மும்பை விருந்து

 

வார்த்தை’ பத்தி செப்டம்பர் 2008

தமிழ்ப் படைப்பிலக்கிய ரசனைக்கும் ஆங்கிலப் படைப்பிலக்கிய ரசனைக்கும் உள்ள வேறுபாடு சென்னைக்கும் மும்பைக்கும் நடுவே ஆறு அல்லது அறுநூறு வித்தியாசம் கண்டுபிடிக்கிறது போல் சுவாரசியமானது. தமிழில் ஒரு நாவல் வெளிவந்தால் கிணற்றில் ஊறப்போட்ட கல்லாக அது அநேகமாக லைபிரரி ஆர்டரில் சகாய விலைக்கு மொத்தமாகக் கொள்முதல் செய்யப்பட்டு கிளை நூலக மேல் ஷெல்பில் செருகி வைக்கப்படும். கிட்டத்தட்ட நாற்பது வருடம் கழித்து ‘நினைத்துப் பார்க்கிறேன்’ ரேஞ்சில் யாராவது அதைப் பற்றி மெதுவாக குரல் விட ஆரம்பிப்பார்கள். அப்புறம் அங்கே இங்கே என்று நாலு குரல் ஆமோதித்தும், ஆட்சேபித்தும் இலக்கியப் பத்திரிகையில் எழுத, அநேகமாக நாவலாசிரியர் ஆவி ரூபமாக இந்த இலக்கிய உரையாடலை அனுபவித்தபடி ஆத்மா சாந்தியடைந்து அடுத்த பிறவி ஆங்கில நாவலாசிரியராகப் பிறக்க அப்ளிகேஷன் போட்டிருப்பார். எல்லோருக்குமா அந்த அதிர்ஷ்டம் கிட்டும்?இங்கிலீஷில் தமிழ் நாவல் எழுதினாலும் அது போய்ச் சேரும் வட்டம் மாணப் பெரிது. புத்தகம் சம்பந்தமான விழா என்றால் ஆயிரம் பேர் அமரக்கூடிய அவை நிறைந்து வழியக் கூட்டம் கூடும். நாவலை மேடையில் வாசிக்க, விவாதிக்க எழுத்தாளர்கள் மட்டுமில்லாமல் ஓவியர்கள், பத்திரிகையாளர்கள், ஃபாஷன் டிசைனர்கள், ஆர்ட் பிலிம் இயக்குனர், நடிகர்கள், பரீட்சார்த்த நாடக மேடைகளில் தூள் கிளப்பும் நாடக ஆசிரியர்கள், முப்பது வயதுக்குக் கீழான துருதுரு மாடல் கன்யகைகள் இப்படி கலந்து கட்டியான ஒரு கூட்டம். மேடை போட்டு மூன்று மணி நேர நிகழ்ச்சி, தொடர்ந்து நடு ராத்திரி தாண்டி கிட்டத்தட்ட அதிகாலை வரை விருந்து, வந்த ஒவ்வொருத்தரும் மற்றவர் ஒருவர் விடாமல் கையில் கிண்ணத்தோடு கலை, இலக்கிய, சினிமா வம்பு பேச என்று அமர்க்களப்படும். ஆங்கிலப் பத்திரிகைகள் முதல் பக்கச் செய்தியாகப் போடாவிட்டாலும் ஆறாம் பக்கத்தில் ‘காலமனார்’ வரி விளம்பரங்களுக்கு மேலேயாவது நாவலாசிரியர் படம் போட்டு செய்தி பிரசுரிக்கும். கல்யாணத்துக்கும் சாவுக்கும் நடுவே கதாநாயகனாகவோ நாயகியாகவோ ஷார்ட் ஸ்பான் அவதாரம் எடுக்க நாவலாசிரியருக்கு ஒரு சந்தர்ப்பம் இதெல்லாம். அதுவும் மும்பையிலும் லண்டனிலும் எடின்பரோவிலும் இங்கிலீஷ் நாவலிஸ்டுக்கு கிடைக்கும் வரவேற்பைக் கவனித்து நானும் அட்வான்சாகவே அடுத்த பிறவி அப்ளிகேஷன் போட்டிருக்கிறேன். பகவான் கொஞ்சம் போல் கருணை செய்தார் சமீபத்தில்.

அரசூர் வம்சத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பான கோஸ்ட்ஸ் ஆப் அரசூர் மூலம் இந்த அதிர்ஷ்டம் கிடைத்தது. கிராஸ்வேர்ட் பரிசுக்கு இறுதிச் சுற்றுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது இந்த இங்கிலீஷ் பிசாசு. கிராஸ்வேர்ட் புத்தகக் கடையின் லோக்கல் கிளையில் புத்தகத்தை ரசிகர்களுக்கு வாசித்துக் காட்ட வீட்டிலிருந்து காரில் கூப்பிட்டுக் கொண்டு போனார்கள். டிராபிக் நெரிசலுக்கு இடையே அரைமணி நீண்ட கார் யாத்திரை. பொடிநடையாக நான் ஐந்து நிமிடத்தில் போய்ச் சேர்ந்திருப்பேன். எங்கள் தெருக் கோடியில் தான் அந்தக் கடை இருக்கிறது. ஆனாலும் ஆங்கில நாவல் எழுதியவர் நடந்து போகக் கூடாது.

தமிழ் எழுத்தாளனை போடா முடியாண்டி என்று அங்கீகரிக்கும் சென்னை இங்கிலீஷ் பத்திரிகைகள் கூட ‘மூஞ்சியை மறைக்காம புத்தகத்தை தூக்கிப் பிடிச்சுட்டு போஸ் கொடுங்க’ என்று கோரிக்கை விடுத்து பிளாஷ் அடித்து, நேரிலோ தொலைபேசியிலோ பேட்டி கண்டு செய்தி வெளியிட்டன. என் படத்தைப் போட்டு இதுதான் பிசாசு என்று டெக்கான் கிரானிகிள் எழுதியிருந்தது. படத்தைப் போட்டாலே போதாதா? விளக்க உரை இல்லாமல் புரியாதா என்ன?

அடுத்த வாரம் மும்பைக்கு கிராஸ்வேர்ட் செலவில் விமானப் பயணம். நாள் முழுக்க ஒரு டாக்சி கூப்பிட்ட குரலுக்கு. நான் எத்தனையோ தடவை நடை போட்டிருக்கிற மெரின் டிரைவ் பகுதியில் கிரிக்கெட் கண்ட்ரோல் போர்ட் அலுவலகத்துக்கு எதிரே பெரிய ஓட்டலில் சர்வ வசதியோடும் கூடிய அறை. உங்க வீடு மாதிரி ப்ரீயா இருங்க. என்ன வேணுமோ ஆர்டர் பண்ணி சாப்பிடுங்க. இனிமையாகச் சொல்லி பூச்செண்டு கொடுக்க அழகான பெண்கள். சொன்னேனே, இங்கிலீஷ் நாவலிஸ்ட். மொழிபெயர்ப்பு ஆனாலும் கவுரதைக்கு குறைச்சல் ஏது?

சாயந்திரம் ஒர்லி நேரு கோளரங்கத்தில் பரிசளிப்பு விழா. ஆஸ்கார் பரிசு ஸ்டைலில் கடைசி நிமிடத்தில் மேடையில் அறிவிக்கப்படும் பரிசு இது. மூன்று லட்சம் ரூபாய் அவார்ட். நாவலாசிரியருக்கு ஒன்றரை லட்சமும், மொழிபெயர்ப்பாளருக்கு ஒன்றரை லட்சமும். ஆங்கிலத்திலேயே எழுதிப் பரிசு வாங்கினால் மூணு லட்சம் மொத்த பிரைஸ். எழுதி இவ்வளவு சம்பாதிக்க முடியும் என்றால் எதற்கு டையைக் கட்டிக் கொண்டு கம்ப்யூட்டர் கம்பெனி சேவகம்?

சர்வதேச அளவில் ஆங்கில இலக்கியத்துக்கான புக்கர் பரிசு போல் இந்திய புக்கர் பரிசு இந்த கிராஸ்வோர்ட் என்று லோக்கல் பத்திரிகை, இண்டர்நெட் வலைமனை, வலைப்பூவில் எல்லாம் ஏகப்பட்ட ஹைப். ஆல்டர்னேட் அமிதாப் பச்சனாக பாதி ஆங்கிலேயரான நடிகர் டாம் ஆல்டர் நிகழ்ச்சியை நடத்துகிறார்.

அ-கதைக்கான ஷார்ட் லிஸ்ட் வாசிக்கப்பட்டது. மின்னஞ்சல் மூலம் நண்பராகி இருந்த ஸ்காட்லாந்துக்காரரும் டெல்லி வாசியுமான வில்லியம் டால்ரிம்பிள் எழுதிய ‘லாஸ்ட் மொகல்’ அதில் உண்டு. எனக்கு அருகில் உட்கார்ந்திருந்த டால்ரிம்பிளிடம் ‘உமக்குத் தான்யா ப்ரைஸ்’ என்று சொல்லி வாய் மூடவில்லை. அவருக்கே இந்த ஆண்டு நான் பிக்ஷன் அவார்ட் அறிவிப்பு. அவர் வாங்கினால் என்ன, நான் வாங்கினால் என்ன? எல்லாம் சந்தோஷமானதுதான்.

மொழிபெயர்ப்பு நூல்களில் முகுந்தன் எழுதிய ‘கோவர்த்தனனின் யாத்திரைகள்’ மலையாள நாவல் பரிசு பெற்றது. கீதா கிருஷ்ணன்குட்டி மொழிபெயர்த்திருந்த நாவல் இது. இறுதிச் சுற்றுக்கு வந்த இன்னொரு மலையாள நாவலான எம்.டி.வாசுதேவன் நாயரின் ‘நாலுகட்டு’ கூட அவர் மொழிபெயர்ப்பு தான். அரசூர் வம்சம் மொழிபெயர்ப்பாளர் ஜானகி வெங்கட்ராமன் போல் எனக்கு மூத்த சகோதரி உருவத்தில் கீதாவும் இருந்தார். இரண்டு பேரும் கொஞ்சமாகப் பேசுகிறவர்கள். அரசூர் வம்சம் நாவலின் அசங்கியம், வசவு எல்லாவற்றையும் பொறுமையாகப் படித்து மொழிபெயர்த்த ஜானகியோடு ஒப்பிடும்போது கீதாவுக்கு கஷ்டம் கம்மி. முகுந்தனும் எம்.டியும் இரண்டு கனவான்கள். முகுந்தன் பழகவும் அப்படியே.

ராத்திரி ஒன்பதரைக்கு விழா முடிந்து மொழிபெயர்ப்பாளர்கள் புறப்பட்டுப் போனபிறகு கிண்ணத்தை ஏந்தினேன். கோஸ்ட் நாவலின் பதிப்பாசிரியர் ராமநாராயணன் (ராம்நாராயண்) விக்ரம் சேத்திடம் என்னை அறிமுகப்படுத்தினார். என்ன மாதிரியான நாவல் எழுதியிருக்கீர் என்று ஆர்வமாகக் கேட்டார் விக்ரம். யாரோ வந்து ஓட்காவை திரும்ப கிண்ணங்களில் நிறைத்துப் போனார்கள். நமிதா கோகலே, நமிதா தேவிதயாள், மஞ்சுளா பத்மனாபன், சபீரா மெர்ச்சண்ட், கிட்டு கித்வானி என்று பிரபலங்களுக்கு மத்தியில் ஒரு தமிழ் முகம். திலீப் குமார்.

கோவிந்த் நிஹலானியின் ‘பார்ட்டி’ படம் பார்க்கிறபோதே திரைக்குள் நானும் நுழைந்தது போன்ற சூழ்நிலை. ‘கோஸ்ட் அட்டை வித்தியாசமா இருக்கு. ப்ளர்ப் படிச்சேன். ரொம்பவே சுவாரசியம்’. பின்னால் குரல். கோவிந்த் நிஹலானியே தான். மொபைலில் மணி பார்த்தேன். சரியாக ராத்திரி பனிரெண்டு மணி. இன்னும் கொஞ்சம் ஓட்கா ஊற்றுங்கப்பா. நிஹலானியோடு பேச ஆரம்பித்தேன்.

(வார்த்தை – செப்டம்பர் 2008)

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன