில்லை.

ராமோஜி சகல மரியாதையோடு மனதில் இருந்து இதையெல்லாம் வெளிப்படுத்தி போன்ஸ்லே அரசரை வணங்கி வழியனுப்பினான்.

காலை விடிந்ததும் இங்கிருந்து புறப்பட்டு நாகைப்பட்டிணம் அடைந்து அங்கிருந்து திருமையம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்புல்லாணி வழியே ராமேஸ்வரம் போக ஏற்பாடு. அது ஓரிருநாள் சுணங்கக் கூடும். என்ன செய்ய?

ராமோஜியின் அடுத்து வரும் எதிர்காலமும், வரக்கூடிய வருடங்களின் போக்கும் தீர்மானிக்கப்படும் தினங்களாக இன்றும் நாளையும் இந்த யாத்திரை முழுவதுமே இருக்கலாம். நீரோட்டத்தோடு போக வேண்டும். எங்கே சாட வேணும், எங்கே ஒதுங்க வேணும், எங்கே திரும்ப வேணும் என்பதெல்லாம் தானே தீர்மானமாகும்.

ரத்னாவிடம் என்ன சொல்லலாம்? உறங்கி இருப்பாள்.

நான் விழித்திருக்கிறேன்.

மனதுக்குள் புவனலோசனி கண்கள் விரியச் சொன்னாள்

Excerpts from my forthcoming novel RAMOJIUM – From – Ramoji Angre at Karaikal ElipoRi Chaththiram 1708 chapter

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன