New Novel : 1975 :Excerpts இப்போதெல்லாம் ஒரு கைக்குட்டை வாங்கணும் என்றால் கூட பஸ் பிடித்து மதுரை போகிற கூட்டம் ஊரில் கூடிப் போயிருக்கிறது


“ஒரே நாள்லே ரெண்டு செண்டிமீட்டர் வளர்றது தலைமுடி” என்றார். அவர் கண்கள் பயத்தில் வெறித்து ஒரு வினாடி இருந்து சகஜ நிலைக்குத் திரும்பின.

“நல்லது தானே” என்றேன் சமாதானமாக. “நிச்சயமா இல்லே. ஒரு நாளுக்கு ரெண்டு செண்டிமீட்டர். ஒரு வாரத்திலே பந்த்ரெண்டு”. பதினாலு இல்லையோ. ஞாயிற்றுக்கிழமை முடி வளராதோ. ஒரு மாசத்துலே ஐம்பது செண்டிமீட்டர் என்றார் அவர். திரும்ப கணக்கு பிசகு. இருந்தாலும் உண்மை.

நிலைமையின் பயங்கரம் எனக்கு அப்போது உறைத்தது. இன்னும் ஒரு மாதம் போனால் அவளுடைய தலைமுடியைச் சுமந்து கொண்டு அவளுக்குப் பின்னால் வர சம்பளத்துக்கு ஆள் போட வேண்டிவரும்.

“எப்போது இருந்து இப்படி?” நிஜமாகவே கரிசனத்தோடு கேட்டேன். அவ்வளவு முடியை வைத்துக் கொண்டு குளிக்க, பாத்ரூம் போக, தரையில் உட்கார்ந்து சாப்பிட, கட்டிலில் படுத்து உறங்க எப்படி சாத்தியம்?

“நான் இப்போ தினம் கண்டிக்கறேன்”. அவர் சமாதானமாகச் சொன்னார். இதுக்காக பாருகுட்டியைக் கண்டித்து என்ன புண்ணியம்! அந்தக் கண்டிப்பு இல்லே. மலையாளம். கண்டிச்சு. வெட்டிப் போடறது.

புரிந்தது. தினமும் முதல் வேலையாக யாரோ பாருகுட்டியை உட்கார வைத்து அவள் கூந்தலில் ஏற்பட்டிருக்கும் அதிக நீளத்தைக் கத்திரிக்கோலால் களைந்து கொண்டிருக்கிறார்கள். இது ஒரு தீர்வு இல்லை. இதற்கான தீர்வுதான். மனதில் தானே இருபது அம்சத் திட்டம் விளம்பரம் வந்து போனது. இளைஞர் குழு சத்தம் எழுப்பி எமர்ஜன்சி கீதம் பாட இன்னும் பயங்கரமாக இருந்தது சூழல். காப்கா கதையில் பூச்சியாக மாறும் கிரிகர் சம்ஸா போல ஆகப் போகிறாள் பாருகுட்டி. அதை வைத்து எழுத மாட்டேன் நிச்சயம்.

இது ஞாயிறு சாயந்திரத்திலிருந்து நடக்கிறதாம். குடிசைத் தொழில் முன்னேற்றத்துக்காக மாதர் சங்கத்தில் ஒரு விழா நடத்தினார்களாம். காப்பியும் பிஸ்கெட்டும் கவர்மெண்ட் செலவில், கேளு நாயர் மூலம் சப்ளை செய்யப்பட்டதாம். கூட்டத்தில், தேனீ வளர்ப்பு பற்றி பாருகுட்டி மைக்கைப் பிடித்துப் பேசிக் கொண்டிருந்தபோதே தலையில் ஜிவ்வென்று ரத்தம் அதிகமாகப் பாய்ந்ததாக உணர்ந்து சீக்கிரமே பேசி முடித்து உட்கார்ந்தாளாம். தேனி எப்படி வளர்ப்பது என்று அப்புறம் பார்த்துக் கொள்ளலாம், முதலில் அதற்காக பேங்க் கடன் எப்படி வாங்குவது என்று சகல மாதரும் ஆவலோடு கேட்க, கடன் நிபுணர்களான நிருபரும் கேளு நாயரும் பேசினார்களாம். நேற்றும் முன் தினமும் கடன் படிவம் எழுதி, புகைப்படம் எடுத்தாகி விட்டது என்று தெரிந்தது. கடன் படிவம் வேறு பேங்கில் வாங்கினதாம். அதைப் பற்றி என்ன? எல்லா பேங்குக்கும் ஒரே முகம் தானே, அதுவும் எமர்ஜென்சியில்.

வீட்டுக்கு வந்து பார்த்தபோது தலைமுடி கூடி இருந்ததைப் பாரு கண்டு பிடித்தாளாம். அது வழக்கமாக கூடத்துச் சுவரில் இந்தியா – இந்திரா படத்துக்கு நேரே நின்றால் இந்தியா மேப்பில் மதுரை வரை இருக்குமாம். இப்போது கன்யாகுமரி வரை இருப்பது மட்டுமில்லாமல் அதையும் கடந்து இந்தியப் பெருங்கடலில் இறங்கிக் கொண்டிருக்கிறதாம்.

”திடீர்னு தலைமுடி ஏன் அதிகமாகணும்? சாப்பாட்டிலே ஏதாவது மாற்றம் உண்டா?” இல்லையே, சோறும், கூட்டானும், மெழுக்குபிரட்டியும், புட்டு, கடலையும், புழுங்கின பழமும், அயிலைமீன், மத்தி, செம்மீன், ஆடு, கோழி”.

உலகில் சகலமான வஸ்துகளையும் ஒரு பிடி தேங்காய் துருவிப் போட்டு பாருகுட்டி சாப்பிட்டு விடக் கூடியவள் என்று புலப்பட்டது. ஆனால் இந்த உணவுப் பெரும் பழக்கத்தில் எந்த மாற்றமும் இல்லை. வேறே, சோப் உபயோகிக்கறதுலே, தலைக்கு சீயக்காய் போடறதிலே, ஷேம்பு போடறதிலே எதாவது சேஞ்ச்? ஒரு சேஞ்சும் இல்லே. அவள் அச்சன் உண்டாக்கிக் கொடுத்த தைலம் தான் புரட்டுகிறாள் தினசரி தலைக்கு. சரி அந்தத் தைலத்தில். ஸ்டாப். ஆமா, தைலத்தில் புது வஸ்துகளாக நாயுருவி, சிறியநங்கை என்று சேர்த்துக் காய்ச்சிய பிறகு தான் இப்படி தலைமுடி பொங்கிப் பூரித்து வளர்வது. ஏன் அப்படிப் பண்ணினீங்க என்று கேளு நாயரைக் கேட்டேன். பாட்டித் தள்ளையோட முழங்காலையும் கவனிக்க வேண்டியிருக்கே என்று கரிசனம் காட்டினார் அவர். அதற்காக பாருகுட்டி தலைக்கும் பாட்டித்தள்ளை பார்கவிகுட்டி முழங்காலுக்கும் ஒரே சோசலிஷ மருந்து என்பது கொஞ்சம் ஓவர் இல்லையா அம்மாவா? அதே கொச்சே என்று இறங்கி வந்தார் அவர்.

சரி, நடந்தது நடந்தாச்சு. இப்போ என்ன பண்ணனும்? நீங்க என்ன செய்யணும்? இதிலே நான் எங்கே வரேன்? பார்கவிகுட்டி பாட்டி எங்கே வர்றா? பாருகுட்டி தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டு எங்கே வரா?

“அவளை மதுரைக்கு எர்ஸ்கின் ஆஸ்பத்திரி கூட்டிப் போகலாம்னு இருக்கேன். கொஞ்சம் நீயும் கூடவே வந்தா ஒத்தாசையா இருக்கும்” என்றார் கேளு நாயர். ஆபீஸ் இருக்கே என்றேன். பொல்லாத ஆபீஸ், நீ சேர், டேபிள் போட்டு உக்கார்ந்து கொடுக்கற லோனை வேறே ஒருத்தர் கொடுக்க மாட்டாரா என்ன? என்று துச்சமாக பேங்க் வேலையைக் காலால் எத்தினார்.

கேளு நாயரோடு ஸ்கூட்டரில் போய் அவர் வீட்டில் வண்டியை வைத்து விட்டு, பாருகுட்டியையும் கூட்டிக் கொண்டு பஸ் ஸ்டாண்ட் போனோம்.

ஜன்னல் ஓர சீட், முகமூடி காமிக்ஸ் புக், வெள்ளரிப் பிஞ்சு என்று பாருகுட்டியின் ரகவாரியான கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. எல்லாம் என் செலவு தான். வண்டி கிளம்பும்போது பலாச்சுளை வேண்டுமென்று ஜன்னல் வழியே பார்த்து கூடைக்காரம்மாவை அவள் கூப்பிட நிர்த்தாட்சண்யமாக அந்தக் கோரிக்கையை நிராகரித்தேன். பலா வாடை அடிக்கும் வாயோடு என் பக்கத்தில் அவள் இருக்க, ஒன்றரை மணி நேரம் என்னால் இருக்க முடியாது. மூச்சு முட்டி இறந்து போவேன்.

லட்சுமிவிலாஸ் பஸ் மதுரை மதுரை என்று கூவி அழைத்தபடி தெருவோடு போனவர்களையும் மதுரைக்கு வர நப்பாசை காட்டியபடி ஊர்ந்தது. மணிக்கு இரண்டு மதுரை பஸ் என்று ஏற்பட்டது, ஆமாம், அதேதான், நெருக்கடி நிலைமை அமலானதும், மக்கள் நலத்துக்காக இருபதம்சத் திட்டத்தின் கீழ்…

இப்போதெல்லாம் ஒரு கைக்குட்டை வாங்கணும் என்றால் கூட பஸ் பிடித்து மதுரை போகிற கூட்டம் ஊரில் கூடிப் போயிருக்கிறது. மேலமாசி வீதிவரைக்கும் போனேன், கீழ மாரட் ஸ்ட்ரீட்லே மெஸ்ஸுலே சாப்பிட்டேன் என்று படு கேஷுவலாக மதுரைத் தெருக்களை ஊர்ப்பெயர் சேர்க்காது 50 கிலோமீட்டர் தூரத்து சிறுநகர வாசிகளான நாங்கள் உபயோகிக்க ஆரம்பித்திருக்கிறோம். மதுரையின் புறநகர் என்ற அடையாளம் கிடைக்கக் கூடும் விரைவில். செம்மண் பூமியின் வரலாற்றுச் சிறப்பு கொண்ட ஊர் என்ற பழைய பெருமை எல்லாம் யாருக்கு வேண்டி இருக்கிறது.

ஒரே ஒரு ஆறுதல். கோவிலுக்குப் போய் வந்ததை மட்டும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்குப் போனேன் என்பது போல் ஊர்ப் பெயரோடு தான் சொல்லப் பிடிக்கிறது சகலமானவர்களுக்கும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன