புது நாவல் : சங்கரன் போத்தியின் எமர்ஜென்சி உலகம்

1975 என்ற தற்காலிகத் தலைப்போடு நான் எழுதிவரும் புதினம் தற்போது ‘சங்கரன் போத்தியின் எமர்ஜென்சி உலகம்’ என்று புதுத் தலைப்பு கொண்டிருக்கிறது. இன்னும் தகுந்த தலைப்பு கிடைத்தால் இதுவும் மாறலாம்.

கதை சென்னை, தெற்குச் சீமையில் சொந்த ஊர் என்று இதுவரை பயணித்து, தில்லியை அடைந்திருக்கிறது.

தில்லி அத்தியாயங்களின் தொடக்கத்தில் இருந்து, ஒரு சிறு பகுதி :

பிளாஸ்டிக் பூங்கிண்ணத்தில் எனக்கு விஸ்கி வார்த்தார்கள். கிண்ணத்தில் வைத்திருந்த ஒற்றை ரோஜாப்பூவை ஜகதீஷ் எடுத்ததையும், கொசு விழுந்து மிதந்த தண்ணீரை வாஷ்பேசினில் கொட்டியதையும், சிரித்துக் கொண்டே விஸ்கியும் சோடாவும் அதில் நிறைத்ததையும் நான் பார்த்துக் கொண்டிருந்தபோது பேங்க் கவுண்டரில் செக் புக் கேட்டு ஓவியர் உசைன் வந்து நின்றார். வெங்காயம் சாப்பிட்டு வந்த முதுபெண்கள் என்னிடம் பஞ்சாபியில் ஏதோ கேட்டுச் சண்டை பிடிக்கத் தயாரானார்கள். பாஸ்புக் எண்ட்ரி போட்டு லாகவமாக என் மேஜைக்கு எறிந்தபடி பாயல் அஹுஜா அழகாகச் சிரித்தாள். பாயல் இருக்கட்டும், நீ முழுங்குடா என்றான் ஜகதீஷ். போத்தி, கல்ப் இட் என்றார் சீஃப் மேனேஜர் அகர்வாலும். இதமான நவம்பர் குளிரோடு தில்லி.

இது என்னுடைய குடியிருப்பு. அப்படித்தான் சொல்கிறார்கள். ராத்திரி பனிரெண்டு மணி வரை ஒரு கூட்டம் இங்கே இருக்கிறது. பிடிக்கிறதோ இல்லையோ முன் அறையில் உட்கார்ந்து, சிரித்து, கைதட்டி, சியர்ஸ் சொல்லி, சாப்பிடப் போகும்போது பர்ஸ் எடுத்துக் கொண்டு நடந்து, ராத்திரி வீட்டுக்காரர் முன் கதவைப் பூட்டிவிட, கதவில் ஏறி உள்ளே குதித்து, காலையில் தலைவலியோடு ஆபீஸ் கிளம்பி. வாழ்க்கை போகிறது இப்படி.

தெற்குத் திசையில் இருந்த போத்தி எப்போதாவது கள்ளுக் குடிப்பான். மாமிசம் சாப்பிடுவான். எப்போதாவது சிகரெட் பற்ற வைத்து ரெண்டு இழுப்பு இழுத்து, இருமிக் கொண்டே எறிவான். இப்போது தினசரி ராத்திரி மாமிசம் தின்பவன் அவன். சார்மினார் சிகரெட்டை ஆபீஸ் நேரத்தில் கூட ஐந்து நிமிடம் வெளியே நின்று பற்றவைத்து, புகையைத் தீர்க்கமாக உள்வாங்கி அனுபவிக்கிறவன்.

அப்புறம் பெண்கள். அங்கே பார்த்தது போன்ற பெண்கள் இல்லை இங்கே. பார்வை இசகுபிசகாக எங்கோ விழுந்தாலும் பாதகமில்லை. கண் நிலைகுத்திப் போய்ப் பார்க்கிறது மட்டும் இல்லை என்றால் போதும். முழுநாளும் அழகான பஞ்சாபிப் பெண்களின் அண்மையில் தான் கழிகிறது. அந்த மகிழ்ச்சியில் அவர்களில் சிலர் கல்யாணமானவர்கள் என்பது அபஸ்வரமாக ஒலித்து அப்புறம் சிருங்கார சாகரத்தில் அந்த நினைவு மெல்லக் கரைந்து போகிறது. போத்தி நாள் முழுக்க பெண் நினைப்போடு வலம் வருகிறான். தினசரி ராத்திரி விஸ்கியும் ரம்மும் குடிக்கும்போது அவர்கள் எல்லோரும் பக்கத்தில் வந்து இழைவதாகக் கற்பனைகள் சிறகடித்துப் பறக்கின்றன. குடிக்காமல் இருந்தாலும் அப்படித்தான் இருக்கும். இந்த நவம்பர் குளிருக்கு இதமான நினைப்பு அதெல்லாம். டிசம்பர் வருகிறது.

இங்கே வந்து பத்து நாளாகிறது. மதராஸின் அந்நியோன்யமும், பம்பாய் தரும் பிரமிப்பும் இங்கே கிட்டாது. நூறு கிராமங்களை அடுத்தடுத்து அமைத்து, பெரிய கட்டடங்களையும், சமாதிகளையும், நீண்டு விரியும் பூந்தோட்டங்களையும் கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஏற்படுத்தி, சதா காற்றில் நெய்யும், பராத்தாவும், குருமாவும், மீன் வறுப்பதும் திடமாகத் தங்கி நிற்க, குளிரக் குளிர இரவும், நிதானமும் இல்லாமல் பரபரப்பும் இல்லாமல் கடந்து போகிற நாட்களுமாக தில்லி என்னை வரவேற்று இருக்கச் சொன்னது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன