New Novel ‘1975’ – கேட்டுக்கொண்டபடி அவர் முகத்தில் சாதா சோகம் காட்டினார்

1975 – எழுதிக் கொண்டிருக்கும் நாவலில் இருந்து ஒரு சிறு பகுதி.

“யூனிட் வண்டி வந்தாச்சு” என்றபடி, குமரேசன் கல்லாவை சாவி போட்டு திறந்து இருந்த பணத்தை பையில் எடுத்துக் கொண்டு புறப்பட்டார்.

”வாங்க, நாம போகலாம், உங்க ஸ்கூட்டர்லே ஒரு அழுத்தல். போயிடாலாம்” என்றார் நிருபர். எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக எல்லாம் விளங்கியது. சினிமா படம் எடுக்க ஒரு கோஷ்டி வந்திருக்கிறது. உலகிலேயே முதல் முறையாக ராக்கிப்பட்டியில் வற்றிப்போன ஊருணிக் கரையில் ஐயனார் கோவிலை ஒட்டி ஆலமர மேடையில் ஊர்க்கூட்டம் நடக்கிற படப்பிடிப்பு. படத்தில் வங்காளி பேசும் ஒரு பெண் கதாநாயகி. கதாபாத்திரத்தின் பெயர் குருவம்மா. அவளை ஊர்ப் பொதுவுக்கு விசாரிக்கக் கூட்டிப் போகும் ஊர்ப் பெரியவர் குமரேசன். டன் கணக்காக வசனம் பேசும் வேடத்தை அவரைக் கொண்டு செய்ய வைத்திருக்கிறார்கள். அல்லது அவராக நிறைய சேர்த்துப் பேசிக் கதாபாத்திரமாகவே ரெண்டு நாளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

”ஜெயானன் சார் வந்தாச்சு, ஜெயானன் சார் வந்தாச்சு”, எனக்கு முன்னால் குதித்து இறங்கி, மூச்சு விடாமல் சத்தம் போட்டுக் கொண்டு ஓடினார் கார்மேகம். பள்ளிக்கூடத்துக்கு உள்ளே புது வேட்டியை மண் தரையில் போட்டுத் தேய்த்து பழசாக்கிக் கொண்டிருந்தவர்களுக்கு அழுக்கு வேட்டி உடுத்த ஊர்க் காரர்கள் ஒத்தாசை செய்து கொண்டிருந்தார்கள். ஒரு முக்காலியில் கல்லூரி எலக்ட்ரீஷியனான புலியேறு பெரிய மீசையை முறுக்கிக் கொண்டு, தலையை அல்லோல கல்லோலமாகக் கலைத்து விட்டுக்கொண்டு முடிந்தவரை உட்கார்ந்திருந்தார். “என்ன புலி, வில்லன் கேரக்டரா?” என்றேன் அவர் தோளில் தட்டி. “இல்லே தோழர், செகண்ட் ஹீரோ”. அவர் சிரித்தபடி இன்னொருத்தரை அறிமுகப்படுத்தி, “இவர் தான் பர்ஸ்ட் ஹீரோ” என்றார். புலியேறுவையே கதாநாயகனாக்கி இருக்கலாம்.

”உன்னை நான் எப்போ இருந்து வச்சு இருக்கேன் தெரியுமா?” கடமுடவென்று பள்ளிக்கூட காம்பௌவுண்ட் ஒதிய மரத்திடம் பேசியபடி வலதுகை மணிக்கட்டில் கட்டிய தோசைக்கல்லுக்கு மேல் ரெண்டு முள்ளு வைத்த ரிஸ்ட் வாட்சில் நேரம் பார்த்தார் நெடுநெடுவென்று உயரமாக ஒருத்தர். இரண்டு வினாடிக்கு அப்புறம், “மனசுலே” என்று முடித்தார். ஒத்திகை போல. வில்லனாம்.

ஷூட்டிங் தொடங்க இருப்பதாக நிருபர் என்னிடம் அறிவித்தபடி தேடியது. வங்காளியில் சிரிக்கும் புதுமுகம் ஹீரோயினைத்தான் என்று தெரியும். “வில்லன் மேனரிசம், கவனிச்சீங்களா, பேசின வாக்கியம் முடிக்க முன்பு, எப்பவும் வாட்ச்லே டயம் பார்த்துப்பார். கிளைமேக்ஸ்லே வாட்சை”, அவர் குஷியாக மேலே போக, “கதையை எல்லாம் பொதுவிலே வைக்க வேணாமே” என்று கத்தரித்துக் கொண்டேன் “இது கூட நல்ல பஞ்ச் டயலாக் ஆக இருக்கும் சார்” என்றார் புலியேறு.

உள்ளே களேபரமாக இருந்தது கூடிக் கொண்டு போனது. அரிதாரம் பூசுவது என்றால் என்ன என்று கொஞ்சம் போல தெரிந்தது. ஒரு ஞாயிற்றுக்கிழமைக் காலை நேரத்தைச் செலவு செய்து கற்றுக்கொள்ள வேண்டியதில்லை அதொன்றும். பசியாறாமல் வந்திருக்க வேண்டாம். அந்தக் கதாநாயகியை பார்த்து நாலு வார்த்தை மரியாதைக்கு பேசிவிட்டால் நிருபருக்கு கோஸ்ட் ஆகச் செயல்பட்டு எழுதித் தந்து விடலாம்.

“சார், பேட்டி”, நிருபர் அழைத்து வந்த அந்தப் பெண் துடியாக இருந்தாள். நல்ல உச்சரிப்போடு இங்க்லீஷ் பேசினாள். எப்படி இந்தக் கும்பலில் வந்து சேர்ந்தாள் என்று புரியவில்லை. நல்ல கதை, ஸ்டூடியோவுக்குள் போகாமல் நிஜமான சூழ்நிலையில் படப்பிடிப்பு, குறைந்த மேக் அப் இப்படி.. இதை எல்லாம் பேசித்தான் கேட்டுக் குறித்து வைத்து பேட்டிக் கட்டுரையாக எழுத வேண்டும் என்றில்லை.

ஒரு மணி நேரம் கழித்து, எல்லோரும் ரவை உப்புமா சாப்பிட்டு, சாயா குடித்து மெல்ல அங்கே இங்கே திரிந்து, கேமராமேன் வெய்யில் போயிடும் என்று பயமுறுத்த ஒரு வழியாகப் படப்பிடிப்பு தொடங்கியது.

குமரேசன் பின்னால் முகத்தில் எல்லா பாவமும் காட்டியபடி நடக்க, அவரோடு கூட நாலைந்து பேர் ஊர்ப் பெரியவர்களாக வந்தார்கள். வங்காளிப் பெண் ‘சபைக்கு வணக்கம்’ என்று கேமிரா முன்னால் திரும்பத் திரும்பக் கும்பிட்டு விழுந்தாள். ”நீங்க ரொம்ப உணர்ச்சி காட்ட வேணாம். சாதாரணமா சோகப்பட்டா போதும்” என்று உதவி டைரக்டர் குமரேசனிடம் சொல்ல, சாதா சோகம் காட்டினார் அடுத்த ஷாட்டில். ஆனாலும் வெளுத்த உதடுகள் துடித்துக் கொண்டிருந்தன.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன