உலகைக் குலுக்கும் வாரம் இது

 

லீமன் பிரதர்ஸ், ஏ.ஐ.ஜி, எச்பாஸ் .. இனி?

இந்த 2008-ம் ஆண்டு எனக்கு முக்கியமானது என்று பத்து நாள் முன்னால் தான் எழுதினேன். இப்போது, அதிமுக்கியமானது என்று மாற்றி எழுத நேர்ந்து விட்டது.

இந்த வாரம் தொடங்கியபோதே ஏதோ சுவரம் பிறழ்ந்த இசையாக, மனதில் ஒரு சஞ்சலம். கண்ணன் திருவடிகளைப் போற்றி வழக்கமான கடமைகளோடு வளைய வந்தபோது, முதல் அதிர்ச்சி. செப்டம்பர் 15, திங்களன்று லீமன் பிரதர்ஸ் வங்கி திவால் ஆனது. One of the world’s largest and respectable investment banks with an history of 150 years… 2 .8 பில்லியன் டாலர் நஷ்டக் கணக்கு காட்டப்பட்டு இருக்கிறது. 100 பில்லியன் டாலருக்கு அதிகமான trading exposure காரணமாக உலகம் முழுவதும் பல முக்கியமான வங்கிகளுக்கு market risk துர்சொப்பனங்களை நிஜப்படுத்தும் வண்ணம் counterparty exposure நிதி நெருக்கடி. அமெரிக்காவிலும், இந்தியா உட்பட அந்த வங்கி இயங்கி வந்த பல நாடுகளிலும் கிட்டத்தட்ட 35,000 பேர் வேலை இழக்கும் அபாயம். டோ ஜோன்ஸ், நிப்டி, சென்செக்ஸ், ஃபட்ஸி என்று பங்குச்சந்தை இண்டெக்ஸ்கள் வேகமாகச் சரிந்தன.

காப்பீட்டுத் தொழிலில் உலகப் பெரு நிறுவனமாக இருக்கும் AIGக்கு அமெரிக்க அரசு – பெடரல் ரிசர்வ் அபயமளித்து 50 பில்லியன் டாலர் கொடுத்து தன்மானத்தை மீட்டது. மெரீல் லிஞ்ச் தன் அடையாளத்தை இழந் பேங்க் ஆப் அமெரிக்கா என்ற வங்கிக் கடலில் கரைந்து போனதும் இந்தத் திங்களன்று தான்.

ஒரு வருடத்துக்கு மேலாக Hedge Fundகளின் தயவில் உலகப் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்து வந்தது இன்று கிட்டத்தட்ட பரிபூரணமாகி உள்ளது. புஷ்ஷோ வரப்போகும் ஒபாமோவோ தற்போது சமாளிக்க வேண்டிய பயங்கரவாதிகள் அல் க்வய்தாவோ ஒசாமா பின் லாடனோ இல்லை. இந்த ஹெட்ஜ் ஃபண்ட்களைத்தான்.

Financial Crisis என்றும் உலகப் பொருளாதார நெருக்கடி என்றும் ஸாம்பத்திக பிரதிஸந்தி என்றும் பலமொழிப் பத்திரிகைகள் முதல் பக்கத்தில் அலறிய செவ்வாயன்று பங்குச் சந்தை மேலும் வீழ்ந்தது.

நேற்று புதன்கிழமை இந்த உலக நிகழ்வு ஒரு சராசரி மனிதன் என்ற நிலையில் என்னையும் பாதித்தது. கடந்த எட்டு ஆண்டுகளில் என் இரண்டாவது பணியிடமாக மாறி இருந்த ஹாலிஃபாக்ஸ் பேங்க் ஓஃப் ஸ்காட்லாந்து வங்கி (HBOS) இல்லாமல் போய்விட்டது. லாயிட்ஸ் டிஎஸ்பி வங்கிக்கு அதன் முழு உடமையும் வசமாக, நானூற்று அறுபது வருட வரலாறு கொண்ட என் ஹெச்பாஸ் நோ,பாஸ் இப்போது. (இந்தத் தளத்தின் ஆங்கிலப் பகுதியில் Museum on the Mound என்ற தலைப்பில் இந்த வங்கியின் வரலாறு பற்றிப் பகிர்ந்து கொண்டுள்ளேன்.)

ஐநூறு பில்லியன் பவுண்ட் மதிப்புக்கு mortgage – வீடு கட்டவும், வீட்டின் பேரில் கடன் அளித்தும் சராசரி பிரிட்டீஷ் குடிமக்களின் வாழ்க்கையில் பிரிக்கமுடியாத ஓர் அங்கமாக மாறியிருந்த ஹெச்பாஸ் வீழ்ந்ததை பிரிட்டன் இனி எப்போதுமே மறக்காது. அவர்களுக்கும் என்னைப் போலவே சொந்த சோகம் இது.

எனக்குப் பழக்கமான இங்கிலாந்தும் ஸ்காட்லாந்தும் ஹெச்பாஸ் இல்லாமல் எப்போதும் முழுமை பெறாது. எடின்பரோவும், யார்க்ஷ்யரும், லண்டனும் அந்த வங்கியே முகமாக நினைவுகளில் எப்போதும் நிறைந்திருக்கிறது. இன்னொரு முறை இங்கிலாந்து போக வேண்டிய சூழ்நிலை வரக்கூடாது என்றே இறைவனைப் பிரார்த்திக்கிறேன். 40, ரெட்டைத்தெரு இல்லம் இல்லாத என் பிறந்த மண்ணுக்கு நான் திரும்புவதைப் போல், துயரமான நிகழ்வாக இருக்கும் அப்படிப் போகவேண்டி வந்தால்.

எச்பாஸ் வங்கியில் 40,000 ஊழியர்களுக்கு வேலை நிரந்தரமில்லாத நிலை இன்று. அவர்களில் எத்தனையோ ஸ்காட்லாந்துக்காரர்களும், யார்க்ஷ்யர் வாசிகளும் எனக்கு இன்னும் நெருங்கிய நண்பர்கள். அவர்களுக்கு எந்தக் குறையும் ஏற்படக்கூடாது என்று பிரார்த்திப்பதைத் தவிர நான் இப்போது செய்யக்கூடியது ஏதும் இல்லை.

உலகப் பொருளாதார நெருக்கடி நேரத்தில் முக்கியமாகப் பாதிக்கப்படுவது கம்ப்யூட்டர் டெக்னாலஜி துறை. I.T வல்லுனர்களாக, பல நாடுகளிலும் வசிக்கும் என் அன்பு நண்பர்களுக்கு, குறிப்பாக இளைஞர்களுக்கு ஒரு மூத்த சகோதரனாக என் அன்பான அறிவுரைகள் –

1) இருக்கிற வேலையில் இருந்து மாற வேண்டும் என்று முடிவெடுத்திருந்தால், அதை மறுபரிசீலனை செய்யுங்கள். எனக்கு ப்ராஜக்ட் லீடராக ப்ரமோஷன் கிடைக்கவில்லை, அன்யூவல் அசெஸ்மெண்டில் என் போன வருடச் சாதனையைக் கண்டுகொண்டு எப்போதும்போல் கணிசமான பெர்பார்மன்ஸ் போனசும், ஊதிய அதிகரிப்பும் வரவில்லை என்பதெல்லாம் பொறுத்துக் கொள்ளக்கூடிய சங்கதிகள் இப்போது.
2) ‘பெஞ்சில் இருக்கிற’ நண்பர்கள் cross-skilling செய்து கொள்ள வேண்டிய நேரம் இது. மெயின்ப்ரேம் காரர்கள் எண்டர்பிரைஸ் ஜாவாவும், ஜாவா, டாட்நெட் வல்லுனர்கள் CUDA, SAP, ஏன் அது மட்டும், Assembler, mainframe cobol என்றும் கூட பரிச்சயம் செய்து கொள்ள வேண்டியது அவசியம். CBAP, PMP போன்ற தேர்வுகளில் வெற்றி பெறுவதும் முக்கியம். ட்விட்டரும், பிளாக்கும், குமுதம், விகடன் போன்ற இணையத் தளங்களும், சவிதாபாபியுமாகப் பொழுதைக் கழிப்பதைக் குறைத்துக் கொள்ளலாம். இராமுருகன்.இன் கூடத்தான்!

கண்ணன் திருவருள் திண்ணம் நமக்கு உண்டு.

வியாழன், செப்டம்பர் 18,2008

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன