புது நாவல் : 1975 : ”25.6.1975 புதன்கிழமை திரு.ஜனார்த்தனம் அவர்களின் மகன் நாயகம் மறைந்தார். ஜன.நாயகம் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நண்பர்கள், உறவினர்கள்”

மெழுகுவர்த்தி சுடர் காற்றில் அலைந்து சீக்கிரம் பேசி முடிங்க. நான் உறங்கப் போகணும் என்றது. “என்ன விஷயம்?” என்று குருநாதனைக் கேட்டேன்.

“நானும் எமர்ஜென்சி எதிர்ப்பு ஆள்தான் சார். ஆனா பத்திரிகை நடத்தறவங்க நம்மளைக் கூப்பிட்டு வேலை கொடுத்திருக்காங்க. அதுவும் நந்தனம் பத்திரிகை நின்னு திண்டாடிட்டு இருந்த ஒரு கூட்டத்துக்கே காலோ அரையோ குறைவாகவாவது சம்பளம் கொடுத்து ஒரு கஷ்டமான காலத்துலே கடந்து போக வழி செஞ்சிருக்காங்க. அவங்க எமெர்ஜென்ஸி சப்போர்ட்னா பத்திரிகையும் அப்படித்தான். பிடிக்குதோ பிடிக்கலியோ வேலை செய்யற நேரத்திலே அங்கே என்ன நடைமுறையோ அதைத்தான் கடைப்பிடிக்கணும். அதிலே போய் திரிசமன் செய்யலாமா?” என்றார் படபடப்பாக.

விசாரித்தேன். ஒண்ணுமில்லே என்றவர் கொஞ்சம் தயங்கிப் பிறகு சொன்னார். சிந்துபாத் பத்திரிகையில் இருக்கப்பட்டவர்கள் ஒன்று சேர்ந்து அரைப் பக்கத்துக்கு ஒரு காலமானார் அறிவிப்பு லே அவுட் செய்து அடுத்த இதழில் பிரசுரிக்கத் தயார் செய்திருந்தார்களாம். மாஜி தொழிற்சங்க, எமர்ஜென்சி ஆதரவு பத்திரிகை ஆசிரியர் கண்ணிலும் கருத்திலும் படாதவாறு, ’25.6.1975 புதன்கிழமை இந்தூர் திரு ஜனார்த்தனன் அவர்களின் மகன் நாயகம் மறைந்தார். ஜன.நாயகம் இறப்புக்கு அஞ்சலி செலுத்தும் நண்பர்கள், உறவினர்கள்” என்று எமர்ஜென்சி எதிர்ப்பை மறைவாகத் தெரிவிக்கும் ‘விளம்பரம்’ பத்திரிகையின் கடைசிக்கு முந்தைய பக்கத்தில் வைத்திருந்தார்களாம்.

“நான் உடனே எடுத்து விட்டுட்டேன். தப்பு அது. நமக்கு சோறு போடற கையை முறிக்கக் கோடாலி எடுக்கக் கூடாது. நேரடியா இல்லேன்னாலும் தப்பு தப்பு தான். அப்படி எமர்ஜென்சி எதிர்ப்புன்னா நம்ம சி.எம் மாதிரி இருங்க. அவரோட அரசு எப்ப வேணும்னாலும் கவிழும். கவலைப்படாம, அவர் வீட்டிலேயே எமர்ஜென்சி எதிர்ப்பு பிரசுரம் அடித்து, அவரோட மகன்களே அண்ணாசாலை தேனாம்பேட்டையிலே தொடங்கி கடற்கரை தீவுத்திடல் வரை விநியோகிச்சுட்டுப் போறாங்க. அது எமர்ஜென்சி எதிர்ப்பு. இது சும்மா ஓரமா நின்னு இருட்டுலே கம்பு சுத்தறது”.

”ப்ரூப் ரீடிங் செய்ய வந்தா அதை மட்டும் பாத்துட்டு போங்க. இதிலே ஏன் தலையிடறீங்க?

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன