நாவல் ராமோஜியம் – ராமோஜி ஆங்கரே காரைக்கால் எலிப்பொறி சத்திரத்தில் தங்கிய ராத்திரி – வருடம் 1708

”உங்களுக்கு உலுப்பை மானியம் தரவேண்டும் என்று நியதி உள்ளது. எல்லா பெரிய மனுஷர்களுக்கும் அப்படித்தான். சமூகம் கட்டளையிட்டால் உங்கள் காரியஸ்தர் வசம் ஒப்படைத்துவிடுவேன்”, என்றார் பேஷ்கார் அறை வாசலில் நின்று. ராமோஜிக்கு அது என்ன மாதிரி விஷயம் என புரியவில்லை.

”சத்திரத்துக்கு வரும் பெரிய மனுஷர்களும் யாத்திரை கோஷ்டியும் இங்கே தங்கியிருக்கும் மாணவர்களுக்காக சமைக்கப்படும் உணவையே உண்ணலாம். அல்லது அரிசி, புளி, உப்பு, எண்ணெய் என்று எல்லாம் உலுப்பை மானியமாகப் பெற்று அவர்களே சமைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு ராஜபோஜனம் வர ஏற்பாடாகி இருப்பதால் மானியத்தை கொடுத்து விடவேண்டும் என்று நியதி. நீங்கள் சத்திரத்தின் போஷகருமல்லவா? மேலும் கொஞ்சம் நேரம் ஒதுக்கி சத்திர வரவு செலவுக் கணக்கையும் அங்கீகரித்தால் மிகுந்த நன்றி பாராட்டுவேன்” என்றார் அவர்.

நான் எப்போது போஷகர் ஆனேன்? ராமோஜி ஆச்சரியப்பட்டான்.

அவர் சிறிய அறை ஒன்றுக்குள் காடா விளக்கோடு போய் ஒரு காகிதத்தை எடுத்து வந்து கொடுத்தார். தாசிப்பெண் புவனலோசனி என்று தொடங்கிய ஆவணம் அது.

ராமோஜி அதைப் படிக்கலானான்.

“காரைக்கால் பட்டணத்தைச் சேர்ந்த தாசிப்பெண் புவனலோசனி ஆகிய நான், நகர் எல்லையில் கைலாசநாதர் கோவிலுக்கு மேற்கே நான்கு கல் தூரத்தில் ஸ்தாபித்த இந்த எலிப்பொறிச் சத்திரத்தில் நடத்த வேண்டிய நற்செயல்களுக்காக மஹாவீரன் ராமோஜி அங்காரே கட்டளை ஏற்படுத்தப்பட்டுள்ளது. அதன் அன்றாட நடைமுறை விஷயங்கள் –

”கலாசாலையில் பயிலும், பொருளாதார நிலையில் மிகவும் பின் தங்கிய பதிமூன்று மாணவர்களுக்கு குறைந்த பட்சம் ஒரு வருடமும் அதிக பட்சம் மூன்று வருடமும் தராதரம் நோக்கி எலிப்பொறிச் சத்திரத்தில் இலவசமாக தங்கியிருக்க இடமும், உணவும் தரவேண்டியது.

”இவர்களுக்கு வாராவாரம் ராத்திரியில் விளக்கு கொளுத்தி படிக்க, பித்தளை விளக்கும், திரியும், ஒரு சேர் இலுப்பை எண்ணெயும் தரவேண்டியது.

”வாராவாரம் எண்ணெய்க் குளிக்காக அரைக்கால் சேர் நல்லெண்ணெயும், ரெண்டு துட்டு சீயக்காய்ப்பொடியும் குளித்து வந்தபிறகு சுக்கும் வெல்லமும் தரவேண்டியது.
”மாதம் ஒரு முறை வேப்பிலைக் கொழுந்து வெறும் வயிற்றில் பூச்சித் தொல்லை இல்லாமலிருக்கத் தர வேண்டியது.

”காலையில் பழையதும், பச்சை மிளகாயும், வெங்காயமும் தர வேண்டியது. பகலில் காய்கறிப் பொரியலும், தேங்காய்த் துவையலும், இஞ்சித் துவையலும், அரிசிச் சாதமும், புளிக்குழம்பும், மோர் சோறும் தரவேண்டியது. ராத்திரி உணவாக காய்கறிக் கூட்டும், சாம்பார் சாதமும், மோர் சாதமும் தரவேண்டியது. ராத்திரி ஆளுக்கொரு வாழைப்பழமும் தரவேண்டியது. ஞாயிற்றுக்கிழமை காலை நேரம் வெண்பொங்கல், இட்லி, தோசை போன்ற சிற்றுண்டிகள் தரவேண்டியது.

”இவர்கள் தவிர தினம் நூறு ஏழைப்பட்ட மாணவர்களுக்கு பகல் உணவு கொடுக்க வேண்டியது. தினம் ராமேஸ்வரம் யாத்திரையாக வரும் வழிப்போக்கர்களுக்கு அவர்கள் யார் எங்கிருந்து வருகிறார்கள் என்ற விவரம் பதிந்து ஒரு பகலுக்கு உட்கார வைத்து சோறும் குழம்பும் காய்கறிக் கூட்டும், மோரும் தர வேண்டியது.

அவர்களுக்கு ஒரு ராத்திரிக்கு அரிசிக் கஞ்சியோ மோர் சோறோ பசி போக்கத் தர வேண்டியது. அவர்கள் ஒரு இரவு மட்டும் இங்கே உறங்கிப் போக இடமொழித்துத் தரவேண்டியது.

மேலே விவரிக்கப்பட்ட செலவினங்களுக்காக வருடம் ஆயிரத்து நூற்று எழுபது பொன் ராமோஜி ஆங்கரே கட்டளை மானியமாக சத்திர நிர்வாகம் பெற வேண்டியது.

”சத்திரத்தின் ஒவ்வொரு அறையிலும் ஒரு எலிப்பொறி வைத்து அது காரியசாதகமாக இருக்கிறதா என்று மாதம் ஒரு முறையாவது சோதித்துப் பார்க்க வேண்டியது.

சேர்ந்து இருந்து சாப்பிடும் இடத்திலும் சமையல்கட்டிலும் எலிப்பொறிகள் வைக்க வேண்டியது. எலித் தொல்லை இல்லாமல் இருந்தாலும் எலிப்பொறிகள் வைத்திருக்க வேண்டியது அவசியம். வருடத்துக்கு மொத்தமாக எலிப்பொறிகள் வாங்க, எலி பிடிக்கிறவர்களுக்குக் கூலி தர என்று ஐம்பது பொன்

”பதிமூன்று அறைகளில் தங்கும் மாணவர்களுக்கு வருடம் ஆளுக்கு பத்து பொன்னாக நூற்று முப்பது பொன் கட்டளை மானியம் தரவேண்டியது. இந்த பதிமூன்று அறை-பதிமூன்று மாணவர்கள் – மொத்த மானியமாக ஆயிரத்து முன்னூறு பொன் கணக்கில் தொகை குறைத்து எந்த மாற்றமும் வரக்கூடாது. எலிப்பொறி மானியமும் சேர்த்து ஆயிரத்து முன்னூற்றைம்பது பொன் ராமோஜி கட்டளைக்கான மொத்த வருட மானியமாகும்.”.

ராமோஜிக்குப் பழக்கமான பதிமூன்று தினம்- பாதுகாப்பு கூலி தினம் நூறு பொன் –மொத்தம் ஆயிரத்து முன்னூறு பொன் காவல் பணம் கணக்கு. கூடவே, நாகப்பட்டணத்தில் படகு மூலம் கொண்டு போய் விட ஐம்பது பொன் கட்டணம். ஆக மொத்தம் ஆயிரத்து முன்னூற்று ஐம்பது பொன். அவன் புவனலோசனியிடம் விளையாட்டாகச் சொன்னது தான் இந்தத் தொகை. எப்படியும் கொடுத்து விடுவதாகச் சொன்னாள். எலிப்பொறி சத்திரத்தில் மஹாவீர் ராமோஜி அங்கரே கட்டளை என்று அவன் பெயரை காலகாலத்துக்கு, சத்திரம் இருக்கும்வரை சொல்ல ஏற்பாடு செய்துவிட்டுப் போயிருக்கிறாள்.

புவி, என் கண்ணே, எங்கே போனாயடி? கணக்கு எல்லாம் சரிதான். இன்னும் நமக்கு வரவு செலவு முடியவில்லை பெண்ணே..

Excerpts from my forthcoming novel RAMOJIUM

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன