உத்திராடம் – திருவோணம் – அவிட்டம்

 

ஓணக்காலக் குறிப்புகள்

நேற்றைக்கு (செப்டம்பர் 12) திருவோணத் திருநாள். காலையிலேயே குளித்து மகாலிங்கபுரம் ஸ்ரீகுருவாயூரப்பன் – ஐயப்பன் அம்பலங்களில் வழிபாடு. ஓணக் கோடி உடுத்து நூற்றுக்கணக்கானவர்கள் கோவில் பிரகாரத்தில் வலம் வந்து கொண்டிருந்தாலும் ஆகக் குறைவான இரைச்சல், சத்தம். ஸ்ரீபலி தொடங்கும் முன் கண்ணன் சந்நிதி படியருகே நின்று மாரார் சோபான சங்கீதம் பாடுவது கோவில் முழுக்க ஒலிக்கிறது. தாளமும் நாதமுமாக அவருடைய குரலோடு கூட இழைகிறது தோளில் மாட்டியபடி அவர் வாசிக்கும் இடக்க.

எட்டு மணிக்கு தி.நகர் கிருஷ்ணா ஸ்வீட்சில் படியேற, எனக்கு முந்தியே பத்துப் பேர் கையில் பாத்திரத்தோடு காத்திருந்தார்கள். மாத்ருபூமியில் தலைநாளும் ஓணத்தன்றும் விளம்பரம் படித்து வந்தவர்கள் நாங்கள் எல்லோரும். ஓணத்துக்கு சத்ய (விருந்து) ஒருக்குவதை இந்த வருடம் அவிட்ட தினமான இன்றைக்குத் தள்ளிப் போட்டதால் சக்கப் பிரதமனோ அடைப் பிரதமனோ வெளியே தான் வாங்க உத்தேசித்திருந்தேன். மற்ற பத்துப் பேரும் கூட அப்படியே தானோ என்னமோ.

காலை எட்டு மணிக்கே சுடச்சுட கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கடைக்குள் வாணலி வைத்து பாலடைப் பிரதமன் உண்டாக்கிக் கொண்டிருந்தார்கள். பத்து நிமிடம் முன்னால் அடுப்பில் இருந்து இறக்கிய சக்கப் பிரதமன் (பலாப்பழப் பாயசம்) சிவக்கச் சிவக்கச் சிரித்துக் கொண்டு தயாராக இருந்தது.

அடுத்த வருடம் இந்தப் பாயச அடுப்பை வேறே எங்காவது வைத்துக் கொள்ள கிருஷ்ணா ஸ்வீட்ஸ் முரளி ஏற்பாடு செய்ய வேண்டும். நல்ல காரியம் என்றாலும் கடைக்குள் தீ வளர்க்க வேண்டாமே. சரவணா ஸ்டோர் சம்பந்தமில்லாமல் நினைவு வரூகிறது.

பாத்திரத்தில் நிறைத்து, வழக்கமாக ஸ்வீட் வைத்துத் தருகிற பிளாஸ்டிக் கவரில் சக்கப் பிரதமனோடு காருக்கு நடக்கும்போது சூடு காரணமாக பாத்திரம் மூடி திறக்க, பிளாஸ்டிக் பை முழுக்க பாயசம். அதை அப்படியே வாங்கிக் களைந்துவிட்டு இன்னொரு முறை நிறைத்துத் தருகிறார்கள். ‘ஓண ஆசம்ஷகள்’ என திரு ஓணப் பெருநாள் வாழ்த்துச் சொல்லிவிட்டு வெளியே வருகிறேன்.

காரில் இருந்தபடியே நியூசிலாந்து துளசி சேச்சியை மொபைலில் விளித்து ஓண வாழ்த்து சொன்னேன். தமிழையும் மலையாளத்தையும் மனதில் ஒருபோல நேசிக்கும் சிறிய வட்டத்தில் சேச்சியும் இந்த அனியனும் அடக்கம்.

ஓணத்துக்கு வந்த மகாபலியாக நான் அடுத்துச் சந்திக்கச் சென்றது சாக்லெட் கிருஷ்ணாவை. க்ரேஸியின் குடும்பமே அன்போடு வாசலுக்கு வந்து வரவேற்கிறது. திருமதி மோகனிடமிருந்து அவரிடம் தாவும் அவர் வீட்டுச் சாக்லெட் கிருஷ்ணனை (அண்மையில் ஒரு வயது நிறைந்த செல்லப் பேரன்) அணைத்துப் பிடித்தபடி வாய் நிறைய வரவேற்கிறார் க்ரேஸி. இளமையான தாத்தா-பாட்டிகளின் சின்னப் பட்டியலில் மோகன் தம்பதியினர் கட்டாயம் இடம் பெறுவார்கள்.

மூன்றாம் தலைமுறையிலிருந்து மூத்த தலைமுறை. வீட்டு வரவேற்பரையில், மோகனின் அப்பா அன்போடு அளவளாவுகிறார். ஜீவா, தோழர் பாலன், வல்லிக்கண்ணன் போன்ற இடதுசாரி அரசியல், இலக்கியப் பிரமுகர்களைப் பற்றி நேசத்தோடு நினைவு கூர்கிறார். ஓய்வு பெற்ற வங்கி துணைப் பொது மேலாளரான அவருடைய இலக்கிய ஆர்வம் மோகனுக்கும் கடந்து வந்திருப்பதை உணர முடிகிறது.

வரவேற்பறை முழுக்க ஓவியங்களைப் பார்க்கிறேன். க்ரேஸி ஒரு நேர்த்தியான ஓவியரும் கூட. (இந்த இணையத் தளத்தின் வாசலில் ஆசியருளும் அனுமன் அவர் கை வண்ணத்தில் உருவானதே). மோகனின் காலம் சென்ற அம்மாவை அவர் வரைந்து உள்ளறையில் வைத்திருக்கும் ஓவியம் நெஞ்சில் நிறைகிறது. ஓர் அன்னைக்கு மகன் ஆற்றும் கடமை தூரிகை மூலமும் இப்படி அற்புதமாக நிறைவேற்றப்படலாம் என்று புரிகிறது.

ஆபீஸுக்கு நேரமாச்சு.

வீட்டிலிருந்து மொபைல் அழைப்பு. விரைகிறேன்.

மொபைல் மறுபடி ஒலிக்கிறது. மர்மயோகி.

ஓண வாழ்த்துகளைப் பரிமாறிக் கொள்கிறோம். அவருக்கு எந்தப் பண்டிகையும் கிடையாது என்பதால் எல்லாமும் உண்டு.

என் சிறுகதைகள் அடங்கிய ஒலிப் புத்தகத்தை போன வாரம் அன்பளித்திருந்தேன் (கிழக்கு பதிப்பக ஆடியோ புக்ஸ் வெளியீடு). காரில் கேட்டுப் பார்க்க எடுத்தபோது எம்பி 3 வடிவம் என்று தெரிய வந்திருக்கிறது.

லாப்டாப்பில் போட்டுக் கேட்கலாமே சார் என்கிறேன். அவருடைய ஆப்பிள் மேக் லாப்டாப் முழுக்க மர்மயோகி நிறைந்திருப்பதை நினைவுபடுத்திச் சிரிக்கிறார். படப்பிடிப்பு தொடங்கும் முன்னர் காட்சி வாரியாக ஸ்டோரி போர்ட் உருவாக்க இப்படி அசுர உழைப்பில் இங்கே யாரும் ஈடுபடுவதில்லை. உழைப்பும் திறமையும் வெல்லட்டும்.

**************************************************

ஓணத்துக்கு முந்தைய உத்ராட தின மாலை நேரத்தில் குடும்பத்தோடு வெளியே போவது என்று சென்னையில் இருக்கும்போது வழக்கமாக வைத்திருப்பதை இந்த ஓணக் காலத்தில் தாமதப்படுத்த வேண்டிப் போனது. டைடல் பார்க்கில் ஒரு கான்பரன்ஸ். சரியாகச் சொன்னால் அ-கருத்தரங்கம் (அன்கான்பரன்ஸ்). சம்பிரதாயமான தலைமை உரை, சிறப்புரை, ஏற்புரை சமாச்சாரங்கள் இன்றி எல்லோரும் கலந்து கொண்டு பேசும் இந்த அ-கருத்தரங்கத்தில் மேடை இல்லை. நாலைந்து திண்டு தலகாணி நடுவில் போட்டு சுற்றி நாற்காலிகள். நாற்காலிகளை எடுத்து விட்டால், நேரு காலத்துக்குத் திரும்பிப் போய்விடுவோம். ஆவடியில் அகில இந்திய காங்கிரஸ் காரியக் கமிட்டி மீட்டிங் நடந்ததாக 1953 மஞ்சரி தொகுப்பில் கருப்பு வெள்ளை படமாகப் பார்த்தது கிட்டத்தட்ட இந்த மாதிரித்தான் இருக்கும்.

‘தொழில்நுட்பமும் சராசரி மனிதனும்’ என்று அ-கருத்தரங்கத் தலைப்பு. சிறப்பு விருந்தினருக்காக கூட்டம் சற்றே காத்திருக்க, பரபரப்பாக நுழைந்தார் அந்தப் பிரமுகர். கேமிராக்கள் சுழன்றன. அந்தப் பரபரப்பிலும் கூட்டத்திலும் கூட சட்டென்று பார்த்து சிரித்து நலம் விசாரிக்க நான் சிரித்தபடி கையசைக்கிறேன். கவிஞர் கனிமொழி தனித்துவமானவர். பதினைந்து வருடம் முன்பாக கணையாழிக்குக் கவிதை வாங்க ஹிந்து பத்திரிகை அலுவலகத்தில் சந்தித்து (அங்கே பத்திரிகை துணை ஆசிரியர் பயிற்சியில் இருந்தார் அப்போது) ஏற்பட்ட பரிச்சயம். அப்புறம் நூல் வெளியீட்டுக்கு அழைக்க, சிங்கப்பூர் தமிழ்முரசு ஆசிரியர் குழு சார்பில் அவர் ஈ-மெயிலில் சிறுகதை கேட்டு வாங்கிப் பிரசுரிக்க என்று அந்த நட்பு எப்போதும் தொடர்ந்திருக்கிறது. சுஜாதா மறைவுக்கு அஞ்சலி செலுத்த வந்த போது கண்ணீர் மல்க புன்னகைக்க முயன்று தோற்றோம். சுஜாதாவின் உடல் கண்ணாடிப் பேழைக்குள் வைத்த நிலையில் வந்து இறங்கி மாடிப்படி வளைவில் மரியாதை செலுத்த வைக்கப்பட்ட போது, ஓரமாக நின்று விம்மிய கனிமொழி எம்.பி இன்னும் என் மனதில் அப்படியே நிற்கிறார்.

அ-கருத்தரங்கில் பேச கனிமொழியும் ஒரே ஒரு நிமிடம் தான் எடுத்துக் கொண்டார். அழகான ஆங்கிலத்தில் ‘கிராமப் புறங்களில் ப்ரவுசிங் செண்டர்கள் அமைத்து விவசாயிக்கு உற்பத்திப் பொருட்களை விலைப்படுத்துவது குறித்த விவரங்களை இணையம் மூலம் கொண்டு சேர்ப்பது’ குறித்த ஆழமான சிந்தனை அது.

‘Free technology from superstition. Free common man from superstition using technology’. இடைப்பட்ட ஒரு கணத்தில் அவரிடம் என் கருத்தைச் சொன்னேன். சரிதான் என்று புன்னகைத்தார்.

மொபைல் அழைத்தது. வீட்டிலிருந்தா, மேல்தளத்தில் ஆபீசில் இருந்தா? வெளியே வந்தேன்.

சனிக்கிழமை, செப்டம்பர் 13, 2008

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன