புது நாவல் : 1975 -மங்கிய விளக்கு வெளிச்சத்தில் ரெம்ப்ராண்ட் ஓவியம் போல இருவரும் தெரிந்தார்கள்

எழுதிக் கொண்டிருக்கும் நாவல் ‘1975’ – ஒரு சிறு பகுதி இது

கோடவுண் தான். நியூஸ் ப்ரிண்ட் வாடையும், அச்சு மை வாடையும் தூக்கலாக வந்த கிடங்கு அது. சுவரில் வைத்த போர்ட் ஊர்ப் பேச்சு பத்திரிகையுடையது. உள்ளே நடக்க, கோடவுண் முடிந்து, ஒரு கதவு. திறந்தால், ஒரு அறை. இரண்டு கயிற்றுக் கட்டில். பின்னால், சிறு உள்ளறையாக டாய்லெட். வயதான, ஈர்க்கு போல மெலிந்த ஒரு சாமியார் கட்டிலில் கண்மூடிப் படுத்திருந்தார். மண் பாத்திரத்தில் இருந்த தண்ணீரில் நனைத்த துணியை அவர் நெற்றியில் வைத்தபடி இளைய துறவி ஒருத்தர் கயிற்றுக் கட்டிலை ஒட்டி மண்டி போட்டு நின்றார். மங்கிய விளக்கு வெளிச்சத்தில் ரெம்ப்ராண்ட் ஓவியம் போல இருவரும் தெரிந்தார்கள்.

விஸ்வநாதனைப் பார்த்து இளையவர் ஒரு முறை தலையசைத்தார். ஜாக்கிரதையான இங்க்லீஷில் அவர் சொன்னார் – “இப்போ ரொம்ப பரவாயில்லே. மட் பாத் எடுக்க வேறே மண் கிடைக்கலே. நேற்று ராத்திரி வெகு நேரம் கழிச்சு பீச்சுக்கு போய் எடுத்து வந்ததை வச்சு மணல் சிகிச்சை கொடுத்தேன். நம்ப முடியாத அளவில் முன்னேற்றம்.

விஸ்வநாதன் கொண்டு வந்திருந்த ரக்ததோஷாந்தக் மற்றும் தசமூலாரிஷ்டம், சியவ்னப்ராஸ், திரிபலாதி சூரணம் என்று அரை ஆயுர்வேத வைத்தியனான நான் வந்தனை செய்யும் ஔடதங்களைப் பையில் இருந்து எடுத்து வைத்தான். இளைய சாமியார் முகத்தில் மகிழ்ச்சி மின்னி மறைந்தது

விஸ்வநாதன் பெரியவரின் அருகில் நின்று என்னைப் பார்த்தான். நான் குனிந்து இளைவருக்கு அருகே மண்டியிட்டு உட்கார்ந்து பெரியவரின் நாடியைப் பிடித்துப் பார்த்தேன். சாதாரணமாகத் தான் இருந்தது. விஸ்வநாதன் கொடுத்த தர்மாமீட்டரை இளையவர் அவசரமாக பக்கத்தில் பாத்திரத்தில் வைத்திருந்த வெந்நீரில் கழுவித் தர டெம்ப்ரேச்சர் பார்த்தேன். ரொம்ப சொற்பமாக ஏறி இருந்தது. தொண்ணூற்று நாலு டிகிரி பாரன்ஹீட். இளையவர் அருகில் வைத்திருந்த திரிபலாதி சூரணம், பாலாரிஷ்டம், ம்ருதசஞ்சீவினி இவற்றைக் காட்டினார். தொடர்ந்து தரலாம் என்றேன்.

முதியவர் புரண்டு படுத்தார். மல்லாந்து இருந்தார் அவர் இப்போது. கம்பீரமான முகம். எங்கோ பார்த்த நினைவு. எங்கே என்று தெரியவில்லை. ‘ராம் பாட்டு பாடு’ அவர் முனகினார். இளையவர் சட்டென்று கட்டில் அருகே உட்கார்ந்து மெல்லிய குரலில் பாடினார் –
சூரஜ் கி கர்மி ஸே
ஜல்தெ ஹுவே தன் கோ
மில் ஜாயெ தருவர் கி சாயா

பெரியவருக்கு மட்டுமில்லை, இளையவருக்கும், எனக்கும் கண்ணில் நீர் வழிந்தது. விஸ்வநாதன் விசும்ப ஆரம்பித்தான். அப்புறம் சுதாரித்துக் கொண்டு என்னை இளையவரிடம் அறிமுகப்படுத்த அவர் கைகூப்பி வணங்கினார். முதியவர் மறுபடி உறங்கி விட்டார். நாங்கள் கிளம்பினோம்.

இரண்டு நாள் கழித்து விஸ்வநாதனிடம் சாமியார்கள் பற்றிக் கேட்டேன். பெரியவர் யார் தெரியுமா? சொன்னான். எதிர்பார்க்கவே இல்லை. சரி, அவர் இருக்கட்டும், ராத்திரியில் கடற்கரை மண் எடுத்து வந்து பற்று போட்டு மகன் போல கவனித்துக் கொண்ட, சூரஜ் கி கர்மி சே பாடிய இளையவர்.

விஸ்வநாதன் சாப்பிடக் கிளம்பும் அவசரத்தில் சொன்னான் – பெரியவர் மராட்டிகாரர். சின்னவர் குஜராத்தி. பெயர் நினைவு இல்லே. ஏதோ நரேந்தர்னு சொன்ன ஞாபகம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன