கிரேசி முதல் கிரேசி வரை

சில ஆண்டுகளுக்கு முன், என் அன்பு நண்பர் கிரேசி மோகனையும் அவருடைய கிரேசி க்ரியேஷன்ஸ் நாடகக் குழுவையும் பற்றி ‘கிரேசி முதல் கிரேசி வரை’ என்ற புத்தகத்தை எழுதத் தொடங்கினேன். மோகனோடு நீண்ட உரையாடல்கள் நிகழ்த்தி, அவற்றின் அடிப்படையில் ஆறு அத்தியாயங்கள் எழுதி அந்த நூல் முற்றுப்பெறாமலே நின்றது.

இப்போது கிரேசி மோகனோடு நல்ல நட்பு கொண்டிருந்த என் அன்புக்குரிய, சில எழுத்தாள நண்பர்களும் நானும் கூட்டாக மோகன் பற்றி ஒரு புத்தகம் எழுதி வருகிறோம். இந்தக் கட்டுரைகளும் அதில் இடம்பெறும்.

நூலை நிறைவு செய்து மின் நூலாக வெளியிட முயல்கிறோம். விரைவில் இது அச்சிலும் வரலாம்.

’கிரேசி முதல் கிரேசி வரை’க்காக- மோகனோடு நான் நடத்திய உரையாடல்களிலிருந்து ஒரு சிறு பகுதி இது –

————————————————————————–
கெஸ்ட் ஆக்டர் உண்டான்னு கேட்டீங்களே. தி வெரி பெஸ்ட் ஆக்டர், உலக நாயகனே எங்க குழுவிலே கெஸ்ட் ஆக்டரா நடிச்சு அசத்தியிருக்கார்’

‘எப்போ அது, மோகன்?’

‘திருச்சியில் நடந்தது.. சந்திரஹாசன் சார் கூப்பிட்டிருந்தார். ஜஸ்ட் இருபது வருஷம் முந்தித்தான்’ என்று தொடங்கினார் மோகன்.

“அபூர்வ சகோதரர்கள் ரிலீஸ் ஆகி சக்கைப்போடு போட்டுட்டு இருந்த நேரம். நான் கமல் சாருக்காக எழுதின முதல் படமும் அதுதான். சந்திராண்ணா திருச்சியிலே ஒரு சமூகநல அமைப்பு – சாரிட்டி நடத்திட்டு இருந்தார். அதோட ஆண்டு நிறைவுக்கு என்னை நாடகம் போடக் கூப்பிட்டார். நானும் வரேன்னு கமல் கிளம்பினதும் எங்க டீம்லே எல்லோருக்கும் டன் டன்னா குளூகோஸ் சாப்பிட்ட உற்சாகம். கமல்ஹாசனோட சேர்ந்து அதுவும் மேடையிலே அவர் கூட நடிக்கற பெருமை இருக்கே. விடறதுக்கு யாருக்கு மனசு வரும்?”

‘கமல் சார் நடிக்கறதாலே அவருக்காக ஸ்பெஷல் டயலாக் எழுத வேண்டி இருந்ததா?’

‘ஆமா, அவரும் நம்ம வரதுக்குட்டி கோபியும் மேடையிலே சேர்ந்து வர்றதா ஒரு சீன் கற்பனையிலே வந்துது. அது போதும். கடகடன்னு எழுதிட்டேன்’.

‘என்னன்னு?’

‘கோபி ஏராளம் தாராளமா குட்டை. அவர் கமலைப் பார்த்துக் கேட்கறார் – “அபூர்வ சகோதரர்கள் படத்திலே குள்ள அப்புவா நீங்க நடிச்சது எப்படிங்கற ரகசியத்தை எனக்கு மட்டும் சொல்லுங்க ப்ளீஸ்”. கமல் சொல்றார் – “அதை மட்டும் கேக்காதீங்க. சிதம்பர ரகசியம்”. கோபியோட பதில் – “அட பெரிய ரகசியம், சொல்லாட்ட போங்க சார், நீங்க இந்த ஒரு படத்துலே தான் குள்ள வேஷம் போட்டிருக்கீங்க. நான் கடந்த நாப்பது வருஷமா நிஜமாவே குள்ள வேஷம் தான் போட்டுட்டு வரேனாக்கும்’.

‘அப்ளாஸ் அள்ளிட்டுப் போயிருக்குமே’.

மோகன் புன்னகைக்கிறார்.

எல்லோருடைய அன்புக்கும் பாத்திரமான கோபிக்கு தற்பொது கண் பார்வை பழுது அடைந்திருக்கிறது. ஆனாலும் கிரேசி நாடகம் என்றால் அவர் ஒரு காட்சியிலாவது இல்லாமல் போவதில்லை.

‘எப்படியாவது வந்து சேர்ந்துடுவான் அவன்’.

கோபி பற்றி மோகன் நெகிழ்ச்சியாகச் சொன்னார்.

அந்த நாடகம் ரிக்கார்டிங்க் வீடியோவோ ஆடியோவோ இருக்கா? பார்க்கணும் அல்லது கேட்கணுமே.

இருக்கு என்றார் மோகன். கமல் சார் கிட்டே ஒரு காப்பி இருக்கு. என்கிட்டே இல்லே. நீங்க கேட்டுப் பாருங்க. தேடிக் கொடுத்தார்னா எனக்கும் கொடுங்க.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன