புதிது – தோழர் எத்தனை தோழரடி – 1975 நாவலில் இருந்து

பரோட்டாவும், சால்னாவும் வர வயிறு திகுதிகு என்று பற்றி எரிந்தது. வீட்டில் அசைவம் விலக்கு. பரோட்டா சைவ வேஷம் போட்டுக் கொண்டு சாத்வீகமான சிநேகிதமான குருமா, சாம்பார், சட்னியோடு நுழையக்கூட அனுமதி இல்லை. பிரியாணிக்கு பூணூல் போட்டு அடையாளமே இல்லாமல் சாத்வீகமாகப் போன விஜிடபிள் பிரியாணியும், காய்கறி குருமாவும் கூட விலக்கப் பட்ட பொருட்கள். எனவே இங்கே, மைதாமாவு பரோட்டாவை பக்கவாத்தியங்களோடு ஒரு பிடி பிடித்தேன். ஜெபர்சன் கொறித்தார்.

“நீங்க இடதுசாரி கம்யூனிஸ்ட், வெங்கு வலது சாரியா?”

ஜெபர்சனைக் காரியமாக விசாரித்தேன். தெரிந்து எனக்கு என்ன ஆகப் போகிறது?

“நாங்களும் அவரும் ஒரே பக்கம் தான் இப்போ. நாங்க எல்லோரும் ஒண்ணாயிட்டோம்”. ஜெபர்சன் சொன்னார். புரியலை என்றேன்.

“இடதுசாரியிலே இருந்தா கண்காணிப்பு, அது இதுன்னு அதிக கஷ்டமா இருக்கறதாலே, வெளியே வந்து, எல்லோரும் பொதுவாகச் சொல்ற வலதுசாரி என்கிற, முதலாவது கட்சியிலே இணைஞ்சிருக்கோம்”.

அவர் சிரித்தபடி சொல்ல, கல்லாவில் இருந்து வெங்குவும் சிரித்தான். சாப்பிட்டுக் கொண்டிருந்த நாலைந்து நபர்களும் கூட சிரித்தமாதிரித் தோன்றியது. ராத்திரி பதினோரு மணிக்கு பரோட்டா சாப்பிட வேண்டும் என்று எல்லா விதமான கம்யூனிஸ்டுகளுக்கும் விதிக்கப்பட்டிருக்கலாம் என்று கொஞ்சம்போல நம்ப ஆரம்பித்தேன்.

“தோழர், ஒரு உதவி தேவை”.

ஜெபர்சன் எச்சில் கையைக் காய விட்டபடி கேட்டார். நான் சுவாரசியமாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன்.

“உங்களைத் தான், தோழர்”.

அவர் என் பக்கம் குனிந்து சொன்னார். நான் நடுராத்திரிக்குக் கொஞ்சம் முன்னால் தோழரான சந்தோஷத்தில் ரெண்டு பேருக்கும் ஆளுக்கு இன்னொரு பரோட்டா போடச் சொன்னேன். ஜெபர்சன் வேண்டாம் என்று மறுத்து விட்டார்.

“நீங்க எந்தத் தெரு?” நான் கேட்டேன்.

“நான் பக்கத்து ஊர்லே வேலை பார்க்கறேன். நாட்டுக்கோட்டை. அங்கே தான் வீடு”.

நாட்டுக்கோட்டை நான் ஸ்கூட்டர் பழகிய போது வண்டியை ஓட்டிப் போய் ஒரு ரவுண்ட் அடித்துத் திரும்பி வந்த தலம். உண்மையிலேயே தலம் தான். கண்விழி அம்மன் கோவில் அங்கே உண்டு. எங்கிருந்தெல்லாமோ கண் நோய் குணமாக நேர்ந்து கொண்டு கூட்டம் கூட்டமாக பக்தர்கள் தினம் வருகிற ஊர் அது. நானும் போயிருக்கிறேன். வேண்டாம், அவருக்கு ரசிக்காத தகவலாக அது இருக்கக் கூடும்.

“என்ன உதவி வேணும்?”

”தோழர், நீங்க மலையாளம் படிப்பீங்க, பேசுவீங்க தானே?”

அவர் கேட்க நான் கையலம்ப எழுந்தபடி சொன்னேன், “ஏதோ சுமாரா அதெல்லாம் செய்வேன்”.

“அது போதும், நீங்க நம்ம பசங்களுக்கு க்ளாஸ் எடுக்கலாம்”.

“உங்க பிள்ளைங்க என்ன வயசு? பள்ளிக்கூடம் போயிட்டு வீட்டுப் பாடம் எழுதி பரீட்சைக்குப் படிக்கறதே பெரிய விஷயம். மலையாளமும் சேர்த்து ஏன் படிச்சு அவதிப் படணும்?” நான் கேட்டேன்.

“பசங்கன்னா என் பசங்களா? கட்சியிலே, சித்தாந்தத்திலே ஈர்ப்பு உடைய பிள்ளைகள். தியரி கிளாஸ் நான் எடுக்கறேன். நீங்க கூடவே மலையாளம் எடுங்க. உங்க சௌகரியத்தையும் பாத்துக்கணும்”.

காலேஜில் பிசிக்ஸ் தியரி கிளாஸ் எடுத்த பேராசிரியர் ஜான் லூயிஸ், தமிழ் புரபசர் ராமானுஜ ஐயங்காரிடம் சொல்வது போல் இருந்தது. மேனேஜர் ஓசைப்படாமல் மூன்று பேரும் சாப்பிட்டதற்கு கல்லாவில் துட்டு கொடுத்து விட்டுக் காணாமல் போய்விட்டார். அடைத்துக் கொண்டிருந்த பரோட்டா கடை வாசலில் நானும் ஜெபர்சனும் மட்டும் நின்றோம்.

“தோழர், நீங்க பேசற தமிழ் இந்தப் பக்கத்து ஆள் மாதிரி தெரியலியே” நான் மெல்லக் கேட்டேன்.

“இல்லே, நான் பத்மனாபபுரத்துக்காரன்” என்றார் அவர் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டு. சிகரெட் இல்லை. பீடி அது.

“அப்புறம் ஏன் சார் என்னை மலையாளம் சொல்லித்தரச் சொல்றீங்க? மூணு தலைமுறை முந்தி இங்கே வந்து நாங்க பேசற மலையாளமே தமிழ் மாதிரித்தான் இருக்கும். உங்க பேச்சு அப்படி இருக்காதே?”

இதைக் கேட்டு முடித்தபிறகு மலையாளத்திலேயே இதைக் கேட்டிருக்கலாமே என்று வெகு தாமதமாகத் தோன்றியது.

“வேணாம், எனக்கு மலையாளத்தை கட்சி அறிக்கைக்கான மொழியாத்தான் தெரியுமே தவிர, சாகித்யம் எதுவும் தெரியாது. மத்தப்படி, வகுப்பு எடுக்க, டயலெடிகல் மெடீரியலிஸம் ஓரளவுக்கு தெரியும்”.

எனக்கு அதுவும் தெரியாது என்று நினைவு வந்தது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின் மூன்று பேரும் தாடிக்காரர்கள் என்று நினைவு. சேர்ந்து நின்று சைட் ப்ரொபைல் ஃபோட்டோ எடுத்துக் கொண்டிருப்பார்கள் என்று நினைக்க வைக்கும் அளவு அவர்களின் தாடி எடுப்பாகத் தெரிய, தலை மட்டும் வரிசையாகத் தட்டுப்படும் படத்தை பொதுக்கூட்ட நோட்டீஸ்களில் பார்த்திருக்கிறேன். அதிலும் மற்ற இருவருக்கும் தாகூர் தாடி என்றால் லெனினுக்கு சின்னஞ்சிறிசாக ஆட்டுத் தாடி. ஆள் கொஞ்சம் குட்டையும் கூட.

”என்ன யோசிக்கறீங்க?”

பீடியை சுவரில் தீற்றி அணைத்து பாக்கெட்டில் போட்டுக் கொண்டார். நான் லெனின் குட்டையாக இருப்பார் என்றேன் அவரிடம்.

“சரி களைச்சுப் போயிருப்பீங்க தோழர், ஓய்வெடுங்க” என்றபடி அவர் தாட்தாட் என்று பஸ் ஸ்டாண்ட் பக்கம் நடந்தார். என் ஸ்கூட்டர் இன்னும் மெட்ராஸில் இருந்து குட்ஸ் ரயிலில் புக் பண்ணி அனுப்பியது வந்து சேரவில்லை. வந்திருந்தால் அவரை பக்கத்தில் நாட்டுக்கோட்டையில் கொண்டு போய் விட்டுவிட்டு வந்திருக்கலாம்.

நான் பாதி தூரம் போய்க் கொண்டிருந்தபோது பின்னால் இருந்து வெங்கு வேகுவேகென்று ஓடி வந்தான். காசு எல்லாம் கொடுத்தாச்சே. மேனேஜர் முழுக்கக் கொடுத்திருக்காவிட்டாலும் நாளைக்கு பேங்குக்கு வந்தால் மீதித் தொகையையும் உடனே சார்ஜஸ் வவுச்சர் போட்டுக் கொடுத்து விட மாட்டாரா என்ன?

“வாத்தியார் தோழர் புத்தகப் பையை விட்டுட்டுப் போயிட்டார் போத்தி தோழர். அவர் கூட வந்த பூவந்தித் தோழர் இப்போ தான் லாரி பிடிச்சுப் போனார். வேறே யார் கிட்டயாவது கொடுத்து விடலாம்னா, பரோட்டா மாஸ்டர் காசித் தோழர் இன்னிக்கு லீவு. சர்வ் பண்ற சமஷ்டிராஜ் தோழரும் போயாச்சு. சரி, நம்ம புகாரித் தோழர் கிட்டே கொடுத்து விடலாம்னா அவர் கடைக்குள்ளேயே படுத்துட்டார். நாளைக்கு ராபர்ட் தோழரோட கல்யாணத்துக்குப் போறாராம்”

இத்தனை தோழரில் ஒருத்தரையும் எனக்குத் தெரியாது என்று வெங்குத் தோழரிடம் சொல்வதற்கு முன் அந்தப் பையை என் கையில் அழுத்தி வைத்து விட்டுப் போயே போய்விட்டான் அவன்.

சிவப்பு நிறமாகத் தெரு விளக்கில் ஒளிர்ந்த துணிப்பையில் இருந்து புத்தகங்களை எடுத்துப் பார்த்தேன். மாசேதுங் எழுதிய சிவப்புப் புத்தகம். மதுரை ஆதினம் எழுதிய ‘இறந்தவர்கள் வாழும் நிலையும் பேசும் முறையும்’. ராகுல சங்க்ருதியானின் ‘வால்காவிலிருந்து கங்கை வரை’.

படித்துவிட்டுக் கொடுக்கலாம். இறந்தவர்கள் வாழும் நிலை என்னவாக இருக்கும்?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன