செய்யுள் – கவிதை 22.06.2019

கண்ணனவன் சொன்னபடி இன்னும் வரவில்லை
கண்கள் வழிவைத்துக் காத்திருந்தாள் – கன்னி
மரத்தில் மறைந்தது மான்விழி சைக்கிள்
மறத்தை மறைக்கும் மனம்.

மல்லி விலையேற்றம் மாங்காயும் ஏறுமுகம்
சொல்லுநேரம் உள்ளிகாணோம் கூடியாச்சு – முள்ளங்கி
தக்காளி இத்தனையேன் வெண்பா தளைதட்டும்
தக்காளி கால்கிலோ தா.

இளநீர் விற்பவர்களுக்கு
அடுக்குமாடிக் குடியிருப்பு வாசலில்
மெல்ல விளிக்கச் சலுகை.
நீர்க்காய் தர நிபந்தனையோடு.
தூக்குப் பாத்திரத்தில் வாங்கிப் போகிறவள்
புகார் செய்வது, ”நேற்று உப்புநீர்”
இன்று இனிக்குமோ
இளநீர்க்காரன் அரிவாள் அறியும்.

நூறு வருடம் காலத்தினூடே
பயணம் செய்து வருவதுபோல்
மாநகர்த் தெருவில் மாட்டுவண்டி
மண்வாசனை கவிந்து உருளும்
வண்டி முழுக்கப் பூச்செடிக் கன்றுகள்
வாங்க முனைவோர் நிறுத்தட்டுமென்று
ஓட்டி வருபவன் அரைக்கண் மூடி.

தொட்டியில் வைத்த
சின்னச் செடியோடு
மண்ணும் கைமாறும்
மாடி பால்கனிக்கு.
பின்னும் இஷ்டம் இருந்தால்
கூடிய விரைவில்
அங்குமோர் பூபூக்கும்.

சத்தம் இல்லாத் தெருக்களின் ஊடே
சைக்கிளில் ஊர்கிறான்
திரும்பத் திரும்ப
ஒலிப்பதிவில் கூவியபடிக்கு —
இடியாப்பம் இடியாப்போம்

தமிழ் பழகும் பீகாரி விற்பது
கட்டிடம் கட்டும் இந்தியரின்
காலைத் தமிழ் உணவு.

நடையானந்தா
22.06.2019

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன